பிரதமர் அலுவலகம்
முத்ரா திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்
முத்ரா திட்டம் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமானதல்ல, இளைஞர்கள் ங்களது சொந்த கால்களை ஊன்றி நிற்க அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது: பிரதமர்
தொழில்முனைவோர் மற்றும் தற்சார்பை ஊக்குவிப்பதில் முத்ரா திட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர்
தொழில்முனைவு குறித்த சமூக மனப்பான்மையில் மாற்றத்தை ஏற்படுத்தியதன் மூலம் முத்ரா திட்டம் அமைதியான புரட்சியை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர்
முத்ரா திட்டத்தின் பயனாளிகளில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் பெண்கள்: பிரதமர்
இத்திட்டத்தின் கீழ் 52 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இது உலக அளவில் இணையற்ற மிகப்பெரிய சாதனை: பிரதமர்
Posted On:
08 APR 2025 12:03PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லி எண் 7, லோக் கல்யாண் மார்கில் உள்ள தமது இல்லத்தில் பிரதமரின் முத்ரா திட்டத்தின் 10 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளுடன் இன்று கலந்துரையாடினார். விருந்தினர்களை வரவேற்பதன் கலாச்சார முக்கியத்துவத்தையும், அவர்களின் இருப்பு ஒரு வீட்டிற்கு கொண்டு வரும் புனிதத்தையும் வலியுறுத்தி, கலந்து கொண்ட அனைவருக்கும் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். பங்கேற்பாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார். செல்லப்பிராணிகளுக்கான பொருட்கள், மருந்துகள் மற்றும் சேவைகள் வழங்குவதில் தொழில்முனைவோராக மாறிய பயனாளி ஒருவருடன் கலந்துரையாடிய திரு மோடி, சவாலான காலங்களில் ஒருவரின் திறனில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கடன்களுக்கு ஒப்புதல் அளித்த வங்கி அதிகாரிகளை அழைத்து, கடன் காரணமாக ஏற்பட்ட முன்னேற்றத்தை விளக்குமாறு பயனாளியை அவர் கேட்டுக்கொண்டார். இத்தகைய நடவடிக்கைகள் அவர்களின் நம்பிக்கையை அங்கீகரிப்பது மட்டுமின்றி, பெரிய கனவு காணத் துணியும் தனிநபர்களை ஆதரிப்பதற்கான அவர்களின் முடிவில் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் திரு மோடி கூறினார். அவர்களின் ஆதரவின் பலன்களை நிரூபிப்பது, வளர்ச்சி மற்றும் வெற்றியை வளர்ப்பதில் அவர்களின் பங்களிப்பு குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி பெருமிதம் கொள்ளும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கேரளாவைச் சேர்ந்த தொழில்முனைவோர் திரு. கோபி கிருஷ்ணாவிடம் பேசிய பிரதமர், பிரதமரின் முத்ரா திட்டத்தின் பெரும் தாக்கம் குறித்து எடுத்துரைத்தார். முத்ரா திட்டம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அதேவேளையில், வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்குப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தீர்வுகளில் கவனம் செலுத்தி, வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறுவதற்கு தனக்கு உதவியது என்று கிருஷ்ணா எடுத்துரைத்தார். முத்ரா கடன் பற்றி அறிந்தவுடன் துபாயில் உள்ள தனது நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்த இந்தப் பயனாளியின் பயணத்தைப் பிரதமர் குறிப்பிட்டார். பிரதமர் சூரியக் கூரை முன்முயற்சியின் கீழ் சூரிய நிறுவல்கள் இரண்டு நாட்களுக்குள் நிறைவடைந்ததாக அவர் குறிப்பிட்டார். பிரதமர் சூரியக் கூரை திட்ட முன்முயற்சியில் ஈடுபட்ட பயனாளிகளின் எதிர்வினைகள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார், கனமழை மற்றும் அடர்த்தியான மரங்கள் போன்ற சவால்களுக்கு மத்தியில் கேரளாவில் உள்ள வீடுகள் இப்போது இலவச மின்சாரத்தை அனுபவிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். முன்பு ரூ.3,000 ஆக இருந்த மின்சாரக் கட்டணங்கள் இப்போது ரூ.240- ரூ.250 ஆகக் குறைந்துள்ளன. அதே நேரத்தில் அவரது மாத வருமானம் ரூ.2.5 லட்சம் மற்றும் அதற்கு மேல் உள்ளது என்று திரு கிருஷ்ணா குறிப்பிட்டார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோரும், ஹவுஸ் ஆஃப் புஷ்பா நிறுவனருமான ஒருவருடன் கலந்துரையாடிய பிரதமரிடம், வீட்டில் சமைப்பது முதல் வெற்றிகரமான கஃபே தொழிலை நிறுவியது வரையிலான தனது எழுச்சியூட்டும் பயணத்தைப் பகிர்ந்து கொண்டார். லாப வரம்புகள் மற்றும் உணவு செலவு மேலாண்மை குறித்த ஆராய்ச்சி இந்த தொழில்முனைவோர் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது என்று அவர் கூறினார். இளைஞர்களின் மனதில் பயம் இருப்பதாக அவர் மேலும் கூறினார், பலர் சவாலை எதிர்கொள்வதற்குப் பதில் வேலைகளில் இருப்பதையே விரும்புகிறார்கள் என்று கூறினார். இதற்குப் பதிலளித்த பிரதமர், அபாயங்களை எதிர்கொள்ளும் திறனின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ஹவுஸ் ஆஃப் புஷ்பாவின் நிறுவனர், 23 வயதில், அபாயங்களை எதிர்கொள்ளும் தனது திறனையும், தனது நேரத்தையும் தனது வணிகத்தை திறம்பட வளர்த்துக் கொள்வதில் பயன்படுத்தியதை பகிர்ந்து கொண்டார். ராய்ப்பூரைச் சேர்ந்த நண்பர்கள், கார்ப்பரேட் உலகம் மற்றும் மாணவர்களிடையே நடந்த விவாதங்கள் குறித்தும், தொழில்முனைவோர் குறித்த அவர்களின் ஆர்வம் மற்றும் கேள்விகளைக் குறித்தும் பயனாளி குறிப்பிட்டார். அடமானம் இல்லாமல் நிதி வழங்கும் அரசின் திட்டங்கள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு இல்லாததை அவர் மேலும் சுட்டிக்காட்டினார். முத்ரா கடன் மற்றும் பி.எம்.இ.ஜி.பி கடன் போன்ற திட்டங்கள் திறன் உள்ளவர்களுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்குகின்றன என்பதற்கு நன்றி தெரிவித்த அவர், இந்தத் திட்டங்களை ஆராய்ச்சி செய்யவும் தைரியமான நடவடிக்கைகளை எடுக்கவும் இளைஞர்களை ஊக்குவித்தார், வளரவும் வெற்றிபெறவும் விரும்புவோருக்கு எல்லைகள் இல்லை என்று கூறினார்.
காஷ்மீரின் பாரமுல்லாவில் உள்ள பேக் மை கேக்கின் உரிமையாளரான மற்றொரு பயனாளியான திரு முடாசிர் நக்ஷ்பந்தி, வேலை தேடுபவராக இருந்து வேலை உருவாக்குபவராக மாறுவதற்கான தனது பயணத்தைப் பகிர்ந்து கொண்டார், மேலும் பாரமுல்லாவின் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த 42 நபர்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை வழங்கியுள்ளார். முத்ரா கடன் பெறுவதற்கு முன்பு பிரதமர் அவரது வருவாயைப் பற்றி விசாரித்தார், அதற்கு முடாசிர் தனது வருமானம் ஆயிரக்கணக்கில் இருந்தது, ஆனால் அவரது தொழில்முனைவோர் பயணம் இப்போது அவரை லட்சங்கள் மற்றும் கோடிகளில் சம்பாதிக்கும் அளவுக்கு உயர்த்தியுள்ளது என்று பதிலளித்தார். முடாசிரின் வர்த்தக நடவடிக்கைகளில் யுபிஐ பரவலாக பயன்படுத்தப்படுவதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். 90% பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் நடத்தப்படுகின்றன, கையில் 10% ரொக்கம் மட்டுமே உள்ளது என்று முடாசிர் கூறினார்.
வாபியில் இருந்து சில்வாசாவில் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறிய திரு. சுரேஷின் எழுச்சியூட்டும் பயணத்தை பிரதமர் கேட்டறிந்தார். 2022-ம் ஆண்டில், ஒரு வேலை மட்டும் போதாது என்பதை உணர்ந்து தனது சொந்த தொழிலைத் தொடங்க முடிவு செய்ததாக சுரேஷ் கூறினார். எனது வெற்றியைத் தொடர்ந்து, சில நண்பர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க முத்ரா கடன்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார். தொழில்முனைவை நோக்கி தைரியமான அடிகளை எடுத்து வைக்க மற்றவர்களை ஊக்குவிப்பதில் இதுபோன்ற வெற்றிக் கதைகளின் தாக்கத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ரேபரேலியைச் சேர்ந்த ஒரு பெண் தொழில்முனைவோர், தனது தலைமையின் கீழ் எம்.எஸ்.எம்.இ.களுக்கு வழங்கப்பட்ட ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். முன்பு சவாலாக இருந்த உரிமங்கள் மற்றும் நிதியுதவிகளைப் பெறும் செயலானது இப்போது எளிதாகியிருப்பதாக குறிப்பிட்ட அவர், வளர்ந்த இந்தியாவை உருவாக்க அவை பங்களிப்பதாகவும் உறுதியளித்தார். அவரது உணர்வுப்பூர்வமான வாக்குமூலத்தை ஒப்புக் கொண்ட பிரதமர், மாதந்தோறும் ரூ.2.5 முதல் ரூ.3 லட்சம் வரை விற்றுமுதல் ஏழு முதல் எட்டு நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, பேக்கரி தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருவதைக் குறிப்பிட்டார்.
மத்தியப் பிரதேசத்தின் போபாலைச் சேர்ந்த திரு லவ்குஷ் மெஹ்ரா, 2021 ஆம் ஆண்டில் ரூ.5 லட்சம் ஆரம்பக் கடனுடன் தனது மருந்து வணிகத்தைத் தொடங்கினார். ஆரம்ப நிலையில் அச்சம் இருந்தபோதிலும், அவர் தனது கடனை ரூ. 9.5 லட்சமாக விரிவுபடுத்தினார் மற்றும் ரூ. 50 லட்சத்திற்கு மேல் விற்றுமுதல் அடைந்தார், இது முதல் ஆண்டில் ரூ.12 லட்சத்திலிருந்து உயர்ந்தது. முத்ரா திட்டம் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமானதல்ல என்றும், இளைஞர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு அதிகாரம் அளிப்பதே இதன் நோக்கம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். லவ்குஷின் சமீபத்திய சாதனைகளைப் பற்றி அவர் குறிப்பிட்டார், இதில் ரூ.34 லட்சம் மதிப்புள்ள வீட்டை வாங்குவது மற்றும் மாதத்திற்கு ரூ.1.5 லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பது உட்பட, அவரது முந்தைய வேலையிலிருந்து ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை சம்பாதித்ததை நினைவு கூர்ந்தார். அவரைப் பாராட்டிய பிரதமர், வெற்றியை அடைவதில் கடின உழைப்பின் பங்கை ஒப்புக் கொண்டார். முத்ரா கடன் மற்றும் அதன் பலன்கள் குறித்து பயனாளிகள் மக்களுக்கு மேலும் எடுத்துக் கூறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
குஜராத்தின் பாவ்நகரைச் சேர்ந்த ஆதித்யா 21 வயதில் ஆய்வகத்தை நிறுவினார். அந்த இளம் தொழில்முனைவோரின் எழுச்சியூட்டும் பயணத்தை பிரதமர் கேட்டறிந்தார். இறுதி ஆண்டு மாணவரான அவர், கிஷோர் பிரிவின் கீழ் ரூ.2 லட்சம் முத்ரா கடனை வெற்றிகரமாக பயன்படுத்தி 3 டி பிரிண்டிங், ரிவர்ஸ் இன்ஜினியரிங், ரேபிட் புரோட்டோடைப்பிங் மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றில் ஒரு தொழிலைத் தொடங்கினார். தொழில்முனைவோரின் அர்ப்பணிப்பு, வார நாட்களில் கல்லூரி மற்றும் வார இறுதி நாட்களில் வணிக நடவடிக்கைகளை சமநிலைப்படுத்துதல், குடும்பத்தின் ஆதரவுடன் தொலைதூரத்தில் பணிபுரியும் போது மாதந்தோறும் ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை சம்பாதித்தல் ஆகியவற்றை பிரதமர் குறிப்பிட்டார்.
மணாலியைச் சேர்ந்த ஒரு பெண் தொழில்முனைவோர் காய்கறி சந்தையில் பணிபுரிந்த தனது கதையை வெற்றிகரமான வணிகத்தை நடத்துவது வரை பகிர்ந்து கொண்டார். 2015-16 ஆம் ஆண்டில் ரூ.2.5 லட்சம் முத்ரா கடனுடன் தொடங்கியதாகவும், அதை இரண்டரை ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தியதாகவும் அவர் கூறினார். அடுத்தடுத்து ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் கடன்களுடன், அவர் தனது வணிகத்தை காய்கறிக் கடையிலிருந்து ஒரு ரேஷன் கடையாக விரிவுபடுத்தினார், ஆண்டு வருமானம் ரூ.10 முதல் ரூ.15 லட்சம் வரை அடைந்தார். நாடு முழுவதும் உள்ள தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பதில் முத்ரா திட்டத்தின் நேர்மறையான தாக்கத்தையும், அவர்களின் உறுதிப்பாட்டையும் பிரதமர் பாராட்டினார்.
இல்லத்தரசியாக இருந்து சணல் பைகளில் வெற்றிகரமான தொழிலை நடத்தும் நிலைக்கு மாறிய ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோரின் எழுச்சியூட்டும் பயணத்தை பிரதமர் கேட்டறிந்தார். 2019 ஆம் ஆண்டில் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பிறகு, கனரா வங்கியில் இருந்து எந்த அடமானமும் இல்லாமல் ரூ.2 லட்சம் முத்ரா கடனைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். அவரது உறுதிப்பாடு மற்றும் அவரது ஆற்றலின் மீது வங்கி வைத்திருக்கும் நம்பிக்கை ஆகியவற்றை பிரதமர் குறிப்பிட்டார். சணல் பயிற்சி ஆசிரியர் மற்றும் தொழில்முனைவோர் என்ற அவரது இரட்டை பங்களிப்பை பிரதமர் பாராட்டினார். வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு மூலம் கிராமப்புறப் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவரது முயற்சிகளைப் பாராட்டினார். தொழில்முனைவோர் மற்றும் தற்சார்பை ஊக்குவிப்பதில் முத்ரா திட்டத்தின் மாற்றத்தக்க தாக்கம் குறித்து பிரதமர் குறிப்பிட்டார்.
மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் இந்தியா முழுவதும் தொழில்முனைவை ஊக்குவித்தல் ஆகியவற்றில் முத்ரா திட்டத்தின் மாற்றம் ஏற்படுத்தும் அளவிலான தாக்கத்தை பிரதமர் எடுத்துரைத்தார். விளிம்புநிலை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த தனிநபர்களுக்கு இந்தத் திட்டம் எவ்வாறு நிதி ஆதரவை வழங்கியுள்ளது என்பதையும் அவர் விளக்கினார். உத்தரவாதங்கள் அல்லது விரிவான ஆவணங்கள் தேவைப்படாமல் தங்கள் சொந்தத் தொழில்களைத் தொடங்க இது அவர்களுக்கு உதவுகிறது. முத்ரா திட்டம் கொண்டு வந்த அமைதிப் புரட்சி குறித்து குறிப்பிட்ட திரு மோடி, தொழில்முனைவு குறித்த சமூக அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுக் காட்டினார். இந்தத் திட்டம் பெண்களுக்கு நிதி உதவி அளிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் வணிகங்களை வழிநடத்தவும் வளர்க்கவும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். கடன் விண்ணப்பங்கள், ஒப்புதல்கள் மற்றும் விரைவாக திருப்பிச் செலுத்துவதில் பெண்கள் முன்னணியில் உள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
முத்ரா கடன்களை பொறுப்புடன் பயன்படுத்துவதன் மூலம் தனிநபர்களிடம ஒழுக்க நெறிமுறைகள் வலுபாபடுத்தப்படுவதை பிரதமர் திரு. நரேந்திர மோடி எடுத்துரைத்தார். இந்தத் திட்டம் சொந்த வாழ்க்கையையும், தொழில் வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்று குறிப்பிட்ட அவர், நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் அல்லது பயனற்ற முயற்சிகளை ஊக்கப்படுத்துதல் ஆகியவை இதில் இல்லை என்றார். முத்ரா திட்டத்தின் கீழ் இந்திய குடிமக்களுக்கு உத்தரவாதம் ஏதும் இல்லாமல் ரூ.33 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்தத் தொகை முன்னோடியில்லாதது என்றும், கூட்டாக செல்வந்தர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு நிதி உதவியையும் இத்தொகை விஞ்சி நிற்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். வேலைவாய்ப்பை உருவாக்கவும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் இந்த நிதியைத் திறம்பட பயன்படுத்திய நாட்டின் திறமையான இளைஞர்கள் மீது அவர் தனது நம்பிக்கையைத் தெரிவித்தார்.
முத்ரா திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார். சாதாரண குடிமக்களின் வருமானம் அதிகரித்துள்ளது, இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களின் குழந்தைகளின் கல்விக்கு முதலீடு செய்யவும் உதவுகிறது என்று அவர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் சமூகப் பலன்களை அவர் பட்டியலிட்டார்.
அரசின் உறுதிப்பாடு குறித்து பேசிய பிரதமர், பாரம்பரிய அணுகுமுறைகளைப் போலல்லாமல், இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமது நிர்வாகம் தீவிரமாக கருத்துகளைக் கேட்டு வருவதாகக் குறிப்பிட்டார். நாடு முழுவதும் பயனாளிகள் மற்றும் குழுக்களுடன் கலந்தாலோசிப்பதன் மூலம் திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை அடையாளம் கண்டு, மேலும் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு தேவையான சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆரம்பத்தில் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை இருந்த முத்ரா கடன்களின் வாய்ப்பை விரிவுபடுத்துவதில் அரசு காட்டிய குறிப்பிடத்தக்க நம்பிக்கையை எடுத்துரைத்த திரு மோடி, இந்த விரிவாக்கம் இந்தியக் குடிமக்களின் தொழில்முனைவோர் உணர்வு மற்றும் திறன்கள் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றும், இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் மூலம் இது வலுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
முத்ரா திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், சொந்தமாகத் தொழில் தொடங்கவும் மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு மோடி, தனிநபர்கள் குறைந்தது ஐந்து முதல் பத்து பேரையாவது ஊக்குவித்து ஆதரவளிக்க வேண்டும் என்றும், அவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இத்திட்டத்தின் கீழ் 52 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும், இது உலக அளவில் இணையற்ற மிகப்பெரிய சாதனை என்றும் அவர் குறிப்பிட்டார்.
குஜராத்தில் தாம் பணியாற்றியதை நினைவு கூர்ந்த திரு மோடி, வறுமையை வெல்ல ஊக்கமளிக்கும் தெரு நாடகங்கள் மக்களை ஊக்குவித்தது பற்றிக் குறிப்பிட்டார். தனிநபர்கள் நிதி சுதந்திரத்தை அடைந்த பிறகு தங்கள் அரசாங்க சலுகைகளை ஒப்படைப்பது பற்றிய ஒரு சம்பவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார், இது அவர்களின் மாற்றத்தைக் காட்டுகிறது. குஜராத்தில் ஒரு பழங்குடியினக் குழுவைப் பற்றிய எழுச்சியூட்டும் கதையை அவர் விவரித்தார், அவர்கள் ஒரு சிறிய கடனுடன், பாரம்பரிய இசையை நிகழ்த்துவதிலிருந்து ஒரு தொழில்முறை இசைக்குழுவை உருவாக்கினர். இந்த முயற்சி அவர்களின் நிதி நிலையை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், சிறிய முயற்சிகள் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு எவ்வாறு வழிவகுக்கும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. இதுபோன்ற மாற்றத்திற்கான கதைகள் தமக்கு உத்வேகம் அளிப்பதாகவும், தேச நிர்மாணத்தில் கூட்டு முயற்சிகளின் திறனைப் பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்களின் விருப்பங்கள் மற்றும் சூழ்நிலைகளை ஆய்வு செய்து நிவர்த்தி செய்வதற்கு முத்ரா திட்டம் ஒரு கருவியாக இருக்கும் என்ற தமது நம்பிக்கையை திரு மோடி மீண்டும் வலியுறுத்தினார். இத்திட்டத்தின் வெற்றியில் நம்பிக்கை தெரிவித்த அவர், சமூகத்திற்கு பங்களிப்பதன் மூலம் கிடைக்கும் திருப்தியை வலியுறுத்தி, பயனாளிகள் சமூகத்திற்கு திருப்பித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்தக் கலந்துரையாடலின் போது மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு. பங்கஜ் சவுத்ரி உடனிருந்தார்.
***
(Release ID: 2119970)
TS/PKV/RR/KR
(Release ID: 2120023)
Visitor Counter : 45
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam