நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் முத்ரா திட்டம் : சிறு, குறு தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளித்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது

Posted On: 08 APR 2025 11:27AM by PIB Chennai

பிரதமரின் முத்ரா திட்டம், பிரதமர் திரு நரேந்திர மோடியால் 8 ஏப்ரல் 2015 அன்று தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் சிறு, குறு தொழில்முனைவோருக்கு இத்திட்டம் 10 ஆண்டுகளாக ஆதரவை அளித்து வந்துள்ளது. நிதி உள்ளடக்கத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டம், கார்ப்பரேட் அல்லாத, விவசாயம் அல்லாத வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு ₹10 லட்சம் வரை எளிதான அடமானம் இல்லாத கடன்களை வழங்குகிறது. ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கான ஆதரவை வலுப்படுத்த, 2024 ஜூலை 23, அன்று மத்திய பட்ஜெட் 2024-25-ன் போது கடன் வரம்பை ₹20 லட்சமாக உயர்த்துவதாக நிதியமைச்சர் அறிவித்தார். இந்த புதிய வரம்பு 2024 அக்டோபர் 24 முதல் நடைமுறைக்கு வந்தது.

புதிதாக அறிவிக்கப்பட்ட கடன் பிரிவான தருண் பிளஸ்,க்ஷ என்பது தருண் வகை யின்கீழ் முன்பு கடன்களைப் பெற்று வெற்றிகரமாகத் திருப்பிச் செலுத்தியவர்களுக்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு ₹10 லட்சம் முதல் ₹20 லட்சம் வரை கடன்பெற உதவுகிறது. கூடுதலாக, குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி இப்போது இந்த மேம்படுத்தப்பட்ட கடன்களுக்கு உத்தரவாத பாதுகாப்பை வழங்கும். இது இந்தியாவில் ஒரு வலுவான தொழில்முனைவோர் சூழல் சார் அமைப்பை வளர்ப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துணை நிறுவனங்களாக செயல்பட்டு பெரிய தொழிற்சாலைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. இந்நிறுவனங்கள் நாட்டின் உள்ளடக்கிய தொழில்துறை வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிக்கின்றன. இந்த நிறுவனங்கள் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் தங்கள் இருப்பை தொடர்ந்து விரிவுபடுத்துகின்றன. உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு வகையான தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்குகின்றன. முத்ரா திட்டத்தின் மூலம் குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் கிடைப்பது நிலையான முறையில் அதிகரித்துள்ளது.

பிரதமரின்  முத்ரா திட்டத்தின் வெற்றிகரமான 10-வது ஆண்டை முன்னிட்டு, மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறுகையில், கடினமாக உழைக்கும் குறு நிறுவனங்கள், முதல் தலைமுறை தொழில்முனைவோர் ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன். "நிதியளிக்கப்படாதவர்களுக்கு நிதியளித்தல்" என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையுடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.  முறையான நிறுவனக் கடனை அணுகுவதில் சவால்களை எதிர்கொண்ட சிறு நிறுவனங்களுக்கு, அதில் உள்ள இடைவெளியை நிரப்ப  இத்திட்டம் உதவியிருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

பல லட்சக்கணக்கானவர்களுக்கு அதிகாரமளிப்பதிலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதிலும் முத்ரா திட்டத்தின் பங்கை எடுத்துரைத்த மத்திய நிதியமைச்சர், 52 கோடிக்கும் அதிகமான முத்ரா கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மதிப்பு ₹ 33.65 லட்சம் கோடிக்கு மேல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  கோடிக்கணக்கான தொழில்முனைவோரின் எதிர்பார்ப்புகளுக்கு, குறிப்பாக சமூகத்தின் விளிம்புநிலை பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் முயற்சிகளுக்கு சிறகுகளை வழங்குவதில் இந்தத் திட்டம் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2119954

***

TS/PLM/AG/KR


(Release ID: 2119986) Visitor Counter : 27