பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 06 APR 2025 5:14PM by PIB Chennai

வணக்கம்!

என் அன்பு தமிழ் சொந்தங்களே!

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி அவர்களே, எனது மத்திய அமைச்சரவை சகாக்கள் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, டாக்டர் எல் முருகன் அவர்களே, தமிழ்நாடு அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே!

வணக்கம்!

நண்பர்களே,

இன்று ராம நவமி பண்டிகை. இப்போது சற்று முன்பு, சூரியனின் கதிர்கள் அயோத்தியில் உள்ள பிரமாண்டமான ராமர் கோயிலில் குழந்தை ராமரின் மீது விழுந்தன. பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கை, நல்லாட்சிக்கு உத்வேகம் அளிக்கும். அது தேச நிர்மாணத்திற்கு ஒரு பெரிய அடித்தளமாகும். இன்று ராம நவமி. என்னுடன் சொல்லுங்கள்.

ஜெய் ஸ்ரீ ராம்!

ஜெய் ஸ்ரீராம்!

ஜெய் ஸ்ரீராம்!

தமிழ்நாட்டின் சங்க இலக்கியங்களிலும் ஸ்ரீராமர் குறிப்பிடப்பட்டுள்ளார். இந்தப் புண்ணிய பூமியான ராமேஸ்வரத்திலிருந்து நாட்டுமக்கள் அனைவருக்கும் ராமநவமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

 

இன்று ராமநாதசுவாமி கோவிலில் வழிபட முடிந்ததை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த சிறப்பான நாளில், 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த ரயில் மற்றும் சாலைத் திட்டங்கள் தமிழ்நாட்டில் போக்குவரத்தை மேம்படுத்தும். இந்தத் திட்டங்களுக்காக தமிழ்நாட்டில் உள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்கள்

 

இது பாரத ரத்னா டாக்டர் கலாமின் பூமி. அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றையொன்று நிறைவு செய்கின்றன என்பதை அவரது வாழ்க்கை நமக்குக் காட்டியது. அதேபோல், ராமேஸ்வரத்திற்கு புதிய பாம்பன் பாலம் தொழில்நுட்பத்தையும், பாரம்பரியத்தையும் ஒன்றிணைக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு நகரம் 21-ம் நூற்றாண்டின் பொறியியல் அதிசயத்தால் இணைக்கப்பட்டுள்ளது. நமது பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்புக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாலம் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில்வே கடல் பாலம் ஆகும். பெரிய கப்பல்கள் அதன் கீழ் செல்ல முடியும். ரயில்களும் அதில் வேகமாகப் பயணிக்க முடியும். நான் சிறிது நேரத்திற்கு முன்பு ஒரு புதிய ரயில் சேவையையும் ஒரு கப்பலையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தேன். இந்தத் திட்டத்திற்காக தமிழ்நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நான் வாழ்த்துத் தெரிவிக்கிறேன்.

நண்பர்களே,

பல ஆண்டுகளாக, இந்த பாலத்திற்கான தேவை இருந்தது. உங்களின் ஆசியால் இப்பணியை முடிக்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. பாம்பன் பாலம் எளிதாக வர்த்தகம் செய்வது, பயணத்தை எளிதாக்குவது ஆகிய இரண்டிற்கும் ஆதரவளிக்கிறது. இது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். புதிய ரயில் சேவை ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இணைப்பை மேம்படுத்தும். இது தமிழ்நாட்டின் வர்த்தகம், சுற்றுலாவுக்கும் பயனளிக்கும். இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்புகளும் உருவாக்கப்படும்.

நண்பர்களே,

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா தனது பொருளாதாரத்தின் அளவை இரட்டிப்பாக்கியுள்ளது. இத்தகைய துரித வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று நமது சிறந்த நவீன உள்கட்டமைப்பு. கடந்த 10 ஆண்டுகளில், ரயில், சாலை, விமான நிலையம், துறைமுகம், மின்சாரம், தண்ணீர், எரிவாயு குழாய் போன்ற உள்கட்டமைப்புகளின் பட்ஜெட்டை கிட்டத்தட்ட 6 மடங்கு அதிகரித்துள்ளோம். இன்று, நாட்டில் பெரிய திட்டங்களுக்கான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. நீங்கள் வடக்கில் பார்த்தால், உலகின் மிக உயரமான ரயில் பாலங்களுள் ஒன்றான செனாப் பாலம் ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டுள்ளது. நாம் மேற்கு நோக்கிச் சென்றால், நாட்டின் மிக நீளமான கடல் பாலமான அடல் சேது மும்பையில் கட்டப்பட்டுள்ளது. நீங்கள் கிழக்கே சென்றால், அசாமில் போகிபீல் பாலத்தைக் காணலாம். தெற்கே வரும்போது, உலகின் சில செங்குத்து தூக்குப் பாலங்களில் ஒன்றான பாம்பன் பாலத்தின் கட்டுமானம் நிறைவடைந்துள்ளது. இதேபோல், கிழக்கு - மேற்கு பிரத்யேக சரக்கு வழித்தடங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் முதல் புல்லட் ரயிலின் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. வந்தே பாரத், அம்ரித் பாரத், நமோ பாரத் போன்ற நவீன ரயில்கள் ரயில் கட்டமைப்பை நவீனப்படுத்துகின்றன.

நண்பர்களே,

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் ஒன்றோடொன்று இணைக்கப்படும்போது, வளர்ந்த தேசத்தை உருவாக்குவதற்கான பாதை பலப்படுத்தப்படுகிறது. இது உலகின் ஒவ்வொரு வளர்ந்த நாட்டிலும், ஒவ்வொரு வளர்ந்த பிராந்தியத்திலும் நடந்துள்ளது. இன்று, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் ஒன்றோடொன்று இணைக்கப்படும் போது, ஒட்டுமொத்த நாட்டின் ஆற்றலும் முன்னுக்கு வருகிறது. இது நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும், தமிழ்நாட்டிற்கும் பயனளித்து வருகிறது.

நண்பர்களே,

 

வளர்ந்த இந்தியாவின் பயணத்தில் தமிழ்நாட்டிற்குப் பெரும் பங்கு உள்ளது. தமிழ்நாட்டின் திறன் எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். கடந்த பத்து ஆண்டுகளில், அதாவது 2014-க்கு முன்பிருந்ததை விட, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு மூன்று மடங்கு அதிக நிதியை வழங்கியுள்ளதுமத்தியில் திமுக ஆதரவுடனான ஆட்சி இருந்தபோது, தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட நிதியை விட இந்த மோடி அரசு மூன்று மடங்கு அதிக நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்கியுள்ளது. இது மாநிலத்தின் பொருளாதார தொழில் வளர்ச்சிக்கு உதவியுள்ளது.

நண்பர்களே,

தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழக ரயில்வே பட்ஜெட் 7 மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. இருந்தாலும் சிலருக்கு காரணமே இல்லாமல் அழும் பழக்கம் இருக்கும். அழுதுகொண்டே இருப்பார்கள். 2014-ம் ஆண்டுக்கு முன்பு ரயில்வே திட்டங்களுக்காக ஆண்டுக்கு 900 கோடி  மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு, தமிழ்நாட்டின் ரயில்வே பட்ஜெட் 6,000 கோடிக்கு மேல். மத்திய அரசு இங்குள்ள 77 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கி வருகிறது. இதில் ராமேஸ்வரம் ரயில் நிலையமும் அடங்கும்.

நண்பர்களே,

கடந்த 10 ஆண்டுகளில், பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், ஊரகச் சாலைகள், நெடுஞ்சாலைகள் துறையில் ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு மத்திய அரசின் உதவியுடன் தமிழ்நாட்டில் 4000 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை துறைமுகத்தை இணைக்கும் உயர்மட்ட வழித்தடம் சிறந்த உள்கட்டமைப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும். இன்றும் கூட சுமார் 8000 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களுடனான போக்குவரத்துத் தொடர்பை மேம்படுத்தும்.

நண்பர்களே,

சென்னை மெட்ரோ போன்ற நவீன பொதுப் போக்குவரத்தும் தமிழ்நாட்டின் பயணத்தை எளிதாக்குகிறது. இவ்வளவு உள்கட்டமைப்பு பணிகள் செய்யப்படும்போது, அது ஒவ்வொரு துறையிலும் புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நமது இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.

நண்பர்களே,

கடந்த பத்து ஆண்டுகளில், சமூக உள்கட்டமைப்பிலும் இந்தியா சாதனை அளவில் முதலீடு செய்துள்ளது. இதன் பலன்களை தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் பெற்று வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு 4 கோடிக்கும் அதிகமான உறுதியான வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகளுக்கு பன்னிரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட உறுதியான வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், முதல் முறையாக, கிராமங்களில் சுமார் 12 கோடி குடும்பங்களுக்கு குழாய் நீர் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கோடியே பதினோரு லட்சம் குடும்பங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. குழாய் நீர் முதல் முறையாக அவர்களின் வீட்டிற்கு வந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள எனது தாய்மார்கள், சகோதரிகள் பெரிதும் பயனடைந்துள்ளனர்.

நண்பர்களே,

நாட்டு மக்களுக்கு தரமான, மலிவான சிகிச்சையை வழங்குவது எங்கள் அரசின் உறுதிப்பாடு. ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், தமிழ்நாட்டு குடும்பங்களின் செலவு 8,000 கோடி மிச்சமாகியுள்ளது. 8,000 கோடி என்பது மிகப் பெரிய தொகை. தமிழ்நாட்டில் ஆயிரத்து நானூறுக்கும் மேற்பட்ட மக்கள் மருந்தக மையங்கள் உள்ளன. மக்கள் மருந்தகங்களில் 80% தள்ளுபடியில் மருந்துகள் கிடைக்கின்றன. இதனால் எனது தமிழ்நாட்டு சகோதர சகோதரிகள் தங்கள் 700 கோடியைச் சேமித்துள்ளனர். எனவே தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால், நீங்கள் மருந்துகளை வாங்க விரும்பினால், அவற்றை மக்கள் மருந்தக மையங்களில் இருந்து வாங்குங்கள்.

நண்பர்களே,

நாட்டின் இளைஞர்கள் மருத்துவர்களாக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்பதை மாற்றுவது எங்களது முக்கிய முயற்சி. இதன் ஒரு படியாக கடந்த சில ஆண்டுகளில், தமிழ்நாட்டில், 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

 

நாடு முழுவதும் பல மாநிலங்கள் தாய்மொழியில் மருத்துவக் கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளன. இப்போது ஆங்கிலம் படிக்காத ஏழைத் தாய்மார்களின் மகன்களும் மகள்களும் கூட மருத்துவராக முடியும். ஏழைத் தாய்மார்களின் மகன்களும், மகள்களும் மருத்துவர்களாக முடியும் வகையில் தமிழ் மொழியில் மருத்துவப் படிப்புகளை தமிழ்நாடு அரசு தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

நண்பர்களே,

வரி செலுத்துவோர் கொடுக்கும் ஒவ்வொரு பைசாவும் பரம ஏழைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். இதுதான் நல்லாட்சி. பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு சுமார் 12,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு 14,800 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

இந்தியாவின் வளர்ச்சியில் நமது நீலப் பொருளாதாரம் பெரும் பங்கு வகிக்கப் போகிறது. இதில் தமிழ்நாட்டின் வலிமையை உலகம் பார்க்கிறது. தமிழ்நாட்டில் உள்ள நமது மீனவ சமூகத்தினர் மிகவும் கடின உழைப்பாளிகள். தமிழகத்தின் மீன்வள கட்டமைப்பை வலுப்படுத்த மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு கோடிக்கணக்கான ரூபாய் கிடைத்துள்ளது. மீனவர்களுக்கு கூடுதல் வசதிகள், நவீன வசதிகளை வழங்குவதே எங்கள் முயற்சியாகும். கடற்பாசி பூங்காவாக இருந்தாலும் சரி, மீன்பிடி துறைமுகமாக இருந்தாலும் சரி, இறங்குதளமாக இருந்தாலும் சரி, மத்திய அரசு இங்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. உங்கள் பாதுகாப்பு குறித்தும் நாங்கள் கவலைப்படுகிறோம். ஒவ்வொரு நெருக்கடியிலும் இந்திய அரசு மீனவர்களுடன் துணை நிற்கிறது. இந்திய அரசின் முயற்சியால், கடந்த 10 ஆண்டுகளில் 3,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கையிலிருந்து திரும்பியுள்ளனர். கடந்த ஓராண்டில் 600-க்கும் அதிகமான மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மரண தண்டனை விதிக்கப்பட்ட நமது மீனவ நண்பர்கள் உயிருடன் இந்தியாவுக்குத் திரும்பினார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

நண்பர்களே,

இன்று, இந்தியா மீதான ஈர்ப்பு உலகில் அதிகரித்துள்ளது. உலக மக்கள் இந்தியாவை அறிய விரும்புகிறார்கள். அவர்கள் இந்தியாவைப் புரிந்துகொள்ள விரும்புகிறார்கள். இந்தியாவின் கலாச்சாரம், நமது மென்மையான சக்தி ஆகியவையும் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. தமிழ் மொழியும், பாரம்பரியமும் உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைய வேண்டும் என்பதற்காக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. தமிழ்நாட்டின் சில தலைவர்களிடமிருந்து கடிதங்கள் என்னிடம் வரும்போது, எந்தத் தலைவரும் தமிழ் மொழியில் கையெழுத்திடுவதில்லை என்பது எனக்கு சில நேரங்களில் ஆச்சரியமாக இருக்கிறது. 21-ம் நூற்றாண்டில் நமது மகத்தான பாரம்பரியத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று நான் நம்புகிறேன். ராமேஸ்வரமும் தமிழ்நாடு மண்ணும் நமக்குப் புதிய சக்தியையும், உத்வேகத்தையும் அளிக்கும் என்று நான் நம்புகிறேன். இன்றும் கூட தற்செயல் நிகழ்வைப் பாருங்கள். இது ஒரு மகத்தான தற்செயல் நிகழ்வுதான். ராம நவமியின் புனித நாள் இன்று. ராமேஸ்வரம் பூமியில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பழைய பாலத்தைக் கட்டியவர் குஜராத்தில் பிறந்தவர். இன்று நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு புதிய பாலத்தின் கட்டுமானத்தை தொடங்கி வைக்கும் வாய்ப்பும், குஜராத்தைச் சேர்ந்த நபருக்குக் கிடைத்துள்ளது.

நண்பர்களே,

இன்று, ராமேஸ்வரத்தின் புனித பூமியில் ராம நவமியில், இது உணர்ச்சிகரமான தருணமாகும். இன்று பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாள். வலுவான, வளமான, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்கு ஒவ்வொரு பிஜேபி தொண்டரின் கனவாகும். மூன்று, நான்கு தலைமுறைகளாக பாரத அன்னைக்காக வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் கோடிக்கணக்கான தொண்டர்களின் கடின உழைப்பு, இன்று நாட்டிற்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை நமக்கு வழங்கியுள்ளது என்பது எனக்குப் பெருமை அளிக்கிறது. இன்று, பிஜேபி அரசுகளின் நல்லாட்சியையும், தேச நலனுக்காக எடுக்கப்படும் முடிவுகளையும், ஒவ்வொரு இந்தியரும் காண்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பிஜேபி தொண்டர்கள் களத்தில் இருந்து பணியாற்றி ஏழைகளுக்கு சேவை செய்யும் விதத்தைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். கோடிக்கணக்கான பிஜேபி தொண்டர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துத் தெரிவிக்கிறேன்.

நன்றி! வணக்கம்! மீண்டும் சந்திப்போம்!

பாரத் மாதா கீ ஜெ!

பாரத் மாதா கீ ஜெ!

பாரத் மாதா கீ ஜெ!

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

***

 

(Release ID: 2119557)

PLM/ RJ


(Release ID: 2119612) Visitor Counter : 30