பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராமேஸ்வரத்தில் ₹8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

இன்று ராமநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்ய முடிந்ததை நான் பாக்கியமாகக் கருதுகிறேன்: பிரதமர்

ராமேஸ்வரத்திற்குக் கிடைத்துள்ள புதிய பாம்பன் பாலம், தொழில்நுட்பத்தையும், பாரம்பரியத்தையும் ஒன்றிணைக்கிறது: பிரதமர்

Posted On: 06 APR 2025 4:44PM by PIB Chennai

தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் 8,300 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை  நாட்டுக்கு அர்ப்பணித்தார். முன்னதாக, இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்த அவர், சாலை பாலத்திலிருந்து ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்தைக்  கொடியசைத்துத் தொடங்கி வைத்து பாலத்தின் செயல்பாட்டைப் பார்வையிட்டார். முன்னதாக, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் சுவாமி தரிசனம் செய்து பூஜை வழிபாட்டை மேற்கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இன்று, ஸ்ரீ ராம நவமியின் புனித  தருணமாக அமைந்துள்ளது என்று கூறினார். அயோத்தியில் உள்ள அற்புதமான ராமர் கோவிலில், இன்று, சூரியனின் தெய்வீக கதிர்கள்  குழந்தை ராமரை ஒரு பெரிய திலகத்துடன் அலங்கரித்தன என்று அவர் கூறினார். "பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கையும், அவரது ஆட்சியிலிருந்து நல்லாட்சியின் உத்வேகமும் தேசத்தைக் கட்டமைப்பதற்கான குறிப்பிடத்தக்க அடித்தளமாக செயல்படுகின்றன" என்று அவர் கூறினார். தமிழ்நாட்டின் சங்க கால இலக்கியங்களிலும் பகவான் ஸ்ரீ ராமர் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், புனித பூமியான ராமேஸ்வரத்திலிருந்து ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

  

  

"இன்று ராமநாதசுவாமி கோவிலில் பிரார்த்தனை செய்ததை நான் பாக்கியமாகக் கருதுகிறேன்" என்று கூறிய திரு மோடி, இந்த சிறப்புமிக்க நாளில், 8,300 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை அர்ப்பணிக்க தமக்கு வாய்ப்பு கிடைத்தது  என்று தெரிவித்தார். இந்த ரயில் மற்றும் சாலைத் திட்டங்கள், தமிழ்நாட்டில் போக்குவரத்துத் தொடர்பை கணிசமாக மேம்படுத்தும் என்று அவர் கூறினார். இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்காக தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

 

  

 

ராமேஸ்வரம்பாரத ரத்னா டாக்டர் கலாமின் பூமி என்று குறிப்பிட்ட பிரதமர், அறிவியலும் ஆன்மிகமும் எவ்வாறு ஒன்றுக்கொன்று இணைகின்றன என்பதை அவரது வாழ்க்கை நிரூபித்தது என்றார். "ராமேஸ்வரத்திற்குக் கிடைத்துள்ள புதிய பாம்பன் பாலம், தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியத்தின் இணைப்பைக் குறிக்கிறது" என்றார். ஆயிரக்கணக்கான ஆண்டுகள்  பழமை வாய்ந்த ஒரு நகரம் இப்போது 21-ம் நூற்றாண்டின் பொறியியல் அதிசயத்தால் இணைக்கப்பட்டுள்ளது என்று அவர்  குறிப்பிட்டார். அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்காக பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இந்தப் பாலம், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில்வே  கடல் பாலம் என்று திரு மோடி எடுத்துரைத்தார். இது பெரிய கப்பல்கள் அடியில் பயணிக்க அனுமதிக்கிறது எனவும் அதே நேரத்தில் விரைவான ரயில் பயணத்தை செயல்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். இன்று ஒரு புதிய ரயில் மற்றும் கப்பல் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததைக் குறிப்பிட்ட அவர், இந்தக் குறிப்பிடத்தக்க திட்டத்திற்காக தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


  

இந்தப் பாலத்திற்கான தேவை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது என்பதை எடுத்துக் காட்டிய திரு மோடி, மக்களின் ஆசிர்வாதத்துடன், இந்தப் பணியை முடிக்கும் அதிர்ஷ்டம் நமக்குக் கிடைத்தது என்றார். பாம்பன் பாலம், வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் பயணத்தை எளிதாக்குதல் ஆகிய இரண்டிற்கும் ஆதரவளிக்கிறது என்றும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். புதிய ரயில் சேவை, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இணைப்பை மேம்படுத்தும் என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்த வளர்ச்சி, தமிழ்நாட்டின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்குப் பயனளிக்கும் என்றும், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு மற்றும் வணிக வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

 

  


"கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா தனது பொருளாதாரத்தின் அளவை இரட்டிப்பாக்கியுள்ளது" என்று குறிப்பிட்ட திரு மோடி, இந்த விரைவான வளர்ச்சிக்கான  முக்கிய காரணங்களில் ஒன்று, நாட்டின் குறிப்பிடத்தக்க நவீன உள்கட்டமைப்பு ஆகும் என்றும்கடந்த பத்தாண்டுகளில், ரயில்வே, சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிவாயு குழாய்கள் போன்ற உள்கட்டமைப்புக்கான பட்ஜெட் கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார். "இன்று, நாடு முழுவதும்  பிரமாண்டமான திட்டங்கள் வேகமாக நடைபெற்று வருகின்றன" என்று கூறிய அவர், வடக்கில், ஜம்மு-காஷ்மீரில், உலகின் மிக உயரமான ரயில் பாலங்களில் ஒன்றான செனாப் பாலம் கட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். மேற்கில், நாட்டின் மிக நீளமான கடல் பாலமான அடல் சேது மும்பையில்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். கிழக்குப் பகுதியில், அசாமில் உள்ள போகிபீல் பாலம் முன்னேற்றத்திற்கு சான்றாக நிற்கிறது என்றும், தெற்கில், உலகில் உள்ள ஒரு சில செங்குத்து தூக்கு பாலங்களில் ஒன்றான பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். கிழக்கு மற்றும் மேற்கு பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டார். நாட்டின் முதலாவது புல்லட் ரயிலுக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், வந்தே பாரத், அம்ரித் பாரத், நமோ பாரத் போன்ற நவீன ரயில்கள், ரயில் கட்டமைப்பை மேலும் மேம்பட்டதாக ஆக்குகின்றன என்றும் அவர் கூறினார்.

  

 

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் ஒன்றுடன் ஒன்று இணையும்போது, வளர்ந்த நாடாக மாறுவதற்கான பாதை வலுப்பெறும் என்று கூறிய திரு நரேந்திர மோடி, உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு வளர்ந்த நாடு மற்றும் பிராந்தியத்திலும் இதுதான் நிலை என்று கூறினார். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் இணையும்போது, நாட்டின் முழு திறனும் உணரப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்த இணைப்பால்  தமிழ்நாடு உட்பட நாட்டின் ஒவ்வொரு பகுதியும் பயனடைவதாக அவர் குறிப்பிட்டார்.

  

 

"வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது" என்று கூறிய பிரதமர், தமிழ்நாட்டின் வளங்கள் வளர, வளர, இந்தியாவின் வளர்ச்சி மேலும் வேகமெடுக்கும் என்றார்தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 2014-ம் ஆண்டுக்கு முந்தைய காலத்தை விட கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு மூன்று மடங்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது என்று அவர் கூறினார். இந்த நிதி அதிகரிப்புமாநிலத்தின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

 

தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதை சுட்டிக்காட்டிய திரு மோடி, கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ரயில்வே பட்ஜெட் ஏழு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்பதை எடுத்துரைத்தார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு  தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு ஆண்டுக்கு 900 கோடி மட்டுமே  ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு  தமிழ்நாட்டிற்கான ரயில்வே பட்ஜெட் 6,000 கோடியைத் தாண்டியுள்ளது என்றார். ராமேஸ்வரம் ரயில் நிலையம் உட்பட மாநிலத்தில் உள்ள 77 ரயில் நிலையங்களை மத்திய அரசு நவீனமயமாக்கி வருவதாக அவர் மேலும் எடுத்துரைத்தார்.

 

  

கடந்த 10 ஆண்டுகளில் ஊரகப் பகுதிகளின் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், 2014 முதல் மத்திய அரசின் ஆதரவுடன் தமிழ்நாட்டில் 4,000 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். சென்னை துறைமுகத்தை இணைக்கும் உயர்மட்ட வழித்தடம், குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்புக்கு மற்றொரு உதாரணமாக இருக்கும் என்றும் கூறினார். இன்று, சுமார் 8,000 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுமுடிவடைந்த திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்துவதுடன், ஆந்திரப் பிரதேசத்துடனான  இணைப்பையும்  வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

சென்னை மெட்ரோ போன்ற நவீன பொதுப் போக்குவரத்து அமைப்பு முறைகள், தமிழ்நாட்டில் பயணத்தை எளிதாக்கியுள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர், விரிவான உள்கட்டமைப்பு மேம்பாடு பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கிறது என்பதை எடுத்துரைத்தார்.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் சமூக உள்கட்டமைப்பில் சாதனை அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய திரு மோடி, இந்த முன்முயற்சிகளால் தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்துள்ளன என்று மகிழ்ச்சி தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில், பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கட்டப்பட்ட 12 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுதியான வீடுகள் உட்பட, நாடு முழுவதும் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு 4 கோடிக்கும் அதிகமான உறுதியான வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார். கடந்த பத்தாண்டுகளில், சுமார் 12 கோடி கிராமப்புற குடும்பங்கள் முதல் முறையாக குழாய் மூலம் குடிநீரைப் பெற்றுள்ளன என்று அவர் மேலும்  கூறினார். இதில் தமிழ்நாட்டில் உள்ள 1 கோடியே 11 லட்சம் குடும்பங்களும் அடங்கும் என்றும், அவர்கள் இப்போது முதல் முறையாக தங்கள் வீடுகளில் குழாய் நீரைப் பெறுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். "மக்களுக்கு குறைந்த செலவில் தரமான  சுகாதார சேவையை வழங்குவது எங்கள் அரசின் உறுதிப்பாடு" என்று கூறிய பிரதமர், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான சிகிச்சைகள்  வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம்  மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்கு 8,000 கோடி செலவு  மிச்சமாகியுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 1,400-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தக மையங்கள்  செயல்படுகின்றன எனவும் அங்கு மருந்துகள் 80% வரை தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார். இந்த மலிவு விலை மருந்துகளின் விளைவாக மக்களுக்கு 700 கோடி மிச்சமாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மருத்துவர்களாவதற்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இனியும் இந்தியர்களுக்கு ஏற்படாது என்பதை உறுதி செய்வதில் அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மீண்டும்  வலியுறுத்திய திரு மோடி, சமீபத்திய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள்  உருவாக்கப்பட்டுள்ளன என்றார். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பல குழந்தைகளுக்கு உதவும் வகையில், தமிழ் மொழியில் மருத்துவக் கல்வியில் படிப்புகளை  மாநில அரசு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

"வரி செலுத்துவோர் வழங்கும் ஒவ்வொரு ரூபாயும் ஏழை மக்களுக்குப் பயனளிப்பதை நல்லாட்சி உறுதி செய்கிறது" என்று கூறிய பிரதமர், பிரதமரின்  விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் விவசாயிகள் கிட்டத்தட்ட 12,000 கோடியைப் பெற்றுள்ளனர் என்பதை சுட்டிக் காட்டினார். பிரதமரின்  பயிர் காப்பீட்டுத்  திட்டத்தின் மூலம்  தமிழ்நாட்டு விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும், 14,800 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

"இந்தியாவின்  கடல்சார் பொருளாதாரம், நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். இந்தத் துறையில் தமிழ்நாட்டின் வலிமை உலக இளவில் அங்கீகரிக்கப்படும்" என்று திரு மோடி கூறினார். தமிழக மீனவ சமுதாயத்தின் கடின உழைப்பை எடுத்துரைத்த அவர், மாநிலத்தின் மீன்வள உள்கட்டமைப்பை வலுப்படுத்தத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கி வருவதாகத் தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில், பிரதமரின்  மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  மாநிலம் கணிசமான நிதியைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்ட அவர், மீனவர்களுக்கு நவீன வசதிகளை வழங்குவதற்கான  அரசின் முயற்சிகளை சுட்டிக்காட்டினார். இதில் கடற்பாசி பூங்காக்கள், மீன்பிடி துறைமுகங்கள், மீன்களை தரையில் இறக்கும் பகுதிகள் ஆகியவற்றை அமைப்பதற்கு  நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் உள்ளிட்டவை அடங்கும் என்றார். மீனவர்களின் பாதுகாப்பில் அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்த திரு மோடி, கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையில் இருந்து 3,700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும், இதில் கடந்த ஆண்டில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியா மீது வளர்ந்து வரும் உலகளாவிய ஆர்வத்தால், நாட்டைப் பற்றி அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் உலக மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்று குறிப்பிட்ட திரு மோடி, இந்த ஈர்ப்பில் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மென்மையான சக்தியின் குறிப்பிடத்தக்க பங்கை எடுத்துரைத்தார். "தமிழ் மொழியும், பாரம்பரியமும் உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைவதை உறுதி செய்ய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது" என்று கூறிய அவர், 21-ம் நூற்றாண்டில், இந்த மகத்தான பாரம்பரியம் மேலும் முன்னேற வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். புண்ணிய பூமியான ராமேஸ்வரமும், தமிழ்நாடும் தொடர்ந்து நாட்டுக்கு உத்வேகம் அளித்து உற்சாகப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாள் என்று குறிப்பிட்ட திரு மோடி, ஒவ்வொரு பிஜேபி தொண்டர்களின் அயராத முயற்சிகளால் உந்தப்பட்டு வலுவான, வளமான மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை சுட்டிக் காட்டினார். பிஜேபி அரசுகளின் நல்லாட்சியையும், தேச நலனுக்காக எடுக்கப்படும் முடிவுகளையும் நாட்டு மக்கள் பார்த்து வருவதாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும், எல்லாப் பகுதிகளிலும் உள்ள பிஜேபி தொண்டர்கள் அடிதட்ட  அளவில் பணியாற்றி, ஏழைகளுக்கு சேவை செய்யும் விதம் குறித்து அவர் பெருமிதம் தெரிவித்தார். லட்சக்கணக்கான பிஜேபி  தொண்டர்களுக்கு தமது நன்றியையும்  நல்வாழ்த்துகளையும்  தெரிவித்து  பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில்  தமிழ்நாட்டின் ஆளுநர் திரு ஆர் என் ரவி, மத்திய தகவல் ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி:

 

புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்த  பிரதமர், ராமேஸ்வரம்-தாம்பரம் (சென்னை) இடையே புதிய ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தப் பாலம் ஆழமான கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. ராமாயணத்தின் படி, ராமர் சேது கட்டுமானம், ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடியில் இருந்து தொடங்கப்பட்டது.

ராமேஸ்வரத்தை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் இந்தப் பாலம், உலக அரங்கில் இந்திய பொறியியல் திறமைக்கு குறிப்பிடத்தக்க சாதனையாக உள்ளது. இது சுமார் 700 கோடி ரூபாய்  மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இது 2.08 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. 99 இடைவெளி இணைப்புகளையும் 72.5 மீட்டர் செங்குத்து லிப்ட் ஸ்பானையும்  கொண்டுள்ளது. இது 17 மீட்டர் உயரம் வரை உயரும். இது கப்பல்களின் சீரான இயக்கத்தை எளிதாக்குகிறது. அதே நேரத்தில் தடையற்ற ரயில் போக்குவரத்து செயல்பாடுகளையும் உறுதி செய்கிறது. துருப்பிடிக்காத எஃகு வலுவூட்டல், உயர்தர பாதுகாப்பு வண்ணப்பூச்சு, முழுமையாக பற்றவைக்கப்பட்ட இணைப்புகளுடன் கட்டப்பட்ட இந்தப் பாலம், அதிகரித்த ஆயுளையும் குறைந்த பராமரிப்புத் தேவைகளையும் கொண்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப இரட்டை ரயில் தடங்களை அமைக்கும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிறப்பு பாலிசிலோக்சேன் பூச்சு, ரயில் பாலத்தை அரிப்பிலிருந்து பாதுகாக்கிறது. இது கடுமையான கடல் சூழலில் ரயில் பாலத்தின் நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது.

தமிழ்நாட்டில் 8,300 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில், சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு  அர்ப்பணித்தார். தேசிய நெடுஞ்சாலை எண் 40-ல் வாலாஜாபேட்டை ராணிப்பேட்டை பிரிவில் 28 கிலோமீட்டர் நீளப் பாதையை நான்கு வழிப்பாதையாக மாற்றுவதற்கு அடிக்கல் நாட்டினார் . தேசிய நெடுஞ்சாலை எண் 332-ல் விழுப்புரம் புதுச்சேரி பிரிவில் 29 கிலோ மீட்டர் நீளமுள்ள 4 வழிச்சாலை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்தேசிய நெடுஞ்சாலை 32-ல் 57 கிலோ மீட்டர் நீளமுள்ள பூண்டியாங்குப்பம் சட்டநாதபுரம் பிரிவையும், தேசிய நெடுஞ்சாலை 36-ல் சோழபுரம் தஞ்சாவூர் பிரிவில் 48 கிலோ மீட்டர் நீளமுள்ள பகுதியையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நெடுஞ்சாலைகள் பல புனிதத் தலங்களையும் சுற்றுலாத் தலங்களையும் இணைக்கும். நகரங்களுக்கு இடையிலான தூரத்தைக் குறைத்து, மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, துறைமுகங்கள் ஆகியவற்றுக்கு விரைவாக போக்குவரத்தை வழங்க உதவும். மேலும் உள்ளூர் விவசாயிகள் வேளாண் பொருட்களை அருகிலுள்ள சந்தைகளுக்கு எளிதில் கொண்டு செல்ல இவை உதவும். உள்ளூர் தோல் தொழில்களையும் சிறு தொழில்களையும், பொருளாதார நடவடிக்கைகளையும் புதிய சாலை ஊக்குவிக்கும்.

***

(Release ID: 2119551)

RB/PLM/ RJ


(Release ID: 2119587) Visitor Counter : 68