பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் உருமாற்றமான பங்களிப்பை செய்கின்றன. இந்தத் துறையை வளர்ச்சியடையச் செய்து வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்: பிரதமர்

கடந்த 10 ஆண்டுகளில், சீர்திருத்தங்கள், நிதி சார் அறநெறி, வெளிப்படைத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியா தொடர்ந்து தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது: பிரதமர்

சீரான தொடர்ச்சி மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த உறுதிப்பாடு நமது தொழில்துறையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு மாற்றமாகும்: பிரதமர்

தற்போது உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் இந்தியாவுடனான பொருளாதாரக் கூட்டணியை வலுப்படுத்த விரும்புகின்றன: பிரதமர்

இந்த கூட்டணியின் அதிகபட்ச பயனை பயன்படுத்திக் கொள்ள நமது உற்பத்தித் துறை முன்வர வேண்டும்: பிரதமர்

தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நாங்கள் முன்னெடுத்துச் சென்றோம், சீர்திருத்தங்களின் விரைவை மேலும் துரிதப்படுத்தினோம்: பிரதமர்

எங்களது முயற்சிகள் பொருளாதாரத்தில் கோவிட் தாக்கத்தைக் குறைத்து, இந்தியா விரைவாக வளரும் பொருளாதாரமாக மாற உதவியது: பிரதமர்

நாட்டி

Posted On: 04 MAR 2025 1:36PM by PIB Chennai

பட்ஜெட்டுக்குப் பிந்தைய கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார். இணைய கருத்தரங்குகள்  வளர்ச்சியின் எந்திரங்களாக குறு, சிறு, நடுத்தர தொழில்துறையை எடுத்துக் கொண்டு நடத்தப்படுகின்றன. வளர்ச்சியின்  உற்பத்தி, ஏற்றுமதி, அணுசக்தி இயக்கங்கள்; ஒழுங்குமுறை, முதலீடு மற்றும் எளிதாக வணிகம் செய்வதற்கான சீர்திருத்தங்கள் ஆகியவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், உற்பத்தி, ஏற்றுமதி குறித்து நடைபெறும் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையகருத்தரங்குகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்டார். இந்த வரவு செலவுத் திட்டம்(பட்ஜெட் )அரசின் 3-வது பதவிக்காலத்தின் முதலாவது முழு வரவு செலவுத் திட்டம் என்று குறிப்பிட்ட அவர், இந்த வரவு செலவுத் திட்டத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் விநியோகம் என்றும் இது எதிர்பார்ப்புகளுக்கு மேலானது என்றும் தெரிவித்தார். பல துறைகளில், நிபுணர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று திரு மோடி சுட்டிக்காட்டினார். இந்தப் பட்ஜெட்டில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொடர்பாக குறிப்பிடத்தக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் நிலையான கொள்கைகளை நாடு கண்டு வருவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் சீர்திருத்தங்கள், நிதிசார் அறநெறி, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியா உறுதிப்பாட்டைக் காட்டியுள்ளது என்று கூறினார். நிலைத்தன்மை, சீர்திருத்தங்களின் உத்தரவாதம் தொழில்துறையில் புதிய நம்பிக்கையைக் கொண்டு வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிலைத்தன்மை வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்று உற்பத்தி, ஏற்றுமதியில் உள்ள ஒவ்வொரு பங்குதாரருக்கும் அவர் உறுதியளித்தார். துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்கவும், நாட்டிற்கான உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான புதிய வழிகளைத் தொடங்கவும் பங்குதாரர்களை ஊக்குவித்த திரு மோடி, உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் இந்தியாவுடனான பொருளாதாரக் கூட்டாண்மையை வலுப்படுத்த விரும்புகிறது என்று குறிப்பிட்டார். உற்பத்தித் துறையினர் இந்த ஒத்துழைப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

"எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் நிலையான கொள்கை மற்றும் சிறந்த வணிகச் சூழல் முக்கியம்" என்று கூறிய பிரதமர், சில ஆண்டுகளுக்கு முன்பு, அரசானது மக்கள் நம்பிக்கை சட்டத்தை(ஜன் விஸ்வாஸ்) அறிமுகப்படுத்தியது என்றும் இணக்கங்களைக் குறைக்க முயற்சிகளை மேற்கொண்டது என்றும் எடுத்துரைத்தார். மத்திய, மாநில நிலைகளில் 40,000-க்கும் மேற்பட்ட இணக்கங்கள் அகற்றப்பட்டு, வணிகம் செய்வதை எளிதாக்குவதை ஊக்குவிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். இந்த நடைமுறை தொடர வேண்டும் என்று வலியுறுத்திய திரு மோடி, எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி விதிகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், மக்கள் நம்பிக்கை 2.0 மசோதாவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். நிதிசாரா துறையில் உள்ள விதிமுறைகளை நவீன, நெகிழ்வான, மக்களுக்கு உகந்த மற்றும் நம்பிக்கை அடிப்படையிலானதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கையில் தொழில்துறையின் குறிப்பிடத்தக்க பங்கை எடுத்துரைத்தார்.  தீர்வு காண்பதற்கு நீண்ட காலம் ஆகக் கூடிய பிரச்சனைகளை அடையாளம் காணவும், செயல்முறைகளை எளிமைப்படுத்துவதற்கான வழிகளைப் பரிந்துரைக்கவும், விரைவான, சிறந்த முடிவுகளை அடைய தொழில்நுட்பத்தை எங்கு பயன்படுத்தலாம் என்பதற்கு வழிகாட்டவும் பங்குதாரர்களை அவர் ஊக்குவித்தார்.

"உலகில் தற்போது அரசியல் நிச்சயமற்ற தன்மை ஏற்படும் நிலையில், முழு உலக நாடுகளும் இந்தியாவை ஒரு வளர்ச்சி மையமாகக் காண்கின்றன" என்று கூறிய திரு மோடி, கோவிட் நெருக்கடியின் போது, உலகப் பொருளாதாரம் மந்தமடைந்தபோது, இந்தியா உலகளாவிய வளர்ச்சியைத் துரிதப்படுத்தியது என்பதை எடுத்துரைத்தார். தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதன் மூலமும், சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதன் மூலமும் இது சாத்தியமானது என்று அவர் மேலும் கூறினார். இந்த முயற்சிகள் பொருளாதாரத்தில் கோவிட் தாக்கத்தைக் குறைத்து, இந்தியா விரைவாக வளரும்  பொருளாதாரங்களில் ஒன்றாக மாற உதவியது என்று அவர் குறிப்பிட்டார். "உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி இயந்திரமாக இந்தியா திகழ்கிறது மற்றும் சவாலான சூழ்நிலைகளில் அதன் தாங்குதிறனை நிரூபித்துள்ளது" என்று அவர் கூறினார். விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இடையூறுகள் உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றன என்றும், உயர்தர தயாரிப்புகளை உற்பத்தி செய்யவும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் உலகிற்கு நம்பகமான கூட்டாளர்கள் தேவை என்றும் சுட்டிக்காட்டிய திரு மோடி, இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியா திறன் கொண்டது என்று கூறினார். தொழில்துறையினர் பார்வையாளர்களாக மட்டும் இல்லாமல், அவர்களின் பங்களிப்பை தீவிரமாக தேடி வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது இது எளிதானது என்று சுட்டிக்காட்டிய அவர், நாடு நட்புறவுக் கொள்கைகளைக் கொண்டுள்ளது மற்றும் அரசானது தொழில்துறைக்கு உறுதுணையாக உள்ளது என்று சுட்டிக்காட்டினார். வலுவான தீர்மானம், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் வாய்ப்புகளைத் தேடுவதில் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றும், சவால்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு தொழில்துறையும் ஒரு அடி முன்னோக்கி எடுத்து வைத்தால், கூட்டாக, அவை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் மூலம் தற்போது 14 தொழில் பிரிவுகள்  பயனடைந்து வருவதை எடுத்துரைத்த பிரதமர், இந்தத் திட்டத்தின் கீழ் 750க்கும் அதிகமான அலகுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக ரூ. 1.5 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு, ரூ. 13 லட்சம் கோடிக்கு மேல் உற்பத்தி, ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்றார். வாய்ப்புகள் கிடைக்கும்போது தொழில்முனைவோர் புதிய பகுதிகளில் எவ்வாறு முன்னேற முடியும் என்பதை இது நிரூபிக்கிறது என்று அவர் கூறினார். உற்பத்தியையும்  ஏற்றுமதியையும்   ஊக்குவிக்க இரண்டு இயக்கங்களைத் தொடங்குவதற்கான முடிவை திரு  மோடி அறிவித்தார். சிறந்த தொழில்நுட்பம் மற்றும் தரமான தயாரிப்புகளில் கவனம் செலுத்துவதையும், செலவுகளைக் குறைக்க திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதையும் அவர் எடுத்துரைத்தார். இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடிய உலகளவில் தேவைப்படும் புதிய தயாரிப்புகளை அடையாளம் காணுமாறு அனைத்து பங்குதாரர்களையும் அவர் வலியுறுத்தினார். மேலும் ஏற்றுமதி திறன் கொண்ட நாடுகளை உத்திசார்ந்து   அணுகுமாறும்  அவர்களை கேட்டுக்கொண்டார்.

"இந்தியாவின் உற்பத்திப் பயணத்தில் ஆராய்ச்சியும் மேம்பாடும் முக்கிய பங்கு வகித்துள்ளது, இதற்கு மேலும் முன்னேற்றமும்  ஊக்குவிப்பும் தேவை" என்று பிரதமர் குறிப்பிட்டார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மூலம், புதுமையான தயாரிப்புகள் மற்றும் ஏற்கனவே உள்ள தயாரிப்புகளுக்கு மதிப்பு கூட்டல் ஆகியவற்றில் கவனம் செலுத்த முடியும் என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் பொம்மைகள், காலணிகள் மற்றும் தோல் பொருட்கள்  திறனை உலகம் அங்கீகரிக்கிறது என்றும், பாரம்பரிய கைவினைப்பொருட்களை நவீன தொழில்நுட்பங்களுடன் இணைப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தத் துறைகளில் இந்தியா உலகளாவிய சாம்பியனாக முடியும் என்றும், இது ஏற்றுமதியில் கணிசமான அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வளர்ச்சி உழைப்பு மிகுந்த துறைகளில் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் என்றும் திரு மோடி எடுத்துரைத்தார். பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் பாரம்பரிய கைவினைஞர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குகிறது என்று குறிப்பிட்ட அவர், இந்தக் கைவினைஞர்களை புதிய வாய்ப்புகளுடன் இணைக்கும் முயற்சிகளை வலியுறுத்தினார். இந்தத் துறைகளில் மறைந்திருக்கும் திறனை வெளிப்படுத்த அனைத்துப் பங்குதாரர்களும் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

"இந்தியாவின் உற்பத்தி மற்றும் தொழில்துறை வளர்ச்சியின் முதுகெலும்பாக குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (எம்எஸ்எம்இ) துறை உள்ளது" என்று பிரதமர் கூறினார். 2020-ம் ஆண்டில், எம்எஸ்எம்இ-களின் வரையறையை 14 ஆண்டுகளுக்குப் பின்  திருத்துவதற்கு அரசு குறிப்பிடத்தக்க முடிவை எடுத்தது, இது எம்எஸ்எம்இ-கள் வளர்ச்சி அடைந்தால் அரசின் சலுகைகளை இழக்க நேரிடும் என்ற அச்சத்தை நீக்கியது என்பதை அவர் எடுத்துரைத்தார். நாட்டில் எம்எஸ்எம்இ-களின் எண்ணிக்கை 6 கோடிக்கும் அதிகமாக அதிகரித்து, கோடிக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்தப் பட்ஜெட்டில், எம்எஸ்எம்இ-களின் வரையறை மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது, அவற்றின் தொடர்ச்சியான வளர்ச்சி நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்று திரு மோடி கூறினார். இது இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டார். எம்எஸ்எம்இ-கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை கடன்களைப் பெறுவதில் உள்ள சிரமம் என்பதை எடுத்துக்காட்டினார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, எம்எஸ்எம்இ-கள் சுமார் ரூ. 12 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்களைப் பெற்றன, அது இப்போது சுமார் ரூ. 30 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்தப் பட்ஜெட்டில், எம்எஸ்எம்இ கடன்களுக்கான உத்தரவாதக் காப்பீடு ரூ. 20 கோடியாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். கூடுதலாக, பணி மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ரூ. 5 லட்சம் வரம்புடன் தனிப்பயனாக்கப்பட்ட கடன் அட்டைகள் வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

கடன் அணுகலை எளிதாக்கி, புதிய வகை கடனை அரசு அறிமுகப்படுத்தியதை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு மோடி, மக்கள் இப்போது உத்தரவாதங்கள் இல்லாமல் கடன்களைப் பெறுகிறார்கள், இது அவர்கள் முன்பு நினைத்துப் பார்க்காத ஒன்று என்பதை எடுத்துரைத்தார். கடந்த 10 ஆண்டுகளில், உத்தரவாதங்கள் இல்லாமல் கடன்களை வழங்கும் முத்ரா போன்ற திட்டங்கள் சிறு தொழில்களையும் ஆதரித்துள்ளன. வர்த்தக போர்ட்டல்  கடன் தொடர்பான பல சிக்கல்களைத் தீர்த்து வருவதாக அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு எம்எஸ்எம்இ-க்கும் குறைந்த செலவில், சரியான நேரத்தில் கடன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, புதிய கடன் வழங்கல் முறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். பெண்கள், எஸ்சி மற்றும் எஸ்டி சமூகங்களைச் சேர்ந்த ஐந்து லட்சம் முதல் முறை தொழில்முனைவோர்களுக்கு ரூ. 2 கோடி கடன்கள் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். முதல்முறை தொழில்முனைவோருக்கு கடன் ஆதரவு மட்டுமல்ல, வழிகாட்டுதலும் தேவை என்பதை அவர் எடுத்துரைத்தார். மேலும் இந்த நபர்களுக்கு உதவ ஒரு வழிகாட்டுதல் திட்டத்தை உருவாக்க தொழில்துறையினரை வலியுறுத்தினார்.

முதலீட்டை அதிகரிப்பதில் மாநிலங்களின் பங்கு மிக முக்கியமானது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு மோடி, வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு மாநிலங்கள் எவ்வளவு அதிகமாக ஊக்குவிக்கிறதோ, அவ்வளவு அதிகமாக முதலீட்டாளர்களை அவர்கள் ஈர்ப்பார்கள் என்று வலியுறுத்தினார். இது அந்தந்த மாநிலங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்தப் பட்ஜெட்டை யார் அதிகம் பயன்படுத்த முடியும் என்பதைக் காண மாநிலங்களுக்கு இடையே போட்டியை அவர் ஊக்குவித்தார். முற்போக்கான கொள்கைகளைக் கொண்ட மாநிலங்கள் தங்கள் பிராந்தியங்களில் முதலீடு செய்ய நிறுவனங்களை ஈர்க்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தலைப்புகளை அனைத்து பங்கேற்பாளர்களும் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய பிரதமர், இந்த இணையக் கருத்தரங்கு, செயல்படுத்தக்கூடிய தீர்வுகளைத் தீர்மானிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்தினார். கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்குவதில் பங்கேற்பாளர்களின் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். பட்ஜெட்டுக்குப் பின் செயல்படுத்தல் உத்திகளை வகுப்பதில் இது உதவும் என்று அவர் குறிப்பிட்டார். பங்கேற்பாளர்களின் பங்களிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி அவர் தமது உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்வில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற கலந்துரையாடலில் பல மத்திய அமைச்சர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பின்னணி

இந்தியாவின் தொழில்துறை, வர்த்தகம் மற்றும் எரிசக்தி உத்திகள் குறித்து விவாதிக்க அரசு அதிகாரிகள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் வர்த்தக நிபுணர்களுக்கு இந்த இணையவழி கருத்தரங்குகள் ஒரு கூட்டு தளத்தை வழங்குகின்றன. பட்ஜெட்டின் உருமாற்றமான நடவடிக்கைகளை தடையின்றி செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக, கொள்கை செயல்படுத்தல், முதலீட்டு வசதி மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது குறித்து இந்த விவாதங்கள் கவனம் செலுத்தும். பட்ஜெட் அறிவிப்புகளை பயனுள்ள வகையில் செயல்படுத்தவும், முயற்சிகளை ஒருங்கிணைக்கவும் இந்த இணையவழி கருத்தரங்குகள் தனியார் துறை நிபுணர்கள், தொழில் பிரதிநிதிகள் மற்றும் பொருள் சார்ந்த நிபுணர்களை ஈடுபடுத்தும்.

***

(Release ID: 2108027)
TS/IR/SMB/KPG/RR


(Release ID: 2108077) Visitor Counter : 19