பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்


நியூஸ் எக்ஸ் வேர்ல்ட் அலைவரிசையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

21-ம் நூற்றாண்டில், இந்தியாவை உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது: பிரதமர்

இப்போது, இந்தியாவின் புதுமைப் படைப்பு திறன்களை உலகம் காண்கிறது: பிரதமர்

'உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்', 'உலகத்திற்கான உள்ளூர் குரல்' என்ற தொலைநோக்குப் பார்வையை நான் நாட்டுக்கு அளித்தேன்- அந்த தொலைநோக்கு பார்வை நனவாவதை நாம் காண்கிறோம்: பிரதமர்

இப்போது, இந்தியா உலகின் புதிய தொழிற்சாலையாக உருவாகி வருகிறது; நாம் வெறும் தொழிலாளர்கள் மட்டுமல்ல; நாம் ஒரு உலக சக்தி!: பிரதமர்

'குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை' என்பதே திறமையான நிர்வாகத்திற்கான தாரக மந்திரம்: பிரதமர்

எல்லையற்ற புதுமைக் கண்டுபிடிப்புகளின் பூமியாக இந்தியா மாறி வருகிறது: பிரதமர்

இந்திய இளைஞர்களே நமது முன்னுரிமை: பிரதமர்

பாடப் புத்தகங்களைத் தாண்டி சிந்திக்க மாணவர்களுக்கு தேசிய கல்விக் கொள்கை வாய்ப்பளித்துள்ளது: பிரதமர்

Posted On: 01 MAR 2025 12:36PM by PIB Chennai

 

புதுதில்லி பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நியூஸ் எக்ஸ் வேர்ல்டு அலைவரிசை தொடங்கப்பட்டதை முன்னிட்டுத் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த அலைவரிசை வலையமைப்பில் இந்தி, ஆங்கிலம், தவிர பல்வேறு பிராந்திய மொழிகளில் அலைவரிசைகள் உள்ளன என்றும், இது உலக அளவில் செல்கிறது என்றும் அவர் எடுத்துரைத்தார். இதற்கு அவர், தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இதுபோன்ற ஊடக நிகழ்ச்சிகளில் தாம் கலந்து கொண்டதாகவும், ஆனால் நியூஸ் எக்ஸ் வேர்ல்ட் இப்போது ஒரு புதிய போக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறிய திரு நரேந்திர மோடி, இந்த சாதனைக்காக சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதுபோன்ற ஊடக நிகழ்வுகள் நாட்டில் ஒரு பாரம்பரியம் என்று அவர் எடுத்துரைத்தார். ஆனால் நியூஸ் எக்ஸ் வேர்ல்ட் அதற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது என்று அவர் கூறினார். இதன் உச்சிமாநாடு, கொள்கைகள் பற்றிய விவாதத்தில் கவனம் செலுத்தியது என்றும், அரசியலை மையமாகக் கொண்டு ஒப்பிடும்போது கொள்கைகள் மையமாக இருந்தன ன்றும் அவர் கூறினார். இந்த உச்சிமாநாடு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களின் விவாதங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அவர்கள் ஒரு புதுமையான மாதிரியில் பணியாற்றியுள்ளதாக ஒப்புக் கொண்ட அவர், மற்ற ஊடக நிறுவனங்கள் இந்த போக்கையும் வார்ப்புருவையும் தங்கள் சொந்த புதுமையான வழிகளில் வளப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

"21-ம் நூற்றாண்டு இந்தியாவை உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது" என்று பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்தியாவுக்கு வருகை தந்து புரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார். நேர்மறையான செய்திகள் உருவாக்கப்படும் நாடாக இந்தியா திகழ்கிறது என்றும், ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகள் படைக்கப்படுகின்றன என்றும், ஒவ்வொரு நாளும் புதியது நிகழ்ந்து வருகிறது என்றும் அவர் கூறினார். ஆற்றங்கரையோரம் உள்ள நகரத்தில் கோடிக்கணக்கான மக்கள் குளித்து உலகை வியப்பில் ஆழ்த்தியதையும் பிரயாக்ராஜில் பிப்ரவரி 26 அன்று நிறைவடைந்த மகா கும்பமேளா குறித்தும் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, "இந்தியாவின் புதுமையான திறன்களை உலகம் காண்கிறது" என்றார். செமிகண்டக்டர்கள் முதல் விமானம் தாங்கிக் கப்பல்கள் வரை அனைத்தையும் இந்தியா தயாரித்து வருவதாகவும், இந்தியாவின் வெற்றியைப் பற்றி உலகம் விரிவாக அறிய விரும்புவதாகவும் சுட்டிக்காட்டிய அவர், நியூஸ் எக்ஸ் வேர்ல்டுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பு என்றும் தெரிவித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு, உலகின் மிகப்பெரிய தேர்தலை இந்தியா நடத்தியதை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, 60 ஆண்டுகளில் முதல் முறையாக, இந்தியாவில் ஒரு அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது என்றார். கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா செய்துள்ள எண்ணற்ற சாதனைகளின் அடிப்படையில் இந்த பொது மக்களின் நம்பிக்கை அமைந்துள்ளது என்று அவர் கூறினார். இந்த புதிய அலைவரிசை இந்தியாவின் உண்மையான கதைகளை எந்தவித பாரபட்சமும் இன்றி உலகிற்கு கொண்டு வரும் என்றும், நாட்டை உண்மையான முறையில் காண்பிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

"சில ஆண்டுகளுக்கு முன்பு, 'லோக்கல் ஃபார் லோக்கல்' மற்றும் 'லோக்கல் ஃபார் குளோபல்' அதாவது உள்ளூர் பொருள்களுக்கு குரல் கொடுப்போம், உலகத்திற்கான உள்ளூர் குரல் என்ற தொலைநோக்கு பார்வையை நாட்டுக்கு வழங்கியதாக அவர் தெரிவித்தார். இன்று இந்த தொலைநோக்கு பார்வை நனவாவதை நாம் காண்கிறோம் என்று பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவின் ஆயுஷ் தயாரிப்புகள், யோகா ஆகியவை உள்ளூர் அளவில் இருந்து உலக அளவில் பிரபலமடைந்துள்ளன என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவின் உணவான சிறுதானியங்கள் உலக அங்கீகாரத்தைப் பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். தமது நண்பரும், ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமருமான டோனி அபாட் தில்லி ஹாட்டில் இந்திய சிறுதானியங்களை முதன்முதலில் அனுபவித்ததாகவும், சிறுதானிய உணவுகளை ருசித்ததாகவும் அவர் கூறினார்.

சிறுதானியங்கள் மட்டுமல்ல, இந்தியாவின் மஞ்சளும் உள்ளூரில் இருந்து உலக அளவில் சென்றுள்ளது என்றும், உலகின் மஞ்சளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மஞ்சளை இந்தியா வழங்குகிறது என்றும் கூறிய திரு நரேந்திர மோடி, இந்தியாவின் காபி உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்றார். உலகின் ஏழாவது பெரிய காபி ஏற்றுமதியாளராக இந்தியா மாற்றியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் மொபைல் போன்கள், மின்னணு பொருட்கள், மருந்துகள் ஆகியவை உலக அளவில் அங்கீகாரம் பெற்று வருவதாக அவர் கூறினார். உலகளாவிய பல்வேறு முன்முயற்சிகளை இந்தியா முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். பிரான்சில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாட்டில் இந்தியா இணை ஏற்பாட்டாளராக இருந்ததுடன் அதை நடத்தும் பொறுப்பை இப்போது ஏற்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் தலைமையின் போது இந்தியாவின் வெற்றிகரமான ஜி-20 உச்சிமாநாட்டை எடுத்துரைத்தார்.  இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடம் ஒரு புதிய பொருளாதார பாதையாக அறிமுகப்படுத்தப்பட்டதை அவர் சுட்டி காட்டினார். உலகளாவிய தென் பகுதி நாடுகளுக்கு இந்தியா வலுவான குரலை வழங்கியுள்ளது என்றும் தீவு நாடுகளின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பருவநிலை நெருக்கடியை எதிர்கொள்ள, இந்தியா மிஷன் லைஃப் அதாவது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை என்ற தொலைநோக்கு பார்வையை உலகிற்கு வழங்கியுள்ளது என்று அவர் மேலும் கூறினார். சர்வதேச சூரியசக்தி கூட்டணி, பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான கூட்டணி போன்ற முன்முயற்சிகளில் இந்தியாவின் தலைமையை திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். பல இந்திய தயாரிப்புகள் உலக அளவில் செல்கின்றன என கூறிய அவர், இந்திய ஊடகங்களும் இந்த உலகளாவிய வாய்ப்பைப் புரிந்துகொண்டு அரவணைத்து வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக உலகம் இந்தியாவை அதன் பின்புலம் என்று குறிப்பிட்டு வந்தது என்று குறிப்பிட்ட பிரதமர், "இன்று இந்தியா உலகின் புதிய தொழிற்சாலையாக மாறி வருகிறது" என்றார். இந்தியா ஒரு தொழிலாளர் சக்தி மட்டுமல்லாமல் ஒரு உலக சக்தி என்பதை எடுத்துரைத்த அவர், ஒரு காலத்தில் பல பொருட்களை இறக்குமதி செய்த நாடு இப்போது ஏற்றுமதி மையமாக உருவெடுத்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டினார். ஒரு காலத்தில் உள்ளூர் சந்தைகளில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த விவசாயிகள், இப்போது தங்கள் விளைபொருட்களுடன் உலகளாவிய சந்தைகளை எட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.  இந்தியாவின் பாதுகாப்புத் தளவாடங்கள் இந்திய பொறியியல், தொழில்நுட்பத்தின் வலிமையை உலகிற்கு வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். மின்னணுவியல் முதல் மோட்டார் வாகனத் துறை வரை, இந்தியாவின் அளவையும், திறனையும் உலகம் கண்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். "இந்தியா உலகிற்கு தயாரிப்புகளை வழங்குவது மட்டுமல்லாமல், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் நம்பகமான கூட்டாளியாகவும் மாறி வருகிறது" என்று பிரதமர் மேலும் கூறினார்.

பல்வேறு துறைகளில் இந்தியா தலைமைத்துவம் பெற்றுள்ளது, பல ஆண்டுகளாக கடின உழைப்பு மற்றும் முறையான கொள்கை முடிவுகளின் விளைவாகும், என்று கூறிய திரு மோடி, கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை எடுத்துரைத்தார்,  முடிக்கப்படாத பாலங்கள் மற்றும் நிறுத்தப்பட்ட சாலைகள் இப்போது கனவுகளாக மாறி நல்ல சாலைகள் மற்றும் சிறந்த விரைவுச்சாலைகளுடன் புதிய வேகத்தில் முன்னோக்கி நகர்கின்றன. இது ஆட்டோமொபைல் துறைக்கு கணிசமாக பயனளிக்கிறது என்று அவர் வலியுறுத்தினார். வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதையும், மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிப்பதையும் குறிப்பிட்ட அவர், இன்று இந்தியா ஒரு பெரிய வாகன உற்பத்தியாளராகவும், ஏற்றுமதியாளராகவும் உருவெடுத்துள்ளது என்றார்.

மின்னணு உற்பத்தியிலும் இதே போன்ற மாற்றம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளில், முதன்முறையாக 2.5 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு மின்சாரம் சென்றடைந்துள்ளது, இது மின்னணு உபகரணங்களின் தேவை மற்றும் உற்பத்தியை அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். மலிவு விலை டேட்டா மொபைல் போன்களுக்கான தேவையை அதிகரித்துள்ளது என்றும், மொபைல் போன்களில் சேவைகள் கிடைப்பது அதிகரித்துள்ளதுடன்,  டிஜிட்டல் சாதனங்களின் அதிக நுகர்வுக்கு வழிவகுத்துள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார். பிஎல்ஐ  திட்டங்கள் போன்ற திட்டங்கள் இந்தத் தேவையை ஒரு வாய்ப்பாக மாற்றி, இந்தியாவை ஒரு பெரிய மின்னணு ஏற்றுமதியாளராக மாற்றியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். பெரிய இலக்குகளை நிர்ணயித்து அதை அடைவதற்கான இந்தியாவின் திறன் "குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுமை" என்ற தாரக மந்திரத்தில் வேரூன்றி உள்ளது என்று கூறிய  திரு மோடி, அரசின் தலையீடு அல்லது அழுத்தம் இல்லாமல் திறமையான மற்றும் சிறப்பான நிர்வாகத்தை ஊக்குவிக்கும் "குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுமை" என்ற மந்திரத்தில் வேரூன்றியதாக குறிப்பிட்ட திரு மோடி, கடந்த பத்தாண்டுகளில் அரசு எவ்வாறு 1,500 வழக்கொழிந்த சட்டங்களை ரத்து செய்துள்ளது என்பதற்கு ஒரு உதாரணத்தை வழங்கினார். அத்தகைய ஒரு சட்டம் நாடக செயல்திறன் சட்டமாகும், இது பொது இடங்களில் நடனமாடுபவர்களைக் கைது செய்ய அனுமதித்தது. இந்த சட்டம் சுதந்திரத்தின் பின்னர் 70 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது . தற்போதைய அரசால் அது ஒழிக்கப்பட்டது. பழங்குடியினர் பகுதிகள் மற்றும் வடகிழக்குப் பகுதியின் உயிர்நாடியாக விளங்கும் மூங்கில் உதாரணத்தையும் பிரதமர் குறிப்பிட்டார். முன்பு, மூங்கில் ஒரு மரமாக வகைப்படுத்தப்பட்டதால், மூங்கில் வெட்டுவது கைது செய்யப்படுவதற்கு வழிவகுக்கும். மூங்கிலை புல்லாக அங்கீகரித்து, பல தசாப்தங்கள் பழமையான இந்த சட்டத்தை அரசு இப்போது மாற்றியுள்ளது என்று அவர் கூறினார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, வருமான வரி தாக்கல் செய்வது ஒரு சாதாரண நபருக்கு கடினமான பணியாக இருந்தது, ஆனால் இன்று, சில நிமிடங்களில் அதை செய்ய முடியும் என்றும், ரீஃபண்ட் சில நாட்களுக்குள் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்ட பிரதமர், வருமான வரிச் சட்டங்களை எளிமைப்படுத்தும் செயல்முறை நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டினார். ரூ 12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு  வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, இது சம்பள வர்க்கத்திற்கு கணிசமாக பயனளிக்கிறது என்று கூறிய அவர், இளம் தொழில் வல்லுநர்கள் தங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றவும், அவர்களின் சேமிப்பை அதிகரிக்கவும் பட்ஜெட் உதவியுள்ளது என்று கூறினார். வாழ்க்கையை எளிதாக்குதல், எளிதாக வர்த்தகம் செய்தல், நாட்டு மக்களுக்கும் அவர்களது விருப்பங்களுக்கும் திறந்த வானம் ஆகியவற்றை வழங்குவதே இலக்கு என்று திரு மோடி கூறினார். பல தொடக்க நிறுவனங்கள் புவியியல் தரவுகளிலிருந்து பயனடைகின்றன என்று அவர் குறிப்பிட்டார், இதற்கு முன்பு வரைபடங்களை உருவாக்க அரசின் அனுமதி தேவைப்பட்டது. அரசு இதை மாற்றியுள்ளது, தொடக்க நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த தரவை சிறப்பாகப் பயன்படுத்த அனுமதித்துள்ளது, என்றார்.

பூஜ்ஜியம் என்ற கோட்பாட்டை உலகிற்கு அளித்த நிலமான இந்தியா, தற்போது எல்லையற்ற கண்டுபிடிப்புகளின் பூமியாக மாறி வருகிறது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியா புதுமைகளை உருவாக்குவது மட்டுமின்றி, இந்திய வழிமுறைகளை புதுமைப்படுத்துவதாகவும் கூறினார். மலிவான, எளிதில் அணுகக் கூடிய மற்றும் மாற்றியமைக்கக்கூடிய தீர்வுகளை இந்தியா உருவாக்கி வருவதாகவும், இந்தத் தீர்வுகளை  உலகிற்கு வழங்குவதாகவும் அவர் எடுத்துரைத்தார். உலகிற்கு பாதுகாப்பான மற்றும் செலவு குறைந்த டிஜிட்டல் கட்டண முறை தேவைப்பட்டபோது, இந்தியா யுபிஐ முறையை உருவாக்கியது என்று அவர் குறிப்பிட்டார். பேராசிரியர் கார்லோஸ் மான்டஸ் யுபிஐ தொழில்நுட்பம் மக்களுக்கு உகந்த தன்மையால் ஈர்க்கப்பட்டதாகக் கூறியதைச் சுட்டிக்காட்டிய  திரு மோடி, இன்று பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் போன்ற நாடுகள் இதனை தங்கள் நிதி சூழலுடன் ஒருங்கிணைத்து வருவதாகக் கூறினார். இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பான இந்தியா ஸ்டேக்குடன் இணைக்க பல நாடுகள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கோவிட் -19 தொற்றுநோய்களின் போது, இந்தியாவின் தடுப்பூசி நாட்டின் தரமான சுகாதார தீர்வுகளை உலகிற்கு நிரூபித்தது. ஆரோக்கிய சேது செயலி உலகிற்கு பயனளிக்கும் வகையில் திறந்த மூலமாக மாற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியா ஒரு பெரிய விண்வெளி சக்தி என்றும், மற்ற நாடுகளின் விண்வெளி அபிலாஷைகளை அடைய உதவுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார். பொது நலனுக்காக செயற்கை நுண்ணறிவு குறித்து இந்தியா பணியாற்றி வருவதாகவும், தனது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் கூறினார்.

இன்று எண்ணற்ற உதவித்தொகைகளை தொடங்கியதற்காக ஐடிவி நெட்வொர்க்கைப் பாராட்டிய திரு மோடி, இந்திய இளைஞர்கள் வளர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய பயனாளிகள் மற்றும் பங்குதாரர்கள் என்றும், அவர்களுக்கு உயர் முன்னுரிமை அளிக்கிறார்கள் என்றும் வலியுறுத்தினார். பாடப்புத்தகங்களைத் தாண்டி சிந்திக்கும் வாய்ப்பை தேசிய கல்விக் கொள்கை குழந்தைகளுக்கு வழங்கியுள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். நடுநிலைப் பள்ளியில் இருந்தே, குழந்தைகள் குறியீட்டைக் கற்றுக்கொள்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் போன்ற துறைகளுக்குத் தயாராகிறார்கள் என்று அவர் கூறினார். அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்கள் பற்றி பேசுகையில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன் குழந்தைகளுக்கு நேரடி அனுபவத்தை அளிக்கிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் 50,000 புதிய அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

செய்தி உலகில், பல்வேறு ஏஜென்சிகள் சிறந்த செய்திகளை பரப்ப உதவுகின்றன என்று திரு மோடி குறிப்பிட்டார். இதேபோல், ஆராய்ச்சித் துறையில் உள்ள மாணவர்களுக்கு முடிந்தவரை பல தகவல் ஆதாரங்களுக்கான அணுகல் தேவை. முன்னதாக, அவர்கள் அதிக செலவில் வெவ்வேறு பத்திரிகைகளுக்கு சந்தா செலுத்த வேண்டியிருந்தது, ஆனால் அரசு "ஒரே நாடு, ஒரே சந்தா" முன்முயற்சியை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஆராய்ச்சியாளர்களை இந்த கவலையிலிருந்து விடுவித்துள்ளது, இது நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆராய்ச்சியாளருக்கும் உலகளவில் புகழ்பெற்ற பத்திரிகைகளை இலவசமாக அணுகுவதை உறுதி செய்கிறது என்று அவர் கூறினார். இதற்காக ரூ.6,000 கோடிக்கு மேல் செலவிட அரசு திட்டமிட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சி, உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி அல்லது செயற்கை நுண்ணறிவு என ஒவ்வொரு மாணவருக்கும் சிறந்த ஆராய்ச்சி வசதிகளை அரசு உறுதி செய்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் குழந்தைகள் எதிர்கால தலைவர்களாக உருவெடுத்து வருவதை கோடிட்டுக் காட்டினார். ஐ.ஐ.டி மாணவர்களுடனான டாக்டர் பிரையன் கிரீனின் சந்திப்பு மற்றும் விண்வெளி வீரர் மைக் மாசிமினோவின் மத்திய பள்ளி மாணவர்களுடனான சந்திப்பு ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க அனுபவங்களை குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் உள்ள ஒரு சிறிய பள்ளியிலிருந்து குறிப்பிடத்தக்க எதிர்கால கண்டுபிடிப்புகள் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஒவ்வொரு உலக மேடையிலும் தனது கொடி அசைவதைக் காண வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் மற்றும் திசை என்று வலியுறுத்திய பிரதமர், சிறிய சிந்தனை அல்லது சிறிய நடவடிக்கைகளுக்கான நேரம் இது அல்ல என்று குறிப்பிட்டார். ஒரு ஊடக நிறுவனம் என்ற வகையில், நியூஸ் எக்ஸ் வேர்ல்ட் இந்த உணர்வைப் புரிந்துகொண்டது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பத்தாண்டுகளுக்கு முன்பு, நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களை சென்றடைவதில் கவனம் செலுத்தப்பட்டது, ஆனால் இன்று, இந்த நெட்வொர்க் உலகளவில் தைரியமான நடவடிக்கையை எடுத்துள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். இந்த உத்வேகமும் தீர்மானமும் ஒவ்வொரு குடிமகனிடமும், தொழில்முனைவோரிடமும் இருக்க வேண்டும் என்று திரு மோடி கூறினார். உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு சந்தையிலும், வரவேற்பறையிலும், டைனிங் டேபிளிலும் இந்திய பிராண்டைக் காண வேண்டும் என்ற தமது பார்வையை அவர் பகிர்ந்து கொண்டார். "இந்தியாவில் தயாரிப்போம்" என்பதே உலகின் தாரக மந்திரமாக மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மக்கள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது "இந்தியாவில் குணமடைவோம்", திருமணத்தைத் திட்டமிடும்போது "இந்தியாவில் திருமணம் செய்துகொள்வோம்", பயணம், மாநாடுகள், கண்காட்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பது பற்றி நினைப்பதாக பிரதமர் தமது கனவை வெளிப்படுத்தினார். இந்த நேர்மறையான அணுகுமுறை மற்றும் வலிமையை நமக்குள் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார், மேலும் இந்த முயற்சியில் நெட்வொர்க் மற்றும் சேனலின் குறிப்பிடத்தக்க பங்கை அவர் பாராட்டினார்.  சாத்தியக்கூறுகள் முடிவற்றவை என்றும், அவற்றை தைரியத்துடனும் உறுதியுடனும் யதார்த்தமாக மாற்றுவது இப்போது நம்முடையது என்றும் அவர் கூறினார்.

"அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக மாறுவதற்கான உறுதியுடன் இந்தியா முன்னேறி வருகிறது" என்று கூறிய  திரு மோடி, ஐடிவி நெட்வொர்க்கை உலக அரங்கில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இதேபோன்ற தீர்மானத்தை எடுக்க ஊக்குவித்து, அவர்களின் வெற்றியில் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

ஐடிவி மீடியா நெட்வொர்க்கின் நிறுவனர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் திரு கார்த்திகேய சர்மா, ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் திரு. டோனி அபோட், இலங்கையின் முன்னாள் அதிபரும், முன்னாள் பிரதமருமான  திரு. ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில்  கலந்துகொண்டனர்.

***

PKV/PLM/KV

 


(Release ID: 2107240) Visitor Counter : 18