வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முதலீட்டுக்கான முன்னணி மையமாகத் திகழும் வடகிழக்கு மாநிலங்கள்: மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா

Posted On: 06 FEB 2025 9:29AM by PIB Chennai

இந்தியாவின் அஷ்டலட்சுமி என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்கள், நாட்டில் முதலீட்டுக்கான முன்னணி மையமாகத் திகழ்வதாக மத்திய தகவல்தொடர்பு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா இன்று (05/02/2025) சென்னையில் நடைபெற்ற வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் தெரிவித்தார்.

 

வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் வேறு எங்கும் இல்லாத தனித்துவமான இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்டுள்ளன என்றும், கல்வி, விளையாட்டு, விவசாயம், தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை உள்பட பெரும்பாலான துறைகளில் முதலீட்டுக்கான ஒரு சிறந்த இடமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சென்னையைப் பற்றி கூறுகையில், சென்னை இந்தியாவின் முன்னோடி மாநிலமாக பல துறைகளில் கோலோச்சுவதாகத் தெரிவித்தார். சென்னையின் ஓ எம் ஆர் சாலை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் ஏற்றுமதியின் மையமாக திகழ்வதாக தெரிவித்தார்.

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி மெட்ராஸ் ஆகியவை, கல்வியில் அதி நவீன தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன என்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுக்கு 50 ஆயிரம் மென்பொருள் பொறியாளர்களை உருவாக்குகிறது என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டுக்கும் வட கிழக்கு மாநிலங்களுக்கும் இடையே பிரம்மபுத்திரா நதி மூலம் வணிக உறவு பல நூறாண்டுகள் பழமையானது என்று கூறிய அவர், தற்போது அதனை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டுமென்றும் தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலங்களில் 5000 கி மீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள், 50 ஆயிரம் கி மீ தொலைவுக்கு பிரதமரின் கிராம சாலைகள் அனைத்து கிராமங்களையும் நகரங்களுடன் இணைத்துள்ளதாக தெரிவித்த அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பிற பகுதிகளை விட வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து 'அஷ்டலட்சுமி' என வளம் செழிக்கும் மாநிலங்களாக மாற்றியுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

வடகிழக்கில் ஒரு காலத்தில் ரயில் இணைப்பு இல்லாத மாநிலங்கள் இருந்த நிலை மாறி, தற்போது ரயில் இணைப்பு இல்லாத மாநிலங்களே இல்லை என்ற நிலைக்கு முன்னேறியுள்ளன என்றார். 2014 க்கு முன் 9 விமான நிலையங்களே இருந்தன என்றும் தற்போது அது 17 ஆக உயர்ந்துள்ளது என்றும் கூறினார்.

 

இந்தியாவுக்கு மட்டுமின்றி, கிழக்கு ஆசியாவுக்கே ஏற்றுமதி மையமாகும் அளவுக்கு மனிதவளம், இயற்கை வளம் ஆகியவற்றை வடகிழக்கு மாநிலங்கள் கொண்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

சுற்றுலாவை பொறுத்தவரை வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு அதிசயங்களை காணலாம் என்றும் இவற்றை ஐரோப்பா நாடுகளில் கூட காணவியலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மொத்தத்தில் அஷ்டலட்சுமி மாநிலங்கள் முதலீட்டுக்கான அனைத்து வசதிகளையும் வளங்களையும் தன்னகத்தே நிறைவாக கொண்டுள்ளன என்றும், தமிழ்நாட்டின் முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வடகிழக்கு மாநிலங்களில் முதலீடு செய்ய முன்வர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டு துறைச் செயலாளர் திரு சஞ்சன் குமார், இணைச் செயலாளர் திரு சாந்தனு மற்றும் மிசோரம் மாநிலத்தின் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு லால்ங்கிங்லோவா ஹமர், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவின் தலைவர் திரு புபேஷ் நாகராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2100164

***

TS/PKV/AG/RR


(Release ID: 2100195) Visitor Counter : 12