குடியரசுத் தலைவர் செயலகம்
நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஆற்றிய உரை
Posted On:
31 JAN 2025 12:31PM by PIB Chennai
மாண்புமிகு உறுப்பினர்களே,
நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத் தொடரில் உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர், நமது அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. சில தினங்களுக்கு முன்னர், இந்தியக் குடியரசு அதன் பயணத்தில் 75 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்த சந்தர்ப்பம், குடியரசின் தாயாக இந்தியாவின் பெருமையை புதிய உச்சங்களுக்கு எடுத்துச் செல்லும். எனது நாட்டின் அனைத்து குடிமக்களின் சார்பாக, பாபாசாகிப் அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்பை உருவாக்கிய மற்றவர்களுக்கும் எனது மரியாதையை செலுத்துகிறேன்.
மாண்புமிகு உறுப்பினர்களே,
வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பமேளாவும் நாட்டில் நடைபெற்று வருகிறது. மகா கும்பமேளா இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் சமூக உணர்வின் விழாவாகும். நாடு முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் புனித நீராடினர். மௌனி அமாவாசை அன்று நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
சில நாட்களுக்கு முன்பு, நாட்டின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை நாம் இழந்தோம். அவர் பத்து ஆண்டுகள் பிரதமராகவும், நீண்டகாலமாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். மன்மோகன் சிங் அவர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
மாண்புமிகு உறுப்பினர்களே,
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் இந்த அமிர்த காலத்தில் எனது அரசு முன்னெப்போதும் இல்லாத சாதனைகள் மூலம் புதிய ஆற்றலைச் செலுத்துகிறது. எனது அரசின் இந்த மூன்றாவது பதவிக்காலத்தில் பணிகளின் வேகம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இன்று, ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் மற்றும் கொள்கைகள் அசாதாரண வேகத்தில் செயல்படுத்தப்படுவதை நாடு காண்கிறது.
எனது அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில், "அனைவருக்கும் வீடு" வழங்கும் இலக்கை அடைய உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தை விரிவுபடுத்தி, கூடுதலாக மூன்று கோடி குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக 5,36,000 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற ஏழைகளுக்கு குடியிருப்பு நிலத்தின் உரிமையை வழங்குவதற்கும், நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதற்கும் எனது அரசு உறுதிபூண்டுள்ளது. ஸ்வமித்வா திட்டத்தின் கீழ், இதுவரை 2.25 கோடி சொத்துரிமை அட்டைகளை வழங்கியுள்ளோம். அவற்றில் சுமார் 70 லட்சம் சொத்துரிமை அட்டைகள் கடந்த ஆறு மாதங்களில் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் உழவர் நல நிதி திட்டத்தின் கீழ், சமீபத்திய மாதங்களில் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு 41,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த ஐந்து கோடி மக்களின் மேம்பாட்டிற்காக "பூமி தந்தை பழங்குடி கிராம வளம்" பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது, இந்த முயற்சிக்கு 80,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆறு கோடி மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் சுகாதார காப்பீட்டைப் பெறுவார்கள்.
சிறு தொழில்முனைவோருக்கு, முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
எனது அரசு இளைஞர்களுக்கான கல்வி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. உயர்கல்வி பெறத் தகுதியான மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக பிரதமர் வித்யாலட்சுமி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, ஒரு கோடி இளைஞர்களுக்கு சிறந்த 500 நிறுவனங்களில் உள்ளகப் பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படும். வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்கவும், ஆட்சேர்ப்பில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
கூட்டுறவு மூலம் செழிப்பு உணர்வைத் தொடர்ந்து, 'திரிபுவன்' கூட்டுறவு பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் நான்காவது கட்டத்தின் கீழ், 25,000 குடியிருப்பு பகுதிகளை சாலை வசதி மூலம் இணைக்க அரசு 70,000 கோடி ரூபாயை அனுமதித்துள்ளது. அடல்ஜியின் பிறந்தநாளின் நூற்றாண்டு விழாவை நாடு கொண்டாடும் நிலையில், பிரதமரின் கிராம சாலைகள் திட்டம் அவரது தொலைநோக்குப் பார்வையை தொடர்ந்து வெளிப்படுத்துகிறது.
தற்போது, நாடு முழுவதும் 71 வந்தே பாரத், அமிர்த பாரத் மற்றும் நமோ பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடந்த ஆறு மாதங்களில் 17 புதிய வந்தே பாரத் ரயில்களும் ஒரு நமோ பாரத் ரயிலும் சேர்க்கப்பட்டுள்ளன.
"ஒரே நாடு-ஒரே தேர்தல்" மற்றும் "வக்ஃப் சட்டத் திருத்தம்" போன்ற முக்கியமான பிரச்சனைகளிலும் அரசு விரைவான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
மாண்புமிகு உறுப்பினர்களே,
எனது அரசு 10 ஆண்டு பதவிக்காலத்தில் 'வளர்ச்சியடைந்த இந்தியா' பயணத்தில் புதிய ஆற்றலைப் புகுத்தியுள்ளது.
'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வையில்...
பொதுமக்கள் பங்கேற்பின் கூட்டு வலிமை,
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு பாதை,
டிஜிட்டல் புரட்சியின் வடிவத்தில் தொழில்நுட்பத்தின் சக்தி,
நவீன உள்கட்டமைப்பின் அடித்தளம் ஆகியவை உள்ளன.
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றுவதை நோக்கி அரசு பயணிக்கிறது.
'வளர்ச்சியடைந்த இந்தியா' நோக்கிய பயணம் நமது அரசியலமைப்பின் லட்சியங்களால் தொடர்ந்து வழிநடத்தப்படுவதை உறுதிசெய்ய, அரசு அதன் நிர்வாகத்தின் மையத்தில், சேவை, நல்லாட்சி, செழிப்பு, பெருமை ஆகிய நான்கு முக்கிய கொள்கைகளைச் செயல்படுத்துகிறது.
சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்திற்கான அதன் உறுதிப்பாட்டில் அரசு விரைவான முன்னேற்றங்களைச் செய்து வருகிறது.
எனது அரசின் வழிகாட்டும் மந்திரம் "அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் அனைவரின் முயற்சி அனைவரின் நம்பிக்கை" என்பதாகும். அதன் குறிக்கோள் 'வளர்ச்சியடைந்த இந்தியா'-வை உருவாக்குவதாகும்.
மாண்புமிகு உறுப்பினர்களே,
வளர்ச்சியின் நன்மைகள் சமூகத்தின் கடைசி படியில் நிற்கும் நபரையும் சென்றடையும் போதுதான் அது உண்மையிலேயே அர்த்தமுள்ளதாக இருக்கும். இதுவே அந்த்யோதயாவின் சாராம்சமாகும். இதற்காக எனது அரசு தொடர்ந்து அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
ஏழை மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கை வழங்கப்படும்போது, அது வறுமையை எதிர்த்துப் போராட உதவும் அதிகாரமளிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.
தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் 12 கோடி கழிப்பறைகள் கட்டுதல், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 10 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள், 80 கோடி ஏழை குடிமக்களுக்கு ரேஷன் பொருட்கள், சவுபாக்யா திட்டம் மற்றும் ஜல் ஜீவன் இயக்கம் போன்ற முயற்சிகள் ஏழைகளுக்கு கண்ணியத்துடன் வாழ முடியும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளன. இத்தகைய முயற்சிகள் காரணமாக, 25 கோடி மக்கள் வறுமையை வென்று வாழ்க்கையில் முன்னேறி வருகின்றனர். அவர்கள் ஒரு புதிய நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியுள்ளனர். இது இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் புதிய ஆற்றலைச் செலுத்தும் ஒரு குழுவாகும்.
மாண்புமிகு உறுப்பினர்களே,
இந்தியா போன்ற ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் நடுத்தர வர்க்கத்தின் விருப்பங்களைப் பொறுத்ததாகும். அந்த விருப்பங்களை நிறைவேற்றுவதன் மூலம் அது வரையறுக்கப்படுகிறது. நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகள் பெரிதாக இருந்தால், தேசம் உயரும். முதல் முறையாக, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நடுத்தர வர்க்கத்தினரின் பங்களிப்புகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு பாராட்டுவது எனது அரசுதான்.
அரசு ஊழியர்களும் நடுத்தர வர்க்கத்தினரின் குறிப்பிடத்தக்க பிரதிநிதிகள்தான். சமீபத்தில், அரசு ஊழியர்களின் நலனுக்காக எட்டாவது ஊதியக் குழுவை அமைக்க எனது அரசு முடிவு செய்தது. இந்த முடிவு வரும் ஆண்டுகளில் அரசு ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வுக்கு அடித்தளமிடும்.
கூடுதலாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு 50% உறுதியான ஓய்வூதியத்தை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது பரவலாக வரவேற்கப்படுகிறது.
நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்றுவதிலும் எனது அரசு உறுதிபூண்டுள்ளது. அவர்களின் கனவுகளைப் பாதுகாக்க ஆர்இஆர்ஏ போன்ற சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வீட்டுக் கடன்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன.
உதான் திட்டத்தின் மூலம், சுமார் 1.5 கோடி மக்கள் விமானத்தில் பறக்கும் தங்கள் கனவை நிறைவேற்றியுள்ளனர். 80% சலுகை விலையில் மருந்துகளை வழங்கும் மக்கள் மருந்தக மையங்கள் மக்களுக்கு 30,000 கோடி ரூபாய்க்கு மேல் சேமிக்க உதவியுள்ளன. பல்வேறு துறைகளில் கல்விக்கான இடங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட பல மடங்கு அதிகரிப்பு நடுத்தர வர்க்கத்தினருக்கு குறிப்பிடத்தக்க அளவில் பயனளித்துள்ளது.
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் வரி செலுத்துவோரின் பங்கை ஒப்புக்கொண்டு, எனது அரசு வரி தொடர்பான செயல்முறைகளை எளிமைப்படுத்தியுள்ளது. முகமற்ற மதிப்பீடுகளை அறிமுகப்படுத்துவது வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தியுள்ளதுடன் வரி சர்ச்சைகளையும் குறைத்துள்ளது.
75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் ஓய்வூதியம் மட்டுமே பெறுகின்ற நிலையில் அவர்கள் தங்கள் வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்வது குறித்து முடிவெடுக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
மாண்புமிகு உறுப்பினர்களே,
பெண்கள் முன்னெடுக்கும் வளர்ச்சி மூலம் தேசத்துக்கு அதிகாரம் அளிப்பதை எனது அரசு உறுதியாக நம்புகிறது.
மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் நாரி சக்தி வந்தன் ஆதினியம், இந்த திசையில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்களை இணைத்து, 91 லட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுக்களுக்கு அதிகாரம் அளிக்கின்றன. இந்தக் குழுக்கள் வங்கி இணைப்புகள் மூலம் 9 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளன.
3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்க எனது அரசு இலக்கை நிர்ணயித்துள்ளது. இன்று, 1.15 கோடிக்கும் மேற்பட்ட லட்சாதிபதி சகோதரிகள் கண்ணியமான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர், கடந்த ஆறு மாதங்களில் சுமார் 50 லட்சம் பேர் லட்சாதிபதி சகோதரிகளாக மாறி வருகின்றனர். இந்தப் பெண்கள் தொழில் முனைவோராக தங்கள் குடும்ப வருமானத்திற்கு பங்களித்து வருகின்றனர்.
“அனைவருக்கும் காப்பீடு” என்ற உணர்வோடு, காப்பீட்டு சிநேகிதி பிரச்சாரம் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தொலைதூரப் பகுதிகளை நிதி அமைப்புடன் இணைப்பதில் எங்கள் வங்கி மற்றும் டிஜிட்டல்-கட்டண சிநேகிதிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இதற்கிடையில், வேளாண் சிநேகிதிகள் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகின்றனர். மேலும் பசு சிநேகிதிகள் நமது கால்நடை வளங்களை வலுப்படுத்தி வருகின்றனர்.
ட்ரோன் சகோதரி திட்டம் பெண்களின் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப அதிகாரமளிப்புக்கான ஒரு ஊடகமாக மாறியுள்ளது.
இந்தியாவின் மகள்கள் இப்போது போர் விமானங்களில் பறக்கிறார்கள். காவல் படையில் சேர்கிறார்கள், பெரு வணிக நிறுவனங்களை வழிநடத்துகிறார்கள் என்பது இந்த நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும். எனது அரசின் முடிவைத் தொடர்ந்து, பெண்கள் தேசிய ராணுவப் பள்ளிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் வீராங்கனைகளாக சேரத் தொடங்கியுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதன் மூலம் நமது மகள்களும் நாட்டை பெருமைப்படுத்துகிறார்கள்.
இந்த நாடாளுமன்றத்தின் மூலம், 'பெண்கள் சக்தி'க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு உறுப்பினர்களே,
கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவின் இளைஞர்கள் ஒவ்வொரு பெரிய தேசிய முயற்சியையும் முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்க முன்வந்துள்ளனர். இன்று, நமது இளைஞர்கள் புத்தொழில்கள் மூலம், விளையாட்டு முதல் விண்வெளி ஆய்வு வரை ஒவ்வொரு துறையிலும் நாட்டைப் பெருமைப்படுத்தி வருகின்றனர். மை பாரத் தளம் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றனர்.
மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா, புத்தொழில் இந்தியா, ஸ்டாண்ட்-அப் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற முயற்சிகள் இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில், அரசு சாதனை அளவில் 10 லட்சம் நிரந்தர அரசு வேலைகளை வழங்கியுள்ளது.
திறன்களை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், எனது அரசு 2 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பை அங்கீகரித்துள்ளது.
1 கோடி இளைஞர்களுக்கான உள்ளக பயிற்சித் திட்டம், வேலை சூழல்களில் அவர்களுக்கு நேரடி அனுபவத்தை வழங்கும்.
இந்தியாவில் இப்போது 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன, அவை புதுமையின் தூண்களாக உருவாகி வருகின்றன.
விண்வெளித் துறையை மேம்படுத்த, 1,000 கோடி ரூபாய் கூட்டு மூலதன நிதி தொடங்கப்பட்டுள்ளது.
கியூஎஸ் உலக எதிர்கால திறன்கள் குறியீட்டு எண் 2025-ல், இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது, எதிர்கால வேலை பிரிவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் தலைமைத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
இதேபோல், உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை கணிசமாக முன்னேறி, 76-வது இடத்திலிருந்து 39-வது இடத்திற்கு வந்துள்ளது.
மாண்புமிகு உறுப்பினர்களே,
தேசிய கல்விக் கொள்கை மூலம், எனது அரசுமாணவர்களுக்கு ஒரு நவீன கல்வி முறையை நிறுவுகிறது.
யாரும் கல்வியை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, தாய்மொழிகளில் கற்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. கூடுதலாக, மொழித் தடைகளை நீக்கி, 13 இந்திய மொழிகளில் பல்வேறு ஆட்சேர்ப்புத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
குழந்தைகளிடையே புதுமைகளை வளர்க்க, 10,000க்கும் மேற்பட்ட அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
ஆராய்ச்சி செய்வதை எளிதாக்குவதற்காக, சர்வதேச ஆராய்ச்சிப் பொருட்களுக்கு இலவச அணுகலை வழங்கும் ஒரு நாடு-ஒரு சந்தா திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில், உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது, மேலும் அவற்றின் தரமும் மேம்பட்டுள்ளது. கியூஎஸ் உலக பல்கலைக்கழக ஆசியா தரவரிசையில், 163 இந்திய பல்கலைக்கழகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தின் திறப்பு விழா, இந்தியாவின் பண்டைய கல்வி மகிமையை மீட்டெடுத்துள்ளது.
ஒரு இந்திய குடிமகன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ககன்யான் விண்கலத்தில் விண்வெளிக்குச் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை. விண்வெளி டாக்கிங்கில் சமீபத்தில் கிடைத்த வெற்றி, இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவுவதற்கு மேலும் வழி வகுத்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, இஸ்ரோ தனது 100-வது ஏவுதலை நடத்தி, செயற்கைக்கோளை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. இந்தச் சாதனைக்காக இஸ்ரோ மற்றும் நாட்டின் அனைத்து குடிமக்களையும் நான் வாழ்த்துகிறேன்.
மாண்புமிகு உறுப்பினர்களே,
நாட்டில் உலகத்தரத்திலான விளையாட்டுச் சூழலை உருவாக்குவதற்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எனது அரசு மேற்கொண்டுள்ளது. கேலோ இந்தியா திட்டம், ஒலிம்பிக் மேடை இலக்கு திட்டம், தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் நிறுவுதல் போன்ற முன்முயற்சிகள் இந்த தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிப்பு செய்கின்றன.
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு விளையாட்டு மையம் குவாலியரில் திறக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் என்றாலும், பாராலிம்பிக் என்றாலும் இந்திய அணிகள் தொடர்ச்சியாக மிகச்சிறந்த திறன்களை வெளிப்படுத்தி வருகின்றன. அண்மையில் உலக செஸ் சாம்பியன் பட்ட போட்டியிலும் இந்தியா வரலாற்றுச்சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளது.
உடல்தகுதி இந்தியா இயக்கத்தின் மூலம் வலுவான,அதிகாரம் கொண்ட இளையோர் சக்தியை நாங்கள் கட்டமைக்கிறோம்.
மாண்புமிகு உறுப்பினர்களே,
‘வளர்ச்சியடைந்த இந்தியா’ கட்டமைப்பில் விவசாயிகள், ராணுவ வீரர்கள் மற்றும் அறிவியலுடன் ஆராய்ச்சியின் பங்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் எங்களின் இலக்கு உலகளாவிய கண்டுபிடிப்பு ஆற்றல் மையமாக இந்தியாவை நிறுவுவதாகும்.
கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சியை மேம்படுத்த 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது.
கூடுதலாக, விஞ்ஞான் தாரா திட்டத்தின் கீழ் அறிவியல் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பை வலுப்படுத்துவதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய செயற்கை நுண்ணறிவு இயக்கம் தொடங்கியதன் மூலம் செயற்கை நுண்ணறிவு களத்தில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னணி தொழில்நுட்ப துறையில் தலைமை ஏற்கும் நாடுகளுக்கிடையே இந்தியாவை நிலைநிறுத்துவதை தேசிய குவாண்டம் இயக்கம் நோக்கமாக கொண்டுள்ளது.
உயிரி தொழில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு பயோஇ3 கொள்கையை எனது அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்தக் கொள்கை அடுத்த தொழில்துறை புரட்சியை ஊக்குவிப்பதாக செயல்படும். சுற்றுச்சூழலை பாதுகாத்துகொண்டே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இயற்கை வளங்களைத் திறமையாகப் பயன்படுத்துவதில் உயிரி பொருளாதாரம் கவனம் செலுத்துகிறது.
மாண்புமிகு உறுப்பினர்களே,
கொள்கை முடக்கத்திலிருந்து பொருளாதாரத்தை வெளியே கொண்டு வரும் உறுதியான தீர்மானத்துடன் எனது அரசு பணியாற்றியுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று, அதற்கு பிந்தைய நிலை, போர் தொடர்பான நிச்சயமற்ற நிலைமைகள் போன்ற உலகளாவிய கவலைகள் இருந்தபோதும் இந்தியப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க நிலைத்தன்மையையும், உறுதிப்பாட்டையும் கொண்டு தனது வலிமையை நிரூபித்துள்ளது.
வணிகம் செய்வதை எளிதாக்க பல குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எனது அரசு அமலாக்கியுள்ளது.
ஒரே நாடு ஒரே வரி என்ற உணர்வுடன் ஜிஎஸ்டி முறை அறிமுகம் செய்யப்பட்டது. இது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பயனளித்து வருகிறது.
இந்தியாவில் தயாரியுங்கள் போன்ற கொள்கைகள் காரணமாக உலகளாவிய பல பெரிய நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி பொருட்கள் மீது மேட் இன் இந்தியா என்ற லேபிளை பெருமையுடன் இப்போது காட்சிப்படுத்துகின்றன.
மாண்புமிகு உறுப்பினர்களே,
கிராமங்கள் முதல், நகரங்கள் வரை உள்ள இந்தியாவின் சிறு வணிகர்கள் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சிறு தொழில் முனைவோரை எனது அரசு கருதுகிறது. சுயவேலை வாய்ப்புக்காக அவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது.
எம்எஸ்எம்இ-களுக்கு பண உத்தரவாதத்திட்டம், இ-வர்த்தக ஏற்றுமதி மையங்கள் நிறுவுதல் போன்றவை பல்வேறு தொழில்துறைகளுக்கு ஊக்கமளிக்கின்றன.
இந்த மூன்றாவது பதவிக்காலத்தில் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கான சிறு தொழில்முனைவோர் பயனடைகிறார்கள்.
கடன் பெறுவதை எளிதாக்க நிதி சேவைகளை எனது அரசு ஜனநாயகப்படுத்தியுள்ளது. இன்று கடன்கள், கடன் அட்டைகள், காப்பீடு போன்றவை அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கின்றன.
சாலையோர வியாபாரிகளாக தங்களின் வாழ்வாதாரத்தை பெற்று வரும் நமது சகோதர சகோதரிகள் பல தசாப்தங்களாக வழக்கமான வங்கி நடைமுறைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் பயனடைகிறார்கள். அவர்களின் டிஜிட்டல் பரிவர்த்தனை பதிவுகள் அடிப்படையில் அவர்களின் வணிகத்தை விரிவுபடுத்த கூடுதலாகக் கடன்கள் பெறுவதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஓஎன்டிசி முன்முயற்சி என்பது டிஜிட்டல் வர்த்தகத்தை மிகவும் உள்ளடக்கியதாக மாற்றியுள்ளது. இணையவழி வியாபாரச் சூழலை வளர்ப்பதற்கு சிறுவணிகங்கள் தற்போது சமவாய்ப்பை பெற்றுள்ளன.
மாண்புமிகு உறுப்பினர்களே,
கடந்த 10 ஆண்டுகளில் எனது அரசு முன்னேற்றத்தில் பல புதிய அத்தியாயங்களை எழுதியுள்ளது. அவற்றில் ஒன்று இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி என்ற பொன்னான மைல்கல்லாகும்.
டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் உலகளாவிய மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. மொத்த முன்னணி நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் 5ஜி சேவைத் தொடக்கம் என்பது இந்தப் பயணத்தின் மிகமுக்கியமான மைல்கல்லாக உள்ளது.
இந்தியாவின் யூபிஐ தொழில்நுட்பமும், பல வளர்ச்சியடைந்த நாடுகளைக் கவர்கின்றது. உலகின் நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் கூடுதலாக நடைபெறுகின்றன.
சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான ஒரு கருவியாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எனது அரசு பயன்படுத்துகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது தெரிவு செய்யப்பட்ட தனிநபர்களுக்கு அல்லது வர்க்கத்திற்கென வரையறுக்கப்படவில்லை. இந்த வசதியின் மூலம் இந்தியாவில் உள்ள சிறுகடை வியாபாரிகள் கூட இப்போது பயனடைகிறார்கள்.
வங்கி சேவைகளும், யூபிஐ போன்ற உலகத்தரத்திலான தொழில்நுட்பமும் தற்போது கிராமங்களிலும் கிடைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 5 லட்சத்திற்கும் அதிகமான பொதுச்சேவை மையங்கள் நிறுவப்பட்டு, டஜன் கணக்கிலான அரசு சேவைகள் குடிமக்களுக்கு இணையதளம் மூலம் கிடைக்கின்றன.
மக்களின் அன்றாட வாழ்க்கையில் அரசு தலையீட்டை குறைப்பதற்காக எனது அரசு இ-ஆளுமையை வலியுறுத்துகிறது. உதாரணமாக தங்களின் முக்கியமான ஆவணங்களை தனிநபர்கள் எங்கேயும், எப்போதும் பெறவும், காட்சிப்படுத்தவும் டிஜிலாக்கர் முறை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இருப்பினும் அதிகரித்து வரும் டிஜிட்டல் சமூகத்தில் சைபர் பாதுகாப்பு என்பது தேசமுக்கியத்தும் வாய்ந்ததாக மாறியுள்ளது. டிஜிட்டல் மோசடி, சைபர் குற்றம், டீப் ஃபேக்ஸ் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் நமது சமூக, பொருளாதார, தேசப்பாதுகாப்பிற்கு சவால்களாக உள்ளன. இத்தகைய சைபர் அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்த எனது அரசு எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. சைபர் பாதுகாப்பு துறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.
சைபர் பாதுகாப்பை உறுதிசெய்ய எனது அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இந்த முயற்சிகள் காரணமாக உலகளாவிய சைபர் பாதுகாப்பு குறியீட்டில் முதல்நிலை அந்தஸ்தை இந்தியா பெற்றுள்ளது.
மாண்புமிகு உறுப்பினர்களே,
எந்தவொரு நாட்டின் நவீன கட்டமைப்பும், அதன் குடிமக்களுக்கு தரமான வாழ்க்கையை வழங்குவது மட்டுமின்றி நாட்டிற்குப் புதிய அடையாளத்தையும் வழங்குகிறது. நாட்டில் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை உணர்வை நிலைநிறுத்துகிறது. கடந்த தசாப்தத்தில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியா பல சாதனைகளை புரிந்துள்ளது. இந்த நவீன கட்டமைப்பு இந்தியாவின் செல்வாக்கை உலக அளவில் வலுப்படுத்துவதோடு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்து தொழில்துறைகளுக்கு ஊக்கமளித்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.
நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள் ஆகியவற்றால் நாட்டின் அனைத்துப்பகுதிகளையும் இணைப்பதற்கான பணியை இயக்கரீதியில் எனது அரசு மேற்கொண்டு வருகிறது. பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் என்பது திட்டங்கள் நிறைவடைவதை வேகப்படுத்துகிறது.
10 ஆண்டுகளுக்கு முன் பட்ஜெட்டில் மூலதனச் செலவு 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருந்தது. கடந்த பட்ஜெட்டில் 11 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த தசாப்தத்தின் முன்னேற்றம் தொடரும் நிலையில் எதிர்காலத்திற்காக கடந்த 6 மாதங்களில் அடிப்படை கட்டமைப்புக்கு எனது அரசு சாதனை அளவாக முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாதவானில் இந்தியாவின் முதலாவது ஆழ்கடல் பெருந்துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த துறைமுகம் 76,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளது. இது உலகின் முதன்மையான 10 துறைமுகங்களில் ஒன்றாக இருக்கும்.
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ரயில்பாதை மூலம் தேசத்தை இணைக்கும் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம் நிறைவடைந்துள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சிறப்புமிக்க இந்த திட்டத்தின் கீழ் செனாப் பாலம் கட்டப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலமாக இது உள்ளது. மேலும் இந்தியாவின் முதலாவது ரயில் கேபிள் பாலமான ஆன்ஜிபாலம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
ஷின்குன் லா சுரங்கப்பாதை பணி வெற்றிகரமாக நடைபெறுகிறது. வெகுவிரைவில் இது நிறைவடையும் போது உலகின் மிக உயர்ந்த பகுதியில் அமையும் சுரங்கப்பாதையாக இது இருக்கும். இதன் மூலம் லடாக்-இமாச்சலப் பிரதேசம் இடையே ஆண்டுமுழுவதும் போக்குவரத்து உறுதிசெய்யப்படும்.
இந்தியாவின் விமானத்துறை வேகவேகமாக வளர்ச்சியடைகிறது. நாட்டின் விமான நிறுவனங்கள் 1700-க்கும் அதிகமான புதிய விமானங்களுக்கு ஆர்டர்கள் தந்துள்ளன. மிகப்பெரிய விமானங்களை இயக்கும்வகையில் விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு உறுப்பினர்களே,
வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்த நமது நகரங்களை எதிர்காலத்திற்கு ஏற்றதாக மாற்றுவது முக்கியமாகும்.
இந்த திசைவழியில், நகர்ப்புற வசதிகளை நவீனமாக்கவும், அவற்றை ஆற்றல் மிக்கதாக மாற்றுவதற்கும் எனது அரசு கவனம் செலுத்துகிறது. இதனுடன் புதிய நகரங்கள் மேம்பாட்டிற்கும் அடித்தளம் அமைக்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களின் 12 தொழில்துறை தொகுப்புகளையும் 100 தொழில்துறை பூங்காக்களையும் அமைக்க சுமார் 28,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய எனது அரசு முடிவு செய்துள்ளது.
நகர்ப்புற போக்குவரத்தை முறைப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. தில்லி, புனே, தானே, பெங்களூரூ ஆகியவற்றில் மெட்ரோ திட்டங்கள், அகமதாபாத்-புஜ் வழித்தடத்தில் அண்மையில் தொடங்கப்பட்ட நமோ பாரத் விரைவு ரெயில் சேவை ஆகியவை வளர்ச்சியடைந்த இந்தியா நகரங்களை வடிவமைக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன் தில்லியில், ரித்தலா – நரேலா-குந்தி வழித்தட பணிகள் தொடங்கியுள்ளன. தில்லி மெட்ரோ வலைப்பின்னலில் மிகப்பெரியதாக இது இருக்கும். எனது அரசு தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக தில்லி மெட்ரோ ரயில் வழித்தடங்கள் வேகமாக அதிகரிக்கின்றன. 2014-ல் தேசிய தலைநகர் தில்லியில் மொத்த மெட்ரோ வழித்தடம் 200 கிமீ.க்கும் குறைவாக இருந்தது. இப்போது இது 2 மடங்காக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மெட்ரோ வழித்தடங்களின் பங்கு தற்போது 1000 கி.மீ. என்ற அளவிற்கு இருப்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மெட்ரோ வலைப்பின்னலில் உலகிலேயே மூன்றாவது பெரிய நாடாக இந்தியா மாறியுள்ளது.
மேலும் 8,000 கோடி ரூபாய் செலவு மதிப்பீட்டில் நாட்டில் 52,000 மின்சார பேருந்துகளை இயக்குவது என்ற முடிவு சுமூகமான, தூய்மையான நகர்புற போக்குவரத்தை அளிக்கும். இந்த முன் முயற்சி ஏராளமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். நகர்ப்புறச் சுற்றுலாவை மேம்படுத்தவும், போக்குவரத்து தொடர்பை விரிவுபடுத்தவும் நாடு முழுவதும் 15 ரோப்வே திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
மாண்புமிகு உறுப்பினர்களே,
பல பரிமாண, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான கொள்கைகள் உடன் எனது அரசு தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. எனவே கட்டுமான கட்டமைப்புகளை வலியுறுத்தும் அதே நேரம் சமூக கட்டமைப்பு புரட்சியை ஏற்படுத்துவதிலும் எனது அரசு சமஅளவு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
குறைந்த செலவில் எளிதில் அணுகக்கூடிய, தரமான, சுகாதார கவனிப்பை சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் வழங்க எனது அரசு உயர்முன்னுரிமை அளிக்கிறது. மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை வசதிகள், சிகிச்சை பிரிவுகள், மருந்துகள் கிடைப்பது ஆகியவற்றால் உடல்நலன் பேணுவதற்கு சாதாரண குடும்பங்களின் செலவு கணிசமாக குறைந்துள்ளது.
சிறந்த சுகாதார சேவை குடிமக்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்ய நாடு முழுவதும் 1,75,000 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புற்றுநோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்து மற்றும் சிகிச்சைக்கு அதிக செலவு ஆகியவை காரணமாக புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்கவரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சுமார் 9 கோடி பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
எனது அரசின் முயற்சிகள் காரணமாக மூளைக்காய்ச்சல் நோயை முறியடிப்பதில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இறப்பு விகிதம் 6 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் காரணமாக காசநோயாளிகளின் எணிக்கையும் குறைந்துள்ளது. காசநோய் இல்லாத இயக்கத்தின் வெற்றிக்கு அனைத்து குடிமக்களும் மாண்புமிகு நடாளுமன்ற உறுப்பினர்களும் பங்களிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
தாய்-சேய் இறப்பு விகிதத்திலும் இந்தியா கணிசமான முன்னேற்றத்தை கண்டுள்ளது.
கருவுற்றப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி திட்டங்கள் கண்காணிப்பை உறுதிசெய்ய யூ-வின் போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 30 கோடி தடுப்பூசி டோஸ்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தொலை மருத்துவத்தின் மூலம் 30 கோடிக்கும் அதிகமான தொலை மருத்துவ ஆலோசனைகள் குடிமக்கள் நலனுக்காக வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த ஐந்தாண்டுகளில் மருத்துவ கல்லூரிகளில் 75,000 புதிய இடங்களை உருவாக்க அரசு பணிசெய்து வருகிறது.
சுகாதார கட்டமைப்பையும், மருத்துவ சாதனங்கள் உற்பத்தியையும் அரசு அதிகரித்து வருகிறது. புதிதாக பெருமொத்த மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான பூங்காக்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
மாண்புமிகு உறுப்பினர்களே,
இந்தியாவில் நவீன மற்றும் தற்சார்பு வேளாண் அமைப்பு நமது இலக்காகும். விவசாயிகளின் பயிர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யவும், அவர்களின் வருவாயை அதிகரிக்கவும் எனது அரசு அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறது.
2023-24-ல் 332 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியா தற்போது உலகிலேயே பெருமளவு பால், பருப்பு வகைகள், வாசனை திரவியங்கள் உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது.
கரீஃப் மற்றும் ரபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், மோட்டா ரக தானியங்கள் ஆகியவற்றின் கொள்முதலுக்கான செலவு 3 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களில் அனைத்து பருவத்திற்கும் ஏற்றதாக உயிர் சத்து சேர்க்ப்பட்டதாக உயர் விளைச்சல் கொடுப்பதாக 109 ரக பயிர்கள் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வேளாண் கட்டமைப்பை வலுப்படுத்த வேளாண் கட்டமைப்பு நிதித்திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது. இந்த முன் முயற்சி கிராமப்பகுதிகளில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்.
எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரித்து, சமையல் எண்ணெயில் தற்சார்பை எட்டுவதற்கு எண்ணெய் வித்துகள் குறித்த தேசிய இயக்கத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த தேசிய இயக்கம் ஒன்றும் அமல்படுத்தப்படுகிறது.
விவசாயிகளுக்கு குறைந்த செலவில் டிஏபி உரம் கிடைப்பதை உறுதிசெய்வதற்கான சிறப்பு திட்டத்தின் கால அளவு இந்தாண்டு தொடக்கத்தில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மீன்வளத்தை ஊக்குவிக்க 11 ஒருங்கிணைந்த மீன்வளப் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாண்புமிகு உறுப்பினர்களே,
ஒருசில வாரங்களுக்கு முன் இந்திய வானிலை ஆய்வுத்துறை 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. எந்த வானிலைக்கும் தயாராக இருக்கவும், பருவநிலை – ஸ்மார்ட் இந்தியாவை கட்டமைக்கவும் எனது அரசு 2000 கோடி ரூபாய் செலவில் வானிலை இயக்கத்தை தொடங்கியுள்ளது. இது நமது விவசாயிகளுக்கு பயனளிக்கும்.
பாபாசாஹேப் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையின் தொடர்ச்சியாக நாட்டில் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளில் பாசனம் மற்றும் குடிநீர் வசதிக்காக வரலாற்று சிறப்புமிக்க நதிகள் இணைப்பு திட்டங்கள் 2-ஐ எனது அரசு தொடங்கியுள்ளது.
44,000 கோடி ரூபாய் செலவிலான கென்-பெட்வா இணைப்புத் திட்டத்தால் மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் கிராமப்பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான சகோதர, சகோதரிகள் பயனடைவார்கள்.
திருத்தி அமைக்கப்பட்ட பர்பாதி-காளிசிந்த்- சம்பல் இணைப்புத் திட்டம் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பாசன, குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும்.
போலாவரம் பாசனத் திட்டம் நிறைவடைவதை விரைவுபடுத்த கூடுதலாக 12,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு உறுப்பினர்களே,
நமது 8 லட்சம் கூட்டுறவு சங்கங்களும் அவற்றின் 29 கோடி உறுப்பினர்களும் கிட்டத்தட்ட 90% பேர் கிராமப்புற இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். சமீபத்திய ஆண்டுகளில், நகர்ப்புறங்களிலும் கூட்டுறவு சங்கங்கள் விரிவடைந்துள்ளன.
கூட்டுறவுத் துறையின் பொருளாதார மேம்பாட்டிற்காக எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன.
2025-ம் ஆண்டு சர்வதேச கூட்டுறவு ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது, மேலும் இந்த உலகளாவிய முயற்சியில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.
மாண்புமிகு உறுப்பினர்களே,
நாட்டின் வளர்ச்சி, சாதனைகளைப் பற்றி நாம் விவாதிக்கும்போது, அதன் குடிமக்களின் திறன்களையும், சாதனைகளையும் நாம் முக்கியமாக எடுத்துக்காட்டுகிறோம். இன்று, நாட்டின் வளர்ச்சியில் அனைவரின் கூட்டுப் பங்களிப்பும் உள்ளது. அதனால்தான் அதன் உண்மையான திறனை நாம் உணர முடிகிறது.
எனது அரசின் முயற்சிகளின் மிகப்பெரிய பயனாளிகள் தலித், பின்தங்கிய, பழங்குடி சமூகங்கள் ஆவார்கள்.
சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களாக, எங்கள் பழங்குடி சமூகங்கள் புறக்கணிக்கப்பை எதிர்கொண்டன. எனது அரசு அவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்துள்ளது.
'தார்த்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் அபியான்', 'பிரதமரின் ஜன்மன் திட்டம்' ஆகியவை இந்த முயற்சியின் நேரடி எடுத்துக்காட்டுகள்.
470-க்கும் மேற்பட்ட ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் மூலம் கிட்டத்தட்ட 1.25 லட்சம் பழங்குடியின குழந்தைகள் தரமான கல்வியைப் பெறுகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில், பழங்குடியினர் அதிகம் உள்ள பகுதிகளில் 30 புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன.
ஒரு சிறப்பு தேசிய இயக்கம் பழங்குடி சமூகங்களுக்குள் அரிவாள் செல் சோகைநோய் தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கிறது. சுமார் 5 கோடி நபர்களுக்கு பரிசோதனை ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளது.
பழங்குடி பாரம்பரியத்தைப் பாதுகாக்க எனது அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த ஆண்டு, பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் நாடு முழுவதும் பழங்குடியினர் கெளரவ ஆண்டு என்று கொண்டாடப்படுகிறது.
மாண்புமிகு உறுப்பினர்களே,
வளர்ச்சியைடந்த பாரதம் என்பதன் குறிப்பிடத்தக்க அளவுகோல் நாட்டின் சீரான வளர்ச்சியாகும். முன்னேற்றப் பயணத்தில் எந்தப் பகுதியும் பின்தங்கியதாக உணரக்கூடாது.
வடகிழக்கு மக்களின் விருப்பங்களை எனது அரசு உணர்ந்துள்ளது. அவர்களின் புறக்கணிப்பை நீக்குவதற்கு பாடுபட்டுள்ளது.
10-க்கும் மேற்பட்ட அமைதி ஒப்பந்தங்கள் மூலம், பல பிரிவுகள் அமைதிப் பாதையில் கொண்டு வரப்பட்டுள்ளன.
வடகிழக்கின் எட்டு மாநிலங்களின் திறனை முழு நாட்டிற்கும் வெளிப்படுத்த, முதல் அஷ்டலட்சுமி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது.
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியுடன், "பூர்வோதயா" அல்லது கிழக்கு மாநிலங்களுக்கான விரிவான மேம்பாட்டுத் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது, இது புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.
அந்தமான் - நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில், பல மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த பகுதிகள் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு - காஷ்மீரில் வளர்ச்சிக்கு உகந்த சூழல் உள்ளது. மக்களவை, சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டும் ஜம்மு - காஷ்மீரில் அமைதியான முறையில் நடத்தப்பட்டன. இந்த சாதனைக்காக ஜம்மு - காஷ்மீரின் மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
மாண்புமிகு உறுப்பினர்களே,
ஒரு தேசத்தின் அல்லது சமூகத்தின் வெற்றி, கொள்கைகளால் வழிநடத்தப்படும்போது மட்டுமே, அனைத்தையும் உள்ளடக்கிய வெற்றியாக அது அமையும். எனவே, எனது அரசு எப்போதும் நமது அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்ட அடிப்படைக் கொள்கைகளை முக்கியமாக வைத்துள்ளது. அரசியலமைப்பின் உணர்வின் அடிப்பைடயில் எனது அரசு முதன்மையான சித்தாந்த உத்வேகம் 'சேவை' என்பதாகும்.
140 கோடி குடிமக்களுக்கு சேவை செய்வது முதன்மையான கடமை என்று எனது அரசு உறுதியாக நம்புகிறது. மேலும் அது இந்த திசையில் மிகுந்த திறனுடன் செயல்படுகிறது.
சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் எளிதாகக் கடன்களை வழங்குவதற்காக, பிரதமரின்-சூரஜ் திட்டத்தின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அரசுத் திட்டங்களின் பலன்கள் மாற்றுத்திறனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, 1 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
தூய்மைப் பணியாளர்களுக்காகத் தொடங்கப்பட்ட “நமஸ்தே திட்டம்”, தூய்மையின் உன்னதப் பொறுப்பை ஏற்கும் அனைவரையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான பயணத்தில் யாரும் பின்தங்கியிருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் குறிக்கோளுடன், எனது அரசாங்கம் செறிவூட்டல் அணுகுமுறையுடன் செயல்படுகிறது.
மாண்புமிகு உறுப்பினர்களே,
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் கலாச்சார உணர்வின் மறுமலர்ச்சியின் காலமாகும். நமது பாரம்பரியத்தில் பெருமையுடனும், முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்புடனும், கலாச்சாரமும், வளர்ச்சியும் ஒன்றாக முன்னேறும் ஒரு எதிர்காலத்தை நாங்கள் வடிவமைக்கிறோம்.
இந்த ஆண்டு, “உண்மையான தேசியவாதம் இந்தியாவின் ஒற்றுமையில் மட்டுமல்ல, அதன் கலாச்சார ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும் உள்ளது” என்று கூறிய டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளை நாம் கொண்டாடுகிறோம்.
அதே உணர்வில், பகவான் மகாவீரரின் 2,550-வது நிர்வாண மஹோத்சவம் பயபக்தியுடன் கொண்டாடப்பட்டது. மேலும் புனித மீராபாயின் 525-வது பிறந்தநாள் நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
தெய்வப்புலவர் திருவள்ளுவரின் நினைவாக பல நாடுகளில் கலாச்சார மையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
காசி-தமிழ் சங்கமம், காசி-தெலுங்கு சங்கமம், சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் போன்ற கலாச்சார முயற்சிகள் மூலம் எனது அரசு தேசிய ஒற்றுமையை மேம்படுத்துகிறது.
மாண்புமிகு உறுப்பினர்களே,
நமது கையெழுத்து பிரதிகள் விலைமதிப்பற்ற பாரம்பரியமாகும். அவை மனிதகுலத்தின் நலனுக்காக ஆய்வு செய்யப்பட்டு, ஆராய்ச்சி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டிய பரந்த அறிவைக் கொண்டுள்ளன. மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கி பாதுகாக்கும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது.
நமது நாட்டின் பாரம்பரியத்தின் குறிப்பிடத்தக்க தூண் நமது வளமான மொழியியல் கலாச்சாரமாகும். அஸ்ஸாமி, மராத்தி, பாலி, பிராகிருதம், பெங்காலி ஆகிய மொழிகளுக்கு அரசு செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் எளிதாகத் தொடர்பு கொள்ள, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் மொழித் தளமான பாஷினியை நாட்டின் மக்கள் பரவலாகப் பயன்படுத்துகின்றனர்.
மாண்புமிகு உறுப்பினர்களே,
எனது அரசின் முயற்சிகள் மூலம், கலாச்சார தளத்தில் உலகளாவிய முன்னணி நாடாக இந்தியா தமது அடையாளத்தை நிலைநாட்டியுள்ளது.
அனைத்து ஆசிய பௌத்த நாடுகளையும் இணைக்க, எனது அரசு முதல் ஆசிய பௌத்த மாநாட்டை ஏற்பாடு செய்தது. கடந்த ஆண்டு, 140 நாடுகளின் பங்கேற்புடன் உலக பாரம்பரியக் குழுவின் கூட்டத்தையும் இந்தியா நடத்தியது.
சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தின் மூலம், முழு உலகமும் இப்போது இந்தியாவின் வளமான யோகா பாரம்பரியத்தை ஏற்று பின்பற்றி வருகிறது.
மாண்புமிகு உறுப்பினர்களே,
முன்னேற்றம் என்ற பிரமாண்டமான கட்டுமானத்தை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்ல, வலுவான தூண்கள் தேவை. இந்தியாவின் வளர்ச்சிக்கு, எனது அரசு சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் ஆகிய மூன்று வலுவான தூண்களை நிறுவியுள்ளது. இன்று, இந்த வார்த்தைகள் உலகம் முழுவதும் இந்தியாவின் புதிய நிர்வாக மாதிரியின் அடையாளங்களாக மாறி உள்ளன.
அரசியல் சாசன சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு இயற்றப்பட்ட சட்டங்களை அரசு விரிவான முறையில் மதிப்பாய்வு செய்துள்ளது. தற்போதைய சமூக, பொருளாதார சவால்களை முழு அமைப்பும் எதிர்கொள்ளும் வகையில் பல சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது திருத்தப்பட்டுள்ளன.
இதுவரை, அரசு 1,500-க்கும் மேற்பட்ட காலாவதியான சட்டங்களை ரத்து செய்துள்ளது. காலனித்துவ கால சட்டங்களை அகற்றுவதன் மூலம், தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக நியாயச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மக்களின் நம்பிக்கை, மக்களின் பங்கேற்பு ஆகியவற்றின் மூலம்,
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எனது அரசு செயல்பட்டு வருகிறது. சர்ச்சைகளைத் தீர்க்க கலந்துரையாடல் தீர்வுகாணும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
அதே உணர்வில், 40,000-க்கும் மேற்பட்ட விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன அல்லது குறைக்கப்பட்டுள்ளன. மேலும் 3,500 விதிகள் குற்றமற்றவையாக மாற்றப்பட்டுள்ளன.
எனது அரசு நாட்டின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் முன்னேற்றத்தை அடைய விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தை தொடங்கி நல்லாட்சியில் ஒரு தனித்துவமான நடைமுறையை செயல்படுத்துகிறது. இந்தத் திட்டம் இந்த மாவட்டங்களில் சுகாதாரம், ஊட்டச்சத்து, விவசாயம், சமூக மேம்பாடு, கல்வி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. ஐநா வளர்ச்சித் திட்ட அறிக்கை இந்த முயற்சியைப் பாராட்டியுள்ளது. இந்த வெற்றியால் ஈர்க்கப்பட்டு, அரசு இப்போது 500 முன்னேற்றத்தை விரும்பும் வட்டாரங்கள் என்ற, முழுமையான வளர்ச்சிக்கான இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
நல்லாட்சியில் கவனம் செலுத்தி, ஐஜிஓடி கர்மயோகி டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி உண்மையான கர்மயோகிகளாக மாற ஊக்குவிக்கிறது. இந்த தளம் 1,700 படிப்புத் திட்டங்களை வழங்குகிறது. மேலும் 2 கோடிக்கும் மேற்பட்ட பாடநெறி வகுப்புகள் நடைபெற்றுள்ளன.
மாண்புமிகு உறுப்பினர்களே,
இந்த ஆண்டு, நாடு சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. அவரது தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, எனது அரசு "தேசம் முதலில்" என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறது.
நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பையும் உள்நாட்டு பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
குறிப்பாக பாதுகாப்புத் துறையில் தற்சார்பை அடைவதில் மிகவும் ஊக்கமளிக்கும் முடிவுகளைக் கண்டுள்ளோம்.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திலிருந்து, நாடு முழுவதும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி உலகத்திற்காக உற்பத்தி செய்வோம் என்ற கொள்கையின் அடிப்பைடயில் செயல்படுகிறோம்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டு போர்க்கப்பல்களும், ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் சமீபத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டன.
பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தை நிறுவுவதன் மூலமும், பாதுகாப்பு புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலமும், தற்சார்பையும், சுயவேலைவாய்ப்பையும் வலுப்படுத்தி வருகிறோம்.
எல்லைகளைப் பாதுகாப்பதோடு, எல்லைப் பகுதிகளின் வளர்ச்சியும் எங்கள் உத்தியின் முக்கிய அங்கமாகும். அடல் சுரங்கப்பாதை, சேலா சுரங்கப்பாதை, சோனமார்க் சுரங்கப்பாதை போன்ற நவீன உள்கட்டமைப்புகளுடன், எல்லைப் பகுதிகளில் சாலைகள், ஆகியவை பாதுகாப்புத் திறன்கள், சுற்றுலா இரண்டையும் மேம்படுத்தியுள்ளன. எல்லையில் அமைந்துள்ள நாட்டின் முதல் கிராமங்களில் துடிப்பான கிராமங்கள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இடதுசாரி தீவிரவாதத்தை ஒழிப்பதன் இறுதிக் கட்டத்தில் நாம் உள்ளோம். அரசின் முயற்சிகள் காரணமாக, இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை இன்று 126-லிருந்து 38- ஆகக் குறைந்துள்ளது.
மாண்புமிகு உறுப்பினர்களே,
உலகளவில் ஸ்திரமின்மை அற்ற சூழல் இருந்தபோதிலும், இந்தியா பொருளாதார, சமூக, அரசியல் ஸ்திரத்தன்மையின் தூணாக உருவெடுத்து, உலகிற்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது. அது ஜி-7 உச்சி மாநாடு, குவாட், பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு அல்லது ஜி20 என எதுவாக இருந்தாலும், உலகம் இந்தியாவின் வலிமை, கொள்கை, நோக்கம் ஆகியவற்றில் நம்பிக்கை வைத்துள்ளது.
இன்று, மிகப்பெரிய உலகளாவிய தளங்களில் கூட இந்தியா தனது நலன்களை உறுதியாக முன்வைக்கிறது. ஜி-20 உச்சிமாநாட்டின் வெற்றி, தில்லி பிரகடனம் ஆகியவை முதன்மையான எடுத்துக்காட்டுகள். மூன்றாவது உலகளாவிய தெற்கு உச்சி மாநாடு, இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு, இந்தியா-கேரிகாம் உச்சிமாநாடு ஆகியவற்றில் உலகளாவிய தென்பகுதி நாடுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நாங்கள் குரல் எழுப்பியுள்ளோம். எதிர்கால உச்சிமாநாட்டில் இந்தியாவின் எதிர்காலத்திற்கான பார்வையையும் நாங்கள் வழங்கியுள்ளோம்.
இந்த மாத தொடக்கத்தில், எனது அரசு புவனேஸ்வரில் வெளிநாடு வாழ் இந்தியர் தின நிகழச்சியை ஏற்பாடு செய்தது.
வெளிநாடுகளில் வசிக்கும் நமது சகோதர சகோதரிகளின் நலன், வசதி ஆகியவை அரசின் முன்னுரிமையாக உள்ளது. அதனால்தான் எனது அரசு ஆறு புதிய தூதரகங்களையும் நான்கு புதிய துணைத் தூதரகங்களையும் திறக்க முடிவு செய்துள்ளது.
உலகின் நண்பர் என்ற இந்தியாவின் பிம்பத்தை வலுப்படுத்தும் வகையில், உலகம் முழுவதும் பேரிடர் பாதித்த பல பகுதிகளுக்கு உடனடி உதவியை இந்தியா வழங்கியுள்ளது.
இந்தியா தனது டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை பல நாடுகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளதுடன், மக்கள் மருந்தக மையங்களை அமைத்துள்ளது.
மாண்புமிகு உறுப்பினர்களே,
தற்போதைய தலைமுறையை மட்டுமல்ல, எதிர்கால தலைமுறையையும் கருத்தில் கொண்டு எனது அரசு முடிவுகளை எடுத்து வருகிறது. பசுமையான எதிர்காலத்தை நோக்கி நாட்டை வழிநடத்தி வருகிறது.
2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆற்றல் திறன் என்ற இலக்கை அடைவதற்கு கடந்த ஆறு மாதங்களில் பல குறிப்பிடத்தக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் சூர்யசக்தி மேற்கூரை வீடுகள் திட்டத்தின் கீழ், 75,000 கோடி ரூபாய் செலவில் மேற்கூரை சூரிய மின்சக்தி அமைப்புகள் நிறுவப்படுகின்றன. இதுவரை, 7.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கூரை சூரியசக்தி மின்சார அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இது ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் 8 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
அணுசக்தியை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளையும் நாங்கள் துரிதப்படுத்தி வருகிறோம்.
பழைய வாகனங்களை அறிவியல் பூர்வமாக அப்புறப்படுத்துவதை உறுதி செய்வதற்காக எனது அரசு வாகனக் கழிவுக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.
இதன் தொடர்ச்சியாக, 2024-ம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் இயக்கம் தொடங்கப்பட்டது. இதில், கோடிக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த முயற்சி உலக அளவில் பாராட்டப்படுகிறது.
மாண்புமிகு உறுப்பினர்களே,
நமது பாரதம் 140 கோடி மக்களைக் கொண்ட நாடு. நமக்கு பல்வேறு மாநிலங்கள், பல்வேறு பிராந்தியங்கள், பல்வேறு மொழிகள் உள்ளன. ஆனால் ஒரே தேசமாக உள்ள நமக்கு ஒரே அடையாளம் உள்ளது. அது பாரதம் என்பதாகும்.
நமக்கு ஒரே ஒரு தீர்மானம், ஒரே குறிக்கோள் – வளர்ச்சியடைந்த பாரதம்!
வரும் ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு நாம் அனைவரும் உறுதியாக உறுதிபூண்டுள்ளோம்.
இந்தத் தீர்மானம், தேசத்தின் தியாகிகள், மகாத்மா காந்தியின் கொள்கைகள், சர்தார் படேல் போன்ற இந்தியத் தாயின் மகன்கள் நமக்கு வழங்கிய ஒற்றுமைக்கான சபதம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டுள்ளது. இந்த உத்வேகங்களை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும், ஒற்றுமையின் வலிமையுடன், வளர்ச்சியடைந்த பாரதத்தின் உறுதிப்பாட்டை நிறைவேற்ற வேண்டும்.
ஒற்றுமைக்கான நமது தீர்மானத்தை மீண்டும் ஒருமுறை மீண்டும் உறுதிப்படுத்தி, இந்தியாவின் கனவுகளை நனவாக்க உறுதியேற்போம்!
நாம் ஒன்றாக முன்னேறும்போது, நமது எதிர்கால சந்ததியினர் 2047-ம் ஆண்டில் நிச்சயமாக வளர்ந்த, அதிகாரம் பெற்ற, திறமையான, வளமான பாரதத்தைக் காண்பார்கள்.
உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
நன்றி.
ஜெய் ஹிந்த்!
ஜெய் பாரத்!
********
TS/PKV/SMB/PLM/RR/AG/RJ/DL
(Release ID: 2098148)
Visitor Counter : 25