இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
விளையாட்டுத் துறை
Posted On:
20 DEC 2024 1:28PM by PIB Chennai
2024-ம் ஆண்டானது இந்திய விளையாட்டுத்துறைக்கு ஒரு சிறப்புமிக்க ஆண்டாக அமைந்தது. நாடு உலக அரங்கில் முன்னெப்போதும் பெற்றிராத வெற்றிகளை குவித்துள்ளது. பாரிஸ் பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த செயல்திறன் முதல் சதுரங்கத்தில் வரலாற்று வெற்றிகள் மற்றும் விளையாட்டுகளில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவித்தல் வரை, இந்தியா பல பிரிவுகளில் தனது வளர்ந்து வரும் வலிமையை வெளிப்படுத்தியுள்ளது. இந்தச் சிறப்புமிக்க சாதனைகள், அற்புதமான முயற்சிகள் மற்றும் தடகள அதிகாரமளித்தலில் புதுப்பிக்கப்பட்ட கவனம் ஆகியவற்றால் விளையாட்டுத்துறை சிறந்து விளங்குகிறது. இது விளையாட்டு சிறப்பை வளர்ப்பதற்கும் எதிர்கால சந்ததியினரை ஊக்குவிப்பதற்கும் நாட்டின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
2024 பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சிறப்பான வெற்றி
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் உட்பட 6 பதக்கங்களை வென்றது. இந்த சாதனையில் துப்பாக்கி சுடுதல் போட்டி முக்கிய பங்கு வகித்தது விளையாட்டு வீரர்கள் மனு பாகர், சரப்ஜோத் சிங் மற்றும் ஸ்வப்னில் குசாலே ஆகியோர் மூன்று வெண்கலப் பதக்கங்களை நாட்டிற்கு கொண்டு வந்தனர். மேலும், நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கமும், அமன் ஷெராவத் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கமும், இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கமும் வென்றனர். தேசியப் பெருமையின் ஒரு தருணமாக பதக்கம் வென்ற அனைத்து விளையாட்டு வீரர்களும் ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று செங்கோட்டையில் நடந்த சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் பிரதமருடன் கலந்துரையாடினர்.
ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெற்ற 2024 பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில், இந்தியா தனது மிகப்பெரிய குழுவுடன் வரலாறு படைத்தது. இந்திய வீரர்கள் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் உட்பட 29 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 18-வது இடத்தைப் பிடித்தனர். இந்த செயல்திறன் பாராலிம்பிக் வரலாற்றில் நாட்டின் சிறந்த சாதனையாக மிளிர்ந்தது.
செஸ் சாதனைகள்: ஃபிடே செஸ் ஒலிம்பியாட் மற்றும் உலக செஸ் சாம்பியன்ஷிப்
ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற்ற 45-வது ஃபிடே செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் சதுரங்க சாதனைகள் புதிய உச்சங்களை எட்டியது. அங்கு இந்திய ஆண்கள் மற்றும் பெண்களின் அணிகள் தங்கப் பதக்கங்களை வென்று வரலாறு படைத்தன. குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி மற்றும் விதித் குஜ்ராதி போன்ற நட்சத்திர வீரர்களைக் கொண்ட ஆண்கள் அணி, போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. 11 போட்டிகளில் 10-ல் வென்றது. இறுதிச் சுற்றில் ஸ்லோவேனியாவை தோற்கடித்தது. குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தங்கள் மிகச்சிறந்த செயல்திறனுக்காக தனிநபர் தங்கப் பதக்கங்களைப் பெற்றனர்.
ஹரிகா துரோணவல்லி, வைஷாலி, திவ்யா ஷ்முக், வந்திகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி, ஆரம்பப் பின்னடைவுகளை கடந்து இறுதிச் சுற்றில் அஜர்பைஜானை தோற்கடித்து பட்டத்தை வென்றது. வரலாற்று சாதனைக்காக இந்தியாவின் இளம் சதுரங்க வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். மேலும் வெற்றி பெற்ற அணிகளை புதுதில்லியில் பிரதமர் பாராட்டி இந்திய சதுரங்க வரலாற்றில் இந்த குறிப்பிடத்தக்க சாதனையைக் கொண்டாடினார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் டிங் லிரெனை தோற்கடித்து 2024-ம் ஆண்டில் இளைய உலக செஸ் சாம்பியன் என்ற வரலாற்றையும் குகேஷ் படைத்தார்.
அஸ்மிடா மகளிர் லீக்குகளுடன் பெண்கள் விளையாட்டுகளை ஊக்குவித்தல்
அஸ்மிடா (பெண் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதன் மூலம் விளையாட்டு சாதனைகளை அடைதல்) பெண்கள் லீக்குகள் நாடு முழுவதும் 20 விளையாட்டு பிரிவுகளில் நடத்தப்பட்டுள்ளன. இது சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த பெண் விளையாட்டு வீரர்களை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இதுவரை 766 போட்டிகள் நடத்தப்பட்டு, 83,763 பெண் விளையாட்டு வீரர்கள் இவற்றில் பங்கேற்றுள்ளனர். இது விளையாட்டில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்தியா முழுவதும் இளம் விளையாட்டு திறமைகளை அடையாளம் காண்பதில் KIRTI (கேலோ இந்தியா ரைசிங் டேலண்ட் ஐடென்டிஃபிகேஷன்) திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பயன்படுத்தி திட்டத்தின் இரண்டு கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. 9 முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லும் குழந்தைகளை அடையாளம் காண நாடு முழுவதும் 1.8 லட்சத்துக்கும் மேற்பட்ட தகுதிகாண் மதிப்பீடுகள் நடத்தப்பட்டுள்ளன, இது தடையற்ற மற்றும் திறமையை அடையாளம் காணும் முறையை உறுதி செய்கிறது.
RESET (ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்கள் வலுவூட்டல் பயிற்சி) திட்டம்
ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு அதிகாரமளித்தல் பயிற்சித் திட்டம் (RESET) ஆகஸ்ட் 29 அன்று தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களை தேவையான அறிவு மற்றும் திறன்களுடன் மீண்டும் பணியாற்ற தயார்படுத்துகிறது. இதனால் அவர்கள் பல்வேறு தொழில் துறைகளில் அதிக வேலை பெறுகிறார்கள். 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 18 விளையாட்டுகளில் மொத்தம் 30 பயிற்சியாளர்கள் இதுவரை பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
***
(Release ID: 2086403)
TS/PKV/AG/KR
(Release ID: 2086472)
Visitor Counter : 92