தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
எப்போதும் ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறேன் - இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு
தமிழ் நடிகர் சிவகார்த்திகேயன், எளிமையான தொடக்கத்திலிருந்து தமிழ் சினிமாவின் பிரகாசமான நட்சத்திரமாக மாறி இருக்கிறார். சிவகார்த்திகேயனின் பயணம், பொறுமை, ஆர்வம் விடாமுயற்சி ஆகியவற்றைக் கொண்டது. கோவாவில் நடைபெற்று வரும் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐஎஃப்எஃப்ஐ) நடிகை குஷ்பு சுந்தருடன் இணைந்து உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
"தொடக்கத்தில் இருந்தே, சினிமா எப்போதும் எனது விருப்பமாக இருந்தது, நான் எப்போதுமே பார்வையாளர்களை, ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறேன்" என்று சிவகார்த்திகேயன் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். "நான் தொலைக்காட்சி தொகுப்பாளராகப் பணியைத் தொடங்கினேன். இது திரைப்படத் துறையில் இறங்குவதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கியது." என்று அவர் தெரிவித்தார்.
மிமிக்ரி கலைஞராக தமது ஆரம்ப நாட்களை நினைவு கூர்ந்த சிவகார்த்திகேயன், "நான் பொறியியல் கல்லூரியில் எனது பேராசிரியர்களைப் போல் மிமிக்ரி செய்தேன். பின்னர், நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டபோது, இந்த திறமையை சரியான வழியில் செலுத்த வேண்டும் என்று அவர்கள் அறிவுரை கூறி என்னை ஊக்குவித்தனர்." என்று குறிப்பிட்டார்.
தமது தந்தையின் அகால மரணம் தனது வாழ்க்கையில் ஒரு சோர்வை ஏற்படுத்தியது என்று அவர் கூறினார். "என் தந்தை இறந்த பிறகு நான் மனச்சோர்வுக்கு ஆளானேன். எனது வேலையைச் செய்யத் தொடங்கியபோது, எனது பார்வையாளர்களின் விசில்களும் கைதட்டல்களும் எனக்கு சிகிச்சையாக மாறியது" என்று அவர் கூறினார்.
சிவகார்த்திகேயனின் உறுதியை குஷ்பு சுந்தர் பாராட்டினார்.
மிமிக்ரி கலைஞர், தொலைக்காட்சி தொகுப்பாளர் தற்போது தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் என சிவகார்த்திகேயன் பல நிலைகளை அடைந்துள்ளார். அவர் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். சமீபத்திய அமரன் போன்ற படங்களை அவர் மேற்கோள் காட்டிப் பேசினார்.
நகைச்சுவையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், "தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு மாறுவது கடினமாக இருந்தது. நான் நகைச்சுவையை எனது கவசமாகப் பயன்படுத்தினேன். அது சின்னத்திரையிலும் பெரிய திரையிலும் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்பதை உணர்ந்தேன்." என்றார்.
இந்த அமர்வு ஒரு அசாதாரண திறமையின் கொண்டாட்டமாக அமைந்தது. நடுத்தர வர்க்கப் பின்னணியில் இருந்து தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு வந்துள்ள சிவகார்த்திகேயனின் பயணம், நம்பிக்கையூட்டும் ஊக்கசக்தியாக உள்ளது.
*****
PLM/KV
(Release ID: 2076323)
Visitor Counter : 19