பிரதமர் அலுவலகம்
மக்களவை தலைவர் தேர்வுக்குப் பின் 18-வது மக்களவையில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
26 JUN 2024 1:15PM by PIB Chennai
வணக்கம்,
பேரவைத் தலைவர் அவர்களே,
இரண்டாவது முறையாக நீங்கள் இந்த அவைக்கு தலைமை தாங்குவது இந்த அவையின் சிறப்பாகும். உங்களுக்கும், இந்த அவையில் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேரவைத் தலைவர் அவர்களே,
உங்களுக்கு ஒட்டுமொத்த அவையின் சார்பிலும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமிர்த காலத்தின் இந்த குறிப்பிடத்தக்க கட்டத்தில், இரண்டாவது முறையாக இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவது ஒரு பெரிய பொறுப்பு. உங்களது ஐந்தாண்டுக் கால அனுபவமும், எங்களது அனுபவமும் இணைந்து, வரும் ஐந்தாண்டுகளில் நீங்கள் எங்கள் அனைவருக்கும் வழிகாட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இந்தச் சபையில் தேசத்தின் நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதில் நீங்கள் முக்கிய பங்கு வகிப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
பேரவைத் தலைவர் அவர்களே,
பணிவும் சாதுரியமும் உள்ள மனிதன் இயல்பாகவே வெற்றி பெறுகிறான் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த குணங்களுடன், முழு அவையையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஒரு இனிமையான புன்னகையை நீங்கள் கொண்டுள்ளீர்கள். நீங்கள் எப்போதும் புதிய பாதைகளை அமைத்துள்ளீர்கள். ஒவ்வொரு அடியிலும் புதிய சாதனைகளை உருவாக்கியுள்ளீர்கள். 18-வது மக்களவையில் இரண்டாவது முறையாக அவைத் தலைவராக பொறுப்பேற்றிருப்பது புதிய சாதனையாகும். ஐந்தாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்து, பின்னர் மீண்டும் அவைத்தலைவராகும், வாய்ப்பைப் பெற்ற முதல் சபாநாயகர் திரு. பல்ராம் ஜாக்கர் ஆவார். அவருக்குப் பிறகு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவைத்தலைவராகும் வாய்ப்பை நீங்கள் தான் பெற்றுள்ளீர்கள். மீண்டும் பொறுப்பேற்று புதிய வரலாறு படைத்துள்ளீர்கள்.
பேரவைத் தலைவர் அவர்களே,
இந்த அவையில் உள்ள நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோர் உங்களைப் பற்றியும், உங்கள் வாழ்க்கையைப் பற்றியும் நன்கு அறிந்தவர்கள். கடந்த முறை இந்த அவையில் உங்களைப் பற்றி விரிவாகப் பேசினேன். இன்று அந்த விஷயங்களை மீண்டும் கூற நான் விரும்பவில்லை. எவ்வாறாயினும், உங்கள் பணி சிறப்பான அங்கீகாரத்திற்குரியது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
உங்கள் தலைமையின் கீழ், 17வது மக்களவையானது நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு பொற்காலத்தை அனுபவித்தது. உங்கள் தலைமையின் கீழ் அவையில் எடுக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளும் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களும் முக்கியமானவை.
பேரவைத் தலைவர் அவர்களே,
ஜனநாயகத்தின் நீண்ட பயணத்தில், பல மைல்கற்கள் உள்ளன. சில சந்தர்ப்பங்கள் புதிய சாதனைகளைப் படைக்க நமக்கு வாய்ப்பளிக்கின்றன. 17வது மக்களவையின் சாதனைகள் இன்றும் சரி, எதிர்காலத்திலும் சரி, நாட்டிற்கு பெருமை சேர்க்கும்.
பேரவைத் தலைவர் அவர்களே,
இந்த கட்டடம் வெறும் நான்கு சுவர்கள் அல்ல. நமது நாடாளுமன்றம் 140 கோடி மக்களின் நம்பிக்கை மையமாகத் திகழ்கிறது.
இந்த குறிப்பிடத்தக்க பொறுப்புக்காக மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த பாராட்டுக்களை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
************
TS/PLM/AG/KV
(Release ID: 2071151)
Visitor Counter : 32
Read this release in:
Marathi
,
English
,
Urdu
,
Hindi
,
Hindi_MP
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam