பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சுகாதாரத் துறை தொடர்பான ரூ.12,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

"சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவது நமது முன்னுரிமையாகும். இன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டங்கள் மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகளைக் கிடைக்கச் செய்யும்": பிரதமர்

"இன்று 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயுர்வேத தினம் கொண்டாடப்படுகிறது என்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது": பிரதமர்

"சுகாதாரக் கொள்கையில் அரசு 5 தூண்களை வகுத்துள்ளது": பிரதமர்

இப்போது நாட்டின் 70 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு மூத்த குடிமகனுக்கும் மருத்துவமனையில் இலவச சிகிச்சை கிடைக்கும்: பிரதமர்

கொடிய நோய்களைத் தடுக்க இந்திரதனுஷ் இயக்கத்தை அரசு நடத்தி வருகிறது: பிரதமர்

சுகாதாரத் துறையில் தொழில்நுட்பத்தை அதிகபட்ச அளவில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களின் பணத்தை அரசு மிச்சப்படுத்துகிறது: பிரதமர்

Posted On: 29 OCT 2024 3:09PM by PIB Chennai

தன்வந்தரி ஜெயந்தி, 9-வது ஆயுர்வேத தினம் ஆகியவற்றை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (29.10.2024) புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் (AIIA) சுமார் ரூ.12,850 கோடி மதிப்பிலான சுகாதாரத் துறை தொடர்பான பல திட்டங்களை தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், தன்வந்தரி ஜெயந்தியையும் தந்தேராஸ் பண்டிகையையும் குறிப்பிட்டுத், தமது நல்வாழ்த்துகளை மக்களுக்கு தெரிவித்தார். பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளுக்கு புதிய பொருட்களை வாங்க முனைவதால் நாட்டில் உள்ள அனைத்து வணிகர்களுக்கும் வியாபாரம் அதிகரிக்கும் என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இந்த தீபாவளி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் சுட்டிக் காட்டினார். ஏனெனில் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயில் ஆயிரக்கணக்கான தியாகங்களால் ஒளிர்வதாகவும் இது தொடர்பான கொண்டாட்டங்கள் முன்னெப்போதும் இல்லாததாக இப்போது இருக்கும் என்றும் கூறினார். இந்த ஆண்டு தீபாவளியில் ராமர் மீண்டும் தனது இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளார் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த காத்திருப்பு இறுதியாக 500 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது என்று கூறினார்.

இந்த ஆண்டு தந்தேராஸ் பண்டிகை வளம், ஆரோக்கியம் ஆகியவற்றின் கலவையாக இருப்பது தற்செயல் நிகழ்வு அல்ல என்றும் இந்தியாவின் கலாச்சார வாழ்க்கை தத்துவத்தின் அடையாளமாகும் என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். துறவிகளை மேற்கோள் காட்டிய பிரதமர், ஆரோக்கியம் என்பது உயர்ந்த செல்வமாகக் கருதப்படுகிறது என்றும், இந்தப் பழங்காலக் கருத்து யோகா வடிவில் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் எடுத்துரைத்தார். இன்று 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயுர்வேத தினம் கொண்டாடப்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு நரேந்திர மோடி, ஆயுர்வேதத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்து வருவதற்கும், பழங்காலம்தொட்டு உலகிற்கு இந்தியா அளித்து வரும் பங்களிப்புக்கும் இது சான்று என்று கூறினார்.

கடந்த பத்து ஆண்டுகளில், நவீன மருத்துவத்துடன் ஆயுர்வேத அறிவை ஒருங்கிணைத்ததன் மூலம் சுகாதாரத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தை நாடு கண்டுள்ளது என்று பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்த அத்தியாயத்தின் மையமாக அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் திகழ்வதாகவும் அவர் கூறினார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஆயுர்வேத தினத்தன்று இந்த நிறுவனத்தின் முதல் கட்ட செயல்பாட்டை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் அதிர்ஷ்டம் தமக்கு கிடைத்தது என்றும், இன்று தன்வந்திரி பகவானின் ஆசீர்வாதத்துடன் இந்த நிறுவனத்தின் இரண்டாம் கட்ட செயல்பாட்டைத் தாம் தொடங்கி வைப்பதாகவும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஆயுர்வேத மருத்துவ அறிவியல் துறையில் மேம்பட்ட ஆராய்ச்சி ஆய்வுகளுடன் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பஞ்சகர்மா போன்ற பண்டைய நுட்பங்களை இந்த நிறுவனத்தில் காண முடியும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த முன்னேற்றத்திற்காக மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அந்நாட்டு மக்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்து அமைகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்கு அரசு அளிக்கும் முன்னுரிமையை சுட்டிக்காட்டியதுடன், சுகாதாரக் கொள்கையின் ஐந்து தூண்களையும் எடுத்துரைத்தார். நோய்த் தடுப்புக்கான சுகாதாரப் பராமரிப்பு, நோய்களை முன்கூட்டியே கண்டறிதல், இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் சிகிச்சைகளையும் மருந்துகளையும் வழங்குதல், சிறிய நகரங்களில் மருத்துவர்கள் கிடைப்பது, சுகாதார சேவைகளில் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவது ஆகிய ஐந்து தூண்களை அவர் பட்டியலிட்டார். இந்தியா சுகாதாரத் துறையை முழுமையான அமைப்பாகப் பார்க்கிறது என்று கூறிய திரு நரேந்திர மோடி, இன்றைய திட்டங்கள் இந்த ஐந்து தூண்களின் பார்வையை இணைத்து வழங்குகின்றன என்று கூறினார். ரூ.13,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டியது குறித்துப் பேசிய பிரதமர், ஆயுஷ் சுகாதாரத் திட்டத்தின் கீழ் 4 சிறப்பு மையங்கள் உருவாக்கம், ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி சுகாதார சேவைகள் வழங்குவதை விரிவுபடுத்துதல், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஹெலிகாப்டர் சேவை, புதுதில்லி எய்ம்ஸ் மற்றும் பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டமைப்பு, நாட்டில் மேலும் ஐந்து எய்ம்ஸ் மருத்துவமனைகளின் சேவைகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். மருத்துவக் கல்லூரிகளை நிறுவுதல், செவிலியர் கல்லூரிகளுக்கான பூமி பூஜை மற்றும் சுகாதாரத் துறை தொடர்பான பிற திட்டங்களையும் அவர் எடுத்துரைத்தார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புதிய மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், முழு ஆரோக்கியத்திற்கான சிகிச்சை மையங்களாக இவை மாறும் என்றார். மேம்பட்ட மருந்துகள், உயர்தர ஸ்டென்ட்கள், உடலுக்குள் பொருத்தப்படுபவை  போன்றவற்றைத் தயாரிக்கும் மருந்து ஆலைகளை தொடங்கி வைத்து இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் அவர் பேசினார்.

நோய் என்றால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதிக்கும் பின்னணியில்தான்  நம்மில் பலர் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், குறிப்பாக ஒரு ஏழைக் குடும்பத்தில், ஒருவர் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டால், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருமே ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுவார்கள் என்று எடுத்துக் காட்டினார்.மக்கள் தங்கள் வீடுகள், நிலங்கள், நகைகள், போன்றவற்றை சிகிச்சைக்காக விற்று, பெரும் செலவைத் தாங்க முடியாமல் இருந்த ஒரு காலம் இருந்தது என அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில் ஏழை மக்கள்  குடும்பத்தின் பிற முன்னுரிமைகளுக்கு இடையே சிகிச்சை பெற வேண்டியிருந்தது என்று அவர் கூறினார். ஏழைகளின் விரக்தியைப் போக்க இந்த அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்றும், இதில் ஏழைகள் மருத்துவமனையில் பெறும் ரூ.5 லட்சம் வரையிலான செலவை அரசே ஏற்கும் என்றும் திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் சுமார் 4 கோடி ஏழை மக்கள் ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர் என்றும் இது திருப்தி அளிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகளை தாம் சந்திக்கும் போது, இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது என்பதை அறிந்து கொள்வதாகவும் அது குறித்துத் திருப்தி அடைவதாகவும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

கடந்த பத்து ஆண்டுகளில், நவீன மருத்துவத்துடன் ஆயுர்வேத அறிவை ஒன்றிணைத்ததன் மூலம் சுகாதாரத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தை நாடு கண்டது என்று பிரதமர் கூறினார். இந்த அத்தியாயத்தின் மையமாக அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஆயுர்வேத தினத்தன்று இந்த நிறுவனத்தின் முதல் கட்ட செயல்பாட்டை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் அதிர்ஷ்டம் தமக்குக் கிடைத்தது என்றும், இன்று தன்வந்திரி பகவானின் ஆசீர்வாதத்துடன் இந்த நிறுவனத்தின் இரண்டாம் கட்ட செயல்பாட்டைத் தாம் தொடங்கி வைப்பதாகவும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஆயுர்வேத மருத்துவ அறிவியல் துறைகளில் மேம்பட்ட ஆராய்ச்சி ஆய்வுகளுடன் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பஞ்சகர்மா போன்ற பண்டைய நுட்பங்களை இந்த நிறுவனத்தில் காண முடியும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த முன்னேற்றத்திற்காக இந்திய மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டால், 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியோர்களையும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கொண்டு வருவோம் என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுவதாகவும் பிரதமர் கூறினார். நாட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு முதியவரும் ஆயுஷ்மான் வயா வந்தனா அட்டை மூலம் மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெறுவார்கள் என்றும் அவர் கூறினார். இந்த அட்டை அனைவருக்கும் பொதுவானது என்றும், ஏழை அல்லது நடுத்தர வர்க்கம் அல்லது உயர் வகுப்பினர் என வருமானத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்றும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.

ஏழைகளாக இருந்தாலும் சரி, நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும் சரி, சிகிச்சைக்கான செலவைக் குறைப்பதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருவதாகக் கூறிய பிரதமர், நாடு முழுவதும் 14,000-க்கும் மேற்பட்ட பிரதமர் மக்கள் மருந்தக மையங்கள் தொடங்கப்பட்டதையும், அங்கு மருந்துகள் 80 சதவீத தள்ளுபடியில் கிடைப்பதையும் குறிப்பிட்டார். மலிவான விலையில் மருந்துகள் கிடைப்பதால் ஏழை, நடுத்தர மக்கள் ரூ.30,000 கோடியை சேமிக்க முடிந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.  கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றச் செயல்படுத்தப்படும் இந்திரதனுஷ் இயக்கம் பற்றியும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் உள்ள ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் அதிக செலவு பிடிக்கும் சிகிச்சையின் சுமையில் இருந்து விடுபடும் வரை தான் ஓயப்போவதில்லை என்று பிரதமர் உறுதியளித்தார்.

நோய்களை உரிய நேரத்தில் கண்டறிதலின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். முன்கூட்டியே நோயைக் கண்டறிந்து சிகிச்சையை எளிதாக்குவதற்காக நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் எடுத்துரைத்தார். இந்த ஆரோக்கிய மையங்கள் கோடிக்கணக்கான மக்களுக்கு புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களை எளிதாக கண்டறிய உதவுகின்றன என்று அவர் கூறினார். சரியான நேரத்தில் நோயறிதல் என்பது உடனடி சிகிச்சைக்கு வழிவகுக்கிறது என்றும் இறுதியில் நோயாளிகளுக்கு செலவுகளை மிச்சப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். இ-சஞ்சீவனி திட்டத்தின் கீழ் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்தவும், மக்களின் பணத்தை மிச்சப்படுத்தவும் அரசு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக பிரதமர் விளக்கினார். இ-சஞ்சீவனி திட்டத்தின் கீழ் 30 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆன்லைனில் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மூலம் சுகாதாரத் துறையின் வெற்றியை உறுதி செய்வதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்ச்சியைக் குறிப்பிட்ட பிரதமர், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டதாகக் கூறினார்.  உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் புதிய இஎஸ்ஐசி மருத்துவமனைக்காபன பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்தூரில் புதிய மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, மருத்துவ இடங்களின் விகிதாசார அதிகரிப்பை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் வலியுறுத்தினார். மருத்துவராக வேண்டும் என்ற எந்த ஒரு ஏழைக் குழந்தையின் கனவும் சிதைந்துவிடாது என்றும், இந்தியாவில் வாய்ப்புகள் இல்லாததால் எந்த நடுத்தர வர்க்க மாணவரும் வெளிநாட்டில் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படாது என்றும் அவர் உறுதியளித்தார். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் புதிய எம்பிபிஎஸ், எம்.டி இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த திரு நரேந்திர மோடி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 75,000 இடங்களை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பதிவு செய்யப்பட்ட 7.5 லட்சம் ஆயுஷ் மருத்துவர்கள் ஏற்கனவே நாட்டின் சுகாதாரத்திற்கு பங்களித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். ஆயுஷ் மருத்துவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

21-ம் நூற்றாண்டில் மருத்துவத்தின் விரைவான முன்னேற்றத்தை பிரதமர் குறிப்பிட்டார். ஆயுர்வேதக் கொள்கைகளைப் பயன்படுத்தும் தனிநபர்களுக்கு உகந்த வாழ்க்கை முறை மற்றும் இடர் பகுப்பாய்வை வடிவமைப்பதை நோக்கமாகக் கொண்ட பிராகிருதி பரிக்ஷான் அபியான் தொடங்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார். இந்த முன்முயற்சி உலக அளவில் சுகாதாரத் துறையை மறுவரையறை செய்வதுடன், ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்கும் என்று அவர் கூறினார்.

அஸ்வகந்தா, மஞ்சள், கருப்பு மிளகு போன்ற பாரம்பரிய மூலிகைகளை உயர் தாக்க அறிவியல் ஆய்வுகள் மூலம் நிரூபிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார்.  நமது பாரம்பரிய சுகாதார அமைப்புகளின் ஆய்வக சரிபார்ப்பு இந்த மூலிகைகளின் மதிப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க சந்தையையும் உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டார், அஸ்வகந்தாவின் தேவை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, இது இந்த பத்து ஆண்டின் இறுதிக்குள் 2.5 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.

ஆயுஷின் வெற்றி சுகாதாரத் துறையை மட்டுமின்றி, பொருளாதாரத்தையும் மாற்றியமைத்துள்ளது என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், ஆயுஷ் உற்பத்தித் துறை 2014-ல் 3 பில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது சுமார் 24 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்றும், இது வெறும் 10 ஆண்டுகளில் 8 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார். இந்தியாவில் தற்போது 900-க்கும் மேற்பட்ட ஆயுஷ் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், இது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கான இந்த அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, இது இந்தியாவின் தேசிய தன்மை, சமூக கட்டமைப்பு ஆகியவற்றின் ஆன்மா என்று கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் அரசு வகுத்த கொள்கைகள் 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்ற தத்துவத்துடன் இணைநதுள்ளன என்று அவர் தெரிவித்தார். அடுத்த 25 ஆண்டுகளில், இந்த முயற்சிகள் வளர்ந்தஆரோக்கியமான இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுத் தமது உரையை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

பின்னணி

முன்னோடித் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இப்போது கூடுதலாக, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பை விரிவுபடுத்தும் திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார். வருமானத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பை வழங்க இது உதவும்.

நாடு முழுவதும் தரமான சுகாதார சேவைகளை வழங்க வேண்டும் என்பது பிரதமரின் தொடர் முயற்சியாக இருந்து வருகிறது. சுகாதார உள்கட்டமைப்புக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், பிரதமர் பல்வேறு சுகாதார நிறுவனங்களை தொடங்கி வைத்துப் புதிய நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்தியாவின் முதலாவது அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் இரண்டாம் கட்ட செயல்பாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார். இதில் பஞ்சகர்மா மருத்துவமனை, மருந்து உற்பத்திக்கான ஆயுர்வேத மருந்தகம், விளையாட்டு மருத்துவ பிரிவு, மத்திய நூலகம், தகவல் தொழில்நுட்பம், ஸ்டார்ட்-அப் இன்குபேஷன் மையம், 500 இருக்கைகள் கொண்ட ஆடிட்டோரியம் ஆகியவை உள்ளன. மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்சவுர், நீமுச், சியோனி ஆகிய இடங்களில் மூன்று மருத்துவக் கல்லூரிகளையும் அவர் தொடங்கி வைத்தார். மேலும், இமாச்சலப் பிரதேசத்தில் பிலாஸ்பூர், மேற்கு வங்கத்தில் கல்யாணி, பீகாரில் பாட்னா, உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர், மத்தியப் பிரதேசத்தில் போபால், அசாமில் குவஹாத்தி மற்றும் புதுதில்லியில் உள்ள பல்வேறு எய்ம்ஸ் மருத்துவமனைகளில் வசதிகள் மற்றும் சேவை விரிவாக்கங்களையும் அவர் தொடங்கி வைத்தார். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பன்னோக்கு உயர் சிகிச்சை பிரிவையும், ஒடிசா மாநிலம் பர்கரில் தீவிர சிகிச்சைப் பிரிவையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

மத்தியப் பிரதேசத்தில் ஷிவ்புரி, ரத்லம், காண்ட்வா, ராஜ்கர் மற்றும் மண்ட்சவுர் ஆகிய இடங்களில் ஐந்து செவிலியர் கல்லூரிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்; ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் (PM-ABHIM) கீழ் இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 21 தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் புதுதில்லி மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பல்வேறு வசதிகள் மற்றும் சேவை விரிவாக்கங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஈஎஸ்ஐசி மருத்துவமனை ஒன்றைத் தொடங்கி வைத்த பிரதமர், ஹரியானாவில் ஃபரிதாபாத், கர்நாடகாவில் பொம்மசந்திரா மற்றும் நரசாபூர், மத்தியப் பிரதேசத்தில் இந்தூர், உத்தரப் பிரதேசத்தில் மீரட், ஆந்திரப் பிரதேசத்தில் அச்சுதபுரம் ஆகிய இடங்களில் ஈஎஸ்ஐசி மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டங்கள் சுமார் 55 லட்சம் இஎஸ்ஐ பயனாளிகளுக்கு பலன் அளிக்கும்.

பல்வேறு துறைகளில் சேவை வழங்கலை மேம்படுத்த தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதில் பிரதமர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். சுகாதாரத்தை மேலும் எளிதாக அணுகும் வகையில் சேவைகளை வழங்குவதை மேம்படுத்த ட்ரோன் தொழில்நுட்பத்தின் புதுமையான பயன்பாட்டில், பிரதமர் 11 மூன்றாம் நிலை சுகாதார நிறுவனங்களில் ட்ரோன் சேவைகளையும் தொடங்கி வைத்தார். உத்தரகாண்டில் உள்ள எய்ம்ஸ் ரிஷிகேஷ், தெலுங்கானாவில் எய்ம்ஸ் பிபிநகர், அசாமில் எய்ம்ஸ் கவுகாத்தி, மத்திய பிரதேசத்தில் போபால், ராஜஸ்தானில் ஜோத்பூர் எய்ம்ஸ், பீகாரில் பாட்னா, இமாச்சல பிரதேசத்தில் எய்ம்ஸ் பிலாஸ்பூர், உத்தரபிரதேசத்தில் எய்ம்ஸ் ரேபரேலி, சத்தீஸ்கரில் ராய்ப்பூர் எய்ம்ஸ், ஆந்திராவில் மங்களகிரி எய்ம்ஸ் மற்றும் மணிப்பூரில் உள்ள ரிம்ஸ் இம்பால் ஆகியவற்றில் ட்ரோன் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.விரைவான மருத்துவ சேவையை வழங்க உதவும் வகையில் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அவசர மருத்துவ சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.

ஒடிசா மாநிலம் கோர்தா, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் ஆகிய இடங்களில் யோகா, இயற்கை மருத்துவத்திற்கான இரண்டு மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

-----

TS/PLM/KPG/DL


(Release ID: 2069294) Visitor Counter : 131