பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்பெயின் அதிபரின் இந்திய பயணத்தின்போது வெளியிடப்பட்ட இந்தியா-ஸ்பெயின் கூட்டறிக்கை (அக்டோபர் 28-29, 2024)

Posted On: 28 OCT 2024 6:32PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஸ்பெயின் அதிபர் திரு பெட்ரோ சான்செஸ் 2024 அக்டோபர் 28-29 ஆகிய நாட்களில் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அதிபர் திரு சான்சேஸ் இந்தியாவில் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயின் அதிபர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். அவருடன் போக்குவரத்து, தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் வர்த்தக தூதுக்குழுவும் வருகை தந்துள்ளனர்.

 

இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளை புதுப்பித்துள்ளது, புதிய உத்வேகத்தை அளித்துள்ளது என்றும், பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே மேம்பட்ட ஒத்துழைப்பின் புதிய சகாப்தத்திற்கு களம் அமைத்துள்ளது என்றும் இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். 2017-ம் ஆண்டு பிரதமர் திரு மோடி ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொண்டதிலிருந்து, இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அவர்கள் திருப்தி தெரிவித்தனர். இருதரப்பு நிகழ்ச்சி நிரலை மேலும் மேம்படுத்தவும், அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, ராணுவம், மக்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு போன்ற அனைத்து பரிமாணங்களிலும் ஒத்துழைப்பை உருவாக்கவும் இரு தலைவர்களும் தங்கள் குழுக்களுக்கு அறிவுறுத்தினர்.

 

திரு சான்செஸுக்கு கலாச்சார வரவேற்பு அளிக்கப்பட்டது. வதோதராவில் பிரதமர் திரு மோடியுடன் பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தை நடத்தினார். மும்பைக்கும் சென்ற அவர், அங்கு முக்கிய வர்த்தக தலைவர்கள், கலாச்சார பிரமுகர்கள் மற்றும் இந்திய திரைப்படத் துறையின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

 

ஏர்பஸ் ஸ்பெயின் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் இணைந்து தயாரித்த சி-295 விமான உற்பத்தி வளாகத்தை வதோதராவில் அதிபர் திரு சான்சேஸ் மற்றும் பிரதமர் திரு மோடி ஆகியோர் கூட்டாக தொடங்கி வைத்தனர். இந்த ஆலை 2026-ம் ஆண்டில் இந்தியாவில் தயாரிக்கப்படும் மொத்தம் 40 விமானங்களில் முதலாவது சி 295 ரக விமானத்தை வெளியிடும். ஏர்பஸ் ஸ்பெயின் இந்தியாவுக்கு 16 விமானங்களை வழங்கி வருகிறது, அவற்றில் 6 ஏற்கனவே இந்திய விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளன.

 

அரசியல், ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு

 

1) இரு நாடுகளுக்கும் இடையேயான மனமார்ந்த மற்றும் சுமூகமான இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்த இரு தலைவர்களும், ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, நியாயமான மற்றும் சமத்துவமான உலகப் பொருளாதாரம், மேலும் நீடித்த மற்றும் நெகிழ்திறன் கொண்ட புவி, விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு மற்றும் மேம்பட்ட சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை ஆகியவற்றுக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் வளர்ந்து வரும் கூட்டாண்மையின் அடித்தளம் உள்ளது என்பதை எடுத்துரைத்தனர். இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த வரலாற்று உறவுகள் மற்றும் நீண்டகால நட்புறவு ஆகியவை இந்த ஒத்துழைப்பின் மையமாக இருப்பதையும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

 

வழக்கமான உயர்நிலை கலந்துரையாடல்கள் கூட்டாண்மைக்கு உத்வேகம் அளிக்கிறது என்று இரு தலைவர்களும் வலியுறுத்தினர். வெளியுறவு, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் இருதரப்பு ஒத்துழைப்பு சிறப்பாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர்கள், இணைய பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட ராணுவம், பாதுகாப்பு, இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தி பன்முகப்படுத்தும் நோக்கில் இரு தரப்பின் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / முகமைகளுக்கு இடையே வழக்கமான பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். கலாச்சாரம், சுற்றுலா, கல்வி மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகியவை இதில்  அடங்கும்.

 

3) இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பின் அடையாளமாக சி-295 விமானத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். வளர்ந்து வரும் இந்தக் கூட்டணிக்கு ஏற்பவும், ஸ்பெயினின் பாதுகாப்புத் தொழில்துறையின் மேம்பட்ட திறன்கள் மற்றும் போட்டித்தன்மை மற்றும் 'இந்தியாவில் உற்பத்தி செய்வோம்' முன்முயற்சியின் இலக்குகளுக்கு அதன் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், இந்தியாவில் இதுபோன்ற கூட்டுத் திட்டங்களை அமைக்க மற்ற துறைகளில் உள்ள அந்தந்த பாதுகாப்புத் தொழிற்சாலைகளை அவர்கள் ஊக்குவித்தனர்.

 

பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு

 

4. இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு கூட்டாண்மையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள நேர்மறையான முன்னேற்றங்களை வரவேற்ற அதிபர் திரு சான்சிஸ் மற்றும் பிரதமர் திரு மோடி, இரு நாடுகளிலும் நேர்மறையான பொருளாதார கண்ணோட்டத்தால் உற்சாகமடைந்ததுடன், இரு நாடுகளின் வர்த்தகங்களுக்கு இடையே வலுவான உறவுகளுக்கு அழைப்பு விடுத்தனர்.

 

ஸ்பெயினின் பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் மீள்திறனுக்காக அதிபர் திரு சான்செஸுக்கு பிரதமர் திரு மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்த அதிபர் திரு சான்சிஸ், வர்த்தகத்திற்கு உகந்த சூழலை மேம்படுத்த அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளையும் பாராட்டினார். இந்தியாவில் உள்ள சுமார் 230 ஸ்பெயின் நிறுவனங்களின் செயல்பாடுகள் மூலம் 'இந்தியாவில் உற்பத்தி செய்வோம்' முன்முயற்சிக்கு ஸ்பெயின் கொண்டுள்ள உறுதிப்பாட்டை அதிபர் திரு சான்செஸ் எடுத்துரைத்தார். வெளிப்படையான விதிகள் அடிப்படையிலான பன்முக வர்த்தக முறைக்கும், இரு நாடுகளிலும் வர்த்தகத்திற்கு உகந்த முதலீட்டு சூழலுக்கும் தங்களது வலுவான ஆதரவை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.

 

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அணுசக்தி, உணவு பதனப்படுத்துதல், சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகள், ரயில்கள், சாலைகள், துறைமுகங்கள் மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு மேலாண்மை உள்ளிட்ட தானியங்கி மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் ஸ்பெயின் நிறுவனங்களின் நிபுணத்துவத்தை அங்கீகரித்த இரு தலைவர்களும் இந்தத் துறைகளில் மேற்கொண்டு வரும் ஒத்துழைப்பை வரவேற்றனர். தகவல் தொழில்நுட்பம், மருந்துப் பொருட்கள், வாகன மற்றும் வாகன உதிரி பாகங்கள் போன்ற துறைகளில் ஸ்பெயினின் பொருளாதாரத்திற்கு இந்திய நிறுவனங்கள் அளித்து வரும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அதிபர் திரு சான்சேஸ் வரவேற்றார். இந்தியா, ஸ்பெயினில் பரஸ்பர முதலீடுகளை எளிதாக்க 'விரைவான வழிமுறை' உருவாக்கப்பட்டதை இரு தலைவர்களும் வரவேற்றனர்.

 

7) 2023-ல் நடைபெற்ற இந்தியா-ஸ்பெயின் பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணையத்தின் 12-வது அமர்வில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தலைவர்களும் கவனத்தில் எடுத்துக் கொண்டதுடன், 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்பெயினில் அடுத்த கூட்டத்தைக் கூட்டவும் ஒப்புக் கொண்டனர். இந்தச் சூழலில், பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில்நுட்பம், நீடித்த உள்கட்டமைப்பு போன்ற முக்கிய துறைகளில் உத்திசார் ஒத்துழைப்பைக் கண்டறிவது குறித்தும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். நீடித்த நகர்ப்புற மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்று இரு தலைவர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

 

8. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 2024 அக்டோபர் 29 அன்று மும்பையில் நடைபெற்ற, இந்தியா-ஸ்பெயின் தலைமை செயல் அதிகாரிகள் அமைப்பின் இரண்டாவது கூட்டம் மற்றும் இந்தியா-ஸ்பெயின் வர்த்தக உச்சிமாநாட்டை இரு தலைவர்களும் வரவேற்றனர்.

 

9. இருதரப்பு கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்வதில் புதிய கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தையும், புத்தொழில் சூழல் அமைப்புகளின் முக்கியத்துவத்தையும் இரு தலைவர்களும் அங்கீகரித்தனர். பரஸ்பர நலனைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற அனைத்து வாய்ப்புகளையும் கண்டறிய வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். ஸ்பெயினில் எழுச்சி மற்றும் தொடங்கிடு இந்தியா முன்முயற்சி போன்ற கட்டமைப்புகள் உட்பட எதிர்காலத்தில் இதுபோன்ற பரிமாற்றங்களை வலுப்படுத்த இரு நாடுகளின் தொடர்புடைய அமைப்புகளும் பணியாற்ற வேண்டும் என்று அவர்கள் ஊக்குவித்தனர்.

 

10) ரயில் போக்குவரத்து துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்ந்து ஒப்பந்தம், சுங்க ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் பரஸ்பர உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.

 

11. இரு நாட்டு மக்களிடையே புரிந்துணர்வை மேம்படுத்துவதிலும், பொருளாதார மற்றும் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிப்பதிலும் சுற்றுலா துறையின் பங்கை தலைவர்கள் ஒப்புக் கொண்டனர். இதை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் ஒப்புக் கொண்டனர். ஸ்பெயினுக்கும், இந்தியாவுக்கும், இடையே நேரடி விமான சேவையை ஏற்படுத்த விமான நிறுவனங்களின் ஆர்வத்தை இரு தலைவர்களும் வரவேற்றனர்.

 

2026-ம் ஆண்டு இந்தியா-ஸ்பெயின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆண்டாக கடைபிடிக்கப்படும்.

 

12. இந்தியா, ஸ்பெயின் இடையேயான ஆழமான நட்புறவு மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையேயான நீண்டகால நட்புறவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கலாச்சாரம், சுற்றுலா மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் 2026-ம் ஆண்டை இந்தியா மற்றும் ஸ்பெயினின் ஆண்டாக கடைபிடிக்க பிரதமர் திரு மோடி மற்றும் அதிபர் திரு பெட்ரோ சான்செஸ் ஒப்புக் கொண்டுள்ளனர்.

 

13. இந்த ஆண்டில், இரு தரப்பினரும் தங்கள் அருங்காட்சியகங்கள், கலை, கண்காட்சிகள், திரைப்படம், விழாக்கள், இலக்கியம், கட்டிடக் கலைஞர்களின் கூட்டங்கள் மற்றும் விவாதம் மற்றும் சிந்தனை வட்டங்களில் மற்றவரின் கலாச்சாரத்தை வெளிக்கொணர அதிகபட்ச முயற்சியை மேற்கொள்வார்கள்.

 

14. அதேபோல், இரு நாடுகளுக்கும் இணக்கமான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பயனளிக்கும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற சுற்றுலாவில், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வழிகள், பரஸ்பர முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

 

15. ஜி20 புதுதில்லி தலைவர்கள் பிரகடனத்தின்படி, செயற்கை நுண்ணறிவை நன்மைக்காகப் பயன்படுத்துவதிலும், பல துறைகளில் அதை நேர்மறையாக செயல்படுத்துவதிலும் இந்தியாவும் ஸ்பெயினும் மிக முக்கியமான பங்கை வகிக்க முடியும். இரு நாடுகளும் இந்த ஆண்டு முழுவதும் செயற்கை நுண்ணறிவின் நேர்மறையான பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான நிகழ்வுகளை நடத்த உறுதிபூண்டுள்ளன, மேலும் உற்பத்தி பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு துறையில் புதிய முன்னேற்றங்களை நடைமுறையில் செயல்படுத்த பணியாற்றும்.

 

16. இந்த முன்முயற்சியின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், அந்தந்த நாடுகளில் இந்த ஆண்டை மிகவும் பொருத்தமான முறையில் கொண்டாடுமாறு சம்பந்தப்பட்டவர்களை இரு தலைவர்களும் அறிவுறுத்தினர்.

 

கலாச்சார மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகள்

 

17. நாடுகளை நெருக்கமாக  அமையச் செய்வதில் கலாச்சார உறவுகளின் பங்கை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டதுடன், இந்தியா மற்றும் ஸ்பெயினின் வளமான மற்றும் மாறுபட்ட கலாச்சார பாரம்பரியத்தையும் பாராட்டினர். இந்தியாவுக்கும், ஸ்பெயினுக்கும் இடையிலான நீண்டகால கலாச்சார பரிமாற்றங்களை பாராட்டினர். இசை, நடனம், நாடகம், இலக்கியம், அருங்காட்சியகங்கள் மற்றும் விழாக்கள் ஆகியவற்றில் இருதரப்பு பரிமாற்றங்களை மேம்படுத்த கலாச்சார பரிமாற்றத் திட்டத்தில் கையெழுத்திட்டதை அவர்கள் வரவேற்றனர்.

 

18. இரு நாடுகளின் கலாச்சாரம் மற்றும் மொழிகள் குறித்த ஆய்வில் ஆர்வம் அதிகரித்து வருவதை இரு தலைவர்களும் பாராட்டினர். இந்தியாவில் பிரபலமான வெளிநாட்டு மொழிகளில் ஸ்பானிஷ் மொழியும் ஒன்றாகும். இந்தியா-ஸ்பெயின் கலாச்சார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் பரஸ்பர ஆர்வத்தை அவர்கள் வலியுறுத்தினர். புதுதில்லியில் உள்ள செர்வாண்டிஸ்  நிறுவனம் மற்றும் வல்லடோலிட்டில் உள்ள இந்திய இல்லம்  போன்ற இரு நாடுகளின் கலாச்சார நிறுவனங்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அவர்கள் வலியுறுத்தினர்.

 

வல்லாடோலிட் பல்கலைக்கழகத்தில் இந்தி மற்றும் இந்திய ஆய்வுகள் குறித்த ஐசிசிஆர் இருக்கைகள் அமைக்கப்பட்டதை இரு தலைவர்களும் வரவேற்றனர். தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ், இந்தியாவில் கல்வித் துறையில் பெரும் மாற்றங்களை இந்தியா கொண்டு வருகிறது. இந்தச் சூழலில், முன்னணி ஸ்பெயின் பல்கலைக்கழகங்கள் இந்திய கல்வி நிறுவனங்களுடன் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டாண்மையை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் திரு மோடி ஊக்குவித்தார். கூட்டு பட்டங்கள் மற்றும் இரட்டை ஏற்பாடுகள் மூலம் கல்வி நிறுவன இணைப்புகளை உருவாக்குதல் மற்றும் இந்தியாவில் கிளை வளாகங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல்.

மும்பையில் ஸ்பெயின்-இந்தியா குமுமம் மற்றும் கண்காணிப்பாளர் ஆராய்ச்சி அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 4-வது ஸ்பெயின்-இந்தியா மன்றத்தில் அதிபர் திரு சான்செஸ் முக்கிய உரையாற்றுகிறார். இந்தியா மற்றும் ஸ்பெயின் நாட்டு சிவில் சமூகங்கள், நிறுவனங்கள், சிந்தனையாளர்கள், நிர்வாகங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான தொடர்புகளை வலுப்படுத்துவதில் அரசுகளுக்கு துணையான பங்களிப்பைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் மதிப்புமிக்க பங்களிப்பை தலைவர்கள் அங்கீகரித்தனர். இரு நாடுகளுக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பை வளர்த்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்த உதவுதல், பரஸ்பர அறிவை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளையும் ஒன்றிணைத்தல் ஆகியவற்றை அங்கீகரித்தனர்.

 

21. ஸ்பெயின் மக்களுக்கு இந்திய பண்பாட்டு உறவுகள் சபையால் பரிசளிக்கப்பட்ட குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் மார்பளவு சிலை வல்லாடோலிட்டில் நிறுவப்பட்டிருப்பதையும், மாட்ரிட்டில் உள்ள இன்ஸ்டிடியூடோ செர்வாண்டிஸ் நிறுவனத்தின் பெட்டகத்தில் தாகூரின் மொழிபெயர்ப்பு நூல்கள் வைக்கப்பட்டிருப்பதையும் இரு தலைவர்களும் வரவேற்றனர்.

 

22. 2023-ம் ஆண்டில் செமின்சி சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியா விருந்தினர் நாடாக இருப்பது மற்றும் புகழ்பெற்ற ஸ்பானிஷ் இயக்குனர் கார்லோஸ் சவுராவுக்கு ஐஎஃப்எஃப்ஐ சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது ஆகியவற்றுடன் திரைப்படம் மற்றும் ஒலி-காட்சிகள் துறையில் வளர்ந்து வரும் ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர். இந்தியா மற்றும் ஸ்பெயினில் உள்ள பெரிய அளவிலான திரைப்படம் மற்றும் ஒலி-ஒளித் தொழில்களை அங்கீகரித்த இரு தலைவர்களும், ஒலி-ஒளி கூட்டுத் தயாரிப்பு ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை மேம்படுத்த முடியும் என்று ஒப்புக் கொண்டனர். ஒலி, ஒளித் துறையை இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும், திரைப்படங்களின் கூட்டுத் தயாரிப்பை மேம்படுத்தவும், வசதி செய்யவும் ஒரு கூட்டு ஆணையத்தை உருவாக்குவதை வரவேற்றனர்.

 

23. இரு நாடுகளில் மக்களுக்கு இடையேயான உறவுகள் மற்றும் தூதரக சேவைகளை மேம்படுத்த, ஸ்பெயினின் பார்சிலோனாவில் இந்தியாவின் முதலாவது துணைத் தூதரகம் செயல்படுவதையும், பெங்களூருவில் ஸ்பெயினின் துணைத் தூதரகத்தை திறக்கும் முடிவையும் இரு தலைவர்களும் வரவேற்றனர்.

 

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா உறவுகள்

 

24. பிரதமர் திரு மோடியும், அதிபர் திரு சான்செஸும், இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ராஜீய கூட்டாண்மையை வலுப்படுத்தவும், விரிவான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம், புவிசார் குறியீடுகள் ஒப்பந்தம் ஆகிய ஐரோப்பிய ஒன்றிய-இந்தியா முத்தரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்தனர்.

 

25. ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா இணைப்பு கூட்டாண்மையின் நோக்கங்களை முழுமையாக அடைய தங்களது ஒத்துழைப்பை மேம்படுத்த அவர்கள் ஒப்புக் கொண்டனர். இந்தியா, ஐரோப்பாவுக்கு இடையேயான தொடர்பை ஊக்குவிப்பதற்கான இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடத் திட்டத்தின் திறனையும் அங்கீகரித்தனர். வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், எரிசக்தி, சரக்கு போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற துறைகளில் பிராந்திய நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை அவர்கள் ஆராய்ந்தனர்.

 

உலகளாவிய சிக்கல்கள்

 

உக்ரைன் போர் குறித்து தங்களது ஆழ்ந்த கவலையை தெரிவித்த தலைவர்கள், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்தல் உட்பட ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க, சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதியின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினர். மோதலுக்கு நிலையான மற்றும் அமைதியான தீர்வை எட்டுவதற்கு பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் மற்றும் தொடர்புடையவர்களுக்கும் இடையே உண்மையான ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை அவர்கள் சுட்டிக்காட்டினர். மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவளிக்க இரு தரப்பினரும் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.

 

27. மத்திய கிழக்கில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை அடைவதில் தங்களின் உறுதியான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொண்ட அவர்கள், மேற்கு ஆசியாவில் பாதுகாப்பு நிலைமை தீவிரமடைந்து வருவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதுடன், சம்பந்தப்பட்ட அனைவரும் நிதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். அனைத்து பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 2023 அக்டோபர் 7 அன்று, இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல்களை இரு தலைவர்களும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்தனர். மேலும் காசாவில் பெரிய அளவிலான பொதுமக்கள் உயிர் இழப்பு மற்றும் மனிதாபிமான நெருக்கடி ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டனர். பிணைக்கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், காஸாவிற்குள் மனிதாபிமான உதவிகள் பாதுகாப்பாக  வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசரத் தேவையை வலியுறுத்திய அவர்கள், அனைத்துத் தரப்பினரும் சர்வதேச சட்டங்களுக்கு இணங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இறையாண்மையுள்ள, நிலைத்திருக்கக் கூடிய, சுதந்திரமான பாலஸ்தீன அரசை உருவாக்கி, பாதுகாப்பான மற்றும் பரஸ்பரம் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் இஸ்ரேலுடன் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கும், ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனம் உறுப்பினராவதற்கும் தங்கள் ஆதரவை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

 

28) லெபனானில் அதிகரித்து வரும் வன்முறை பாதுகாப்பு நிலைமை குறித்து கவலை தெரிவித்த இருதரப்பும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 1701-வது தீர்மானத்தை முழுமையாக அமல்படுத்துவதில் தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்தன. துருப்புக்களை பங்களிக்கும் முக்கிய நாடுகள் என்ற முறையில், யுனிஃபில் மீதான தாக்குதல்களுக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அமைதி காக்கும் படையினரின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்றும், அதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்றும் எடுத்துரைத்தனர்.

 

29. விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கின் அடிப்படையில் அமைந்த சுதந்திரமான, திறந்த, உள்ளடக்கிய, அமைதியான மற்றும் வளமான இந்தோ-பசிபிக்கை ஊக்குவிப்பது, இறையாண்மைக்கு பரஸ்பரம் மரியாதை அளிப்பது, பிராந்திய அமைப்புகளின் ஆதரவுடன் மோதல்களுக்கு அமைதியான தீர்வு ஆகியவற்றை இருதரப்பும் வலியுறுத்தின. சர்வதேச சட்டங்களுக்கு, குறிப்பாக 1982-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டம் தொடர்பான மாநாட்டுக்கு இணங்க, தடையற்ற வர்த்தகம் மற்றும் சுதந்திரமான கடற்பயணத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் எடுத்துரைத்தனர். இந்திய-பசிபிக் பகுதியில் கடல்சார் துறையின் மேலாண்மை, பாதுகாப்பு, நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட கூட்டு முயற்சிகளுக்காக இந்திய-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியில் பங்கேற்குமாறு ஸ்பெயினுக்கு இந்தியா விடுத்த அழைப்பை இரு தரப்பும் ஏற்றுக்கொண்டன. இந்தியாவின் இந்தோ-பசிபிக் தொலைநோக்கு பார்வை மற்றும் இந்தோ-பசிபிக் ஒத்துழைப்புக்கான ஐரோப்பிய ஒன்றிய உத்தி ஆகியவற்றுக்கு இடையேயான முக்கியத்துவத்தை அவர்கள் அங்கீகரித்தனர்.

 

30. இந்தியாவுக்கும் லத்தீன் அமெரிக்க பிராந்தியத்திற்கும் இடையே வளர்ந்து வரும் அரசியல், வர்த்தக உறவுகள் மற்றும் ஸ்பெயினுடன் அது பகிர்ந்து கொள்ளும் வரலாற்று, பொருளாதார மற்றும் கலாச்சார தொடர்புகள் குறித்து குறிப்பிட்ட இரு தலைவர்களும், இந்த மண்டலத்தில் முதலீடுகள் மற்றும் வளர்ச்சிக்கான முத்தரப்பு ஒத்துழைப்பின் மகத்தான வாய்ப்புகளை அங்கீகரித்தனர். லத்தீன் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பை  வழங்கும் ஐபீரோ-அமெரிக்க மாநாட்டில் இணை பார்வையாளராக சேர இந்தியா விண்ணப்பித்துள்ளதை ஸ்பெயின் வரவேற்றது. 2026-ம் ஆண்டில் ஸ்பெயினில் நடைபெறவுள்ள ஐபீரோ-அமெரிக்க உச்சிமாநாட்டிற்கான செயல்முறையை இறுதி செய்ய இரு தரப்பிலும் உறுதியளிக்கப்பட்டது, இதன் மூலம் ஸ்பெயினின் தற்காலிக சார்பு செயலகத்தின் நடவடிக்கைகளில் இந்தியா தீவிரமாக பங்கேற்கும்.

 

சர்வதேச மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பு

 

31. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு குழுமம்  மற்றும் இதர பன்னாட்டு அமைப்புகள் உட்பட ஐக்கிய நாடுகள் சபைக்குள் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். உலக அமைதி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்கு விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர். இன்றைய யதார்த்தங்களை பிரதிபலிக்கும் பன்முகத்தன்மையை முன்னெடுத்துச் செல்வது, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளை அதிக பிரதிநிதித்துவம் கொண்டதாகவும், பயனுள்ளதாகவும் ஜனநாயகம் சார்ந்ததாகவும், பொறுப்புள்ளதாகவும் மற்றும் வெளிப்படைத்தன்மையுடையதாகவும் மாற்ற இருதரப்பும் உறுதிபூண்டன. 2031-32 காலகட்டத்தில் ஸ்பெயினின் யு.என்.எஸ்.சி வேட்பாளருக்கு இந்தியா தனது ஆதரவை வெளிப்படுத்தியது, அதே நேரத்தில் 2028-29 காலகட்டத்தில் இந்தியாவின் வேட்பாளருக்கு ஸ்பெயின் தனது ஆதரவை வெளிப்படுத்தியது.

 

32. நீடித்த வளர்ச்சி இலக்குகளை அமல்படுத்துவதற்குத் தேவையான ஆதார இடைவெளியை நிரப்ப உதவும் முன்னுரிமை நடவடிக்கைகளை அடையாளம் காண்பதற்கான முக்கிய வாய்ப்பாக 2025-ல் செவில்லாவில் (ஸ்பெயின்) நடைபெறவுள்ள வளர்ச்சிக்கான நிதியுதவி குறித்த நான்காவது சர்வதேச மாநாட்டை இரு தலைவர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

 

33. முக்கியமான மற்றும் சிக்கலான தெற்கு நாடுகளின் பிரச்சினைகளுக்கு வெற்றிகரமாகவும், உள்ளடக்கியதாகவும் தீர்வு கண்ட ஜி-20 அமைப்பின் முன்மாதிரியான தலைமைப் பொறுப்பை வகித்ததற்காக பிரதமர் திரு. மோடிக்கு அதிபர் திரு சான்சிஸ் வாழ்த்து தெரிவித்தார். ஜி-20 அமைப்பின் நிரந்தர அழைப்பாளர் என்ற முறையில் இந்த விவாதங்களில் ஸ்பெயின் ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்பை பிரதமர் திரு மோடி பாராட்டினார்.

 

34. நீடித்த எரிசக்தியை ஊக்குவித்தல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்கள் அங்கீகரிக்கின்றனர் மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தின் வெப்பநிலை இலக்கை அடைய உதவும் பருவநிலை நிதி குறித்த புதிய கூட்டு அளவிடப்பட்ட இலக்கு உட்பட ஒரு லட்சியத்தை அடைய பாகுவில் நடைபெறவுள்ள பருவநிலை உச்சிமாநாட்டின் சூழலில் ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ளனர். உலகெங்கிலும் பருவநிலை மாற்றத்தின் அதிகரித்து வரும் தாக்கங்களை எதிர்கொள்ளும் நாடுகளின் பின்னடைவு மற்றும் தழுவல் திறன்களை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் எடுத்துரைத்தனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்று இரு தலைவர்களும் எதிர்நோக்கியுள்ளனர். பசுமை மாற்றத்தை நோக்கிய ஸ்பெயினின் உறுதிப்பாட்டை பாராட்டிய பிரதமர் திரு மோடி, சர்வதேச சூரியசக்தி கூட்டணிக்கு ஸ்பெயினை வரவேற்றார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுக்கு முன்னதாகவே எட்டுவதில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களை அதிபர் திரு சான்சேஸ் பாராட்டினார். பருவநிலை மாற்ற கவலைகளுக்கு தீர்வு காண ஒருங்கிணைந்த உலகளாவிய முயற்சி தேவை என்பதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

 

35.நாடுகள், நகரங்கள் மற்றும் சமூகங்கள் வறட்சியால் பாதிக்கப்படுவதைக் குறைப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான ஒரு தளமான சர்வதேச வறட்சி மீட்பு கூட்டணியில் சேர இந்தியாவுக்கு ஸ்பெயின் அழைப்பு விடுத்துள்ளது.

 

36. பயங்கரவாத பினாமிகளைப் பயன்படுத்துதல், எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளில் உள்ள பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை இரு தலைவர்களும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்தனர். சர்வதேச அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்பதை இருதரப்பும் ஒப்புக் கொண்டதுடன், அனைத்து பயங்கரவாத தாக்குதல்களிலும் ஈடுபட்டவர்களை தாமதமின்றி நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தன. அனைத்து நாடுகளும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் பயங்கரவாத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதை தடுக்க உடனடி, நீடித்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். ஐ.நா. பாதுகாப்பு குழுமத்தின் தொடர்புடைய தீர்மானங்களை உறுதியாக அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், ஐ.நா.வின் உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு உத்தியை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். அல் கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ் / தாயிஷ், லஷ்கர்-இ-தொய்பா (எல்.இ.டி), ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.எம்) மற்றும் அவற்றின் பினாமி குழுக்கள் உட்பட ஐ.நா பாதுகாப்பு குழுமத்தால் தடைசெய்யப்பட்ட அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கும் எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு அதிகாரமளித்தலிலும் ஸ்பெயினின் பலதரப்பு முன்முயற்சிகளை பிரதமர் திரு மோடி பாராட்டினார்.

 

இந்தப் பயணத்தின்போது தனக்கும், தனது குழுவினருக்கும் அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் உபசரிப்புக்காக பிரதமர் திரு மோடிக்கு நன்றி தெரிவித்த அதிபர் திரு சான்சிஸ், விரைவில் ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.

***

TS/IR/AG/DL




(Release ID: 2069011) Visitor Counter : 17