பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லாவோ ஜனநாயக குடியரசின் வியன்டியான் நகரில் நடைபெற்ற 21-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம்

Posted On: 10 OCT 2024 7:14PM by PIB Chennai

மேதகு பிரதமர் திரு சோனெக்சே சிபன்டோன் அவர்களே,

மேதகு தலைவர்களே,

வணக்கம் 

இன்று, ஆசியான் குடும்பத்துடன் பதினோராவது முறையாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில் நான் பெருமை அடைகிறேன்.

10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையை நான் அறிவித்தேன். கடந்த பத்தாண்டுகளில் இந்த முன்முயற்சி இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளுக்கு புத்துயிர் அளித்து, அவற்றுக்கு புதிய ஆற்றல், திசை மற்றும் உத்வேகத்தை அளித்துள்ளது.

ஆசியான் மையத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து, 2019-இல் இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியை நாங்கள் தொடங்கினோம். இந்த முன்முயற்சி "இந்தோ-பசிபிக் மீதான ஆசியான் கண்ணோட்டத்தை" பூர்த்தி செய்கிறது.

பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த கடல்சார் பயிற்சிகளை கடந்த ஆண்டு தொடங்கினோம்.

கடந்த 10 ஆண்டுகளில், ஆசியான் பிராந்தியத்துடனான நமது வர்த்தகம் கிட்டத்தட்ட இரு மடங்காகி 130 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது.

இன்று, ஏழு ஆசியான் நாடுகளுடன் இந்தியா நேரடி விமான இணைப்பைக் கொண்டுள்ளது, விரைவில், புருனேவுக்கு நேரடி விமான சேவையும் தொடங்கப்படும்.

கூடுதலாக, நாங்கள் திமோர்-லெஸ்டேயில் ஒரு புதிய தூதரகத்தைத் திறந்துள்ளோம்.

ஆசியான் பிராந்தியத்தில், சிங்கப்பூருடன் நிதிநுட்ப இணைப்பை ஏற்படுத்திய முதல் நாடு நாங்கள்தான் , இந்த வெற்றி இப்போது மற்ற நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது.

நமது வளர்ச்சிக்கான கூட்டாண்மை மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையின் அடிப்படையில் அமைந்துள்ளது. நாளந்தா பல்கலைக்கழகத்தில் 300 க்கும் மேற்பட்ட ஆசியான் மாணவர்கள் உதவித்தொகை மூலம் பயனடைந்துள்ளனர். பல்கலைக்கழகங்களின் வலையமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிதி, டிஜிட்டல் நிதி மற்றும் பசுமை நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்கான நிதி நிறுவப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளுக்கு இந்தியா 30 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் நமது கூட்டாண்மை ஒவ்வொரு அம்சத்திலும் குறிப்பிடத்தக்க அளவு விரிவடைந்துள்ளது.

நண்பர்களே, 
நாம் அண்டை நாடுகள், உலகளாவிய தெற்கில் கூட்டாளிகள், உலகில் வேகமாக வளர்ந்து வரும் பிராந்தியம். நாம் அமைதியை விரும்பும் நாடுகள், ஒருவருக்கொருவர் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதிக்கிறோம், மேலும் நமது இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்ய உறுதிபூண்டுள்ளோம்.

21-ஆம் நூற்றாண்டு, "ஆசிய நூற்றாண்டு" என்று நான் நம்புகிறேன், இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கான நூற்றாண்டு. இன்று, உலகின் பல பகுதிகளில் மோதல்களும், பதற்றமும் நிலவும் போது, இந்தியாவுக்கும் ஆசியானுக்கும் இடையிலான நட்பு, ஒருங்கிணைப்பு, பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

ஆசியான் அமைப்பின் வெற்றிகரமான தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள லாவோ ஜனநாயக குடியரசைச் சேர்ந்த பிரதமர் திரு சோனேக்சே சிபந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய கூட்டம் இந்தியா-ஆசியான் கூட்டாண்மைக்கு புதிய பரிமாணத்தைக் கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன்.

மிகவும் நன்றி.

பொறுப்புத் துறப்பு - இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2063935

*****

RB/DL



(Release ID: 2064096) Visitor Counter : 16