பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் வளர்ச்சித் திட்டங்களின் அடிக்கல் நாட்டல் மற்றும் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 02 OCT 2024 4:37PM by PIB Chennai

மாண்புமிகு ஜார்க்கண்ட் ஆளுநர் திரு. சந்தோஷ் கங்வார் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது நண்பர்  திரு. ஜூவல் ஓரம் அவர்களே, எனது சக அமைச்சரும் இந்த மண்ணின் மகளுமான  திருமிகு அன்னபூர்ணா தேவி அவர்களேதிரு சஞ்சய் சேத் அவர்களே, திரு துர்காதாஸ் யுகே அவர்களே, இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மணீஷ் ஜெய்ஸ்வால் அவர்களே, அனைத்து மக்கள் பிரதிநிதிகளே, இங்கு கூடியிருக்கும் எனதருமை சகோதர சகோதரிகளே!

இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாள். பழங்குடியினர் மேம்பாட்டுக்கான அவரது தொலைநோக்குப் பார்வையும், சிந்தனைகளும் நமக்கு ஒரு பொக்கிஷம். பழங்குடி சமூகம் வேகமாக முன்னேறினால் மட்டுமே பாரதத்தின் வளர்ச்சியை அடைய முடியும் என்று காந்திஜி நம்பினார். முன்னெப்போதையும் விட இன்று நமது அரசு பழங்குடியின சமுதாயத்தின் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தி வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பழங்குடியினர் கிராம நில மேம்பாட்டு இயக்கம்  என்ற பெரிய திட்டத்தை நான் இப்போது தொடங்கியுள்ளேன். இந்த திட்டத்திற்காக சுமார் 80,000 கோடி ரூபாய் செலவிடப்படும். இத்திட்டத்தின் கீழ் 550 மாவட்டங்களில் பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கும் சுமார் 63,000  கிராமங்களின் வளர்ச்சி மேற்கொள்ளப்படும். பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் இந்த கிராமங்களில் சமூக-பொருளாதார நிலைமைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த முயற்சியால் நாடு முழுவதும் உள்ள 5 கோடிக்கும் மேற்பட்ட பழங்குடியின சகோதர சகோதரிகள் பயனடைவார்கள்.

நண்பர்களே,

இளைஞர்களுக்குத் தரமான கல்வி வாய்ப்புகள் வழங்கப்படும்போதுதான் நமது பழங்குடியின சமுதாயம் முன்னேறும். இது தொடர்பாக பழங்குடியினர் பகுதிகளில் ஏகலைவ உண்டு உறைவிடப் பள்ளிகளை உருவாக்கும் இயக்கத்தில் எங்கள் அரசு விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறது. இன்று இங்கிருந்து 40 ஏகலைவ உண்டு உறைவிடப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. 25 புதிய பள்ளிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் நவீன வசதிகள் மற்றும் உயர்தர கல்வியை வழங்குவதை உறுதி செய்வதற்காக பட்ஜெட்டை இரட்டிப்பாக்கியுள்ளோம்.

இன்று, நான் வந்திறங்கியவுடன், ஜார்க்கண்டின் எனது சகோதர சகோதரிகளின் அன்பையும் ஆதரவையும் கண்டேன். இந்த அன்பும் ஆசீர்வாதமும் பழங்குடி சமூகத்திற்கு மேலும் சேவை செய்ய எனக்கு பலத்தை அளிக்கும். இந்த உணர்வுடன், இந்த வளர்ச்சிப் பணிகளுக்காக உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன், உங்களுக்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெய் ஜோஹர்!

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2061109

***

(Release ID: 2061109)

BR/KR



(Release ID: 2061353) Visitor Counter : 9