பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                    
                    
                         ஜமைக்கா பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட பத்திரிகை அறிக்கை
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                01 OCT 2024 6:35PM by PIB Chennai
                
                
                
                
                
                
                மேதகு பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னெஸ் அவர்களே,
இரு நாடுகளின் பிரதிநிதிகளே,
ஊடக சகாக்களே,
வணக்கம்!
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் ஹோல்னெஸ் மற்றும் அவரது குழுவினரை வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் ஹோல்னெஸ் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். அதனால்தான் இந்தப் பயணத்துக்கு நாம் விசேஷ முக்கியத்துவம் கொடுக்கின்றோம். பிரதமர் ஹோல்னெஸ் இந்தியாவின் நீண்டகால நண்பர். அவரை பலமுறை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு முறையும், இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் அவரது உறுதிப்பாட்டை நான் உணர்ந்தேன். அவரது வருகை நமது இருதரப்பு உறவுகளுக்கு புதிய சக்தியைக் கொண்டு வருவதுடன், ஒட்டுமொத்த கரீபியன் பிராந்தியத்துடனும் நமது ஈடுபாட்டை மேம்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
இந்தியா மற்றும் ஜமைக்கா இடையேயான உறவு, நமது பகிரப்பட்ட வரலாறு, பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகள் மற்றும் மக்களுக்கு இடையேயான வலுவான உறவுகள் ஆகியவற்றில் வேரூன்றி உள்ளது. நமது கூட்டாண்மை கலாச்சாரம், கிரிக்கெட், காமன்வெல்த் மற்றும் கேரிகாம் ஆகிய நான்கு 'சி'க்களால் வகைப்படுத்தப்படுகிறது. இன்றைய கூட்டத்தில், அனைத்து துறைகளிலும் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம், மேலும் பல புதிய முயற்சிகளை அடையாளம் கண்டோம். இந்தியா மற்றும் ஜமைக்கா இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீடு அதிகரித்து வருகிறது. ஜமைக்காவின் வளர்ச்சிக்கான பயணத்தில் இந்தியா எப்போதும் நம்பகமான மற்றும் அர்ப்பணிப்புள்ள வளர்ச்சிக்கான கூட்டாளியாக இருந்து வருகிறது. இந்தத் திசையில் எங்கள் முயற்சிகள் அனைத்தும் ஜமைக்கா மக்களின் தேவைகளை மையமாகக் கொண்டுள்ளன. ITEC மற்றும் ICCR உதவித்தொகை மூலம், ஜமைக்கா மக்களின் திறன் மேம்பாடு மற்றும் திறன் வளர்ப்புக்கு நாங்கள் பங்களித்துள்ளோம்.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, சிறு தொழில்கள், உயிரி எரிபொருள், கண்டுபிடிப்பு, சுகாதாரம், கல்வி, விவசாயம் போன்ற துறைகளில் ஜமைக்காவுடன் எங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். பாதுகாப்புத் துறையில் ஜமைக்கா ராணுவத்தின் பயிற்சி மற்றும் திறன் வளர்ப்பில் நாங்கள் முன்னேறுவோம். திட்டமிட்ட குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல், பயங்கரவாதம் ஆகியவை நமது பொதுவான சவால்களாக உள்ளன. இந்தச் சவால்களை ஒன்றாக எதிர்கொள்ள நாங்கள் இசைந்துள்ளோம். விண்வெளித் துறையில் எங்களது வெற்றிகரமான அனுபவத்தை ஜமைக்காவுடனும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
நண்பர்களே,
இன்றைய கூட்டத்தில், பல உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். அனைத்து பதற்றங்களும் சர்ச்சைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். உலக அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்ய நாங்கள் ஒன்றிணைந்து எங்கள் முயற்சிகளைத் தொடர்வோம். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை உட்பட அனைத்து சர்வதேச அமைப்புகளிலும் சீர்திருத்தங்கள் அவசியம் என்பதை இந்தியாவும் ஜமைக்காவும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த நிறுவனங்களை நவீனப்படுத்த நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்.
நண்பர்களே,
இந்தியாவும் ஜமைக்காவும் பரந்த பெருங்கடல்களால் பிரிக்கப்படலாம், ஆனால் நமது மனங்கள், நமது கலாச்சாரங்கள் மற்றும் நமது வரலாறுகள் ஆழமாக பின்னிப்பிணைந்தவை. சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து ஜமைக்காவுக்கு புலம்பெயர்ந்த மக்கள் நமது மக்களுக்கு இடையேயான உறவுகளுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தனர். இன்று, ஜமைக்காவைத் தாயகம் என்று அழைக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 70,000 பேர் நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தின் வாழும் உதாரணமாகத் திகழ்கின்றனர். அவர்களை கவனித்துக் கொண்டதற்காக பிரதமர் ஹோல்னெஸ் மற்றும் அவரது அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் ஹோல்னெஸ் மற்றும் அவரது அரசுக்கு அவர்களின் அக்கறைக்காகவும், சமூகத்திற்கு ஆதரவளித்ததற்காகவும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
யோகா, பாலிவுட் மற்றும் இந்தியாவிலிருந்து நாட்டுப்புற இசை ஜமைக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதைப் போலவே, ஜமைக்காவிலிருந்து "ரெக்கே" மற்றும் "டான்ஸ்ஹால்" ஆகியவையும் இந்தியாவில் பிரபலமாகி வருகின்றன. இன்று நடத்தப்படும் கலாச்சாரப் பரிமாற்ற நிகழ்ச்சி நமது பரஸ்பர நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தும். தில்லியில் உள்ள ஜமைக்கா தூதரகத்துக்கு முன்னால் உள்ள சாலைக்கு "ஜமைக்கா மார்க்" என்று பெயரிட முடிவு செய்துள்ளோம். இந்த சாலை வரும் தலைமுறைகளுக்கான நமது நீடித்த நட்பு மற்றும் ஒத்துழைப்பின் அடையாளமாக இருக்கும்.
கிரிக்கெட்டை நேசிக்கும் நாடுகள் என்ற வகையில், விளையாட்டு நமது உறவுகளை இணைக்கும் மிக வலுவான மற்றும் முக்கியமான இணைப்புக் கண்ணியாக இருந்து வருகிறது. "கர்ட்னி வால்ஷ்" இன் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாக இருந்தாலும் சரி, "கிறிஸ் கெய்லின்" அனல் பறக்கும் பேட்டிங்காக இருந்தாலும் சரி, இந்திய மக்கள் ஜமைக்கா கிரிக்கெட் வீரர்கள் மீது தனி பாசம் வைத்துள்ளனர். விளையாட்டில் நமது ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இன்றைய விவாதங்களின் முடிவுகள் நமது உறவை "உசேன் போல்ட்" ஐ விட வேகமாக கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன், இது தொடர்ந்து புதிய உயரங்களை அடைய நம்மை அனுமதிக்கும்.
மேதகு அதிபர் அவர்களே,
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள உங்களையும், உங்களது தூதுக்குழுவினரையும் மீண்டும் ஒருமுறை அன்புடன் வரவேற்கிறேன்.
மிகவும் நன்றி!
***
PKV/AG/DL
                
                
                
                
                
                (Release ID: 2060848)
                Visitor Counter : 95
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam