உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சத்தீஸ்கரில் நக்சலைட் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கலந்துரையாடினார்

प्रविष्टि तिथि: 20 SEP 2024 12:30PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, சத்தீஸ்கரில் நக்சலைட் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுடன் புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் கலந்துரையாடினார். பஸ்தார் அமைதிக் குழுவின் கீழ் சத்தீஸ்கரில் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நக்சலைட் வன்முறையால் பாதிக்கப்பட்ட 55 பேரும் இதில் அடங்குவர்.

 

சத்தீஸ்கரில் நக்சலிசத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவல நிலையை எடுத்துரைக்கும் ஆவணப்படத்தையும் பஸ்தார் அமைதிக் குழு திரையிட்டது. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தங்கள் அவல நிலையை உள்துறை அமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர்.

 

நக்சலைட் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், 2026 மார்ச் மாதத்திற்குள் நக்சலிசத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார். மோடி அரசின் கொள்கைகள் காரணமாக, இடதுசாரி தீவிரவாதம் இப்போது சத்தீஸ்கரில் சில மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. நக்சலிசம், மனிதகுலம் மற்றும் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று திரு ஷா கூறினார்.

 

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக அடுத்த மூன்று மாதங்களில் விரிவான திட்டம் ஒன்றை மத்திய அரசும், சத்தீஸ்கர் அரசும் கொண்டு வரும் என்று திரு அமித் ஷா மேலும் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம், சத்தீஸ்கர் உட்பட நாடு முழுவதும் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார வசதிகள், வேலை வாய்ப்புகள் மற்றும் பிற நலத்திட்டங்கள் கிடைக்கும் என்று அவர் கூறினார்.

 

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் மூலம், கொலை செய்பவரை விட காப்பாற்றுபவர் பெரியவர் என்ற செய்தியை நக்சலைட்டுகளுக்கு மோடி அரசு வழங்கியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். நக்சலைட்டுகளின் மனித உரிமைகளுக்காக வாதிடுபவர்கள், நக்சலைட்டுகளால் பாதிக்கப்படுபவர்களின் மனித உரிமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.

 

இடதுசாரி தீவிரவாதிகள் வன்முறைப் பாதையைக் கைவிட்டு சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். 2026 மார்ச் மாதத்திற்குள் இடதுசாரி தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படுவதன் மூலம், பஸ்தார் மீண்டும் அழகானதாகவும், அமைதியானதாகவும், வளர்ச்சியடைந்ததாகவும் மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

***

(Release ID: 2056910)

PKV/RR/KR


(रिलीज़ आईडी: 2056981) आगंतुक पटल : 107
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada