பிரதமர் அலுவலகம்
ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
15 SEP 2024 1:21PM by PIB Chennai
ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சந்தோஷ் கங்க்வார் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான சிவராஜ் சிங் சௌகான் அவர்களே, அன்னபூர்ணா தேவி அவர்களே, சஞ்சய் சேத் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் வித்யுத் மஹ்தோ அவர்களே, மாநில அரசு அமைச்சர் இர்பான் அன்சாரி அவர்களே, ஜார்க்கண்ட் பிஜேபி தலைவர் பாபுலால் மராண்டி அவர்களே, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கத் தலைவர் சுதேஷ் மஹ்தோ அவர்களே, சட்டப் பேரவை உறுப்பினர்களே, இதர சிறப்பு விருந்தினர்களே, சகோதர சகோதரிகளே,
பாபா பைத்யநாத், பாபா பாசுகிநாத் ஆகியோரின் பாதங்களில் விழுந்து வணங்குகிறேன். வீரம் செறிந்த பிர்ஸா முண்டாவின் பூமிக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். இன்று மிகவும் இனிய நாள். தற்போது, ஜார்க்கண்ட் இயற்கை வழிபாட்டை உள்ளடக்கிய கர்மா பண்டிகையை கொண்டாடுகிறது. இன்று காலை நான் ராஞ்சி விமான நிலையத்தை வந்தடைந்தபோது, ஒரு சகோதரி கர்மா பண்டிகையின் சின்னமான ஜாவாவுடன் என்னை வரவேற்றார். இந்த பண்டிகையின் போது சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். கர்மா பண்டிகையை முன்னிட்டு ஜார்க்கண்ட் மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புனித நாளில், ஜார்க்கண்ட் மாநிலம் வளர்ச்சியின் புதிய ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளது. ஆறு புதிய வந்தே பாரத் ரயில்கள், 650 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ரயில்வே திட்டங்கள், போக்குவரத்து இணைப்பு, பயண வசதிகளின் விரிவாக்கம், இவை அனைத்துடனும், ஜார்க்கண்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தங்கள் சொந்த வீடுகளைப் பெறுகின்றனர். இந்த அனைத்து வளர்ச்சிப் பணிகளுக்காகவும் ஜார்க்கண்ட் மக்களை நான் பாராட்டுகிறேன். இந்த வந்தே பாரத் ரயில்கள் இணைக்கும் அனைத்து மாநிலங்களையும் நான் வாழ்த்துகிறேன்.
நண்பர்களே,
நவீன வசதிகளும் வளர்ச்சியும் நாட்டின் ஒரு சில நகரங்களில் மட்டுமே இருந்த காலம் இருந்தது. ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நவீன உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பின்தங்கின. இருப்பினும், 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்ற தாரக மந்திரம் நாட்டின் மனநிலையையும் முன்னுரிமைகளை மாற்றியுள்ளது. இப்போது, நாட்டின் முன்னுரிமை ஏழைகளுக்குத்தான். தற்போது நாட்டின் முன்னுரிமை பழங்குடியின சமூகங்களுக்குத்தான். இப்போது, நாட்டின் முன்னுரிமை தலித்துகள், பின்தங்கியவர்கள், சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்குத் தான். இப்போது, நாட்டின் முன்னுரிமை பெண்கள், இளைஞர்கள் விவசாயிகள் ஆகியோருக்குத் தான். அதனால்தான், ஜார்க்கண்ட், மற்ற மாநிலங்களைப் போலவே, வந்தே பாரத் போன்ற உயர் தொழில்நுட்ப ரயில்களையும் நவீன உள்கட்டமைப்பையும் பெறுகிறது.
நண்பர்களே,
இன்று, ஒவ்வொரு மாநிலமும் நகரமும் விரைவான வளர்ச்சிக்காக வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில்களை விரும்புகின்றன. சில நாட்களுக்கு முன்பு, வடக்கு, தென் மாநிலங்களுக்கு 3 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை நான் கொடியசைத்து தொடங்கி வைத்தேன். இன்று, டாடா நகரிலிருந்து பாட்னா, டாடாநகர் முதல் பிரம்மபூர், ரூர்கேலாவிலா - டாடாநகர் - ஹவுரா, பாகல்பூர் - தும்கா - ஹவுரா, தியோகர் - கயா - வாரணாசி, கயா - கோடர்மா – பரஸ்நாத் – தன்பாத் - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. வீடுகள் வழங்கும் திட்டத்தின்போதே, இந்த வந்தே பாரத் ரயில்களையும் நான் கொடியசைத்து தொடங்கி வைத்தேன். இந்தியாவின் கிழக்குப் பகுதியில் ரயில் இணைப்பின் விரிவாக்கம் இந்தப் பிராந்தியம் முழுவதின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும். இந்த ரயில்கள் வர்த்தகர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரிதும் பயனளிக்கும். இது இங்கு பொருளாதார, கலாச்சார நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தும். நாடு, உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காசிக்கு வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். வந்தே பாரத் ரயில்கள் காசியிலிருந்து தியோகருக்கு பயணத்தை எளிதாக்குவதால், அவர்களில் பலர் பாபா பைத்யநாத்திற்கும் வருகை தருவார்கள். இதன் மூலம் இங்கு சுற்றுலா மேம்படும். டாடாநகர் நாட்டின் ஒரு பெரிய தொழில்துறை மையமாகும். சிறந்த போக்குவரத்து வசதிகள் அதன் தொழில் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும். சுற்சுற்றுலாவையும் பிற தொழில்களையும் ஊக்குவிப்பதன் மூலம், ஜார்க்கண்ட் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.
நண்பர்களே,
விரைவான வளர்ச்சிக்கு நவீன ரயில் உள்கட்டமைப்பு முக்கியமானது. அதனால்தான் இன்று பல புதிய திட்டங்கள் இங்கு தொடங்கப்பட்டுள்ளன. மதுபூர் புறவழிச்சாலை பாதைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது முடிந்ததும், ஹவுரா-டெல்லி பிரதான பாதையில் ரயில்களை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த புறவழிச்சாலை பாதை கிரிதிஹ் - ஜசிடிஹ் இடையேயான பயண நேரத்தையும் குறைக்கும். இன்று, ஹசாரிபாக் டவுன் பயிற்சி கிடங்கிற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது பல புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த உதவும். குர்குரியா முதல் கனரோன் வரையிலான இரட்டை ரயில்பாதை ஜார்க்கண்டில் ரயில் தொடர்பை வலுப்படுத்தும். இந்த பிரிவின் இரட்டிப்பாக்குதல் நிறைவடைவது எஃகு தொழில் தொடர்பான பொருட்களின் போக்குவரத்தை எளிதாக்கும்.
நண்பர்களே,
ஜார்க்கண்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு முதலீட்டை அதிகரித்துள்ளதுடன், பணிகளின் வேகத்தையும் துரிதப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஜார்க்கண்டில் ரயில் உள்கட்டமைப்பை மேம்படுத்த 7,000 கோடி ரூபாய்க்கு மேல் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில், இது 16 மடங்கு அதிகம். ரயில்வே பட்ஜெட் அதிகரிப்பின் தாக்கத்தை நீங்கள் காணலாம்; இன்று, மாநிலத்தில் புதிய ரயில் பாதைகளை அமைப்பது, தற்போதுள்ள பாதைகளை இரட்டிப்பாக்குவது, ரயில் நிலையங்களில் நவீன வசதிகளை மேம்படுத்துவது போன்ற பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இன்று, 100 சதவீத ரயில்வே கட்டமைப்புகள் மின்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஜார்க்கண்ட் இணைந்துள்ளது. அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், ஜார்க்கண்டில் 50-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
நண்பர்களே,
ஜார்க்கண்டில் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு உறுதியான வீடுகள் கட்டுவதற்கான முதல் தவணை இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உறுதியான வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகளுடன் , கழிப்பறைகள், தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிவாயு இணைப்புகள் போன்ற வசதிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நாம் நினைவில் கொள்ள வேண்டியது... ஒரு குடும்பம் தனக்கென ஒரு வீட்டைப் பெறும்போது, அவர்களின் சுயமரியாதை உயர்கிறது... அவர்கள் தங்கள் நிகழ்காலத்தை மேம்படுத்துவது பற்றி மட்டுமல்ல, சிறந்த எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்குகிறார்கள். எந்த நெருக்கடியாக இருந்தாலும் தங்களுக்கென ஒரு வீடு இருக்கிறது என்று நினைக்கிறார்கள். பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் மூலம், ஜார்க்கண்ட் மக்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைப்பது மட்டுமின்றி, கிராமங்களலும் நகரங்களிலும் ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாகி வருகிறது.
நண்பர்களே,
2014 முதல், நாட்டில் உள்ள ஏழைகள், தலித்துகள், பின்தங்கியவர்கள், பழங்குடி குடும்பங்களுக்கு அதிகாரம் அளிக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட் உட்பட நாடு முழுவதும் உள்ள பழங்குடியின சகோதர சகோதரிகளுக்காக பிரதமரின் ஜன்மன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மிகவும் பின்தங்கிய பழங்குடியினரை சென்றடைவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த குடும்பங்களுக்கு வீடுகள், சாலைகள், மின்சாரம், தண்ணீர், கல்வி ஆகியவற்றை வழங்க அதிகாரிகள் இந்தக் குடும்பங்களை அணுகுகிறார்கள். இந்த முயற்சிகள் வளர்ச்சியடைந்த ஜார்க்கண்ட் என்ற எங்களது உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். ஒவ்வொருவரின் ஆசிர்வாதத்துடன், இந்த உறுதிப்பாடு நிச்சயமாக நிறைவேறும் என்றும், ஜார்க்கண்டின் கனவுகளை நாம் நனவாக்குவோம் என்றும் நான் நம்புகிறேன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, நான் மற்றொரு பெரிய பொதுக்கூட்டத்திற்குச் செல்கிறேன். 5 முதல் 10 நிமிடத்தில் அங்கு சென்றுவிடுவேன். அங்கு ஏராளமான மக்கள் எனக்காக காத்திருக்கின்றனர். ஜார்க்கண்ட் தொடர்பான மற்ற விஷயங்கள் குறித்து அங்கு விரிவாக விவாதிப்பேன். ஆனால் ஜார்க்கண்ட் மக்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். ஏனென்றால் நான் ராஞ்சியை அடைந்த பிறகு, இயற்கை ஒத்துழைக்கவில்லை. எனவே, இங்கிருந்து ஹெலிகாப்டரில் என்னால் புறப்பட முடியவில்லை. என்னால் அங்கு செல்ல முடியவில்லை. இந்த காரணத்திற்காக, இந்தத் திட்டங்கள் அனைத்தையும் இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறேன். பொதுமக்கள் மத்தியில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றுகிறேன். இங்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வணக்கம்.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
*****
PLM / KV
(Release ID: 2055207)
Visitor Counter : 48
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam