பிரதமர் அலுவலகம்
புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவுடன் பிரதமர் சந்திப்பு
Posted On:
04 SEP 2024 12:11PM by PIB Chennai
பண்டார் செரி பெகாவானில் உள்ள இஸ்தானா நூருல் இமானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.09.2024) சென்றடைந்தார். அவரை, புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா அன்புடன் வரவேற்றார்.
புருனே சுல்தானின் அன்பான வரவேற்புக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இந்திய அரசுத் தலைவர் ஒருவர் புருனேவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது எனவும், இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் ஆழ்ந்த உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் கூறினார். தற்போது 10-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தியாவின் கிழக்கத்திய நாடுகள் கொள்கையை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப தமது பயணம் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்த பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் வரவேற்றனர். பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, உணவுப் பாதுகாப்பு, கல்வி, எரிசக்தி, விண்வெளித் தொழில்நுட்பம், சுகாதாரம், திறன் மேம்பாடு, கலாச்சாரம், மக்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். தகவல் தொடர்பு தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், தற்போதைய கூட்டு செயல்பாடுகளைத் தொடரவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் பிரதமரும் புருனே சுல்தானும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், எதிர்ப்பதென மீண்டும் உறுதி செய்த செய்த இரு தலைவர்களும், பயங்காரவாதத்தை ஒடுக்குவதற்கு முன்னுரிமை எடுக்குமாறு அனைத்து நாடுகளுக்கும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். ஆசியான் – இந்தியா விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த பரஸ்பரம் இணைந்து பணியாற்றுவது என்ற தங்களது உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர். பருவநிலை மாற்றத்திற்கான ஆசியான் மையத்தை நிர்வகிப்பதில் புருனேயின் முயற்சிகளுக்கு இந்தியா அளித்த ஆதரவை புருனே சுல்தான் பாராட்டினார்.
செயற்கைக்கோள் செலுத்து வாகனங்களுக்கான டெலிமெட்ரி, கண்காணிப்பு, தொலைக் கட்டளை நிலையத்தை இயக்குவதில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கரும், புருனே போக்குவரத்து, தகவல் தொடர்பு அமைச்சர் திரு பெங்கிரன் டத்தோ ஷம்ஹாரி பெங்கிரான் டத்தோ முஸ்தபாவும் கையெழுத்திட்டனர். பண்டார் செரி பெகாவானுக்கும், சென்னைக்கும் இடையே நேரடி விமான சேவை விரைவில் தொடங்கப்படவிருப்பதையும் அவர்கள் வரவேற்றனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டறிக்கை உருவாக்கப்பட்டு ஏற்கபட்டது.
பிரதமரை கௌரவிக்கும் வகையில் புருனே சுல்தான் அரசு முறை மதிய விருந்தளித்தார்.
இன்று இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இந்தியா - புருனே இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் உதவும். இந்தியாவுக்கு வருகை தருமாறு புருனே சுல்தானுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். பிரதமரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பயணம் இந்தியாவின் கிழக்கத்திய நாடுகள் கொள்கையையும் இந்தோ - பசிபிக் குறித்த அதன் தொலைநோக்குப் பார்வைம் மீதான செயல்பாட்டையும் மேலும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
----
(Release ID 2051631)
PLM/KPG/KR
(Release ID: 2051745)
Visitor Counter : 42
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam