பிரதமர் அலுவலகம்

இந்தியா-போலந்து உத்திசார் ஒத்துழைப்பை அமல்படுத்துவதற்கான செயல் திட்டம் (2024-2028)

Posted On: 22 AUG 2024 8:22PM by PIB Chennai

2024 ஆகஸ்ட் 22 அன்று வார்சாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்தியா - போலந்து பிரதமர்கள் எட்டிய ஒருமித்த கருத்தின் அடிப்படையிலும், உத்திசார் ஒத்துழைப்புக்கு இருதரப்பு திட்டத்தை அங்கீகரித்தும், பின்வரும் பகுதிகளில் 2024-2028 ஆண்டுகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வழிநடத்தும் ஐந்தாண்டு செயல் திட்டத்தை வகுத்து செயல்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்:

அரசியல் உரையாடல், பாதுகாப்பு ஒத்துழைப்பு

இரு தரப்பினரும் வெளியுறவு அமைச்சர்களுக்கிடையில் வழக்கமான தொடர்புகளைப் பேணுவார்கள்.

ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அடிப்படையில் பலதரப்பு ஒத்துழைப்பு குறித்து இருதரப்பும் பரிசீலிக்கும்.

வெளிநாட்டு உறவுகளுக்குப் பொறுப்பான ணை அமைச்சர் மட்டத்தில் வருடாந்திர அரசியல் உரையாடலை நடத்துவதை இரு தரப்பினரும் உறுதி செய்வார்கள்.

பாதுகாப்பு தொழில்களுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்தவும், ராணுவ தளவாடங்களை நவீனப்படுத்தவும், நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு குறித்து வழக்கமான ஆலோசனைகளை நடத்த சம்பந்தப்பட்ட அமைப்புகளை இரு தரப்பும் ஊக்குவிக்கும்.

 

பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கூட்டு பணிக்குழுவின் அடுத்த சுற்று 2024-ல் நடைபெறும் என்று இரு தரப்பினரும் முடிவு செய்தனர்.

வர்த்தகம் - முதலீடு

உயர் தொழில்நுட்பம், விவசாயம், வேளாண் தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பம், எரிசக்தி, காலநிலை, பசுமை தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, பொலிவுறு நகரங்கள், பாதுகாப்பு, சுகாதாரம், மருந்துகள் மற்றும் சுரங்கம் ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகளை அங்கீகரித்த இரு தரப்பினரும், 2024ஆம் ஆண்டின் இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார ஒத்துழைப்புக்கான அடுத்த கூட்டு ஆணையத்தின் (JCEC) கூட்டத்தில் இந்தத் துறைகளில் மேலும் ஒத்துழைப்பை ஆராய்வார்கள்.

 

இரு தரப்பினரும் குறைந்தது ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இரண்டு முறையாவது JCEC இன் கூட்டங்களை ஏற்பாடு செய்ய முயற்சிக்கும், தேவைப்பட்டால், அடிக்கடி சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

சமச்சீரான இருதரப்பு வர்த்தகத்தை அடைவதற்கும், சுமூகமான வர்த்தகம், முதலீட்டை எளிதாக்குவதற்கும் இரு தரப்பினரும் செயல்படுவார்கள்.

பருவநிலை, எரிசக்தி, சுரங்கம், அறிவியல் - தொழில்நுட்பம்

சுழற்சிப் பொருளாதாரம், கழிவுநீர் மேலாண்மைக்கான நீடித்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்ப தீர்வுகளில் இரு தரப்பினரும் தங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவார்கள்.

தூய்மையான எரிசக்தி அணுகுமுறைகளை முன்னெடுத்துச் செல்வதிலும், சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்க தூய்மையான நிலக்கரி தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை ஆராய்வதிலும் இரு தரப்பினரும் இணைந்து செயல்படுவார்கள்.

சர்வதேச எரிசக்தி முகமையில் சேர வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியத்தை போலந்து அங்கீகரிக்கிறது.

 

போக்குவரத்து

போக்குவரத்து உள்கட்டமைப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பும் ஆராய்வார்கள்.

விமான இணைப்புகளை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம் இரு தரப்பினரும் தங்கள் நாடுகளுக்கும் அந்தந்த பிராந்தியங்களுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்த செயல்படுவார்கள்.

பயங்கரவாத எதிர்ப்பு

பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிப்பதாக இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தியதுடன், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிப்பவர்கள், திட்டமிடுபவர்கள், ஆதரவு அளிப்பவர்கள் அல்லது பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்த நாடும் பாதுகாப்பான புகலிடத்தை வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர்.

இணையதளப் பாதுகாப்பு

பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு இணையப் பாதுகாப்பின் இன்றியமையாத முக்கியத்துவத்தை அங்கீகரித்து, சர்வதேச ஒத்துழைப்பு, சட்டமியற்றுதல், ஒழுங்குமுறை தீர்வுகள், நீதித்துறை மற்றும் காவல்துறை நடவடிக்கைகள், இணைய தாக்குதல்களை தடுத்தல், விழிப்புணர்வை உருவாக்குதல், கல்வித் திட்டங்கள், அறிவியல் - தொழில்நுட்ப ஆராய்ச்சி, மேம்பாடு, வர்த்தகம், பொருளாதார பரிமாற்றங்கள் ஆகியவற்றில் குறிப்பாக கவனம் செலுத்தி, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான துறைகளில் நெருங்கிய கலந்துரையாடல் மற்றும் பரிமாற்றங்களை இரு தரப்பினரும் மேம்படுத்துவார்கள்.

 

சுகாதாரம்

பரஸ்பர ஆர்வமுள்ள துறைகள் குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் பகிர்ந்து கொள்ளுதல், சுகாதார நிபுணர்களிடையே தொடர்புகளை மேம்படுத்துதல், இரு நாடுகளிலும் உள்ள சுகாதார நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஆதரித்தல் ஆகியவற்றின் மூலம் சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முக்கிய பங்கை இருதரப்பும் சுட்டிக் காட்டின.

 

இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகள், கலாச்சார ஒத்துழைப்பு

சமூகப் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தை அமல்படுத்த இரு தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள். மேலும் இது தொடர்பாக அந்தந்த உள்நாட்டு சட்ட நடைமுறைகளை நிறைவு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

 

இரு நாடுகளின் கலாச்சார நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை இரு தரப்பும் வலுப்படுத்தும். இரு நாடுகளின் கலைஞர்கள், மொழி வல்லுநர்கள், அறிஞர்கள் மற்றும் கலாச்சார நிறுவனங்கள் இடையேயான பரிமாற்றங்களை இரு தரப்பும் வலுப்படுத்தும்.

உயர்கல்வியில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், தொடர்புடைய நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க இரு தரப்பிலும் உள்ள பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கவும் இரு தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள்.

சுற்றுலாவில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தரப்பினரும் தொடர்ந்து செயல்படுவார்கள்.

இரு தரப்பினரும் மாணவர் பரிமாற்றத் திட்டத்தை ஊக்குவிப்பதுடன், இளைய தலைமுறையினருடன் பரஸ்பர புரிதலை உருவாக்குவார்கள்.

 

இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஒத்துழைப்பு

அமைதி, நிலைத்தன்மை, வளத்தை ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ள முக்கிய சர்வதேச பங்குதாரர்களாக ஐரோப்பிய யூனியனும், இந்தியாவும் இருப்பதை அங்கீகரித்த இரு தரப்பும், தற்போது நடைபெற்று வரும் இந்திய-ஐரோப்பிய யூனியன் வர்த்தக-முதலீட்டு பேச்சுவார்த்தைகளை விரைவில் முடிப்பதற்கும், இந்திய-ஐரோப்பிய யூனியன் வர்த்தக - தொழில்நுட்ப கவுன்சிலை (TTC) விரைந்து செயல்படுத்துவதற்கும் முடிவு செய்தன.

ஒத்துழைப்பின் முன்னேற்றம்

வருடாந்திர அரசியல் ஆலோசனை நடவடிக்கைகளை மறுஆய்வு செய்வதற்கும் புதுப்பிப்பதற்கும் வழக்கமான கண்காணிப்பை இரு தரப்பினரும் உறுதி செய்வார்கள். இந்த செயற்பாட்டுத் திட்டத்தை மேலும் ஐந்தாண்டு காலத்திற்கு நீடிப்பது குறித்து அந்தந்த அமைச்சர்களால் பின்பற்றப்படும்.

**********

 

Release ID: 2047822



(Release ID: 2047943) Visitor Counter : 14