பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உலக சுகாதார அமைப்பால் சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், குரங்கம்மை நிலைமையை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்


குரங்கம்மை தடுப்புக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் உயர்நிலைக் கூட்டத்திற்கு பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா தலைமைதாங்கினார்

முறையாகக் கண்டறிவதற்கான மேம்பட்ட கண்காணிப்புக்கு அறிவுறுத்தல்

பரிசோதனைக் கூடங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்

இந்த நோய்க்கு எதிரான பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்


Posted On: 18 AUG 2024 7:42PM by PIB Chennai

குரங்கம்மை நிலைமைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரில், நாட்டில் குரங்கம்மை நோய்தடுப்புக்கான தயார்நிலை மற்றும் அது தொடர்பான பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.

குரங்கம்மை  பரவலாக இருப்பதையும்  ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில்  பரவி இருப்பதையும் கருத்தில் கொண்டு சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு   2024,  ஆகஸ்ட்  14 அன்று மீண்டும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. உலக சுகாதார அமைப்பின் முந்தைய அறிக்கையின்படி, 2022 முதல் உலகளவில் 116 நாடுகளில் இருந்து, 99,176 நோய் பாதிப்புகள் மற்றும் 208 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து, காங்கோ ஜனநாயகக் குடியரசில் குரங்கம்மை நோய் பாதிப்புகள் சீராக அதிகரித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு, அறிவிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது, ஏற்கனவே இந்த ஆண்டு இதுவரையில் பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் மொத்தத்தை விஞ்சிவிட்டது. 15, 600-க்கும் அதிகமான  நோயாளிகள் இருந்தனர். 537 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பால் 2022 ஆம் ஆண்டு சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து, இந்தியாவில் 30 நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. குரங்கம்மையின் கடைசி பாதிப்பு மார்ச் 2024-ல் கண்டறியப்பட்டது.

இதுவரை, நாட்டில் குரங்கம்மை  பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்று உயர்நிலைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய மதிப்பீட்டின்படி, நீடித்த பரவலுடன் கூடிய பெரிய பாதிப்பின் ஆபத்து குறைவாக உள்ளது.

 

குரங்கம்மை  நோய்த்தொற்றுகள் பொதுவாக 2-4 வாரங்களுக்கு இடையில் நீடிக்கும் என்று பிரதமரின் முதன்மை செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டது; குரங்கம்மை  நோயாளிகள் பொதுவாக ஆதரவான மருத்துவ பராமரிப்பு மற்றும் நிர்வகிப்பால் குணமடைகின்றனர். பாதிக்கப்பட்ட நோயாளியுடன் நீண்டகால மற்றும் நெருங்கிய தொடர்பு மூலம் குரங்கம்மை  பரவுகிறது. இது பெரும்பாலும் பாலியல் வழி, நோயாளியின் உடல் / புண் திரவத்துடன் நேரடி தொடர்பு அல்லது பாதிக்கப்பட்ட நபரின் அசுத்தமான ஆடை  மூலம் ஏற்படுகிறது.

கடந்த ஒரு வாரத்தில் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளரால் தெரிவிக்கப்பட்டது:

இந்தியாவுக்கான ஆபத்தை மதிப்பிடுவதற்காக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் 2024,  ஆகஸ்ட் 12 அன்று நிபுணர்களின் கூட்டத்தை கூட்டியது.

புதிய நிகழ்வுப்போக்குகளை உள்வாங்கும் பொருட்டு தொற்று நோய் தடுப்பு மையத்தால் முன்பு வெளியிட்ட தொற்று நோய் எச்சரிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விமான நிலையங்களில் (நுழைவுப் பகுதிகளில்) சுகாதார குழுக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை, 200-க்கும் அதிகமான  பங்கேற்பாளர்களுடன் ஒரு காணொலி மாநாட்டை சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் கூட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களில் உள்ள ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட பிரிவுகள் மற்றும் விமான நிலையங்கள் (நுழைவுப் பகுதிகள்) உள்ளிட்ட மாநில சுகாதார அதிகாரிகளுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கண்காணிப்பை மேம்படுத்தவும், நோய்பாதிப்பை  உடனடியாகக் கண்டறியவும்  பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கவும் பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா,அறிவுறுத்தினார். பரிசோதனைக் கூடங்களின் வலையமைப்பை முன்கூட்டியே கண்டறிவதற்கு தயார் செய்ய வேண்டும் என்றும்  அவர்  அறிவுறுத்தினார். தற்போது 32 ஆய்வகங்கள் சோதனைக்கு தயாராக உள்ளன.

நோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் நெறிமுறைகள் பெருமளவில் பரப்பப்பட வேண்டும் என்று டாக்டர் பி.கே.மிஸ்ரா அறிவுறுத்தினார். நோயின் அறிகுறிகள் குறித்தும் கண்காணிப்பு அமைப்புக்கு சரியான நேரத்தில் அறிவிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும்  சுகாதாரப் பணியாளர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள அவர் வலியுறுத்தினார்.

 இந்தக் கூட்டத்தில் நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் திரு அபூர்வா சந்திரா, சுகாதார ஆராய்ச்சி செயலாளர் டாக்டர் ராஜீவ் பாஹல், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் திரு கிருஷ்ணா எஸ் வத்சா, தகவல், ஒலிபரப்புத் துறை  செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள  திரு கோவிந்த் மோகன் மற்றும் பிற அமைச்சகங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

*****

SMB / KV


(Release ID: 2046448) Visitor Counter : 99