பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ரூ.29,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
தானே போரிவலி இரட்டை சுரங்கப்பாதை திட்டம், கோரேகான் முலுண்ட் இணைப்புச் சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
நவி மும்பையில் கல்யாண் யார்டு மறுகட்டமைப்புத் திட்டம், விரைவு சக்தி பன்னோக்கு சரக்கு முனையத் திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்
லோக்மான்ய திலக் முனையத்தில் புதிய தளங்களையும், சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனைய நிலையத்தின் 10, 11-வது நடைமேடை விரிவாக்கத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
மகாராஷ்டிராவில் சுமார் 5600 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்
"இந்த அரசின் மூன்றாவது பதவிக்காலத்தை முதலீட்டாளர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்"
"மகாராஷ்டிராவின் திறனைப் பயன்படுத்தி அதை உலகின் பொருளாதார சக்தியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த அரசு; மும்பையை உலகின் நிதித் தொழில்நுட்பத் தலைநகராக மாற்ற வேண்டும்"
"நாட்டு மக்கள் விரைவான வளர்ச்சியை விரும்புகிறார்கள். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சியடையச் செய்ய விரும்புகிறார்கள்"
"திறன் மேம்பாடும் அதிக எண்ணிக்கையிலான
Posted On:
13 JUL 2024 7:21PM by PIB Chennai
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ரூ.29,400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான சாலை, ரயில்வே, துறைமுகங்கள் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மாலை (13.07.2024) அடிக்கல் நாட்டினார். நிறைவடைந்த திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மும்பைக்கும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கும் இடையே சாலை, ரயில் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக ரூ.29,400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை அர்ப்பணிக்க வாய்ப்புக் கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். மகாராஷ்டிராவில் செயல்படுத்தப்படும் இளைஞர்களுக்கான பெரிய திறன் மேம்பாட்டுத் திட்டம் குறித்தும் அவர் பேசினார். இது மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார். மத்திய அரசால் சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வாதவன் துறைமுகத் திட்டத்தைப் பிரதமர் குறிப்பிட்டார். 76,000 கோடி ரூபாய் மதிப்பிலான இத் திட்டம் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என அவர் கூறினார்.
கடந்த ஒரு மாதத்தில் மும்பை முதலீட்டாளர்களின் மனநிலை குறித்து குறிப்பிட்ட பிரதமர், சிறிய, பெரிய முதலீட்டாளர்கள் இந்த அரசின் மூன்றாவது பதவிக்காலத்தை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர் என்றார். ஒரு நிலையான அரசு அதன் மூன்றாவது பதவிக்காலத்தில் மூன்று மடங்கு வேகத்துடன் செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிர மாநிலம் புகழ்பெற்ற வரலாறு, வளமான எதிர்காலம் குறித்த கனவுகளைக் கொண்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் மகாராஷ்டிர மாநிலத்தின் பங்கை சுட்டிக்காட்டிய பிரதமர், தொழில், நிதி ஆகிய துறைகளின் சக்தியால் மும்பை நாட்டின் நிதி மையமாக மாறியிருப்பதாகக் குறிப்பிட்டார். மகாராஷ்டிராவின் சக்தியைப் பயன்படுத்தி அதை உலகின் சிறந்தஙபொருளாதார சக்தியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக பிரதமர் கூறினார். மும்பையை உலகின் நிதித் தொழில்நுட்பத் தலைநகராக மாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மகாராஷ்டிராவின் பிரமாண்டமான இடங்களான சிவாஜி மகராஜ் கோட்டை, கொங்கண் கடற்கரை, சஹ்யாத்ரி மலைத்தொடர் போன்றவை குறித்து விளக்கிய திரு நரேந்திர மோடி, சுற்றுலாத் துறையில் மகாராஷ்டிரா முதலிடத்தை அடைய வேண்டும் என்ற தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார். மருத்துவ சுற்றுலாவில் மாநிலத்தின் திறன் குறித்தும் அவர் பேசினார். மகாராஷ்டிரா இந்தியாவில் வளர்ச்சியின் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதப் போகிறது என்றும் இன்றைய நிகழ்வு இதை எடுத்து காட்டுகிறது எனவும் அவர் கூறினார்.
21-ம் நூற்றாண்டில் இந்திய மக்களின் உயர்ந்த எதிர்பார்ப்புகளை விரிவாக விவரித்த பிரதமர், அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற தேசிய தீர்மானத்தை மீண்டும் நினைவூட்டினார். இந்தப் பயணத்தில் மகாராஷ்டிராவின் பங்கை அவர் எடுத்துரைத்தார். மகாராஷ்டிராவில் அனைவரின் வாழ்க்கைத் தரமும் உயர வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள் என்றார். மும்பைக்கு அருகிலுள்ள பகுதிகளில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக அவர் கூறினார். கடலோர சாலைப் பணிகள், அடல் சேது பாலப் பணிகள் நிறைவடைந்ததை அவர் குறிப்பிட்டார். தினமும் சுமார் 20 ஆயிரம் வாகனங்கள் அடல் சேதுவைப் பயன்படுத்துவதாகவும், இதன் மூலம் 20 முதல் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரிபொருள் சேமிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு 8 கிலோ மீட்டராக இருந்த மெட்ரோ ரயில் பாதை இன்று 80 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளதால் மும்பையில் மெட்ரோ ரயில் சேவை வேகமாக வளர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். தற்போது மும்பையில் 200 கிலோ மீட்டர் நீளத்துக்கு மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சத்ரபதி சிவாஜி முனையம், நாக்பூர் ரயில் நிலையத்தின் மறுவடிவமைப்பு ஆகியவை குறித்துப் பிரதமர் கூறுகையில், மும்பைக்கும் மகாராஷ்டிராவுக்கும் பெரிய அளவில் இது பயனளிக்கும் என்றார். சத்ரபதி சிவாஜி முனையம், லோக்மான்ய திலக் ரயில் நிலையம் ஆகியவற்றின் புதிய நடைமேடைகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் 24 பெட்டிகள் கொண்ட நீண்ட ரயில்கள் இங்கிருந்து இயக்கப்படும் என்று அவர் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். கோரேகான் முலுண்ட் இணைப்புச் சாலைத் திட்டம், முன்னேற்றத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார். தானே - போரிவலி இரட்டை வழி சுரங்கப்பாதைத் திட்டம், தானே -போரிவேலி இடையேயான தூரத்தை சில நிமிடங்களாகக் குறைக்கும் என அவர் தெரிவித்தார். நாட்டின் புனித தலங்களை மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளை பிரதமர் விவரித்தார். பயணங்களை எளிதாக்குதல், யாத்ரீகர்களுக்கு சேவைகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்தார். பந்தர்பூர் வாரி விழாவில் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பங்கேற்று வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், யாத்ரீகர்களின் பயணத்தை எளிதாக்குவதற்காக சுமார் 200 கிலோமீட்டர் தொலைவுக்கு தியானேஷ்வர் பால்கி மார்க் கட்டப்படுவதையும், சுமார் 110 கிலோமீட்டர் தொலைவுக்கு துகாராம் பால்கி வழித்தடம் கட்டப்படுவதையும் குறிப்பிட்டார். இந்த இரண்டு சாலைகளும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று அவர் உறுதியளித்தார்.
இந்தப் போக்குவரத்து உள்கட்டமைப்பானது, சுற்றுலா, வேளாண்மை, தொழில்துறை, வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை மேம்படுத்தும் என்று அவர் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் இந்தப் பணிகள் ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கின்றன என்று அவர் கூறினார். மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் ( முக்யமந்திரி யுவ காரிய பிரஷிகான் யோஜனா) குறித்தும் பேசினார். இத்திட்டத்தின் கீழ் 10 லட்சம் இளைஞர்களின் திறன் மேம்படுத்தப்படும் என்றார். இந்த முயற்சிகளுக்கு இரட்டை என்ஜின் அரசு காரணம் என அவர் கூறினார்.
திறன் மேம்பாடும் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பும் இந்தியாவின் தற்போதைய தேவை என்று குறிப்பிட்ட பிரதமர், கொவிட் தொற்றுநோய்க் காலத்திற்குப் பின்னர் இந்தியாவில் சாதனை அளவில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதை எடுத்துரைத்தார். இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட வேலைவாய்ப்பு குறித்த விரிவான அறிக்கையை சுட்டிக் காட்டிய திரு நரேந்திர மோடி, கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் சுமார் 8 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிராக பரப்பப்படும் தவறான கருத்துகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மக்களைக் கேட்டுக்கொண்டார். பாலங்கள் கட்டப்படும்போதும், ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்படும்போதும், சாலைகள் அமைக்கப்படும்போதும், உள்ளூரில் ரயில்கள் தயாரிக்கப்படும் போதும் வேலைவாய்ப்பு அதிக அளவில் உருவாகிறது என்று அவர் கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் வளர்ச்சி செயல் திட்டம் பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக உள்ளது என்று கூறிய பிரதமர், ஏழைகளுக்காக 3 கோடி வீடுகள் கட்டுவது என்ற புதிய அரசின் முதல் முடிவைக் குறிப்பிட்டார். 4 கோடி குடும்பங்கள் ஏற்கனவே வீடுகளைப் பெற்றுள்ளன என்று அவர் தெரிவித்தார். நகரங்களில் வசிக்கும் ஏழை, நடுத்தர மக்களுக்கு சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்ற இந்த அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கையில் கண்ணியத்தை மீட்டெடுப்பதில் 'ஸ்வநிதி திட்டம்' ஆற்றும் பங்கு குறித்தும் அவர் பேசினார். இந்த திட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவில் 13 லட்சம் பேருக்கும் மும்பையில் மட்டும் 1.5 லட்சம் பேருக்கும் கடன்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் விளைவாக இந்த விற்பனையாளர்களின் வருமானம் அதிகரித்துள்ளது என்று ஒரு ஆய்வை அவர் மேற்கோள் காட்டி அவர் தெரிவித்தார்.
'ஸ்வநிதி திட்டத்தின் சிறப்பம்சத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், ஏழைகளின் சுயமரியாதையை இத்திட்டம் காப்பதாக கூறினார். சுட்டிக்காட்டினார். இத்திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெற்று, உரிய காலத்தில் திருப்பிச் செலுத்திய ஏழைகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார். ஸ்வநிதி திட்டத்தின் பயனாளிகள் இதுவரை ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பிலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் கலாச்சார, சமூக, தேசிய உணர்வை மகாராஷ்டிரா அதிகம் பரப்பியுள்ளது என்று கூறிய பிரதமர், சத்ரபதி சிவாஜி மகாராஜ், பாபாசாகேப் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே, அன்னாபாவ் சாத்தே, லோக்மான்ய திலகர், வீர சாவர்க்கர் ஆகியோர் விட்டுச் சென்ற மரபுகளை நினைவூட்டினார். நல்லிணக்கமான சமுதாயம், வலிமையான தேசம் என்ற கனவுகளை நிறைவேற்றுவதில் மக்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். வளத்திற்கான பாதை நல்லிணக்கத்தில் உள்ளது என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும் என்று கூறிப் பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
மகாராஷ்டிர ஆளுநர் திரு ரமேஷ் பயஸ், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிர துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், திரு அஜித் பவார், மத்திய வர்த்தக - தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய சமூக நீதி - அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி:
16,600 கோடி ரூபாய் மதிப்பிலான தானே- போரிவலி சுரங்கப்பாதை திட்டத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். தானே - போரிவலி சீரமைப்பு இடையேயான இந்த இரட்டை வழி சுரங்கப்பாதை திட்டத்தின் மொத்த நீளம் 11.8 கிலோ மீட்டர். இது தானேவிலிருந்து போரிவலி வரையிலான பயணத்தை 12 கிலோ மீட்டர் வரை குறைக்கும். பயண நேரத்தில் சுமார் 1 மணி நேரம் மிச்சமாகும்.
கோரேகான் – முலுண்ட் இணைப்புச் சாலையில் 6,300 கோடி ரூபாய் மதிப்பிலான சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதன் மொத்த நீளம் சுமார் 6.65 கிலோமீட்டர் ஆகும். இது புதிய விமான நிலையத்துடன் மேற்கு புறநகர்ப் பகுதிகளுக்கு நேரடி இணைப்பை வழங்கும்.
நவி மும்பையில் உள்ள டர்பேயில் கல்யாண் யார்டு மறுவடிவமைப்பு விரைவுச் சக்தி பன்னோக்கு சரக்கு முனையத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இது அதிக ரயில்களைக் கையாளும் திறனை அதிகரித்து, நெரிசலைக் குறைக்கும்.
லோக்மான்ய திலக் முனையத்தில் உள்ள புதிய நடைமேடைகளையும், சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனைய நிலையத்தில் நடைமேடை எண் 10, 11-ன் விரிவாக்கத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். லோக்மான்ய திலக் முனையத்தில் உள்ள புதிய நீண்ட நடைமேடைகள் நீண்ட ரயில்களுக்கு இடமளிக்கும்.
சுமார் 5600 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் இளைஞர்களுக்கான (முக்கிய மந்திரி யுவ காரிய பிரசிக்ஷன்) திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இது 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு, தொழில்துறை வாய்ப்புகளை வழங்கும் திட்டமாகும்.
***
VL/PLM/KV
(Release ID: 2033029)
Visitor Counter : 81
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam