புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

முடிவெடுத்தலுக்குத் தரவுகளைப் பயன்படுத்துதல் என்ற கருப்பொருளுடன் 18-வது புள்ளியியல் தினம் இன்று கொண்டாடப்பட்டது

Posted On: 29 JUN 2024 2:48PM by PIB Chennai

புள்ளியியல் மற்றும் பொருளாதாரத்  திட்டமிடல் துறைகளில் சிறந்து விளங்கிய மறைந்த பேராசிரியர் பிரசாந்தா சந்திர மகலனோபிஸ்-சை நினைவுகூரும் வகையிலும் இத்துறையில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையிலும் மத்திய அரசு  அவரது பிறந்த நாளான ஜூன் 29ம் தேதியை தேசிய புள்ளியியல் தினமாக அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது.

 நாட்டின் வளர்ச்சிக்கான சமூக பொருளாதார திட்டமிடல் மற்றும் கொள்கை வகுப்பதில் புள்ளிவிவரங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினம் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கமாகும்.

2007ம் ஆண்டு முதல், புள்ளியியல் தினம்  தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கருப்பொருள்களுடன் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் "முடிவெடுப்பதற்குத் தரவுகளைப் பயன்படுத்துதல்" என்பதாகும். எந்தவொரு துறையிலும் சிறந்த முடிவுகளை எடுப்பதற்கு தரவுகள் முக்கியமானவை.

இந்த ஆண்டு புள்ளியியல் தினத்தின் முக்கிய நிகழ்வு புதுதில்லி கண்டோன்மென்டில் உள்ள மானெக்ஷா மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. தலைமை விருந்தினராக 16-வது நிதிக்குழுவின் தலைவர் டாக்டர் அரவிந்த் பனகாரியா கூட்டத்தில் உரையாற்றினார். இந்தியப் புள்ளியியல் முறையை வடிவமைப்பதில் பேராசிரியர் பி.சி.மகலனோபிஸ் செய்த பங்களிப்பை அவர் விவரித்தார். இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்ல தரவு சார்ந்து கொள்கை வகுப்பதைத் தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் ராஜீவா லக்ஷ்மன் கரண்டிகர் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சவுரப் கார்க் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றினர்.

 

மத்திய அமைச்சகங்கள், பல்வேறு துறைகள், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் மூத்த அதிகாரிகள், ஐக்கிய நாடுகள் சபையின் முகமைகள், உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

******

ANU/SMB/PLM/KV



(Release ID: 2029506) Visitor Counter : 24