பிரதமர் அலுவலகம்

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற உழவர் நல மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 18 JUN 2024 7:25PM by PIB Chennai

ஹர ஹர மஹாதேவ்!

உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் சிவராஜ் சிங் சவுகான் அவர்களே, பகீரத் சவுத்ரி அவர்களே, உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா அவர்களே, மாநில அரசின் பிற அமைச்சர்களே, மக்கள் பிரதிநிதிகளே, பெருந்திரளாக கூடியுள்ள எனது விவசாய சகோதர சகோதரிகளே, என் காசியின் குடும்ப உறுப்பினர்களே!

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக வாரணாசிக்கு இன்று நான் பயணம் மேற்கொண்டுள்ளேன். காசி மக்களுக்கு வாழ்த்துக்கள்!

பாபா விஸ்வநாதர் மற்றும் அன்னை கங்கை ஆகியோரின் ஆசீர்வாதத்துடனும், காசி மக்களின் அளவற்ற அன்புடனும், மூன்றாவது முறையாக நாட்டின் பிரதம சேவகனாகும் பாக்கியத்தை நான் பெற்றுள்ளேன். தொடர்ந்து மூன்றாவது முறையாக என்னை அவர்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்ததற்காக காசி மக்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கங்கை அன்னை என்னை தத்தெடுத்தது போலவும், நான் இந்த இடத்துடன் ஒன்றிவிட்டதைப் போலவும் உணர்கிறேன். வெப்பம் இருந்தபோதிலும், நீங்கள் அனைவரும் உங்கள் ஆசீர்வாதங்களைப் பொழிவதற்காக பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியுள்ளீர்கள். மேலும் உங்கள் அர்ப்பணிப்பைப் பார்க்கும்போது, சூரிய கடவுள் கூட வானம் மேகமூட்டமாக இருப்பதால் சிறிது நிம்மதியைக் கொண்டு வந்துள்ளார். நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்; நான் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்.

நண்பர்களே,

பாரதத்தின் 18-வது மக்களவைக்கான தேர்தல், இந்திய ஜனநாயகத்தின் விசாலம், வலிமை மற்றும் ஆழமாக வேரூன்றியுள்ள தன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது. இந்தத் தேர்தலில் 64 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர், இது உலகளவில் மிகப்பெரிய தேர்தல் நடவடிக்கையாக உள்ளது. அண்மையில் ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றிருந்தபோது, அனைத்து ஜி-7 நாடுகளின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை நாம் கூட்டினால், பாரதத்தின் வாக்காளர் எண்ணிக்கை 1.5 மடங்கு அதிகமாக இருக்கும் என்று நான் குறிப்பிட்டேன். அதேபோல், ஐரோப்பிய யூனியனில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் சேர்த்தால், பாரதத்தின் வாக்காளர் எண்ணிக்கை 2.5 மடங்கு அதிகமாக இருக்கும். இந்த தேர்தலில் 31 கோடிக்கும் அதிகமான பெண்கள் பங்கேற்றனர், இது உலகளவில் எந்த நாட்டிலும் இல்லாத அதிக எண்ணிக்கையிலான பெண் வாக்காளர்களைக் குறிக்கிறது - இது கிட்டத்தட்ட அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகைக்கு சமம். ஜனநாயக வலிமை மற்றும் அழகின் இந்த குறிப்பிடத்தக்க காட்சி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜனநாயகத்தின் இந்தத் திருவிழாவின் வெற்றிக்கு பங்களித்த வாரணாசியில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினரை மட்டுமின்றி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமரையும் தேர்ந்தெடுத்துள்ள வாரணாசி மக்களுக்கு இது பெருமிதம் அளிக்கும் விஷயமாகும். எனவே, உங்கள் அனைவருக்கும் இரட்டிப்பு வாழ்த்துக்கள்.

நண்பர்களே,

இந்தத் தேர்தலில் இந்த நாட்டு மக்கள் வழங்கிய ஆணை உண்மையிலேயே முன்னெப்போதும் இல்லாதது. ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. ஜனநாயக நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வருவது அரிதானது. ஆனால், இதைத்தான் பாரதவாசிகள் இம்முறை சாதித்திருக்கிறார்கள். பாரதத்தில் கடைசியாக 60 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தப்பட்டது. உங்கள் ஆதரவு இந்த அதிர்ஷ்டத்தை உங்கள் தொண்டன் மோடிக்கு அளித்துள்ளது. இளைஞர்களின் அபிலாஷைகள் மிக உயர்ந்ததாகவும், மக்களின் கனவுகள் அளப்பரியதாகவும் இருக்கும் பாரதம் போன்ற ஒரு நாட்டில், பத்தாண்டு கால பணிக்குப் பிறகு மீண்டும் பணியாற்ற ஒரு அரசிற்கு வாய்ப்பு வழங்கப்படுவது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி மற்றும் நம்பிக்கையின் மகத்தான வெளிப்பாடு. இந்த நம்பிக்கை எனது மிகப்பெரிய சொத்து. உங்கள் சேவையில் அயராது உழைக்கவும், நாட்டை புதிய உயரங்களுக்கு உயர்த்தவும் இது எனக்கு உத்வேகம் அளிக்கிறது. உங்கள் கனவுகளை நிறைவேற்றவும், உங்கள் இலக்குகளை அடையவும் நான் இரவும் பகலும் தொடர்ந்து கடினமாக உழைப்பேன்.

நண்பர்களே,

விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், ஏழைகள் ஆகியோரை வளர்ச்சியடைந்த இந்தியாவின் வலுவான தூண்களாக நான் கருதுகிறேன். அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை மையமாகக் கொண்டு எனது மூன்றாவது பதவிக்காலத்தை தொடங்கியுள்ளேன். எங்கள் அரசின் முதல் முடிவுகள் விவசாயிகள் மற்றும் ஏழை குடும்பங்களை மையமாகக் கொண்டிருந்தன. நாடு முழுவதும் ஏழைக் குடும்பங்களுக்கு 3 கோடி புதிய வீடுகள் கட்டுவதாக இருந்தாலும் சரி அல்லது பிரதமர் உழவர் நல நிதியை முன்னெடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, இந்த முயற்சிகள் கோடிக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும். வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய இந்தப் பாதையை வலுப்படுத்தும் வகையிலும் இன்றைய நிகழ்ச்சி அமையும். இந்த சிறப்புத் திட்டத்தில் நாடு முழுவதிலும் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் காசியோடு இணைந்திருக்கிறார்கள். கோடிக்கணக்கான விவசாயிகள் இதில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து விவசாயிகள், தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது காசியில் இருந்து, பாரதத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும், கிராமத்திலிருந்தும் தொழில்நுட்பத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ள அனைத்து விவசாய சகோதர சகோதரிகளுக்கும், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சிறிது நேரத்திற்கு முன்பு, பிரதமர் உழவர் நல நிதியிலிருந்து ரூ .20 ஆயிரம் கோடி நாடு முழுவதும் உள்ள கோடிக் கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளை அடைந்தது. இன்று, 3 கோடி சகோதரிகளை லட்சாதிபதி சகோதரிகளாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேளாண் தோழிகளாக சகோதரிகளின் புதிய பொறுப்பு அவர்களுக்கு கண்ணியத்தையும் புதிய வருமான ஆதாரங்களையும் உறுதி செய்யும். எனது அனைத்து விவசாயக் குடும்பங்கள், தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

பிரதமரின் உழவர் நல நிதி இன்று உலகின் மிகப்பெரிய நேரடி பலன் பரிமாற்ற திட்டமாக மாறியுள்ளது. இதுவரை, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாய குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.3.25 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மேலும், வாரணாசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் கணக்குகளில் ரூ.700 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் உழவர் நல நிதி திட்டத்தின் மூலம் சரியான பயனாளிகளுக்கு பலன்களை வழங்க தொழில்நுட்பம் திறம்பட பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். சில மாதங்களுக்கு முன்பு, வளர்ச்சியடைந்த பாரத லட்சிய யாத்திரையின் போது, ஒரு கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற்றனர். பிரதமரின் உழவர் நல நிதியின் பலன்களை எளிதாக அணுகுவதற்காக அரசு பல விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளது. சரியான நோக்கமும், சேவை மனப்பான்மையும் இருக்கும்போது, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்கான முன்முயற்சிகளை குறிப்பிடத்தக்க வேகத்துடன் செயல்படுத்த முடியும்.

சகோதர சகோதரிகளே,

21-ம் நூற்றாண்டு பாரதத்தை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக நிலைநிறுத்துவதில் முழு விவசாய முறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் ஒரு உலகளாவிய கண்ணோட்டத்தை ஏற்றுக்கொண்டு, சர்வதேச சந்தையை மனதில் கொள்ள வேண்டும். பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களில் தன்னிறைவை அடைவது, வேளாண் ஏற்றுமதியில் முன்னோடியாக மாறுவது ஆகியவை எங்கள் இலக்குகளில் அடங்கும். பனாரஸிலிருந்து லங்க்ரா மாம்பழம், ஜான்பூரிலிருந்து முள்ளங்கி மற்றும் காசிப்பூரிலிருந்து வெண்டைக்காய் ஆகியவற்றைக் கவனியுங்கள்; இதுபோன்ற பல தயாரிப்புகள் இப்போது சர்வதேச சந்தைகளை எட்டுகின்றன. ஒரு மாவட்டம் ஒரு பொருள் முன்முயற்சி மற்றும் மாவட்ட அளவில் ஏற்றுமதி மையங்களை நிறுவுதல் ஆகியவை ஏற்றுமதியை ஊக்குவித்து, ஏற்றுமதி தரத்தை பூர்த்தி செய்ய உற்பத்தியின் தரத்தை மேம்படுத்துகின்றன. இந்திய உணவு தானியங்கள் அல்லது தயாரிப்புகள் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு டைனிங் டேபிளிலும் இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குடன், தொகுக்கப்பட்ட உணவுக்கான உலகளாவிய சந்தையில் நாட்டின் இருப்பை உயர்த்துவதே எங்கள் நோக்கம். சிறுதானியங்கள் அல்லது ஸ்ரீ அன்னாவை உற்பத்தி செய்வது, மருத்துவ குணங்கள் கொண்ட பயிர்களை பயிரிடுவது அல்லது இயற்கை விவசாயத்தை நோக்கி முன்னேறுவது என எதுவாக இருந்தாலும், பிரதமரின் உழவர் நல மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

சகோதர சகோதரிகளே,

நமது தாய்மார்களும், சகோதரிகளும் பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியுள்ளனர். அவர்கள்  இல்லாத விவசாயத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இதன் விளைவாக, விவசாயத்திற்கு ஒரு புதிய திசையை அளிக்கும் வகையில் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பங்கு இப்போது விரிவுபடுத்தப்படுகிறது. நமோ ட்ரோன் சகோதரி, வேளாண் தோழி திட்டங்கள் போன்ற முன்முயற்சிகள் இந்த முயற்சிக்கு உதாரணங்களாகும். டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவிப்பதில் ஆஷா பணியாளர்களாக சகோதரிகளின் பங்களிப்பையும், வங்கி தோழிகளாக அவர்களின் பங்களிப்பையும் நாம் கண்டிருக்கிறோம். இப்போது, வேளாண் தோழி முன்முயற்சியின் மூலம் விவசாயம் புதிய பலம் பெறுவதை நாம் காண இருக்கிறோம். இன்று 30,000க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன, அவை வேளாண் தோழிகள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் தற்போது 12 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், நாடு முழுவதும் மேலும் ஆயிரக்கணக்கான குழுக்கள் அதனுடன் இணைக்கப்படும். 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கவும் இந்த இயக்கம் உதவும்.

சகோதர சகோதரிகளே,

கடந்த 10 ஆண்டுகளில், மத்திய மற்றும் மாநில அரசுகள் காசியின் விவசாயிகளுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. கடந்த ஏழு ஆண்டுகளில், மாநில அரசு முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளது. காசியில் பனாஸ் பால்பண்ணை வளாகம், விவசாயிகளுக்கான அழுகும் பொருள் சரக்கு மையம், பல்வேறு வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், ஆகியவை காசி மற்றும் பூர்வாஞ்சல் விவசாயிகளுக்கு பெரும் அதிகாரம் அளித்து, அவர்களின் வருமானத்தை அதிகரித்துள்ளன.

பனாஸ் டெய்ரி பனாரஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களின் அதிர்ஷ்டத்தை மாற்றியுள்ளது. இன்று, பால் பண்ணை, தினமும், 3 லட்சம் லிட்டர் பால் சேகரிக்கிறது. பனாரஸிலிருந்து மட்டும் 14,000 க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் பால் பண்ணையில் பதிவு செய்துள்ளனர், மேலும் அடுத்த ஒன்றரை ஆண்டில் காசியில் இருந்து மேலும் 16,000 கால்நடை வளர்ப்பாளர்களை சேர்க்க பனாஸ் டெய்ரி திட்டமிட்டுள்ளது. பனாஸ் டெய்ரி தொடங்கப்பட்டதிலிருந்து, வாரணாசியில் பல பால் உற்பத்தியாளர்களின் வருமானம்
ரூ.5 லட்சம் வரை அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு வருடாந்திர போனஸும் கிடைக்கிறது, கடந்த ஆண்டு கால்நடை வளர்ப்பவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.100 கோடிக்கு மேல் அனுப்பப்பட்டது.

நண்பர்களே,

வாரணாசியில் உள்ள மீன் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க எங்கள் அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனாவின் மூலம் பயனடைந்து வருகின்றனர். அருகிலுள்ள சந்தெளலியில் சுமார் 70 கோடி ரூபாய் செலவில் நவீன மீன் சந்தை கட்டப்பட்டு வருகிறது. வாரணாசியில் உள்ள மீன் வளர்ப்போருக்கும் இந்தச் சந்தை பயனளிக்கும்.

நண்பர்களே,

வாரணாசியில் பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றியைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திட்டத்தின் கீழ் சுமார் 40,000 பேர் பதிவு செய்துள்ளனர். வாரணாசியில் 2,100 க்கும் மேற்பட்ட வீடுகளில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன, அவற்றை 3,000 க்கும் மேற்பட்ட கூடுதல் வீடுகளில் நிறுவுவதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் பெரும்பாலான குடும்பங்கள் இரண்டு மடங்கு நன்மைகளைப் பெற்றுள்ளன: அவர்களின் மின்சாரக் கட்டணங்கள் பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவர்கள் மின்சார விற்பனை மூலம் 2,000 முதல் 3,000 ரூபாய் வரை கூடுதலாக சம்பாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

நண்பர்களே,

கடந்த பத்தாண்டுகளில் வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாடு பெரிதும் பயனளித்துள்ளது. தற்போது, காசியில் நாட்டின் முதல் நகர ரோப்வே திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. பல சாலைத் திட்டங்களும் வளர்ச்சிக்கு ஊக்கியாக மாறியுள்ளன.

நண்பர்களே,

நமது காசி நீண்ட காலமாக கலாச்சாரம் மற்றும் அறிவின் சுருக்கமாக இருந்து வருகிறது, இந்த பாரம்பரிய நகரம் நகர்ப்புற வளர்ச்சியின் புதிய சகாப்தத்திற்கும் முன்னோடியாக இருக்கும் என்பதை உலகிற்கு நிரூபிக்கிறது. வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தின் கலவையானது காசி முழுவதும் தெளிவாகத் தெரிகிறது, இது காசி முழுவதும் வசிப்பவர்களுக்கு மட்டுமல்ல, பூர்வாஞ்சல் முழுவதிலுமிருந்து வேலை மற்றும் பிற தேவைகளுக்காக இங்கு வரும் குடும்பங்களுக்கும் பயனளிக்கிறது.

நண்பர்களே,

பாபா விஸ்வநாதரின் ஆசீர்வாதத்துடன், காசியின் வளர்ச்சிக்கான இந்தப் பயணம் தடையின்றி தொடரும். நாடு முழுவதிலும் உள்ள அனைத்து விவசாய நண்பர்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் நான் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காசி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹர ஹர மஹாதேவ்!

***

(Release ID: 2026281)

PKV/AG/RR



(Release ID: 2026853) Visitor Counter : 28