குடியரசுத் தலைவர் செயலகம்

செய்தி அறிக்கை


மத்தியில் நிலையான அரசு அமைக்க திரு நரேந்திர மோடியைப் பிரதமராகக் குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார்

Posted On: 07 JUN 2024 7:48PM by PIB Chennai

இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 75 (1)-ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி மத்தியில் நிலையான அரசு அமைக்க திரு நரேந்திர மோடியைப் பிரதமராகக் குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள 18-வது மக்களவையின் பெரும்பான்மை ஆதரவைப் பெறும் நிலையில், தேர்தலுக்கு முந்தைய கூட்டணியாகவும் உள்ள  பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தும், பல்வேறு கடிதங்கள் அடிப்படையில் குடியரசுத்தலைவர் திருப்தி அடைந்து பிரதமரை நியமித்துள்ளார்.

குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ள பதவி ஏற்பு விழாவுக்கான தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிடுமாறு திரு நரேந்திர மோடியைக் கேட்டுக் கொண்டுள்ள குடியரசுத்தலைவர், மத்திய அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் பெயர்கள் குறித்தும் தமக்கு ஆலோசனை தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.   

முன்னதாக, பிஜேபி தலைவர் திரு ஜெ பி நட்டா,  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தூதுக்குழுவினர் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு குடியரசுத்தலைவரைச் சந்தித்து பிஜேபி நாடாளுமன்ற கட்சித்தலைவராக திரு நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த கடிதத்தை  ஒப்படைத்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களும் குடியரசுத்தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

பிஜேபியைச் சேர்ந்த திரு ராஜ்நாத் சிங், திரு அமித் ஷா, திரு அஸ்வினி வைஷ்ணவ், டாக்டர் சி என் மஞ்சுநாத், தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து திரு என் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த திரு நிதிஷ்குமார், திரு ராஜீவ் ரஞ்சன் சிங் (லாலன் சிங்) திரு, சஞ்சய் ஜா, சிவசேனாவைச் சேர்ந்த திரு ஏக்நாத் ஷிண்டே, மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த திரு எச் டி குமாரசாமி, லோக் ஜன் சக்தி கட்சி (ராம்விலாஸ்)-ன் திரு சிராக் பாஸ்வான், மதச்சார்பற்ற இந்துஸ்தானி அவாம் மோச்சாவைச் சேர்ந்த திரு ஜித்தன் ராம் மான்ஜி, ஜனசேனாவின் திரு பவன் கல்யாண், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு அஜீத் பவார், அப்னா தள் (சோனி லால்) கட்சியைச் சேர்ந்த திருமதி அனுப்பிரியா படேல், ராஷ்ட்ரீய லோக் தள் கட்சியின் திரு ஜெயந்த் சௌத்ரி, ஐக்கிய மக்கள் கட்சி (லிபரல்)-ஐ சேர்ந்த திரு ஜோயந்த பாசுமாத்தரி, அசாம் கணபரிஷத்தின் திரு அதுல் போரா, சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சாவின் திரு இந்திர ஹாங்  சுபா, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கத்தின் திரு சுதேஷ் மகத்தோ, திரு சந்திரபிரகாஷ் சௌத்ரி, இந்திய குடியரசுக் கட்சி (ஏ)-ஐ சேர்ந்த திரு ராம்தாஸ் அத்தவாலே ஆகியோர் இந்தத் தூதுக்குழுவில் இடம் பெற்றிருந்த மற்ற உறுப்பினர்கள் ஆவர்.

. *** 

 

AD/SMB/KPG/DL



(Release ID: 2023544) Visitor Counter : 58