உள்துறை அமைச்சகம்

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் காவல்துறை என்சிபி, சிபிஐ, ரிசர்வ் வங்கி மற்றும் பிற சட்ட அமலாக்க முகமைகளின் அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்யும் சைபர் குற்றவாளிகள் குறித்த எச்சரிக்கை

Posted On: 14 MAY 2024 4:15PM by PIB Chennai

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் காவல்துறை, மத்திய புலனாய்வு துறை (சிபிஐ), போதைப்பொருள் துறை, இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி), அமலாக்க இயக்குநரகம் மற்றும் பிற சட்ட அமலாக்க முகமைகளின் அதிகாரிகளை போல வேடமிட்டு, மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் "டிஜிட்டல் கைதுகளை" மேற்கொள்ளும் சைபர் குற்றவாளிகள் குறித்து, தேசிய சைபர் குற்றங்கள் பற்றிய புகார்கள் தளத்தில் ஏராளமான புகார்கள் பதிவாகி வருகின்றன.

இந்த மோசடி செய்பவர்கள் பொதுவாக பாதிக்கப்பட்டவரை அழைத்து, பாதிக்கப்பட்டவர் சட்டவிரோத பொருட்கள், மருந்துகள், போலி பாஸ்போர்ட்கள் அல்லது வேறு ஏதேனும் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்ட ஒரு பார்சலை அனுப்பியுள்ளதாக கூறி மிரட்டல் விடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சில நேரங்களில், பாதிக்கப்பட்டவருக்கு நெருக்கமான ஒருவர் ஒரு குற்றம் அல்லது விபத்தில் சிக்கியிருப்பதை அறிந்து, அவர்கள் காவலில் இருப்பதாக கூறி "வழக்கை" சமரசம் செய்ய பணத்திற்கான கோரிக்கை வைப்பதாகவும் புகார்கள் வருகின்றன.

சில சந்தர்ப்பங்களில், சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கப்பட்டவர்கள் "டிஜிட்டல் கைது" செய்யப்படுகிறார்கள். மோசடி செய்பவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை ஸ்கைப் அல்லது பிற வீடியோ கான்பரன்சிங் தளத்தில், காவல் நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை மாதிரியாகக் கொண்ட ஸ்டுடியோக்களைப் பயன்படுத்துவதாகவும், உண்மையான தோற்றத்திற்காக சீருடைகளை அணிவதாகவும் அறியப்படுகிறது.

நாடு முழுவதும், பாதிக்கப்பட்ட பலர் இதுபோன்ற குற்றவாளிகளால் பெரும் தொகையை இழந்துள்ளனர். இது ஒரு திட்டமிடப்பட்ட ஆன்லைன் பொருளாதார குற்றம் என்பதும், எல்லை தாண்டிய குற்ற கும்பல்களால் இயக்கப்படுவதாகவும் அறியப்படுகிறது.

உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம், நாட்டில் சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராடுவது தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது. இந்த மோசடிகளை எதிர்கொள்ள உள்துறை அமைச்சகம் மற்ற அமைச்சகங்கள் மற்றும் அவற்றின் முகமைகள், ரிசர்வ் வங்கி மற்றும் பிற அமைப்புகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது. வழக்குகளை அடையாளம் கண்டு விசாரிப்பதற்காக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் காவல்துறை அதிகாரிகளுக்கு உள்ளீடுகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அது வழங்கி வருகிறது.

மைக்ரோசாப்ட் உடன் இணைந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 1,000-க்கும் மேற்பட்ட ஸ்கைப் ஐடிகளையும் அது தடுத்துள்ளது. இதுபோன்ற மோசடி செய்பவர்கள் பயன்படுத்தும் சிம் கார்டுகள், மொபைல் சாதனங்கள் மற்றும் மியூல் கணக்குகளை முடக்கவும் இது உதவுகிறது. எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தனது சமூக ஊடக தளங்களில் 'சைபர்தோஸ்ட்'-ல் இன்போ கிராபிக்ஸ் மற்றும் வீடியோக்கள் மூலம் பல்வேறு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

மக்கள் விழிப்புடன் இருக்கவும், இந்த வகையான மோசடிகள் குறித்து விழிப்புணர்வை பரப்பவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுபோன்ற அழைப்புகள் வந்தவுடன், மக்கள் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.

 

****

SRI/PKV/RR/KR/DL



(Release ID: 2020602) Visitor Counter : 104