புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
நெதர்லாந்து உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு 2024-ல் முதல் இந்திய அரங்கம், தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷனை காட்சிப்படுத்தியது
Posted On:
14 MAY 2024 10:23AM by PIB Chennai
2024 மே 13 முதல் 15 வரை நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் நடைபெறும் உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு 2024 -ல் முதல் முறையாக இந்தியா தனது சொந்த அரங்கத்தை அமைத்துள்ளது. இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட இந்தியாவின் அரங்கு, உச்சிமாநாட்டின் மிகப்பெரிய அரங்கங்களில் ஒன்றாகும். இது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு பூபிந்தர் எஸ் பல்லா-வால் மே 12 அன்று திறந்து வைக்கப்பட்டது.
உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு உலகளாவிய பசுமை ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு மதிப்புமிக்க நிகழ்வாகும். இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 15,000 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பசுமை ஹைட்ரஜன் துறையில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை உலகிற்கு எடுத்துக்காட்ட இந்த மாநாட்டின் இந்திய அரங்கம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது
இந்தியக் குழுவில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ரயில்வே அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். பல்வேறு ஜி2ஜி கலந்துரையாடல்களுக்கு மேலதிகமாக, உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுடன் இந்திய தொழில்துறை ஈடுபடுவதற்கான ஒரு தளத்தை இந்த உச்சிமாநாடு வழங்குகிறது.
இந்தியா தனது தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷனை 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் ரூ.19,744 கோடி ஒட்டுமொத்த செலவில் தொடங்கியது . 2030 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 5 எம்எம்டி (மில்லியன் மெட்ரிக் டன்) பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திறனை அடைய இந்தியா ஒரு இலக்கை நிர்ணயித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 4,12,000 டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திறன் மற்றும் 1,500 மெகாவாட் எலக்ட்ரோலைசர் உற்பத்தித் திறனை அமைப்பதற்கான டெண்டர்களை வழங்கியுள்ளது.
எஃகு, போக்குவரத்து, கப்பல் துறைகளில் பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதற்கான திட்ட வழிகாட்டுதல்களையும் இந்தியா அறிவித்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இந்தியாவில் புதுமைகளை வளர்ப்பதற்கும் பசுமை ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கும் ஹைட்ரஜன் பள்ளத்தாக்கு கண்டுபிடிப்பு தொகுப்பு இடங்களைத் தொடங்கியுள்ளது .
தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷனுக்கான ஒரு பிரத்யேக போர்டல் சமீபத்தில் தொடங்கப்பட்டது . இது மிஷன் மற்றும் இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சிக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய தகவல்களுக்கான ஒரே இடமாக செயல்படுகிறது.
போர்ட்டலை இங்கே அணுகலாம்: https://nghm.mnre.gov.in/.
***
(Release ID: 2020510)
SRI/PKV/RR/KR
(Release ID: 2020528)
Visitor Counter : 238