பிரதமர் அலுவலகம்

ஹவுராவிலிருந்து நியூ ஜல்பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும், கொல்கத்தா மெட்ரோவின் ஊதா வழித்தடத்தின் ஜோகா-தரதலா வழித்தடத்தையும் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 30 DEC 2022 3:21PM by PIB Chennai

வணக்கம்,

மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் அவர்களே, முதலமைச்சர் மதிப்பிற்குரிய மம்தா அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, சுபாஷ் சர்க்கார் அவர்களே, நிசித் பிரமானிக் அவர்களே, ஜான் பர்லா அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் பிரசுன் அவர்களே, மேடையில் உள்ள மற்ற சக ஊழியர்களே, தாய்மார்களே!

இன்று நான் உங்கள் அனைவரின் மத்தியிலும் நேரடியாக இருக்க வேண்டியிருந்தது. ஆனால் எனது தனிப்பட்ட காரணங்களால் என்னால் அதை செய்ய முடியவில்லை. இதற்காக, வங்காள மக்களாகிய உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வங்காளத்தின் புனித பூமிக்கும், வரலாற்று பூமியான கொல்கத்தாவுக்கும் வணக்கம் செலுத்தும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்துள்ளது. நாடு சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை அல்லது அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. இந்த அமிர்தப் பெருவிழாவின் போது, 475 வந்தே பாரத் ரயில்களைத் தொடங்க நாடு தீர்மானித்தது. இன்று, இந்த ஹவுரா-நியூ ஜல்பைகுரி வந்தே பாரத் ரயில்களில் ஒன்று கொல்கத்தாவிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. இன்றும், ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில் போன்ற போக்குவரத்து தொடர்பான பிற திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன அல்லது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. சுமார் 5,000 கோடி ரூபாய் செலவில் ஜோகா-பிபிடி பேக் மெட்ரோ திட்டத்தின் பணிகள் நடந்து வருகின்றன, இதில் ஜோகா-தரடாலா மெட்ரோ பாதை நிறைவடைந்துள்ளது. இது நகர மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும்.

நண்பர்களே,

கங்கையின் தூய்மை மற்றும் குடிநீர் தொடர்பான பல்வேறு திட்டங்களை மேற்கு வங்கத்தில் அர்ப்பணிக்கும் வாய்ப்பையும் நான் பெறுவேன். நமாமி கங்கை இயக்கத்தின் கீழ், மேற்கு வங்கத்தில் 25-க்கும் மேற்பட்ட கழிவுநீர் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 11 திட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்து, 7 திட்டங்கள் இன்று நிறைவடைய உள்ளன. இன்று, 1500 கோடி ரூபாய் செலவில், 5 புதிய திட்டங்களுக்கான பணிகள் தொடங்குகின்றன.

வரும் 10-15 ஆண்டுகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நாட்டில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்று நிறுவப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்கு, இந்திய ரயில்வேயின் விரைவான வளர்ச்சி மற்றும் விரைவான முன்னேற்றம் ஆகியவை மிகவும் முக்கியமானவை. அதனால்தான் இன்று மத்திய அரசு இந்திய ரயில்வேயையும், ரயில்வே உள்கட்டமைப்பையும் நவீனப்படுத்த சாதனை  அளவில் முதலீடுகளைச் செய்து வருகிறது.

 

வந்தே பாரத், தேஜஸ், ஹம்சஃபர் போன்ற நவீன ரயில்கள் நாட்டில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இன்று விஸ்டாடோம் ரயில் பெட்டிகள் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கி வருகின்றன. தற்போது ரயில் நிலையங்களும் விமான நிலையங்களைப் போல மேம்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய ஜல்பைகுரி நிலையமும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

தற்போது ரயில் பாதைகளை இரட்டிப்பாக்குதல், மின்மயமாக்குதல் ஆகியவை சாதனை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. நாட்டில் வரவிருக்கும் கிழக்கு மற்றும் மேற்கு அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடங்கள் சரக்குப் போக்குவரத்துத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வரப் போகின்றன. பாதுகாப்பு, தூய்மை, செயல்திறன், ஒருங்கிணைப்பு, நேரம் தவறாமை அல்லது வசதி என எதுவாக இருந்தாலும், இந்திய ரயில்வே இன்று ஒரு புதிய அடையாளத்தை உருவாக்குகிறது.

நண்பர்களே,

நாடு சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் 20,000 கிலோ மீட்டர் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. ஆனால், 2014-ல் எங்கள் அரசு அமைந்த பிறகு, கடந்த 7-8 ஆண்டுகளில் 32,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

2014-ம் ஆண்டுக்கு முன், நாட்டின் மொத்த மெட்ரோ ரயில் சேவை 250 கிலோ மீட்டருக்கும் குறைவாகவே இருந்தது. தில்லி-என்.சி.ஆர் இதிலும் மிகப்பெரிய பங்கைக் கொண்டிருந்தது. மத்திய அரசும் இந்த நிலையை மாற்றியுள்ளது. அந்த மாற்றத்தை மிக வேகமாக கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் அது மேற்கொண்டுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில், 2 டஜனுக்கும் மேற்பட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தியுள்ளோம். நாட்டின் பல்வேறு நகரங்களில் சுமார் 800 கிலோமீட்டர் பாதையில் மெட்ரோ இயக்கப்படுகிறது. 1000 கிலோமீட்டர் புதிய மெட்ரோ வழித்தடத்திற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

நண்பர்களே,

21-ம் நூற்றாண்டில் வேகமாக முன்னேற, நாட்டின் ஆற்றலை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். நீர்வழிகள் குறித்த உதாரணத்தை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன். ஒரு காலத்தில் இந்தியாவில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவிற்கு நீர்வழிகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. அதனால்தான் நதிகளின் கரைகளில் பல்வேறு நகரங்கள் தோன்றின, நதிக்கரைகளில் மிகப்பெரிய தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. ஆனால் இந்தத் திறன் முதலில் நூற்றுக்கணக்கான ஆண்டுகால காலனித்துவ ஆட்சியாலும், சுதந்திரத்திற்குப் பிறகு அரசின் அலட்சியத்தாலும் அழிக்கப்பட்டது.

தற்போது இந்த நீர் சக்தியை விரிவுபடுத்தும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. நாட்டில் 100-க்கும் மேற்பட்ட நீர்வழித் தடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்திய நதிகளில் நவீன சொகுசு கப்பல்களை இயக்குவது அல்லது வணிகம் மற்றும் சுற்றுலாவை நோக்கிய திசையில் நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். வங்கதேச அரசுடன் இணைந்து கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிகளுக்கு இடையே நீர்வழி இணைப்பை நிறுவவும் மத்திய அரசு பணியாற்றி வருகிறது.

இன்று, இது தொடர்பான தகவல்களை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2023  ஜனவரி 13, ஒரு கப்பல் வாரணாசியில் இருந்து பயணத்தைத் தொடங்கி, 3200 கிலோமீட்டர் தொலைவில் பங்களாதேஷ் வழியாக திப்ருகரை அடையும். இது உலகம் முழுவதிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு கப்பல் பயணமாக இருக்கும். இந்தியாவில் வளர்ந்து வரும் கப்பல் சுற்றுலாவின் பிரதிபலிப்பாகவும் இது இருக்கும். மேற்கு வங்க மக்கள் நிச்சயமாக இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

ஏராளமானோர் வாய்ப்பு கிடைத்தவுடன் மற்ற நாடுகளுக்குச் செல்ல விரும்புகிறார்கள், ஆனால் வங்காள மக்கள் எப்போதும் தங்கள் நாட்டிற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். வங்காள மக்கள் சுற்றுலாத் துறையிலும் நாட்டிற்கும் முதலிடம் என்ற உணர்வைக் கொண்டுள்ளனர்.

நாட்டைக் கட்டியெழுப்ப நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் உழைக்க வேண்டும். நாட்டுக்கு சேவை செய்யும் நமது முயற்சிகளை நாம் நிறுத்தக்கூடாது.

இந்த வார்த்தைகளுடன், பல்வேறு திட்டங்களுக்காக வங்காளத்தை நான் பாராட்டுகிறேன். மீண்டும் ஒருமுறை உங்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து, எனது உரையை நிறைவு செய்கிறேன்.

மிகவும் நன்றி!

***

(Release ID: 1887533)

SMB/IR/AG/RR



(Release ID: 2017427) Visitor Counter : 19