தேர்தல் ஆணையம்

2024 பொதுத் தேர்தலில் அமைதியான, சுதந்திரமான வாக்குப் பதிவை உறுதி செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்கள் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

Posted On: 03 APR 2024 6:31PM by PIB Chennai

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் 2024-ஐ சுதந்திரமாகவும், நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்துவதற்கு மாநில எல்லைகளுக்கு இடையே மற்றும் சர்வதேச எல்லைகளில் மேற்கொள்ளப்படும் சட்டம், ஒழுங்கு சூழ்நிலை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு, பறிமுதல், கண்காணிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் முக்கியக் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் இன்று ஏற்பாடு செய்திருந்தது. மாநிலம் / யூனியன் பிரதேசங்கள் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆணையம் விரிவாக ஆய்வு செய்தது.

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் திரு ஞானேஷ் குமார், திரு சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் எல்லைகளை பாதுகாக்கும் மத்திய முகமைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தனது தொடக்க உரையில், சுதந்திரமான, நியாயமான, அமைதியான மற்றும் தூண்டுதல் இல்லாத தேர்தல்களை உறுதி செய்வதற்கான ஆணையத்தின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்களிக்கும் உரிமையை அச்சம் அல்லது மிரட்டல் இல்லாமல் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

அண்டை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இடையே மேம்பட்ட ஒருங்கிணைப்பின் அவசியம், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் போதுமான அளவு மத்திய ஆயுதக் காவல்படையை அனுப்புவதன் அவசியம் ஆகியவை கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களாகும். எல்லையோர மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ஆயுதக் காவல் படையினரின்  போக்குவரத்து, கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் வகுப்புவாத பதட்டங்களை தவிர்ப்பதற்கு முன்கூட்டிய நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட பகுதிகளைக் கண்காணித்தல்  போதைப் பொருட்கள், மதுபானங்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் சர்வதேச எல்லைகளில் கடத்தலைத் தடுத்தல் ஆகிய கண்காணிப்பின் முக்கியத்துவத்தை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியது.

-----

 

ANU/AD/IR/KPG/KRS



(Release ID: 2017109) Visitor Counter : 69