பிரதமர் அலுவலகம்

புதுதில்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற ஸ்டார்ட்-அப் மகா கும்பமேளாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 20 MAR 2024 6:19PM by PIB Chennai

அமைச்சரவையில் உள்ள எனது சக நண்பர்கள் திரு பியூஷ் கோயல் அவர்களே, திருமிகு அனுப்பிரியா படேல் அவர்களே, திரு சோம் பிரகாஷ் அவர்களே, மதிப்பிற்குரிய பிரமுகர்களே, நாடு முழுவதும் உள்ள புத்தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த நமது நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலர் புத்தொழில் நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள், அரசியலில் அது இன்னும் அதிகமாக உள்ளது, அவை மீண்டும் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்.

நண்பர்களே,

2047-ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதை நோக்கி  தேசம் பணியாற்றி வரும் போது, இந்த ஸ்டார்ட்-அப் மகா கும்பமேளா மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் உணர்கிறேன். கடந்த தசாப்தங்களில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறைகளில் பாரதம்  எவ்வாறு தனது முத்திரையைப் பதித்துள்ளது என்பதை நாம் பார்த்தோம். தற்போது, இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தொழில் கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். பாரதம் இன்று ஒரு புதிய நம்பிக்கையாக, உலகளாவிய புத்தொழில் துறையில் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது என்றால், அது நன்கு சிந்திக்கப்பட்ட தொலைநோக்கால் ஆதரிக்கப்படுகிறது. பாரதம்  சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து, சரியான நேரத்தில் புத்தொழில் பணிகளைத் தொடங்கியுள்ளது.

நண்பர்களே,

விண்வெளித் துறையில், 50-க்கும் மேற்பட்ட துறைகளில் இந்திய புத்தொழில் நிறுவனங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஏற்கனவே, நமது புத்தொழில்  நிறுவனங்கள் மிகக் குறுகிய காலத்தில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தத் தொடங்கிவிட்டன. இன்று பாரதத்தின் இளைஞர் சக்தியின் திறனை உலகம் காண்கிறது. இந்த திறனில் நம்பிக்கையுடன், புத்தொழில் சூழலியலை உருவாக்க நாடு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாட்டின் இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக மாறுவதற்கு பதிலாக வேலைகளை உருவாக்குபவர்களாக மாறுவதற்கான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஸ்டார்ட் அப் இந்தியா இயக்கத்தை நாடு தொடங்கியபோது, இளைஞர்கள் தங்கள் திறமை என்ன என்பதை நிரூபித்தனர். இன்று, பாரதம் உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழலியலைக் கொண்டுள்ளது. 2014-இல் வெறும் 100 புத்தொழில் நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில், இன்று இந்தியாவில் சுமார் 1.25 லட்சம் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 12 லட்சம் நிறுவனங்களில்  இளைஞர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். எங்களிடம் 110 க்கும் மேற்பட்ட யூனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன.

நண்பர்களே,

நாட்டின் டிஜிட்டல் இந்தியா பிரச்சாரத்திலிருந்து புத்தொழில் நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க உதவிகள் கிடைத்துள்ளன, மேலும் பல்கலைக்கழகங்கள் இது குறித்து ஒரு ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது ஒரு பெரிய உத்வேகம். நமது நிதி தொழில்நுட்ப புத்தொழில்  நிறுவனங்கள் யு.பி.ஐ மூலம் பெரிதும் பயனடைந்துள்ளன. பாரதத்தில் புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் உருவாக்கப்பட்டுள்ளன, நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் டிஜிட்டல் வசதிகளை விரிவுபடுத்தியுள்ளன. பாரதம் தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தியுள்ளது, எனவே "இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள்" என்ற கோட்பாடு இங்கு செழிக்க முடியாது. இங்கு அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கிறது. இன்று, விவசாயம், கல்வி அல்லது சுகாதாரம் என எதுவாக இருந்தாலும், புத்தொழில்  நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. நமது புத்தொழில்  நிறுவனங்களில் 45 சதவீதத்திற்கும் அதிகமானவை பெண்களால் வழிநடத்தப்படுகின்றன என்பதை குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். புத்தொழில் நிறுவனங்களின் தாக்கத்தை மதிப்பிட முடியாது. இது நாட்டுக்கு கூடுதல் நன்மையாகும். அதிநவீன கண்டுபிடிப்புகள் மூலம் நமது மகள்கள் நாட்டை வளத்தை நோக்கி வழிநடத்துகிறார்கள்.

நண்பர்களே!

புதிய கண்டுபிடிப்பு கலாச்சாரம் 'வளர்ச்சி அடைந்த பாரதத்தின்' வளர்ச்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கும் அவசியம். நான் இதை மிகுந்த பொறுப்புணர்வுடன் கூறுகிறேன், உலகின் சிறந்த எதிர்காலம் பற்றி நான் பேசுகிறேன், என்னுடைய திறன்கள் மீது மட்டுமல்ல, உங்கள் திறன்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஜி-20 தலைமைப் பொறுப்பின் போது பாரதம் தனது தொலைநோக்குப் பார்வையை தெளிவாக வெளிப்படுத்தியது. ஜி-20 மாநாடு இங்குதான் நடைபெற்றது. ஸ்டார்ட் அப் -20 முன்முயற்சியின் கீழ், உலகெங்கிலும் உள்ள புத்தொழில் சூழலியலை  ஒன்றிணைக்க பாரதம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதே பாரத மண்டபத்தில், ஜி-20 பிரகடனத்தில் மட்டும் புத்தொழில்  நிறுவனங்கள் சேர்க்கப்படவில்லை, அவை 'வளர்ச்சியின் இயற்கை என்ஜின்கள்' என்றும் அங்கீகரிக்கப்பட்டன. ஜி20 அமைப்பின் இந்த ஆவணத்தை நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று நான் உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

11-வது பெரிய பொருளாதாரமாக இருந்த பாரதம் தற்போது 5-வது பொருளாதார நாடாக மாறியுள்ளது. எனது நாட்டின் இளைஞர்கள் இதில் மகத்தான பங்களிப்பை அளித்துள்ளனர். இப்போது, எனது மூன்றாவது பதவிக்காலத்தில், பாரதத்தை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவேன் என்று நான் உறுதியளித்துள்ளேன். இந்த முயற்சியில், புத்தொழில்  நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும்.

உங்களின் உற்சாகமும், ஆற்றலும் எனக்குள் ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கிறது.

உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

மிகவும் நன்றி.

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு.  பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

 

***

(Release ID: 2015752)

AD/BR/RR



(Release ID: 2016037) Visitor Counter : 34