விவசாயத்துறை அமைச்சகம்

இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், தனுகா வேளாண் தொழில்நுட்ப நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

Posted On: 20 MAR 2024 12:19PM by PIB Chennai

இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், தனுகா வேளாண் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் யு.எஸ். கவுதம், தனுகா வேளாண் தொழில்நுட்ப நிறுவனத் தலைவர் டாக்டர் ஆர்.ஜி. அகர்வால் ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டனர்.

விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு இரு நிறுவனங்களின் திறனைப் பயன்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்று டாக்டர் கௌதம் கூறினார். நாடு முழுவதும் 14.5 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் உள்ளனர் என்றும், அவர்களில் பெரும்பாலான விவசாயிகள் சிறிய நிலங்களை வைத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். தனுகா வேளாண் தொழில்நுட்ப நிறுவனம் மத்திய அரசு நிறுவனங்கள், வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், வேளாண் அறிவியல் மையம் ஆகியவற்றுடன் இணைந்து சிறு விவசாயிகளுக்கு வேளாண் உற்பத்தி தொடர்பான பயிற்சிகளை வழங்கும்.

தற்போது உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்கிறது என்றும், இந்தியாவுக்கு இது புதிதல்ல என்றும், இதுபோன்ற நேரத்தில் பருவநிலைக்கு உகந்த வேளாண் உற்பத்தியின் புதிய முறையில் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது என்றும் டாக்டர் கௌதம் கூறினார். மாறிவரும் சூழலுக்கு ஏற்ப இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

தனுகா வேளாண் தொழில்நுட்ப நிறுவனம், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், வேளாண் அறிவியல் மையம் ஆகியவற்றுடன் இணைந்து ஆலோசனை சேவையை வழங்குவதோடு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் என்று டாக்டர் அகர்வால் கூறினார். இந்த நிகழ்ச்சியில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் உதவித் தலைமை இயக்குநர், இயக்குநர்கள், மூத்த விஞ்ஞானிகள் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத் தலைமையகத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 2015646)

PKV/IR/RS/KRS(Release ID: 2015657) Visitor Counter : 77