பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சி அடைந்த பாரதம் வளர்ச்சி அடைந்த சத்தீஸ்கர் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 24 FEB 2024 2:50PM by PIB Chennai

வணக்கம்!

 

சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் அவர்களே, சத்தீஸ்கரின் அமைச்சர்களே, இதர பிரதிநிதிகளே, சத்தீஸ்கர் மக்களே! மாநிலத்தில் 90-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அனைத்து இடங்களிலும் திரண்டிருக்கும் என் அன்பு குடும்ப உறுப்பினர்களே! சத்தீஸ்கரின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் கூடியிருக்கும் லட்சக்கணக்கான குடும்ப உறுப்பினர்களை முதலில் நான் வாழ்த்துகிறேன். சட்டப்பேரவைத் தேர்தலில் நீங்கள் எங்களை அபரிமிதமாக ஆசீர்வதித்துள்ளீர்கள். உங்களது ஆசீர்வாதங்களின் விளைவாக இன்று நாங்கள் உங்கள் மத்தியில் வளர்ச்சி அடைந்த சத்தீஸ்கர் என்ற தீர்மானத்துடன் கூடியுள்ளோம்.

நண்பர்களே,

ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் வளர்ச்சி அடைந்த சத்தீஸ்கர் உருவாகும். வளர்ச்சி அடைந்த சத்தீஸ்கருக்கான அடித்தளம் நவீன உள்கட்டமைப்புகளால் உருவாக்கப்படுகிறது. இன்று சத்தீஸ்கரின் வளர்ச்சி தொடர்பான சுமார் 35,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.  இந்தத் திட்டங்களில் நிலக்கரி, சூரியசக்தி, போக்குவரத்து போன்றவை தொடர்பான பல்வேறு முன்முயற்சிகள் அடங்கும். இந்தத் திட்டங்கள் சத்தீஸ்கர் மாநில இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்தத் திட்டங்களுக்காக சத்தீஸ்கரின் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துகள்.

 

நண்பர்களே,

 

சத்தீஸ்கரை சூரியசக்தி மின்சக்திக்கான முக்கிய மையமாக மாற்றுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இன்று, ராஜ்நந்த்கான் மற்றும் பிலாய் ஆகிய இடங்களில் பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அரசின் குறிக்கோள் சூரிய சக்தி மூலம் மக்களுக்கு மின்சாரம் வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களின் மின்சாரக் கட்டணங்களை பூஜ்ஜியமாகக் கொண்டுவருவதும் ஆகும். ஒவ்வொரு வீடும் சூரிய மின்சக்தி இல்லமாக மாற வேண்டும் என்று மோடி விரும்புகிறார். வீட்டில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலமும், உபரி மின்சாரத்தை விற்பதன் மூலமும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மற்றொரு வருமான ஆதாரத்தை வழங்க மோடி விரும்புகிறார். இந்த நோக்கத்துடன், நாங்கள் பிரதமரின் சூரிய மின்சக்தி வீடு திட்டத்தைத் தொடங்கியுள்ளோம், இதன் இலக்கு தற்போது ஒரு கோடி குடும்பங்களாக உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மேற்கூரைகளில் சூரிய சக்தித் தகடுகளை நிறுவுவதற்கான உதவியை  அரசு வழங்கும். குடும்பங்கள் 300 யூனிட் வரை இலவச மின்சாரத்தைப் பெற முடியும். உற்பத்தி செய்யப்படும் எந்தவொரு கூடுதல் மின்சாரத்தையும் அரசு கொள்முதல் செய்யும். இதன் மூலம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைக்கும்.

 

சகோதர சகோதரிகளே,

 

சத்தீஸ்கரில் இரட்டை இன்ஜின் அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதம் மிகவும் பாராட்டத்தக்கது. சத்தீஸ்கர் மாநிலம், கடின உழைப்பாளி விவசாயிகள், திறமையான இளைஞர்கள் மற்றும் இயற்கை வளங்களைக்  கொண்டுள்ளது. வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தும் சத்தீஸ்கரில் முன்பு இருந்தன. இன்றும் உள்ளன. இருப்பினும், சுதந்திரத்திற்குப் பிறகு நீண்ட காலம் நாட்டை ஆட்சி செய்தவர்களுக்கு தொலைநோக்கு மனநிலை இல்லை. தங்கள் அரசியல் நலன்களை மனதில் வைத்து மட்டுமே அவர்கள் முடிவுகளை எடுத்தனர். தங்கள் குடும்பத்துக்காக மட்டுமே உழைக்கிறவர்கள் உங்கள் குடும்பத்தைப் பற்றி ஒருபோதும் சிந்திக்க மாட்டார்கள். தங்கள் சொந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் மட்டுமே கவனம் செலுத்துபவர்கள் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் மோடியைப் பொறுத்தவரை நீங்கள் அனைவரும் மோடியின் குடும்பம். உங்கள் கனவுகள் மோடியின் தீர்மானம். அரசின் பணம் ஏழைகளின் நலனுக்கான திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இலவச உணவு தானியங்கள், இலவச சிகிச்சை, மலிவான விலையில் மருந்துகள், ஏழைகளுக்கு வீடுகள், ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர், ஒவ்வொரு வீட்டிற்கும் சமையல் எரிவாயு இணைப்புகள், ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறைகள் என இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த வசதிகள், கற்பனை கூட செய்து பார்த்திராத ஏழைகளின் வீடுகளை சென்றடைகின்றன.

 

நண்பர்களே,

10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி இன்னொரு உத்தரவாதம் கொடுத்தார். நமது முந்தைய தலைமுறையினர் கண்ட கனவுகளை நனவாக்கி வளர்ந்த பாரதத்தை நாம் உருவாக்குவோம் என்று கூறினேன். இன்று, புதிய பாரதம் கட்டமைக்கப்படுகிறது. கிராமங்களில் கூட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சாத்தியம் என்று பத்து ஆண்டுகளுக்கு முன்பு யாராவது நினைத்தார்களா? அல்லது வங்கி தொடர்பான பணிகள், கட்டணங்களைச் செலுத்துதல், விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் ஆகியவற்றை வீட்டில் இருந்தபடியே செய்ய முடியும் என யாராவது நினைத்தார்களா? மாநிலத்தை விட்டு வெளியூரில் வேலைக்குச் சென்ற ஒரு மகன் கண் இமைக்கும் நேரத்தில் கிராமத்தில் உள்ள தனது குடும்பத்திற்கு பணம் அனுப்ப முடியும் என்று யாராவது நினைத்ததுண்டா? இன்று இது எல்லாம்  சாத்தியமாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்த  அரசு 34 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நேரடி பணப்பரிமாற்றம் மூலம் பயனாளிகளுக்குப் பணம் செலுத்தியுள்ளது.

முத்ரா திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புக்காக இளைஞர்களுக்கு 28 லட்சம் கோடி ரூபாய் உதவியையும் இந்த அரசு வழங்கியுள்ளது. கிட்டத்தட்ட 2.75 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. நிறுத்தப்படும்போது, வளர்ச்சி தொடங்குகிறது. வேலைவாய்ப்புக்கான பல வாய்ப்புகள் உருவாகின்றன. அத்துடன், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான நவீன வசதிகளும் உருவாக்கப்படுகின்றன. இன்று அமைக்கப்பட்டு வரும் அகலமான சாலைகள், புதிய ரயில் பாதைகள் போடப்படுவது எல்லாமே இந்த  அரசின் நல்லாட்சியின் விளைவுதான்.

 

சகோதர சகோதரிகளே,

 

21 ஆம் நூற்றாண்டின் நவீன தேவைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சிகள் மூலம் வளர்ச்சி அடைந்த சத்தீஸ்கர் என்ற கனவு நிறைவேறும். சத்தீஸ்கர் வளர்ச்சி அடைவதையும் பாரதம் முன்னேறுவதையும் யாராலும் தடுக்க முடியாது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாறும் போது, சத்தீஸ்கர் வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டும். இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்.

 

நன்றி!

 

***

Release ID: 2008588

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
***

ANU/PKV/PLM/KRS


(Release ID: 2015398) Visitor Counter : 67