பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-மொரீஷியஸ்: திட்டங்களின் மெய்நிகர் தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 29 FEB 2024 3:06PM by PIB Chennai

மேதகு பிரதமர் பிரவிந்த் ஜுக்னவுத் அவர்களே,

மொரீஷியஸ் அமைச்சரவையின் தற்போதைய உறுப்பினர்கள்,

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர்,

இன்று நிகழ்வில் கலந்துகொண்ட அகலேகா குடியிருப்பாளர்களே,

என் நண்பர்கள் அனைவக்கும்.

 

வணக்கம்!

கடந்த 6 மாதங்களில் பிரதமர் ஜுக்னவுத்துக்கும் எனக்கும் இடையே நடைபெறும் ஐந்தாவது சந்திப்பு இதுவாகும். இந்தியா மற்றும் மொரீஷியஸ் இடையேயான துடிப்பான, வலுவான மற்றும் தனித்துவமான கூட்டாண்மைக்கு இது ஒரு சான்றாகும். நமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் முக்கிய பங்கெடுப்பாளராக மொரீஷியஸ் திகழ்கிறது.

 

எங்களது தொலைநோக்கு பார்வையான "சாகர்" திட்டத்தின் கீழ் மொரீஷியஸ் எங்களது சிறப்பு பங்குதாரராக உள்ளது. உலகளாவிய தெற்கின் உறுப்பினர்கள் என்ற முறையில், எங்களுக்கு பொதுவான முன்னுரிமைகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் நமது உறவுகளில் முன்னெப்போதும் இல்லாத வேகம் ஏற்பட்டுள்ளது.

 

பரஸ்பர ஒத்துழைப்பில் நாம் புதிய உச்சங்களை எட்டியுள்ளோம். கலாச்சார மற்றும் வரலாற்று உறவுகளுக்கு ஒரு புதிய வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. மொழி மற்றும் கலாச்சாரம் என்ற தங்க இழைகளால் நம் மக்கள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளனர். சில நாட்கள் முன்பாக, யுபிஐI, ரூபே கார்டு போன்ற முயற்சிகள் மூலம் நவீன டிஜிட்டல் இணைப்பை நாங்கள் வழங்கியுள்ளோம்.

 

நண்பர்களே

நமது உறவுகளில் வளர்ச்சிக்கான கூட்டாண்மை முக்கிய தூணாக உள்ளது. மொரீஷியஸின் முன்னுரிமைகளின் அடிப்படையில் நமது வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு அமைந்துள்ளது. மொரீஷியஸின் சிறப்புப் பொருளாதார மண்டல பாதுகாப்புத் தேவைகளாக இருந்தாலும் சரி, சுகாதாரப் பாதுகாப்பாக இருந்தாலும் சரி, மொரீஷியஸின் தேவைகளை இந்தியா எப்போதும் மதித்து வந்துள்ளது. கோவிட் தொற்றுநோயின் நெருக்கடி அல்லது எண்ணெய் கசிவு எதுவாக இருந்தாலும், இந்தியா எப்போதும் தனது நட்பு நாடான மொரீஷியஸுக்கு முதலில் பதிலளிப்பதாக உள்ளது.

 

மொரீஷியஸின் பொதுவான மனித வாழ்க்கையில் அர்த்தமுள்ள மாற்றங்களைக் கொண்டுவருவதே எங்களது முயற்சிகளின் அடிப்படை நோக்கமாகும். கடந்த 10 ஆண்டுகளில், சுமார் 1000 மில்லியன் டாலர் கடனுதவியும், 400 மில்லியன் டாலர் உதவியும் மொரீஷியஸ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மொரீஷியஸில் மெட்ரோ ரயில் பாதை மேம்பாடு, சமூக மேம்பாட்டுத் திட்டங்கள், சமூக வீட்டுவசதி, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், சிவில் சர்வீஸ் கல்லூரிகள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

நண்பர்களே

நமது வளர்ச்சிக்கான கூட்டாண்மைக்கு இன்றைய தினம் சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அகலேகா மக்களின் அபிவிருத்திக்காக 2015 ஆம் ஆண்டில் வழங்கிய வாக்குறுதி நிறைவடைவதை இன்று நாம் காண்கிறோம் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இப்போதெல்லாம் இந்தியாவில் இது "மோடியின் உத்தரவாதம்" என்று அழைக்கப்படுகிறது. நாம் கூட்டாக தொடங்கி வைத்துள்ள வசதிகள் வாழ்க்கையை எளிதாக்குவதை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன். மொரீஷியஸின் வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் இணைப்பு அதிகரிக்கும். பிரதான நிலப்பரப்பிலிருந்து நிர்வாக ஒத்துழைப்பு எளிதாக இருக்கும். சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். மருத்துவ சிகிச்சைக்காக அவசர வெளியேற்றம் மற்றும் கல்விக்காக பாடசாலை மாணவர்களின் பயணம் வசதி செய்யப்படும்.

 

நண்பர்களே

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பல பாரம்பரிய மற்றும் மரபுசாரா சவால்கள் உருவாகி வருகின்றன. இந்த சவால்கள் அனைத்தும் நமது பொருளாதாரத்தை பாதிக்கின்றன. இவற்றைச் சமாளிக்க, கடல்சார் பாதுகாப்புத் துறையில் இந்தியாவும், மொரீஷியஸும் இயற்கையான கூட்டாளிகளாக உள்ளன. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு, வளம் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்ய நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்.

 

 

பிரத்யேக பொருளாதார மண்டல கண்காணிப்பு, கூட்டு ரோந்து, நீரியல் வரைவியல், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் போன்ற அனைத்து துறைகளிலும் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். இன்று, அகலேகாவில் விமான ஓடுபாதை மற்றும் படகுத்துறை திறப்பு நமது ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும். இது மொரீஷியஸின் நீலப் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும்.

 

நண்பர்களே

மொரீஷியஸில் மக்கள் மருந்தக மையத்தைத் திறக்க முடிவு செய்ததற்காக பிரதமர் ஜுக்னவுத்தை நான் பாராட்டுகிறேன். எங்களது இந்த திட்டத்தில்  இணையும் முதல் நாடாக மொரீஷியஸ் இருக்கும். இதன் மூலம், இந்தியாவில் தயாரிக்கப்படும் சிறந்த தரமான பொதுவான மருந்துகளின் பலனை மொரீஷியஸ் மக்கள் பெறுவார்கள்.

 

மேதகு அதிபர் அவர்களே,

பிரதமர் பிரவிந்த் ஜுக்னவுத் அவர்களே, உங்களது தொலைநோக்குப் பார்வை மற்றும் ஆற்றல்மிக்க தலைமைப் பண்புக்காக உங்களை நான் பாராட்டுகிறேன். வரும் காலங்களில், இந்தியா மற்றும் மொரீஷியஸ் உறவுகளை நாம் ஒன்றாக புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம் என்று நான் நம்புகிறேன்.

 

மீண்டும் ஒருமுறை உங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

 

***

ANU/PLM/BS/DL


(Release ID: 2010982) Visitor Counter : 71