பிரதமர் அலுவலகம்

கேரள மாநிலம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 27 FEB 2024 5:05PM by PIB Chennai

கேரள ஆளுநர் திரு ஆரிப் முகமது கான் அவர்களே, முதலமைச்சர் திரு பினராயி விஜயன் அவர்களே, எனது சகாவும் இணையமைச்சருமான திரு வி. முரளீதரன் அவர்களே, இஸ்ரோ குடும்பத்தைச் சேர்ந்தவர்களே, அனைவரும் வணக்கம்.

 

பாரத் மாதா கி - ஜே!

பாரத் மாதா கி - ஜே!

பாரத் மாதா கி - ஜே!

பாரத் மாதா கி – ஜே!

ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் நிகழ்கால சந்ததியினரை மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினரையும் வரையறுக்கும் தருணங்கள் உள்ளன. இன்று பாரதத்திற்கு அத்தகைய ஒரு தருணம். நமது தற்போதைய தலைமுறையினர் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். நீர், நிலம், வானம் மற்றும் விண்வெளியில் வரலாற்று சாதனைகளைப் புரிந்ததற்காக பாராட்டுக்களைப் பெறுகிறார்கள்.

 

நண்பர்களே

கடந்த ஆண்டு, நிலவின் தென் துருவத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றிய முதல் நாடு என்ற பெருமையை பாரதம் பெற்றது. இப்போது, விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் மற்றொரு வரலாற்றுப் பயணத்தை நாம் அனைவரும் காண்கிறோம். சிறிது நேரத்திற்கு முன்பு, நாடு தமது நான்கு ககன்யான் விண்வெளி வீரர்களை முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. இவை வெறும் நான்கு பெயர்கள் மற்றும் நான்கு நபர்கள் அல்ல. 140 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் நான்கு ஆற்றல் வீரர்கள் இவர்கள்.

 

நண்பர்களே

இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக ககன்யான் பற்றிய விரிவான தகவல்களும் எனக்கு வழங்கப்பட்டன. பல்வேறு உபகரணங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து எனக்கு தகவல் வழங்கப்பட்டது. ககன்யானில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக மாற பாரதம் முயற்சிக்கும் அதே நேரத்தில், இந்தியாவின் ககன்யான் பணி நமது விண்வெளித் துறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல தயாராக உள்ளது என்பது ஒரு குறிப்பிடத்தக்க  நிகழ்வு. இன்று, பல திட்டங்களின் தொடக்க விழாவும் இங்கு நடந்துள்ளது. இது உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத் துறையில் நாட்டின் திறன்களை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும்.

 

நண்பர்களே,

நமது விண்வெளித் துறையில் பெண்களின் சக்திக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளிக்கப்படுவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். சந்திரயான் விண்கலமாக இருந்தாலும் சரி, ககன்யானாக இருந்தாலும் சரி, பெண் விஞ்ஞானிகள் இல்லாமல் எந்தவொரு திட்டத்தையும் கற்பனை செய்து பார்க்க முடியாது. இன்று இஸ்ரோவில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முக்கியப் பதவிகளை வகிக்கின்றனர். இங்கு கூடியுள்ள பெண் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்கள் அனைவரையும் நான் எனது இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து பாராட்டுகிறேன்.

 

நண்பர்களே

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரயான் வெற்றிகரமாக தரையிறங்கியது இளைஞர்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்தது. அந்த நாளை நாம் விண்வெளி தினமாக அங்கீகரித்துள்ளோம். நீங்கள் ஒவ்வொருவரும் பாரதத்திற்கு சாதனைத் தருணங்களை வழங்கியதன் மூலம், நாட்டின் விண்வெளிப் பயணத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறீர்கள். விண்வெளித் துறையில் நாம் பல சாதனைகளைப் படைத்துள்ளோம். முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்தோம். ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் நாடு நமது பாரதம். சந்திரயான் விண்கலத்தின் வெற்றிக்குப் பிறகும் நீங்கள் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளீர்கள். பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆதித்யா-எல் 1-ஐ அதன் சுற்றுப்பாதையில் பாதுகாப்பாக வழிநடத்தினீர்கள். உலகில் ஒரு சில நாடுகளால் மட்டுமே இதைச் செய்ய முடிந்தது.

 

நண்பர்களே

நீங்கள் அனைவரும் கூட்டாக இணைந்து எதிர்காலத்திற்கான சாத்தியக்கூறுகளுக்கான புதிய வழிகளை உருவாக்கி வருகிறீர்கள். விண்வெளித் துறையில் குறிப்பிடத்தக்க உலகளாவிய வர்த்தக மையமாக பாரதம் உருவாகத் தயாராக உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில், நாம் மீண்டும் சந்திரனுக்குச் செல்ல உள்ளோம். இந்த வெற்றிக்குப் பிறகு, நாங்கள் எங்கள் இலக்குகளை உயர்த்தியுள்ளோம். இப்போது எங்கள் பணிகள் தொழில்நுட்ப கண்ணோட்டத்தில் இன்னும் சவாலானதாக இருக்கும். நிலவின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரித்து மீண்டும் பூமிக்கு கொண்டு வருவோம். இது சந்திரனைப் பற்றிய நமது அறிவையும் புரிதலையும் மேம்படுத்தும். இதைத் தொடர்ந்து, வெள்ளியும் இஸ்ரோவின் குறிக்கோள்களில் ஒன்றாகும். 2035-ஆம் ஆண்டுக்குள், பாரதம் விண்வெளியில் அதன் சொந்த விண்வெளி நிலையத்தைக் கொண்டிருக்கும். இது விண்வெளியின் அறியப்படாத விரிவாக்கங்களை ஆராய நமக்கு உதவும்.

 

நண்பர்களே

21-ம் நூற்றாண்டின் பாரதம், வளர்ச்சியடைந்து, அதன் திறன்களால் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாம் கிட்டத்தட்ட 400 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளோம். ஆனால் அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் 33 செயற்கைக்கோள்கள் மட்டுமே விண்ணில் செலுத்தப்பட்டன.

 

நண்பர்களே

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இந்த தீர்மானத்தை அடைவதில் விண்வெளித் துறையின் பங்கு மகத்தானது. விண்வெளி அறிவியல் என்பது ராக்கெட் அறிவியல் மட்டுமல்ல.  அது மிகப்பெரிய சமூக அறிவியலும் கூட. விண்வெளி தொழில்நுட்பத்தால் சமூகம் அதிகம் பயனடைகிறது; எல்லோரும் பயனடைகிறார்கள். இன்று, விண்வெளி தொழில்நுட்பம் நம் அன்றாட வாழ்வில் பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. பயிர்களைக் கண்காணித்தல், வானிலை முன்னறிவிப்புகள், சூறாவளிகள் மற்றும் பிற பேரழிவுகள், நீர்ப்பாசன ஆதாரங்கள் என பல பணிகள் மற்றும் கணிப்புகளில் செயற்கைக்கோள் தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன.  இஸ்ரோவும், ஒட்டுமொத்த விண்வெளித் துறையும் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, 140 கோடி இந்தியர்களின் சார்பாக ககன்யான் குழுவினருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், மிக்க நன்றி!

 

பொறுப்புத் துறப்பு: இது பிரதமரின் உரையின் உத்தேசமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

 

***

ANU/PLM/DL



(Release ID: 2010980) Visitor Counter : 50