பிரதமர் அலுவலகம்

அண்மையில் சமாதி அடைந்த சமணத் துறவி சிரோமணி ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் குறித்து பிரதமர் நரேந்திர மோடி எழுதிய அஞ்சலிக் கட்டுரை

Posted On: 21 FEB 2024 12:47PM by PIB Chennai

புனிதத் துறவி சிரோமணி ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் ஜி, அண்மையில் சமாதி அடைந்து நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். ஆழ்ந்த ஞானம், எல்லையற்ற இரக்கம் மற்றும் மனிதகுலத்தை மேம்படுத்துவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் அவரது வளமான ஆன்மீக வாழ்க்கை அமைந்திருந்தது. பல சந்தர்ப்பங்களில் அவரது ஆசீர்வாதங்களைப் பெறும் பாக்கியத்தை நான் பெற்றுள்ளேன்நான் உட்பட எண்ணற்ற ஆத்மாக்களுக்கு வழிகாட்டிய அவரது இழப்பை மிக பெரிய இழப்பாக நான் உணர்கிறேன். அவரது அரவணைப்பு, பாசம் மற்றும் ஆசீர்வாதங்கள், நல்லெண்ணத்தின்  அடையாளங்கள் மட்டுமல்ல. அவை ஆன்மீக சக்தியின் ஆழமான பரிமாற்றங்களாக அமைந்ததுடன், அவரது தொடர்பு கிடைத்த அதிர்ஷ்டசாலிகள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாகவும் இருந்தன.

பூஜ்ய ஆச்சார்ய ஜி, ஞானம், இரக்கம் மற்றும் சேவை ஆகிய மூன்று அம்சங்களின் சங்கமமாக எப்போதும் நினைவுகூரப்படுவார். அவர் ஒரு உண்மையான தவசீலராக திகழ்ந்தார். அவரது வாழ்க்கை பகவான் மகாவீரரின் கொள்கைகளை கொண்டதாக இருந்தது. அவரது வாழ்வு சமண சமயத்தின் முக்கிய கொள்கைகளுக்கு எடுத்துக்காட்டாக இருந்தது. அதன் கொள்கைகளை தமது சொந்த செயல்கள் மற்றும் போதனைகள் மூலம் அவர் பின்பற்றினார். அனைத்து உயிர்களிடமும் அவர் கொண்டிருந்த அக்கறை, உயிர்களின் மீது ஆழ்ந்த அன்பு செலுத்தும் சமண சமயத்தின் கொள்கையைப் பிரதிபலித்தது. எண்ணம், சொல் மற்றும் செயலில் நேர்மையை சமண மதம் வலியுறுத்துகிறது. அதைப் பிரதிபலிக்கும் வகையில் அவர் உண்மையாக வாழ்ந்தார். அவர் மிகவும் எளிமையான வாழ்க்கை முறையையும் பின்பற்றினார். சமண சமயத்தாலும், பகவான் மகாவீரரின் வாழ்க்கையாலும் உலகம் தொடர்ந்து உத்வேகம் பெற்று வருவதற்கு இவரைப் போன்ற மாபெரும் துறவிகளே காரணம். அவர் சமண சமூகத்தில் உயர்ந்து நின்றார். ஆனால் அவரது தாக்கமும் செல்வாக்கும் ஒரு சமூகத்திற்குள் மட்டும் அடங்கிவிடவில்லை. பல்வேறு நம்பிக்கைகள், பிராந்தியங்கள் மற்றும் கலாச்சாரங்களைக் கடந்து பலதரப்பட்ட மக்களும் அவரிடம் வந்தனர். ஆன்மீக விழிப்புணர்வுக்காக, குறிப்பாக இளைஞர்களிடையே அவர் அயராது உழைத்தார்.

கல்வி அவரது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு பகுதியாக இருந்தது. வித்யாதர் என்ற  அவரது குழந்தைப் பருவ பெயர் முதல் வித்யாசாகர்  ஜி மகராஜ் வரையிலான அவரது பயணம் அறிவைப் பெறுவதிலும் வழங்குவதிலும் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் அமைந்திருந்தது. கல்வி என்பது நீதி  மற்றும் அறிவொளியுடன் கூடிய சமூகத்திற்கான வலுவான அடித்தளம் என்பது அவரது உறுதியான நம்பிக்கையாக இருந்தது. தனிநபர்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களது வாழ்க்கையில் ஒளியேற்றும் வழியாக கல்வி அறிவை அவர் ஆதரித்தார். அவரது போதனைகள் உண்மையான ஞானத்திற்கான பாதைகளாக அமைந்திருந்தன. சுய ஆய்வு மற்றும் சுய விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை அவை வலியுறுத்தின. வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் ஆன்மீக வளர்ச்சியில் ஈடுபட வேண்டும் என்று அவரைப் பின்பற்றுபவர்களை வலியுறுத்தின.

அதே நேரத்தில், புனிதத் துறவி சிரோமணி ஆச்சார்ய வித்யாசாகர் ஜி மகராஜ் ஜி, நமது கலாச்சார நெறிமுறைகளில் வேரூன்றிய கல்வியை நமது இளைஞர்கள் பெற வேண்டும் என்று விரும்பினார். கடந்த காலங்களில் நாம் கற்ற பாடங்களிலிருந்து விலகிச் சென்றதால்தான் தண்ணீர் தட்டுப்பாடு போன்ற முக்கிய சவால்களுக்கு நம்மால் தீர்வு காண முடியவில்லை என்று அவர் அடிக்கடி கூறுவார். முழுமையான கல்வி என்பது திறன் மற்றும் புதுமைகளில் கவனம் செலுத்தும் ஒன்றாகும் என்றும் அவர் நம்பினார். இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மை குறித்து பெருமிதம் கொண்ட அவர், இந்திய மொழிகளைக் கற்க வேண்டும் என இளைஞர்களை ஊக்குவித்தார்.

பூஜ்ய ஆச்சார்ய ஜி, சமஸ்கிருதம், பிராகிருதம் மற்றும் இந்தி மொழிகளில் விரிவாக பல்வேறு விஷயங்களை எழுதினார். ஒரு துறவியாக அவர் அடைந்த உயரங்களும், பூமியில் அவர் எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருந்தார் என்பதும் அவரது புகழ்பெற்ற படைப்பானமூக்மதி”-யின் மூலம் தெளிவாக வெளிப்படுகிறது. தமது படைப்புகள் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் குரல் கொடுத்தார்.

உடல் நலத்திலும் பூஜ்ய ஆச்சார்யாவின் பங்களிப்பு  நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. இதில் அவர் பல முன்முயற்சிகளை மேற்கொண்டார். ஆரோக்கியம் தொடர்பான அவரது அணுகுமுறை முழுமையானது. உடல் நலத்தை ஆன்மீக ஆரோக்கியத்துடன் ஒருங்கிணைத்துஅதன் மூலம் ஒட்டுமொத்த நபரின் தேவைகளை நிவர்த்தி செய்யும் அணுகுமுறையை அவர் கொண்டிருந்தார்.

புனிதத் துறவி சிரோமணி ஆச்சார்ய ஸ்ரீ வித்யாசாகர் ஜி மகராஜ் ஜி தேச நிர்மாணத்தில் கொண்டிருந்த உறுதிப்பாடு குறித்து, எதிர் கால தலைமுறையினர் விரிவாக படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். எந்தவொரு பாகுபாட்டையும் கைவிட்டு தேச நலனில் கவனம் செலுத்துமாறு அவர் எப்போதும் மக்களை வலியுறுத்தி வந்தார். வாக்களிப்பதை ஜனநாயக செயல்முறைகளில் பங்கேற்பதன் வெளிப்பாடாக அவர் பார்த்தார். அதனால் வாக்களிப்பதன்  வலுவான ஆதரவாளர்களில் ஒருவராக அவர் இருந்தார். ஆரோக்கியமான மற்றும் தூய்மையான அரசியலை ஆதரித்த அவர், கொள்கை வகுப்பது மக்களின் நலனைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்றும்  சுயநலம் சார்ந்ததாக இருக்கக்கூடாது என்றும் கூறினார்.

மக்கள், தங்களுக்காகவும், தங்கள் குடும்பங்களுக்காகவும், சமூகத்திற்காகவும், நாட்டிற்காகவும் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் அடித்தளத்தின் மீது ஒரு வலுவான தேசம் கட்டமைக்கப்படுகிறது என்று அவர் நம்பினார். நேர்மை, ஒருமைப்பாடு மற்றும் தன்னம்பிக்கை போன்ற நற்பண்புகளை ஒவ்வொரு தனி நபரும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இது நியாயமான, கருணையுள்ள மற்றும் செழிப்பான சமூகத்தை உருவாக்க அவசியம் என்று அவர் உறுதியாக நம்பினார். வளர்ச்சி அடைந்த பாரதத்தை  உருவாக்க நாம் பணியாற்றும்போது இது போன்ற கடமைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மிகவும் முக்கியமானதாகும்.

உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் சீர்கேடு தலைவிரித்தாடும் இந்தக் காலகட்டத்தில், இயற்கைக்கு ஏற்படும் தீங்கைக் குறைக்கும் ஒரு வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டும் என்று பூஜ்ய ஆச்சார்ய ஜி அழைப்பு விடுத்தார். அதேபோல், நமது பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிப்பதை உணர்ந்த அவர், விவசாயத்தை நவீனமாகவும், நிலையானதாகவும் மாற்றவேண்டும் என வலியுறுத்தினார். அவர் சிறைக் கைதிகளை சீர்திருத்துவதில் அவர் ஆற்றிய பணிகளும் குறிப்பிடத்தக்கவையாகும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நமது மண் மற்றவர்களுக்கு ஒளியைக் காட்டி நமது சமூகத்தை மேம்படுத்திய மகான்களை உருவாக்கியுள்ளதுஇதுவே நமது மண்ணின் தனி அழகாகும். புகழ்பெற்ற துறவிகள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளின் வரிசையில் பூஜ்ய ஆச்சார்ய ஜி ஒரு மிகச் சிறந்த நபராக நிற்கிறார். அவர் எதைச் செய்தாலும், நிகழ்காலத்திற்காக மட்டுமல்லாமல், எதிர்காலத்திற்காகவும் செய்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர்கரில் உள்ள சந்திரகிரி ஜெயின் மந்திருக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தப் பயணம் பூஜ்ய ஆச்சார்ய ஜி-யுடனான எனது கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை. அவரைச் சந்தித்த அந்தத் தருணங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அவர் என்னுடன் நீண்ட நேரம் பேசினார். தேசத்திற்கு சேவை செய்வதில் நான் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அவர் என்னை ஆசீர்வதித்தார். நமது நாடு செல்லும் திசை மற்றும் உலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைத்து வரும் மரியாதை குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் செய்து கொண்டிருந்த பணிகளைப் பற்றி பேசும்போது அவர் உற்சாகத்தால் திளைத்தார். அப்போதும் எப்போதும், அவரது மென்மையான பார்வையும், அமைதியான புன்னகையும், மன அமைதியை ஏற்படுத்துவதாக இருந்தன. அவரது ஆசீர்வாதம் ஆன்மாவுக்கு ஒரு இனிமையான மருந்தைப் போல அமைந்திருந்தது, நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும் தெய்வீகத்தை அது உணர்த்தியது.

புனிதத் துறவி சிரோமணி ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் ஜி-யின் சமாதி அடைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள வெற்றிடம், அவரை அறிந்த, அவரது போதனைகள் மற்றும் அவரது வாழ்க்கையால் உத்வேகம் பெற்ற அனைவராலும் ஆழமாக உணரப்படுகிறது. இருப்பினும், அவரால் உத்வேகம் பெற்ற அனைவரது  இதயங்களிலும், மனதிலும் அவர் வாழ்கிறார். அவரது நினைவைக் கௌரவிக்கும் வகையில், அவர் பின்பற்றிய கொள்கைகளை பின்பற்றி நடக்க நாம் உறுதியேற்போம். இதன் மூலம் நாம் ஒரு மகத்தான ஆத்மாவுக்கு அஞ்சலி செலுத்துவோம். அதோடு  மட்டுமல்லாமல், நமது நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் அவரது பணியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.

-----------------

(Release ID: 2007611)
ANU/PKV/PLM/RS/KRS



(Release ID: 2007638) Visitor Counter : 69