பிரதமர் அலுவலகம்

வேலைவாய்ப்புத் திருவிழாவின் போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணி நியமனக் கடிதங்களை வழங்கி பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 12 FEB 2024 12:14PM by PIB Chennai

எனதருமை இளம் நண்பர்களே,

இன்று, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசுத் துறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. உங்கள் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் இந்த சாதனைக்கு வழிவகுத்துள்ளது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் வேகமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக, வேலை விளம்பரம் முதல் நியமனக் கடிதங்களை வழங்குவதற்கான செயல்முறை வரை கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களில் அதிக காலம் எடுத்தது. இது லஞ்ச கலாச்சாரத்தை வளர்த்தது. நாங்கள் இப்போது ஆட்சேர்ப்பு செயல்முறையில் வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளித்துள்ளோம். செயல்திறன் மற்றும் நியாயத்தை உறுதி செய்துள்ளோம். ஆட்சேர்ப்பு செயல்முறை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நடைபெறுவதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது, ஒவ்வொரு இளைஞருக்கும் திறன்களை வெளிப்படுத்த சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. இப்போது இளைஞர்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் திறமையால் தங்களுக்கென ஒரு இடத்தைப் பெற முடியும் என்று நம்புகிறார்கள். 2014 முதல், மத்திய அரசுடன் இளைஞர்களை ஈடுபடுத்துவதும், தேச நிர்மாண முயற்சிகளில் அவர்களை ஈடுபடுத்துவதும் எங்கள் நோக்கமாக உள்ளது. முந்தைய அரசின் கடைசி பத்தாண்டுகளுடன்  ஒப்பிடும்போது பிஜேபி அரசு அதன் பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு அதிக அரசு வேலைகளை வழங்கியுள்ளது. இன்று, தில்லியில் ஒருங்கிணைந்த பயிற்சி வளாகம் ஒன்றுக்கும் நாம் அடிக்கல் நாட்டியுள்ளோம். இது நமது திறன் மேம்பாட்டு முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

அரசின் முயற்சிகளால் நாட்டில் இளைஞர்களுக்கு புதிய வழிகள் திறக்கப்படுகின்றன. அரசு தொடங்கியுள்ள பல்வேறு இயக்கங்கள், வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான எண்ணற்ற புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. சமீபத்திய பட்ஜெட்டில் பார்த்தபடி, ஒரு கோடி குடும்பங்களுக்கு கூரை சூரிய மின்சக்தி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் கூரைகளில் சோலார் பேனல்களை நிறுவுபவர்கள் இரட்டை நன்மைகளைப் பெறுவார்கள்: பூஜ்ஜிய மின்சாரக் கட்டணங்கள் மற்றும் உபரி மின்சார உற்பத்தியிலிருந்து கூடுதல் வருமானம் என்ற நன்மைகள் அவை. இந்த மாபெரும் கூரை சூரிய சக்தி திட்டம் பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.

எனது இளம் நண்பர்களே,

இன்று, பாரதம் உலக அளவில் மூன்றாவது பெரிய புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. நாட்டில் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 1.25 லட்சத்தை எட்டியுள்ளது. இவை லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. பட்ஜெட்டில் ரூ. 1 லட்சம் கோடி மதிப்புள்ள புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நிதியத்தை நிறுவுவதற்கான திட்டங்களும் அடங்கியுள்ளன.

நண்பர்களே,

இந்திய ரயில்வேயும் இந்த வேலைவாய்ப்புத் திருவிழாவில் பங்கேற்கிறது. நீண்ட பயணங்களை மேற்கொள்ளும் பல குடும்பங்களுக்கு ரயில்வே விருப்பமான தேர்வாக உள்ளது. இந்திய ரயில்வே தற்போது ஒரு பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது, இந்த பத்தாண்டின் இறுதிக்குள் முற்றிலும் புதுப்பிக்கப்பட உள்ளது. 2014-க்கு முன்பு ரயில்வேயின் நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மின்மயமாக்கல், ரயில் பாதைகளை இரட்டிப்பாக்குதல், செயல்பாட்டுத் திறன் மற்றும் பயணிகளுக்கான வசதிகள் போன்ற முக்கிய அம்சங்களை முந்தைய அரசுகள் புறக்கணித்தன என்பது தெளிவாகிறது. முந்தைய அரசுகள் சாதாரண இந்தியனின் பிரச்சினைகளில் அலட்சியமாக இருந்தன. எவ்வாறாயினும், 2014 முதல், ரயில்வே உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதன் மூலமும் மேம்படுத்துவதன் மூலமும் நல்ல பயண அனுபவத்தை வழங்குவதற்கான ஒரு விரிவான பணியை நாங்கள் தொடங்கியுள்ளோம்.

நண்பர்களே,

மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து இணைப்பு, பயணத்தை எளிதாக்குவது போன்றவை மட்டுமின்றி, புதிய சந்தைகளை உருவாக்குவதன் மூலமும், சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலமும், புதிய வணிகங்களின் தோற்றத்தை ஊக்குவிப்பதன் மூலமும் பொருளாதார வளர்ச்சியை அரசு ஊக்குவிக்கிறது, இதனால் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், மெட்ரோ அமைப்புகள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றில் திட்டங்களை விரைவுபடுத்தி, அதன் விளைவாக வேலைவாய்ப்புக்கான புதிய வழிகளை உருவாக்கும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 11 லட்சம் கோடி முதலீட்டு இலக்கு சமீபத்திய பட்ஜெட்டில் உள்ளது.

நண்பர்களே,

இன்று, நியமனக் கடிதங்களைப் பெற்ற இளைஞர்களில் கணிசமான எண்ணிக்கையினர், துணை ராணுவப் படையில் சேர உள்ளனர். இது அவர்களின்  ஒரு பெரிய ஆசையை நிறைவேற்றுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, துணை ராணுவப் படைக்கு ஆட்சேர்ப்பு செயல்முறையில் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி முதல் செயல்படுத்தப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 13 மொழிகளில் எழுத்துத் தேர்வுகளை நடத்துவதற்கான முடிவு, பங்கேற்பாளர்களுக்கு தங்கள் திறன்களை வெளிப்படுத்த சம வாய்ப்புகளை வழங்குகிறது. மேலும், எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்கள் மற்றும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் ஒவ்வொரு அரசு ஊழியரும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இன்று எங்களுடன் இணைந்துள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்தப் பயணத்தில் புதிய உத்வேகத்தை வழங்குவார்கள். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறையில், ஒவ்வொரு நாளும் தேசத்தைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்ட உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என்ற உறுதியுடன் முன்னோக்கி செல்லுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள். மிகவும் நன்றி.

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும்.  பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

***

ANU/PKV/PLM/RS/KV



(Release ID: 2005810) Visitor Counter : 59