பிரதமர் அலுவலகம்

ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பிரதமரின் பயணம் (பிப்ரவரி 13-14, 2024)

Posted On: 10 FEB 2024 5:37PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 பிப்ரவரி 13 முதல் 14 வரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.

இது, 2015 முதல் ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பிரதமர் திரு மோடியின் ஏழாவது பயணமாகவும், கடந்த எட்டு மாதங்களில் மூன்றாவது முறையாகவும் இருக்கும். இந்தப் பயணத்தின்போது, ஐக்கிய அரபு அமீரக அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார்.  இரு நாடுகளுக்கும் இடையிலான  உத்தி சார்ந்த கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவது, விரிவுபடுத்துவது மற்றும் வலுப்படுத்துவதற்கான  வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பதோடு, பரஸ்பர  நன்மை பயக்கும் பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான  திரு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்-ஐயும் பிரதமர் சந்திக்க உள்ளார். அவரது அழைப்பை ஏற்று, துபாயில் நடைபெறவுள்ள உலக அரசு உச்சிமாநாடு 2024-ல் கெளரவ விருந்தினராகப் பிரதமர் பங்கேற்று நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுவார்.

அபுதாபியில் உள்ள முதல் இந்து கோயிலான பி.ஏ.பி.எஸ் ஆலயத்தைப் பிரதமர் திறந்து வைக்கிறார். அபுதாபியில் உள்ள சயீத் விளையாட்டு நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே அவர் உரையாற்றுவார்.

இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் வலுவான அரசியல், கலாச்சார மற்றும் பொருளாதார இணைப்புகளின் அடிப்படையில் இணக்கமான,  நெருங்கிய மற்றும் பன்முக உறவுகளைக் கொண்டுள்ளன. 2015 ஆகஸ்டில் ஐக்கிய அரபு  அமீரகத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் விரிவான உத்திசார் கூட்டாண்மையாக உயர்த்தப்பட்டன. எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் மற்றும் அரபு அமீரக திர்ஹம் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இரு நாடுகளும் பிப்ரவரி 2022-ல் ஒரு விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் மற்றும் ஜூலை 2023-ல் உள்ளூர் நாணயத் தீர்வு அமைப்பில் கையெழுத்திட்டன.

2022-23-ல் சுமார் 85 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருதரப்பு வர்த்தகத்துடன் இரு நாடுகளும் பரஸ்பர வர்த்தகப் பங்காளிகளாக உள்ளன. 2022-23-ல் அந்நிய நேரடி முதலீடுகளின் அடிப்படையில் இந்தியாவின் முதல் 4 முதலீட்டாளர்களில் ஐக்கிய அரபு அமீரகமும் உள்ளது.

சுமார் 3.5 மில்லியன் வலுவான மற்றும் துடிப்பான இந்திய சமூகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகப்பெரிய வெளிநாட்டவர் சமூகமாக உள்ளது. ஐக்கிய அரபு  அமீரகத்துடனான நமது சிறந்த இருதரப்பு உறவுகளுக்கும் குடியிருக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் அவர்களின் நேர்மறையான மற்றும் நன்கு பாராட்டப்பட்ட பங்களிப்பு ஒரு முக்கிய அடித்தளமாக உள்ளது.

***

ANU/SMB/BR/KV



(Release ID: 2005188) Visitor Counter : 61