பிரதமர் அலுவலகம்
தில்லி செங்கோட்டையில் பராக்ரம தினக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
Posted On:
23 JAN 2024 9:01PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற பராக்ரம தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்றார். குடியரசு தின அலங்கார ஊர்திகள் மற்றும் கலாச்சார கண்காட்சிகளுடன் நாட்டின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் பாரத் பர்வ் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். நேதாஜி குறித்த புகைப்படங்கள், ஓவியங்கள், புத்தகங்கள் மற்றும் சிற்பங்கள் அடங்கிய தேசிய ஆவணக் காப்பகத்தின் தொழில்நுட்பம் சார்ந்த கலந்துரையாடல் கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர், தேசிய நாடகப் பள்ளி வழங்கிய நேதாஜியின் வாழ்க்கை குறித்த நாடகத்தையும் பார்வையிட்டார். ஐ.என்.ஏவில் உயிருடன் இருக்கும் ஒரே முன்னாள் வீரரான லெப்டினன்ட் ஆர். மாதவனையும் அவர் பாராட்டினார். சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய பிரபலங்களின் பங்களிப்பை முறையாக கௌரவிக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குக்கு ஏற்ப, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளில் 2021 முதல் பராக்ரம தினம் கொண்டாடப்படுகிறது.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளன்று கொண்டாடப்படும் பராக்ரம தினத்தை முன்னிட்டு தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஒரு காலத்தில் ஆசாத் ஹிந்த் ஃபாஜின் வீரத்திற்கு சாட்சியாக இருந்த செங்கோட்டை மீண்டும் ஒருமுறை புதிய சக்தியால் நிரம்பியுள்ளது என்று அவர் கூறினார். பராக்ரம தினம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, இது குடியரசு தின கொண்டாட்டங்களை ஜனவரி 23-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 30-ஆம் தேதி மகாத்மா காந்தியின் நினைவு நாள் வரை விரிவுபடுத்தியுள்ளது என்று வலியுறுத்திய பிரதமர், இப்போது ஜனவரி 22-ஆம் தேதி கொண்டாடப்படும் புனிதமான கொண்டாட்டங்களும் இந்த ஜனநாயகத் திருவிழாவின் ஒரு பகுதியாக மாறியுள்ளன என்று குறிப்பிட்டார். ஜனவரி மாதத்தின் கடைசி சில நாட்கள் இந்தியாவின் நம்பிக்கை, கலாச்சார உணர்வு, ஜனநாயகம் மற்றும் தேசபக்திக்கு உத்வேகம் அளிக்கின்றன என்று தனது வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஒவ்வொருவரையும் பிரதமர் பாராட்டினார். முன்னதாக, பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது பெற்ற இளைஞர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். "இந்தியாவின் இளைய தலைமுறையினரை நான் சந்திக்கும்போதெல்லாம், வளர்ச்சி அடைந்த பாரதக் கனவு மீதான எனது நம்பிக்கை மேலும் வலுப்பெறுகிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நாட்டின் இந்த 'அமிர்தத்' தலைமுறைக்கு ஒரு பெரிய முன்மாதிரி" என்று பிரதமர் கூறினார்.
தமது உரையின் நிறைவுப் பகுதியில், இந்தியாவிற்கும் அதன் மக்களுக்கும் அடுத்த 25 ஆண்டுகளின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்ததுடன், அமிர்தக் காலத்தின் ஒவ்வொரு தருணத்தையும் தேச நலன்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "நாம் கடினமாக உழைக்க வேண்டும், நாம் தைரியமாக இருக்க வேண்டும். வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கு இது மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தீர்மானத்தை பராக்ரம தினம் நமக்கு நினைவூட்டும்" என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர்கள் திரு அர்ஜுன் ராம் மேக்வால், திருமதி மீனாட்சி லேகி மற்றும் மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் திரு அஜய் பட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
*****
PKV/RB/DL
(Release ID: 2002360)
Visitor Counter : 64
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam