பிரதமர் அலுவலகம்
ஸ்ரீ சோனல் மாதா நூற்றாண்டு விழாவில் காணொலி மூலம் பிரதமர் உரை
"மாதா தாம், சரண் சமூகத்தின் மரியாதை, அதிகாரம், சடங்குகள் மற்றும் பாரம்பரியங்களின் மையமாகும்"
"ஸ்ரீ சோனல் மாதாவின் ஆன்மீக ஆற்றல், மனிதாபிமான போதனைகள் மற்றும் தவம் அவரது ஆளுமையில் ஒரு அற்புதமான தெய்வீக வசீகரத்தை உருவாக்கியது, அதை இன்றும் உணர முடியும்"
"சோனல் மாதாவின் முழு வாழ்க்கையும் மக்கள் நலன், நாட்டுக்கு சேவை மற்றும் மதத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டது"
"தேசபக்தி பாடல்களாக இருந்தாலும் சரி, ஆன்மீக சொற்பொழிவுகளாக இருந்தாலும் சரி, சரண் இலக்கியம் பல நூற்றாண்டுகளாக முக்கிய பங்கு வகிக்கிறது"
"சோனல் மாதாவிடம் ராமாயணக் கதையைக் கேட்டவர்களால் அதனை மறக்கவே முடியாது"
Posted On:
13 JAN 2024 12:08PM by PIB Chennai
சோனல் மாதாவின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார்.
பிரதமர் தமது காணொலி உரையில், புனித பவுஷ் மாதத்தில் ஸ்ரீ சோனல் மாவின் நூற்றாண்டு விழா நடைபெறுவதாகக் கூறினார். சோனல் மாதாவின் ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவித்த அவர், இந்தப் புனித நிகழ்வில் பங்கேற்பது ஒரு பாக்கியம் என்றும் கூறினார்.
இந்த நிகழ்வில் ஒட்டுமொத்த சரண் சமாஜம் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, "மாதா தாம், சரண் சமூகத்தின் மரியாதை, அதிகாரம், சடங்குகள் மற்றும் பாரம்பரியங்களின் மையமாகும். நான் ஸ்ரீ ஆயின் பாதங்களை சிரம்தாழ்ந்து வணங்குகிறேன்" என்றார்.
சோனல் மாதாவின் பிறந்த நூற்றாண்டு விழாவின் நினைவுகள் இன்னும் புத்துணர்ச்சியுடன் உள்ளன என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், எந்த சகாப்தத்திலும் பகவதி ஸ்வரூபா சோனல் மா, ஒரு வாழும் எடுத்துக்காட்டு என்று கூறினார்.
குஜராத் மற்றும் சௌராஷ்டிரா ஆகியவை பெரிய துறவிகள் மற்றும் ஆளுமைகளின் பூமியாக இருப்பதைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பல துறவிகள் மற்றும் மகா ஆன்மாக்கள் இந்தப் பிராந்தியத்தில் உள்ள முழு மனிதகுலத்திற்கும் தங்கள் ஒளியை பரப்பியுள்ளனர் என்று கூறினார்.
புனித கிர்னார், பகவான் தத்தாத்ரேயர் மற்றும் எண்ணற்ற மகான்களின் இடமாக இது இருந்ததாக அவர் குறிப்பிட்டார். சௌராஷ்டிராவின் இந்த நித்திய புனித பாரம்பரியத்தில், "ஸ்ரீ சோனல் மாதா நவீன சகாப்தத்திற்கு ஒளிவிளக்கு போன்றவர். அவரது ஆன்மீக ஆற்றல், மனிதாபிமான போதனைகள் மற்றும் தவம் அவரது ஆளுமையில் ஒரு அற்புதமான தெய்வீக வசீகரத்தை உருவாக்கியது, இதனை ஜுனாகத் மற்றும் சோனல் தாமில் இன்றும் உணர முடியும்’’ என்று பிரதமர் கூறினார்.
பகத் பாபு, வினோபா பாவே, ரவிசங்கர் மகராஜ், கன்பாய் லஹேரி, கல்யாண் சேத் போன்ற மகத்தான மனிதர்களுடன் பணியாற்றிய சோனல் மாவின் முழு வாழ்க்கையும் பொது நலன், நாடு மற்றும் மதத்திற்கான சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்று பிரதமர் கூறினார்.
சரண் சமூகத்தின் அறிஞர்களிடையே அவருக்கு ஒரு சிறப்பு இடம் இருந்தது என்றும், அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கியதன் மூலம் பல இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றியதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
சமூகத்திற்கு சோனல் மாதா ஆற்றிய பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர், சமூகத்தில் கல்வி மற்றும் போதை ஒழிப்புக்காக அவர் ஆற்றிய அற்புதமான பணிகளைச் சுட்டிக்காட்டினார். தீய பழக்கங்களிலிருந்து சமூகத்தைக் காப்பாற்ற சோனல் மாதா பாடுபட்டார் என்றும், கட்ச்சின் வோவார் கிராமத்திலிருந்து ஒரு பெரிய உறுதிமொழி பிரச்சாரத்தைத் தொடங்கியதாகவும், கடினமாக உழைத்து கால்நடைகளைப் பாதுகாப்பதன் மூலம் தற்சார்பு பெறுவதை வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.
ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளுடன், சோனல் மா நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் வலுவான பாதுகாவலராகவும் இருந்தார் என்றும், பிரிவினையின் போது ஜுனாகத்தை உடைக்க நடந்து வந்த சதிகளுக்கு எதிராக மா சாண்டியைப் போலவே அவர் துணிந்து நின்றது குறித்தும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
"ஸ்ரீ சோனல் மா நாட்டிற்கு சரண் சமூகத்தின் பங்களிப்புகளின் சிறந்த அடையாளமாகும்" என்று கூறிய பிரதமர், இந்தச் சமூகத்திற்கு இந்தியாவின் சாத்திரங்களிலும் ஒரு சிறப்பு இடமும் மரியாதையும் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
பகவத் புராணம் போன்ற புனித நூல்கள் சரண் சமூகத்தை ஸ்ரீ ஹரியின் நேரடி வாரிசுகள் என்று குறிப்பிடுகின்றன என்று அவர் தெரிவித்தார். அன்னை சரஸ்வதியும் இந்த சமுதாயத்திற்கு சிறப்பான ஆசீர்வாதங்களை வழங்கியுள்ளார். இந்த சமூகத்தில் பல அறிஞர்கள் பிறந்துள்ளனர்.
எடுத்துக்காட்டாக பூஜ்ய தரண் பாபு, பூஜ்ய ஐசர் தாஸ் ஜி, பிங்கல்ஷி பாபு, பூஜ்ய காக் பாபு, மேருபா பாபு, சங்கர்தன் பாபு, சம்புதன் ஜி, பஜினிக் நரன்சாமி, ஹேமுபாய் காத்வி, பத்மஸ்ரீ கவி அப்பா மற்றும் பத்மஸ்ரீ பிகுடான் காத்வி மற்றும் சரண் சமாஜத்தை வளப்படுத்திய பல ஆளுமைகளை பிரதமர் சுட்டிக்காட்டினார்..
"பரந்த சரண் இலக்கியம் இந்த மகத்தான பாரம்பரியத்திற்கு இன்னும் சான்றாக உள்ளது. தேசபக்தி பாடல்களாக இருந்தாலும் சரி, ஆன்மீக சொற்பொழிவுகளாக இருந்தாலும் சரி, சரண் இலக்கியம் பல நூற்றாண்டுகளாக முக்கிய பங்கு வகிக்கிறது", என்று வலியுறுத்திய பிரதமர், ஸ்ரீ சோனல் மாவின் சக்திவாய்ந்த ஒரு சிறந்த எடுத்துக்காட்டான.உரையைப் பற்றிக் குறிப்பிட்டார்,
பாரம்பரிய முறைகள் மூலம் அவர் ஒருபோதும் கல்வியைப் பெறவில்லை என்றாலும், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் வலுவான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார் மற்றும் சாத்திரங்களில் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தார் என்று அவர் தெரிவித்தார்.
"அவரிடமிருந்து ராமாயணக் கதையைக் கேட்டவர்கள் அதை ஒருபோதும் மறக்க முடியாது" என்று பிரதமர் குறிப்பிட்டார். ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலில் நடைபெறவிருக்கும் பிரான் பிரதிஷ்டை விழாவைப் பற்றி அறிந்தால் சோனல் மாதாவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது என்று குறிப்பிட்ட பிரதமர், ஜனவரி 22 ஆம் தேதி புனிதமான சந்தர்ப்பத்தில் ஸ்ரீ ராம் ஜோதியை ஏற்றுமாறு அனைவரையும் வலியுறுத்தினார்.
நேற்று தொடங்கப்பட்ட, நாட்டில் உள்ள கோயில்களுக்கான தூய்மை இயக்கத்தைப் பற்றியும் பிரதமர் பேசினார். "இந்தத் திசையிலும் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதுபோன்ற முயற்சிகளால், ஸ்ரீ சோனல் மாவின் மகிழ்ச்சி பன்மடங்கு அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன்.
ஸ்ரீ சோனல் மாவின் உத்வேகம், இந்தியா ஒரு வளர்ந்த மற்றும் தற்சார்பு நாடாக திகழ்வதற்கு புதிய ஆற்றலை அளிக்கிறது என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
இந்த இலக்குகளை அடைவதில் சரண் சமூகத்தின் பங்கையும் அவர் குறிப்பிட்டார். "சோனல் மா வழங்கிய 51 கட்டளைகள் சரண் சமூகத்திற்கான வழிகாட்டி" என்று கூறிய பிரதமர், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ந்து பணியாற்றுமாறு சரண் சமூகத்தை அவர் வலியுறுத்தினார்.
சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்காக மாதா தாமில் நடைபெற்று வரும் சதாவ்ரதாவின் தொடர்ச்சியான யாகத்தை அவர் பாராட்டினார், மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற எண்ணற்ற தேசத்தைக் கட்டியெழுப்பும் சடங்குகளுக்கு மததா தாம், தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
----
ANU/PKV/BS/DL
(Release ID: 1995838)
Visitor Counter : 113
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam