பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டில் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய செயல்பாடுகளுக்கு உலகளாவிய தொழில்துறை தலைவர்கள் பாராட்டு

Posted On: 10 JAN 2024 12:28PM by PIB Chennai

10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று  (10.01.2024) காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள் 'எதிர்காலத்திற்கான நுழைவாயில்' என்பதாகும். இதில் 34 நாடுகள் மற்றும் 16 அமைப்புகள் பங்கேற்கின்றன. வடகிழக்குப் பிராந்தியங்களில் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்க வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் இந்த மாநாட்டை ஒரு தளமாகவும் பயன்படுத்துகிறது.

பல்வேறு தொழில்துறை தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றினர்.

ஆர்செலர் மிட்டல் நிறுவனத்தின் தலைவர் திரு லக்ஷ்மி மிட்டல் பேசுகையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டிற்கு வந்தததை நினைவு கூர்ந்தார். துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டின் உலகளாவிய நிகழ்ச்சிக்கான கட்டமைப்பை உருவாக்கப் பிரதமர் முக்கியத்துவம் அளித்ததை அவர் பாராட்டினார். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கொள்கைகளில் பிரதமரின் நம்பிக்கையையும், ஒவ்வொரு சர்வதேச மன்றத்திலும் உலகளாவிய தென்பகுதி நாடுகளின் குரலைப் பிரதமர் வலுப்படுத்துவதையும் அவர் எடுத்துரைத்தார். ஒரு நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்வதில் எஃகு தொழில்துறையின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய திரு மிட்டல், 2021-ம் ஆண்டில் ஆர்செலர் மிட்டல் நிபோன் ஸ்டீல் இந்தியா, ஹஜிரா விரிவாக்கத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதை நினைவுகூர்ந்தார்.  இத்திட்டத்தின் முதல் கட்டம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ஆண்டான 2026க்குள் முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் போன்ற பசுமைத் துறைகளில் முதலீடு செய்வது குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

ஜப்பானின் சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் தலைவர் திரு தோஷிஹிரோ சுசுகி பேசுகையில், பிரதமரின் வலுவான தலைமைத்துவத்தைப் பாராட்டினார். நாட்டில் உற்பத்தித் தொழில்களுக்கு வழங்கப்படும் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இந்தியா இப்போது உலகின் 3-வது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக மாறியுள்ளது என்று கூறிய திரு சுஸுகி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பிரதமரின் முற்போக்கான அணுகுமுறைகளை எடுத்துரைத்தார். உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான முயற்சிகளை சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார வாகனத்தை ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தமது நிறுவனத்தின் திட்டங்களையும் அவர் எடுத்துரைத்தார். எத்தனால். பசுமை ஹைட்ரஜன், மாட்டு சாணத்திலிருந்து உயிரி எரிவாயு உற்பத்தி போன்ற நடவடிக்கைகள்  மூலம் மாசுப்பாட்டைக் குறைக்கும் திட்டம் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

ரிலையன்ஸ் குழுமத்தின் திரு முகேஷ் அம்பானி பேசுகையில்,  துடிப்புமிக்க குஜராத் இன்று உலகின் மிகவும் மதிப்புமிக்க முதலீட்டு உச்சி மாநாடாக உள்ளது என்று கூறினார். ஏனெனில் இது போன்ற வேறு எந்த உச்சி மாநாடும் தொடர்ச்சியாக நடைபெறவில்லை என்று அவர் தெரிவித்தார். இது நமது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார். துடிப்புமிக்க குஜராத்தின் ஒவ்வொரு மாநாட்டிலும் தாம் பங்கேற்றுள்ளதாக அவர்  தெரிவித்தார். தாம் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டிருப்பது குறித்து பெருமிதம் தெரிவித்த திரு அம்பானி, குஜராத்தின் சிறந்த மாற்றங்களுக்காகப் பிரதமரைப் பாராட்டினார். "இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் நவீன காலத்தின் மிகச்சிறந்த தலைவராக உருவெடுத்துள்ள பிரதமர்” என்று அவர் கூறினார். இந்தியாவின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பிரதமர் திரு நரேந்திர மோடி என்று அவர் தெரிவித்தார். உலகமே அவரைப் பாராட்டுகிறது என்றும் சாத்தியமற்றதை அவர் சாத்தியமாக்குகிறார் என்றும்  திரு அம்பானி கூறினார். தமது தந்தை திருபாய் அம்பானியை  நினைவுகூர்ந்த திரு முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் எப்போதும் ஒரு குஜராத்தி நிறுவனமாகவே உள்ளது என்று கூறினார். ஒவ்வொரு ரிலையன்ஸ் வணிகமும் எனது 7 கோடி குஜராத்திகளின் கனவுகளை நிறைவேற்ற முயற்சிக்கிறது என்றும் அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் உலகத் தரம் வாய்ந்த சொத்துக்களை உருவாக்க ரிலையன்ஸ் இந்தியா முழுவதும் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளதாகவும். இதில் மூன்றில் ஒரு பங்கு குஜராத்தில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த 10 ஆண்டுகளில் கணிசமான முதலீடுகளுடன் குஜராத்தின் வளர்ச்சியில் ரிலையன்ஸ் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார். பசுமை வளர்ச்சியில் குஜராத்தை உலகளாவிய தலைமையிடமாக மாற்றுவதில் ரிலையன்ஸ் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 2030 ஆம் ஆண்டிற்குள் குஜராத்தின் எரிசக்தி தேவைகளில் பாதியை, புதுப்பிக்கத்தக்க  எரிசக்தி மூலம் பூர்த்தி செய்ய ரிலையன்ஸ் உதவும் என்று அவர் கூறினார். ஜாம்நகரில் 5000 ஏக்கர் பரப்பளவில் திருபாய் எனர்ஜி ஜிகா காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டு வருவதை அவர் குறிப்பிட்டார். இது 2024-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் செயல்பாட்டிற்கு வரும் என்று அவர் தெரிவித்தார். 5 ஜி சேவை  குஜராத்தில் முழுமையாக இயக்கப்படுகிறது என்றும், இது டிஜிட்டல் தரவு தளத்திலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலும் குஜராத்தை முன்னணி மாநிலமாக மாற்றும் என்றும் அவர் கூறினார். ரிலையன்ஸ் சில்லறை விற்பனை நிறுவனம் தரமான பொருட்களை விற்பனை செய்யவும், லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு உதவவும் தொடர்ந்து விரிவாக்கம்  செய்யப்படும் என்று அவர் கூறினார். புதிய பொருட்கள் மற்றும் சுழற்சிப்  பொருளாதாரத்தில் குஜராத்தை ஒரு முன்னோடியாக ரிலையன்ஸ் நிறுவனம் மாற்றும் என்றும்  அவர் தெரிவித்தார். ரிலையன்ஸ் நிறுவனம் ஹஜிராவில் உலகத் தரம் வாய்ந்த கார்பன் ஃபைபர் வசதியை நிறுவுகிறது என்று அவர் குறிப்பிட்டார். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான ஏலத்தில் இந்தியா பங்கேற்கும் என்று பிரதமர் அறிவித்ததன்படி, குஜராத்தில் விளையாட்டு, கல்வி மற்றும் திறன் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரிலையன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை பல அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் என்று அவர் கூறினார்.

இன்றைய இந்தியா உண்மையில் இளம் தலைமுறையினர் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கும் புதுமைகளைப் புகுத்துவதற்கும் வாய்ப்பளிப்பதாக அவர் தெரிவித்தார். இதற்காக சிறந்த தேசியவாதியாகவும், சர்வதேசவாதியாகவும் உள்ள பிரதமருக்கு வரும் தலைமுறையினர் நன்றி கூறுவார்கள் என்று அவர் தெரிவித்தார். வளர்ச்சியடைந்த பாரதத்திற்குப் பிரதமர் வலுவான அடித்தளம் அமைத்துள்ளதாகவும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா 35 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதை உலகில் உள்ள எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் திரு முகேஷ் அம்பானி கூறினார். இதில் குஜராத் மட்டும் 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் மைக்ரான் டெக்னாலஜிஸ் தலைமைச் செயல் அதிகாரி திரு சஞ்சய் மெஹ்ரோத்ரா பேசுகையில், செமிகண்டக்டர் உற்பத்தியை இந்தியாவில்  அதிகரிப்பதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக முன்னேறும்போது எதிர்காலத்தில் இத்துறை ஒரு பெரிய பொருளாதார உந்து சக்தியாக மாறும் என்று அவர் கூறினார். துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாடு ஒரு செமிகண்டக்டர் சக்தியாக இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமான தொலைநோக்கு சிந்தனைகளை வழங்குவதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்தத் துறையில் உள்ள பல வளர்ச்சி வாய்ப்புகளையும் இந்த மாநாடு எடுத்துரைக்கும் என்று அவர் கூறினார். உலகத் தரம் வாய்ந்த மெமரி அசெம்பிள் மற்றும் டெஸ்ட் வசதியை நிறுவ உதவிய மாநிலம் குஜராத் என்று தெரிவித்தார்.  இது 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் செயல்பாட்டுக்கு வரும் என்றும், இதன் மூலம் வரும் ஆண்டுகளில் 5,000 நேரடி வேலைவாய்ப்புகளும், 15,000 கூடுதல் சமூக வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதானி குழுமத்தின் தலைவர் திரு கௌதம் அதானி பேசுகையில், இதுவரை துடிப்புமிக்க குஜராத், உச்சிமாநாட்டின் ஒவ்வொரு மாநாட்டிலும் பங்கேற்பதில் பெருமிதம் அடைவதாகக் கூறினார். பிரதமரின் அசாதாரண தொலைநோக்குப் பார்வைக்கு நன்றி தெரிவித்த திரு அதானி, பிரதமரின் மகத்தான லட்சியங்கள், துல்லியமான நிர்வாகம், குறைபாடற்ற செயலாக்கம் ஆகியவற்றைப் பாராட்டினார். இந்தியாவின் தொழில்துறை சூழலை சிறப்பாக மாற்றியமைக்க நாடு தழுவிய அளவில் செயல்பாடுகளைத் தூண்டியுள்ள பிரதமரின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார். 2014-ம் ஆண்டு முதல், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 185% மற்றும் தனிநபர் வருமானம் 165% அதிகரித்துள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். புவிசார் அரசியலின் உறுதியின்மை மற்றும் தொற்றுநோய் சவால்களுக்கு இடையேயும் இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். சர்வதேச அரங்கில் பிரதமரின் சாதனைகளை அவர் பாராட்டினார். சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு உருவாக்கம், இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம், உலகளாவிய தென்பகுதி நாடுகளை ஒருங்கிணைத்தது ஆகியவற்றில் பிரதமர் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக திரு அதானி குறிப்பிட்டார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் பிரதமர் செயல்படுவதாகவும், உலகளாவிய எதிர்காலத்தை வடிவமைக்க இந்தியா தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார். 2025-ம் ஆண்டுக்குள் குஜராத்தில் ரூ.55,000 கோடி முதலீடு செய்யப்படும் என்றும், பல்வேறு துறைகளில் ரூ.50,000 கோடி முதலீடு என்ற இலக்கை தாண்டி 25,000 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கவிருப்பதாகவும் அவர் அறிவித்தார். தற்சார்பு இந்தியாவுக்கான பசுமை விநியோக சங்கிலியை விரிவுபடுத்துவது மற்றும் சூரிய தகடுகள், காற்றாலை டர்பைன்கள், ஹைட்ரோ எலக்ட்ரோலைசர்கள், பசுமை அம்மோனியா, பி.வி.சி மற்றும் தாமிரம் மற்றும் சிமெண்ட் திட்டங்களை விரிவுபடுத்துவது உள்ளிட்ட மிகப்பெரிய ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை உருவாக்குவது குறித்தும் அவர் பேசினார். குஜராத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யும் அதானி குழுமத்தின் திட்டம் பற்றியும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் 1 லட்சத்துக்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தென் கொரியாவின் சிம்டெக் தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப்ரி சுன் கூறுகையில், துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு போன்ற மாநாடுகள் வேகமாக வளர்ந்து வரும் நாட்டில் ஒரு புதிய விநியோகத் தொடர் கட்டமைப்பை உருவாக்கும் என்றார். இந்தியாவில் மற்றொரு பெரிய முதலீட்டுக்குத் தமது நிறுவனம் தயாராகி வருவதாகவும், மாநில மற்றும் மத்திய அரசுகள் இதற்கு ஆதரவளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது செமிகண்டக்டர் விநியோகத் தொடர் கட்டமைப்பில் இந்தியாவை மேலும் வலுவாக்கும் என்று அவர் தெரிவித்தார்.

டாடா சன்ஸ் லிமிடெட் தலைவர் திரு என் சந்திரசேகரன் பேசுகையில், குஜராத்தில் நீண்ட காலமாக தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை உள்ளது என்றார். இதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடியே காரணம் என்று அவர் தெரிவித்தார். எதிர்காலத்திற்கான நுழைவாயிலாக குஜராத் தன்னை தெளிவாக நிலைநிறுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடா, குஜராத்தின் நவ்சாரியில் பிறந்ததை அவர் சுட்டிக்காட்டினார். இன்று  டாடா குழுமத்தின் 21  நிறுவனங்கள் மாநிலத்தில் வலுவாக உள்ளன என்று அவர் கூறினார். டாடா குழுமத்தின் மிக முக்கியமான இடங்களில் குஜராத்தும் ஒன்றாகும் என்றும், அதன் வளர்ச்சிப் பயணத்தில் நாங்கள் முக்கிய பங்கு வகிப்போம் என்றும் அவர் கூறினார்.

டிபி வேர்ல்டின் தலைவர் திரு சுல்தான் அகமது பின் சுலைம் பேசுகையில், துடிப்புமிக்க குஜராத் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை நனவாவதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். மேலும் உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக குஜராத் அரசாங்கத்தை அவர் பாராட்டினார். இந்தியாவின் முதன்மையான வணிகப் பகுதியாக குஜராத் அதிவேக வளர்ச்சியை எட்டிவருகிறது என்று அவர் கூறினார். சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரமான கிஃப்ட் சிட்டி, தோலேரா சிறப்பு முதலீட்டு மண்டலம் மற்றும் குஜராத் கடல்சார் முதலீட்டு வழித்தடம் போன்ற பல்வேறு தொழில் குழுமங்களை உருவாக்கியிருப்பதற்காக அவர்   அரசைப் பாராட்டினார். இது எதிர்காலத்திற்கான நுழைவாயிலாக செயல்படும் என்று அவர் கூறினார். இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான வலுவான இருதரப்பு பொருளாதார உறவுகளை அவர் எடுத்துரைத்தார். 2017-ம் ஆண்டு முதல் 2.4 பில்லியன் டாலருக்கும் அதிகமாக தங்களது நிறுவனம் குஜராத்தில் முதலீடு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு குஜராத் 7 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்ததையும் அவர் குறிப்பிட்டார். உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரமாக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்ட திரு சுலயேம், பிரதமரின் வலுவான தலைமையின் கீழ் இந்த வளர்ச்சி தொடரும் என்று கூறினார்.

நிவிடியா நிறுவனத்தின் மூத்தத் துணை தலைவர் திரு சங்கர் திரிவேதி பேசகையில், உலகளாவிய தலைவர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு பற்றி பேசியது இதுவே முதல் முறையாகும் என்றார். பிரதமர் மோடியின் தலைமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும்,  அவரது தலைமை ஆக்கபூர்வமான செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகளை விரைந்து ஏற்று செயல்படுத்துவதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் திறமை, சிறந்த தரவு மற்றும் தனித்துவமான கலாச்சாரம் உள்ளது என்று அவர் கூறினார். மேக் இன் இந்தியா திட்டத்திற்கு நிவிடியா நிறுவனத்தின் ஆதரவையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜெரோதா நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான நிகில் காமத் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளில்  நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி அபாரமானது என்றார். நாட்டின் புத்தொழில் சூழல் அமைப்பு, சிறு தொழில்கள்,  மின்சந்தை ஆகியவற்றின் வளர்ச்சியை அவர் பாராட்டினார். இந்த வளர்ச்சி 10 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை என்று அவர் தெரிவித்தார்.

----

ANU/SMB/PLM/KPG/KV

 

 

 


(Release ID: 1994812) Visitor Counter : 156