பிரதமர் அலுவலகம்

'வீரப் புதல்வர்கள் தின' நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்


வீரப்புதல்வர்களின் முன்மாதிரியான துணிச்சலைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்கவும், கற்பிக்கவும் நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன

"வீரப் புதல்வர்கள் தினம் என்பது நாட்டின் தன்மையைப் பாதுகாக்க எதையும் செய்ய வேண்டும் என்ற உறுதியைக் குறிக்கிறது"

"மாதா குஜ்ரி, குரு கோவிந்த் சிங், நான்கு புதல்வர்களின் வீரம், லட்சியங்கள் ஒவ்வொரு இந்தியருக்கும் இன்னும் பலத்தை அளிக்கின்றன"

"இந்தியர்களாகிய நாம் அடக்குமுறையாளர்களை கண்ணியத்துடன் எதிர்கொண்டோம்"

"இன்று, நமது பாரம்பரியத்தின் மீது நாம் பெருமிதம் கொள்ளும்போது, உலகின் கண்ணோட்டமும் மாறிவிட்டது"

"இன்றைய இந்தியா அதன் மக்கள், அதன் திறன்கள், அதன் உத்வேகங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளது"

"இன்று உலகமே இந்தியாவை வாய்ப்புகளின் பூமியாக அங்கீகரித்துள்ளது"

"வரும் 25 ஆண்டுகள் இந்தியாவின் சிறந்த திறனை வெளிப்படுத்தும்"

"நாம் ஐந்து உறுதிமொழிகளைப் பின்பற்றி நமது தேசியத் தன்மையை வலுப்படுத்த வேண்டும்"

"வரும் 25 ஆண்டுகள் நமது இளைஞர் சக்திக்கு மிகப்பெர

Posted On: 26 DEC 2023 12:41PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற 'வீரப் புதல்வர்கள் தினம்' நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். குழந்தைகள் நிகழ்த்திய மூன்று தற்காப்புக் கலை நிகழ்ச்சிகளை பிரதமர் திரு மோடி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், தில்லியில் இளைஞர்களின் அணிவகுப்பையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், வீரப் புதல்வர்களின் அழியாத தியாகங்களை நாடு நினைவு கூர்ந்து வருவதாகவும், அவர்களிடமிருந்து உத்வேகம் பெறுவதாகவும், வீரப் புதல்வர்கள் தினத்தில் புதிய அத்தியாயம் விடுதலைப் பெருவிழாவின் அமிர்தகாலத்தில் இந்தியாவுக்காக விரிவடைவதாகவும் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு இதே நாளில் கொண்டாடப்பட்ட முதலாவது வீரப் புதல்வர்கள் தினக் கொண்டாட்டங்களை பிரதமர் நினைவு கூர்ந்தார். அப்போது வீரப் புதல்வர்களின் வீரக் கதைகள் முழு நாட்டையும் உத்வேகப்படுத்தின. "வீரப் புதல்வர்கள் தினம் என்பது நாட்டின் தன்மையைப் பாதுகாப்பிற்காக ஒருபோதும் வீழாத மனப்பான்மையின் அடையாளமாகும்" என்று பிரதமர் திரு மோடி சுட்டிக்காட்டினார். "வீரத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது,  வயது ஒரு பொருட்டல்ல என்பதை இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது" என்று அவர் கூறினார். சீக்கிய குருக்களின் பாரம்பரியத்தின் கொண்டாட்டம் என்று கூறிய பிரதமர், குரு கோவிந்த் சிங் மற்றும் அவரது நான்கு வீரப்புதல்வர்களின் துணிச்சல், லட்சியங்கள் இன்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் துணிச்சலை அளிப்பதாக கூறினார். பாபா மோதி ராம் மெஹ்ராவின் குடும்பத்தினர் செய்த தியாகங்கள், திவான் தோடர்மாலின் பக்தி ஆகியவற்றை நினைவு கூர்ந்த பிரதமர், " வீரப் புதல்வர்கள் தினம் என்பது ஈடுஇணையற்ற துணிச்சல்மிக்க இதயங்களைப் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு ஒரு நாட்டின் மரியாதையாகும்" என்று கூறினார். குருக்கள் மீதான இந்த உண்மையான பக்தி, நாட்டின் மீதான பக்தியை வலுப்படுத்துகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கிரீஸ் ஆகிய நாடுகள் வீரப் புதல்வர்கள் தினம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ததால், வீரப் புதல்வர்கள் தினம் இப்போது சர்வதேச அளவில் கொண்டாடப்படுவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். சம்கவுர், சிர்ஹிந்த் போர்களின் ஒப்பிடமுடியாத வரலாற்றை நினைவுகூர்ந்த பிரதமர், இந்த வரலாற்றை மறக்க முடியாது என்று கூறினார். கொடுமையையும் சர்வாதிகாரத்தையும் இந்தியர்கள் எவ்வாறு கண்ணியத்துடன் எதிர்கொண்டார்கள் என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.  

நமது பாரம்பரியத்திற்கு உரிய மரியாதையை நாம் கொடுக்கத் தொடங்கிய நேரத்தில்தான் உலகமும் நமது பாரம்பரியத்தை உற்று நோக்கியது என்று பிரதமர் திரு மோடி சுட்டிக்காட்டினார். "இன்று நாம் நமது பாரம்பரியத்தைப் பற்றி பெருமிதம் கொள்ளும்போது, உலகின் கண்ணோட்டமும் மாறிவிட்டது", என்று அவர் கூறினார். இன்றைய இந்தியா அடிமை மனப்பான்மையைக் கைவிட்டு, நாட்டின் திறன்கள், உத்வேகங்கள் மற்றும் மக்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாக திரு. மோடி திருப்தி தெரிவித்தார். இன்றைய இந்தியாவுக்கு, வீரப் புதல்வர்களின் தியாகம் உத்வேகம் அளிப்பதாகவும், இதேபோல், பகவான் பிர்சா முண்டா, கோவிந்த் குரு ஆகியோரின் தியாகம் முழு நாட்டிற்கும் உத்வேகம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாய்ப்புகளை அளிப்பதில் உலக நாடுகள் இந்தியாவை முன்னணி நாடாகக் காண்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். பொருளாதாரம், அறிவியல், ஆராய்ச்சி, விளையாட்டு, ராஜ்ஜீயம் ஆகியவற்றின் உலகளாவிய பிரச்சினைகளில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது என்று பிரதமர் திரு மோடி கூறினார். அதனால்தான், " இதுதான் தருணம், இதுவே சரியான தருணம்" ன்று செங்கோட்டையில் இருந்து தாம் விடுத்த அறைகூவலை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். " இது இந்தியாவின் தருணம், அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் திறன்களை வெளிப்படுத்தும்" என்று அவர் மேலும் கூறினார். ஒரு கணத்தைக் கூட வீணாக்காமல் ஐந்து உறுதிமொழிகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியா ஒரு காலகட்டத்தை கடந்து வருகிறது என்று பிரதமர் கூறினார். விடுதலைப் பெருவிழாவின் இந்த அமிர்த காலத்தில், இந்தியாவின் பொற்காலத்தைத் தீர்மானிக்கும் பல காரணிகள் ஒன்றிணைந்துள்ளன என்று திரு. மோடி கூறினார். இந்தியாவின் இளைஞர் சக்தியைக் குறிப்பிட்ட அவர், சுதந்திரப் போராட்ட காலத்தை விட இன்று நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும் தற்போதைய தலைமுறை இளைஞர்களால் நாட்டைக் கற்பனை செய்ய முடியாத உயரத்திற்குக் கொண்டு செல்ல முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அறிவைத் தேடி அனைத்துத் தடைகளையும் தகர்த்த நச்சிகேதன், இளம் வயதிலேயே 'சக்கர வியூகத்தை’ ஏற்ற அபிமன்யு, துருவ் மற்றும் அவரது தவம், மிக இளம் வயதிலேயே சாம்ராஜ்யத்தை வழிநடத்திய மௌரிய மன்னர் சந்திரகுப்தர், ஏகலைவன் மற்றும் அவரது குரு துரோணாச்சாரியார் மீதான அவரது அர்ப்பணிப்பு, குதிராம் போஸ், பத்துகேஷ்வர் தத், கனக்லதா பருவா, ராணி கெய்டின்லியு, பாஜி ரவுத் மற்றும் நாட்டுக்காக தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்த பல தேசிய வீரர்களை அவர் குறிப்பிட்டார். 

"வரவிருக்கும் 25 ஆண்டுகள் நமது இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளைக் கொண்டு வருகின்றன" என்று  கூறினார். இந்திய இளைஞர்கள், எந்தப் பிராந்தியத்தில் அல்லது சமூகத்தில் பிறந்தாலும், எல்லையற்ற கனவுகளைக் கொண்டுள்ளனர். இந்தக் கனவுகளை நிறைவேற்ற, அரசிடம் ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வை உள்ளதாக அவர் தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கை, 10 ஆயிரம் அடல் ஆய்வகங்கள், துடிப்பான புத்தொழில் கலாச்சாரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அவர் இதை விவரித்தார். முத்ரா கடன் திட்டத்தின் மூலம் இளைஞர்கள், எஸ்.சி/எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த 8 கோடி புதிய தொழில்முனைவோர் உருவாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்திய சர்வதேசப் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்களின் வெற்றியை எடுத்துரைத்த பிரதமர், பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் கிராமப்புறங்களில் உள்ள நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். அவர்களின் வெற்றிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு அருகில் சிறந்த விளையாட்டுப் பயிற்சி வசதிகளை வழங்கும் வெளிப்படையான தேர்வு செயல்முறையை உறுதி செய்யும் கேலோ இந்தியா இயக்கமே காரணம் என்று அவர் பாராட்டினார். இளைஞர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்ததன் விளைவு இது என்று பிரதமர் கூறினார்.

மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையின் அர்த்தத்தை பிரதமர் விளக்கினார். இது இளைஞர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்றும், இது சிறந்த சுகாதாரம், கல்வி,  வேலைவாய்ப்புகள், வாழ்க்கைத் தரம், தயாரிப்புகளின் தரம் ஆகியவற்றைக் குறிக்கிறது என்றும் அவர் கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியாவின் கனவுகள் மற்றும் தீர்மானத்துடன் இளைஞர்களை இணைக்கும் நாடு தழுவிய இயக்கம் குறித்து பிரதமர் திரு மோடி, இளம் பார்வையாளர்களிடம் கூறினார். ஒவ்வொரு இளைஞரும் மை-பாரத் இணையதளத்தில் பதிவு செய்யுமாறு அவர் அழைப்பு விடுத்தார். "இந்தத் தளம் இப்போது நாட்டின் இளம் மகள்கள், மகன்களுக்கான ஒரு பெரிய அமைப்பாக மாறி வருகிறது," என்று அவர் கூறினார்.

வாழ்க்கையில் விரும்பிய முடிவுகளை அடைவதற்கு இளைஞர்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். உடற் பயிற்சி, டிஜிட்டல் டிடாக்ஸ், மன ஆரோக்கியம், போதுமான தூக்கம், ஸ்ரீஅன்னா அல்லது சிறுதானியங்களை உணவில் சேர்ப்பது போன்ற சவால்களைக் குறிப்பிட்டு அவர் தங்களுக்கான சில அடிப்படை விதிகளை உருவாக்கி அவற்றை உறுதியாகக் கடைப்பிடிக்குமாறு பரிந்துரைத்தார். சமூகத்தில் நிலவும் போதைப் பொருட்களின் அச்சுறுத்தல் குறித்தும் பேசிய பிரதமர் திரு மோடி, ஒரு தேசமாகவும், சமூகமாகவும் ஒன்றிணைவதன் மூலம் அதை எதிர்கொள்ள வலியுறுத்தினார். அனைத்து மதத் தலைவர்களும் அரசு மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து போதைப்பொருளுக்கு எதிராக வலுவான பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "ஒரு திறமையான மற்றும் வலுவான இளைஞர் சக்திக்கு அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி இன்றியமையாதது" என்று பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.  

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி, மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

வீரப் புதல்வர்கள் தினத்தை முன்னிட்டு, மக்களுக்கு, குறிப்பாக இளம் குழந்தைகளுக்கு, வீரப் புதல்வர்களின் முன்மாதிரியான துணிச்சலின் கதையைத் தெரிவிக்கவும், கற்பிக்கவும் அரசு நாடு முழுவதும் பங்கேற்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் வீரப் புதல்வர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தியாகத்தை விவரிக்கும் டிஜிட்டல் கண்காட்சி காட்சிப்படுத்தப்படும். 'வீரப் புதல்வர்கள் தினம்' குறித்த ஒரு படமும் நாடு தழுவிய அளவில் திரையிடப்பட உள்ளது. மேலும், மை பாரத், மை கவ் இணையதளங்கள் மூலம் வினாடி வினாக்கள் போன்ற பல்வேறு ஆன்லைன் போட்டிகள் நடத்தப்படும்.

ஸ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் பிரகாஷ் புரப் நாளில், 2022  ஜனவரி 9 அன்று, ஸ்ரீ குரு கோவிந்த் சிங்கின் புதல்வர்கள் பாபா ஜோராவர் சிங், பாபா ஃபதே சிங் ஆகியோரின் தியாகத்தைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 26-ஆம் தேதி 'வீரப்புதல்வர்கள் தினம்’ அனுசரிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

***

ANU/PKV/IR/AG/KPG

 



(Release ID: 1990455) Visitor Counter : 92