பிரதமர் அலுவலகம்

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஸ்வர்வேத் மகாமந்திரைப் பிரதமர் தொடங்கி வைத்தார்


"அரசு, சமூகம், துறவிகள் சமாஜ் அனைத்தும் காசியின் புத்துயிரூட்டலுக்காக ஒன்றிணைந்து செயல்படுகின்றன"

"ஸ்வர்வேத் மகாமந்திர் இந்தியாவின் சமூக மற்றும் ஆன்மீக வலிமையின் நவீன அடையாளமாகும்"

"இந்தியாவின் கட்டிடக்கலை, அறிவியல், யோகா ஆகியவை ஆன்மீகக் கட்டுமானங்களைச் சுற்றிக் கற்பனை செய்ய முடியாத உயரங்களை அடைந்துள்ளன"

"காலத்தின் சக்கரங்கள் இன்று மீண்டும் திரும்பியுள்ளன, இந்தியா அதன் பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்வதுடன், அடிமை மனப்பான்மையிலிருந்து விடுதலையைப் பிரகடனப்படுத்துகிறது"

"இப்போது பனாரஸின் பொருள் "வளர்ச்சி, நவீன வசதிகள், நம்பிக்கை, தூய்மை மற்றும் மாற்றம்" என்பதாகும்.

ஒன்பது தீர்மானங்களைப் பிரதமர் முன்வைத்தார்


Posted On: 18 DEC 2023 12:47PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள உமாரஹாவில் ஸ்வர்வேத் மகாமந்திரைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மகரிஷி சதாபல் தேவ் ஜி மகராஜின் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர், கோயில் வளாகத்தைச் சுற்றிப் பார்த்தார்.

அங்கு திரண்டிருந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இன்று தனது காசி பயணத்தின் இரண்டாவது நாள் என்றும், காசியில் செலவிடும் ஒவ்வொரு கணமும் முன்னெப்போதும் இல்லாத அனுபவங்களால் நிரம்பியுள்ளது என்றும் குறிப்பிட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அகில பாரதிய விஹாங்கம் யோக சன்ஸ்தானின் வருடாந்திரக் கொண்டாட்டங்களை நினைவுகூர்ந்த பிரதமர், இந்த ஆண்டு நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்ததோடு, விஹாங்கம் யோக சாதனா நூறு ஆண்டுகளின் மறக்க முடியாத பயணத்தை நிறைவேற்றியுள்ளது என்று கூறினார். கடந்த நூற்றாண்டில் மகரிஷி சதாபல் தேவ், ஞானம் மற்றும் யோகத்திற்கு அளித்த பங்களிப்புகளை எடுத்துரைத்த பிரதமர், அதன் தெய்வீக ஒளி உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது என்றார். இந்த நன்னாளில், 25,000  குந்தியா ஸ்வர்வேத் ஞான மகாயக்த்தின் அமைப்பு பற்றிப் பிரதமர் குறிப்பிட்டார். மகாயாகத்திற்கு அளிக்கப்படும் ஒவ்வொரு காணிக்கையும் வளர்ந்த பாரதத்தின் உறுதியை வலுப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மகரிஷி சதாபல் தேவ் முன் தலைவணங்கி, அனைத்துப் புனிதர்களுக்கும் அவர் மரியாதை செலுத்தினார்.

காசியின் மாற்றத்தில் அரசு, சமூகம், சந்த் சமாஜம் ஆகியவற்றின் கூட்டு முயற்சிகளைப் பிரதமர் குறிப்பிட்டார். ஸ்வர்வேத மகாமந்திர் இந்தக் கூட்டுணர்வின் எடுத்துக்காட்டு என்று பிரதமர் குறிப்பிட்டார். தெய்வீகத்தன்மைக்கும், கம்பீரத்திற்கும் இந்தக் கோயில் ஓர் அற்புதமான எடுத்துக்காட்டு என்று பிரதமர் கூறினார். "ஸ்வர்வேத் மகாமந்திர் இந்தியாவின் சமூக மற்றும் ஆன்மீக வலிமையின் நவீன அடையாளமாகும்" என்று அவர் மேலும் கூறினார். கோயிலின் அழகு மற்றும் ஆன்மீக செழுமையை விவரித்தப் பிரதமர், இதை 'யோகா மற்றும் ஞான தீர்த்தம்' என்றும் அழைத்தார்.

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் ஆன்மீகப் பெருமையை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, பௌதிக முன்னேற்றத்தைப் புவியியல் விரிவாக்கம் அல்லது சுரண்டலின் ஊடகமாக மாற்ற இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்று கூறினார். "ஆன்மீக மற்றும் மனிதாபிமான சின்னங்கள் மூலம் பௌதிக முன்னேற்றத்தை நாங்கள் பின்பற்றினோம்" என்று அவர் கூறினார். துடிப்பான காசி, கொனார்க் கோயில், சாரநாத், கயா ஸ்தூபிகள், நாளந்தா மற்றும் தக்ஷசீலா போன்ற பல்கலைக்கழகங்களின் எடுத்துக்காட்டுகளை அவர் வழங்கினார். "இந்த ஆன்மீகக் கட்டுமானங்களைச் சுற்றி இந்தியாவின் கட்டிடக்கலை கற்பனை செய்ய முடியாத உயரங்களை எட்டியது" என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் வழிபாட்டுத் தலங்கள்தான் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களால் குறிவைக்கப்பட்டன என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், சுதந்திரத்திற்குப் பின் அவற்றைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார். ஒருவரின் பாரம்பரியத்தைப் பற்றிப் பெருமை கொள்ளாததன் பின்னணியில் உள்ள சிந்தனை, செயல்முறை குறித்து வருத்தம் தெரிவித்த பிரதமர், சுதந்திரத்திற்குப் பின் பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட சோம்நாதர் கோயிலை எடுத்துக்காட்டாகக் கூறியதால், இதுபோன்ற சின்னங்களை மீட்டெடுப்பதன் விளைவாக நாட்டின் ஒற்றுமை வலுவடையும் என்று கூறினார். இது நாடு தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளப்படுவதற்கு வழிவகுத்தது என்று திரு மோடி கூறினார். "காலத்தின் சக்கரங்கள் இன்று மீண்டும் திரும்பியுள்ளன. இந்தியா அதன் பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்வதுடன், அடிமை மனப்பான்மையிலிருந்து விடுதலையைப் பிரகடனப்படுத்துகிறது" என்று பிரதமர் கூறினார். சோம்நாத்தில் தொடங்கிய பணிகள் இப்போது முழு அளவிலான பிரச்சாரமாக மாறியுள்ளதாகக் கூறிய அவர், காசி விஸ்வநாதர் கோயில், மகாகால் மகாலோக், கேதார்நாத் தாம், புத்தர் சுற்றுவட்ட சுற்றுலா ஆகியவற்றை எடுத்துக்காட்டாகக் கூறினார். அயோத்தியில் ராமர் கோயில் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் திறக்கப்பட உள்ள ராமர் கோயில் குறித்தும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

ஒரு நாடு அதன் சமூக யதார்த்தங்களையும் கலாச்சார அடையாளங்களையும் ஒருங்கிணைக்கும் போது முழுமையான வளர்ச்சி சாத்தியமாகும் என்று பிரதமர் வலியுறுத்தினார். "அதனால்தான், இன்று, நமது 'தீர்த்தங்களின்' புத்துயிரூட்டல் நடைபெறுகிறது, நவீன உள்கட்டமைப்பு உருவாக்கத்தில் இந்தியா புதிய சாதனைகளை உருவாக்கி வருகிறது" என்று பிரதமர் கூறினார். இதனை விளக்குவதற்குக் காசியின் உதாரணத்தை அவர் எடுத்துக் கொண்டார். கடந்த வாரம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த புதிய காசி விஸ்வநாத் தாம் வளாகம், நகரத்தின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளுக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. "இப்போது பனாரஸின் வளர்ச்சி, "நவீன வசதிகள், நம்பிக்கை, தூய்மை மற்றும் மாற்றம்" என்று மேம்பட்ட இணைப்பு விவரங்களை  அவர் வழங்கினார். 4-6 வழிச்சாலைகள், வட்டச்சாலை, ரயில் நிலையத்தை மேம்படுத்துதல், புதிய ரயில்கள், பிரத்யேக சரக்கு வழித்தடம், கங்கைப் படித்துறைகளைப் புனரமைத்தல், நவீன மருத்துவமனைகள், புதிய மற்றும் நவீன பால்பண்ணை, கங்கையில் இயற்கை விவசாயம், இளைஞர்களுக்கான பயிற்சி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு விழாக்கள் மூலம் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.

ஆன்மீகப் பயணங்களை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதில் நவீன வளர்ச்சியின் பங்கினை எடுத்துரைத்த பிரதமர், வாரணாசி நகரத்திற்கு வெளியே அமைந்துள்ள ஸ்வர்வேத் கோயிலுக்கு சிறந்த இணைப்பைக் குறிப்பிட்டார். பனாரஸுக்கு வரும் பக்தர்களின் முக்கிய மையமாக இது உருவெடுக்கும், இதன் மூலம் சுற்றியுள்ள கிராமங்களில் வணிக மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான வழிகளைத் திறக்கும் என்று அவர் கூறினார்.

"விஹாங்கம் யோகா சன்ஸ்தான் சமூகத்திற்கு சேவை செய்வதைப் போலவே ஆன்மீக நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது" என்று கூறிய பிரதமர், மகரிஷி சதாபல் தேவ் ஒரு யோக பக்த துறவி மற்றும் சுதந்திரத்திற்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர் என்றும் கூறினார். விடுதலையின் அமிர்தகாலத்தில் தனது தீர்மானங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். பிரதமர் 9 தீர்மானங்களை முன்வைத்து, அவற்றை நிறைவேற்ற வலியுறுத்தினார். முதலாவது, தண்ணீரை சேமிப்பது மற்றும் நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இரண்டாவது - டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மூன்றாவது - கிராமங்கள், வட்டாரங்கள் மற்றும் நகரங்களில் தூய்மை முயற்சிகளை அதிகரிப்பது, நான்காவது - உள்நாட்டு மேட் இன் இந்தியா தயாரிப்புகளை ஊக்குவித்தல் மற்றும் பயன்படுத்துதல், ஐந்தாவது - பயணம் மற்றும் இந்தியாவை ஆராய்தல், ஆறாவது - விவசாயிகளிடையே இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது, ஏழாவது - உங்கள் அன்றாட வாழ்க்கையில் சிறுதானியங்கள் அல்லது ஸ்ரீ அன்னாவை சேர்த்துக் கொள்ளுதல் எட்டாவது விளையாட்டு, உடற்பயிற்சி அல்லது யோகாவை வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுதல், இறுதியாக இந்தியாவில் வறுமையை வேரறுக்கக் குறைந்தபட்சம் ஒரு ஏழை குடும்பத்திற்கு ஆதரவளித்தல்.

நேற்று மாலையும் இன்றும் பிரதமர் பங்கேற்ற வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரை பற்றி எடுத்துரைத்த பிரதமர், மதத் தலைவர் ஒவ்வொரும் இந்தப் பயணம் குறித்த விழிப்புணர்வைப் பரப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். "இது நமது தனிப்பட்ட தீர்மானமாக மாற வேண்டும்", என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் திரு நரேந்திர நாத் பாண்டே, சத்குரு ஆச்சார்யா ஸ்ரீ சுதந்திர் ஜி மகராஜ், சந்த் பிரவர் ஸ்ரீ விக்யான் ஜி மகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

***

ANU/SMB/PKV/AG/KV



(Release ID: 1987737) Visitor Counter : 156