பிரதமர் அலுவலகம்

வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் உரை


புதிதாக தேர்வு செய்யப்பட்ட சுமார் 51,000 பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார்

"வேலைவாய்ப்பு மேளாவானது 'வளர்ச்சியடைந்த இந்தியாவை’உருவாக்குபவர்களாக இளைஞர்கள் மாற வழிவகுக்கிறது"

"மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே உங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும்"

"எந்த நன்மையும் பெறாதவர்களின் வீட்டு வாசலை அரசு சென்றடைகிறது"

"உள்கட்டமைப்பு புரட்சியை இந்தியா காண்கிறது"

முழுமையடையாத திட்டங்கள் நாட்டின் நேர்மையான வரி செலுத்துவோருக்கு மிகப்பெரிய அநீதியாகும், நாம் அதை நிவர்த்தி செய்கிறோம்

"உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி குறித்து நம்பிக்கையுடன் உள்ளன"

Posted On: 30 NOV 2023 5:21PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வேலைவாய்ப்பு விழாவில் உரையாற்றினார். புதிதாக பணியில் சேர்ந்த சுமார் 51,000 பேருக்கு நியமனக் கடிதங்களை காணொலிக் காட்சி மூலம் வழங்கினார். நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வருவாய்த் துறை, உள்துறை அமைச்சகம், உயர் கல்வித் துறை, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, நிதி சேவைகள் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் அரசுப் பணிகளில் சேருவார்கள்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான அரசின் பிரச்சாரம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதாகக் கூறிய பிரதமர், இன்று நாடு முழுவதும் 50,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலைகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கடின உழைப்பு மற்றும் உழைப்பின் விளைவாக அவர்களுக்கு நியமனக் கடிதங்கள் கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்வில் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், அவர்கள் பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் அமைப்பின் ஒரு பகுதியாக மாறப் போகிறார்கள் என்று கூறினார். ஒரு அரசு ஊழியர் என்ற முறையில், புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புகளை வலியுறுத்திய பிரதமர், சாமானிய மக்களின் 'எளிமையான வாழ்க்கை' முன்னுரிமையாக மாற வேண்டும் என்று கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் நவம்பர் 26 ஆம் தேதி நடைபெற்ற அரசியலமைப்பு தின கொண்டாட்டங்களை நினைவு கூர்ந்த பிரதமர், 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி தேசம் இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமைகளை வழங்கியது என்று கூறினார். அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கி சமூகநீதியை நிலைநாட்டிய பாபா சாகேப் அம்பேத்கரின் பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார்.

சுதந்திரத்திற்குப் பிறகு சமூகத்தின் பெரும் பகுதியினர் பல ஆண்டுகளாக வளங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை இழந்தபோது சமத்துவக் கொள்கைகள் புறக்கணிக்கப்பட்டன என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். 2014-ஆம் ஆண்டு தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர்தான் 'ஒடுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை' என்ற தாரக மந்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய பாதை உருவாக்கப்பட்டது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். "எந்தவொரு சலுகைகளையும் பெறாதவர்களின் வீட்டு வாசலை அரசு சென்றடைந்தது", என்று அவர் குறிப்பிட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மாற்ற அரசு முயற்சிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

அரசின் சிந்தனை மற்றும் பணிக் கலாச்சாரத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக இன்று காணக்கூடிய முன்னெப்போதும் இல்லாத மாற்றங்களை எடுத்துக்காட்டிய பிரதமர், அதிகாரத்துவம், மக்கள் மற்றும் கோப்புகள் ஒரே மாதிரியாக இருந்தபோதிலும், ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தது முழு அமைப்பின் செயல்பாட்டுமுறை மற்றும் பாணியில் ஒரு முழுமையான மாற்றத்தைக் கொண்டு வந்தது என்று கூறினார். இது சாமானிய மக்களின் நல்வாழ்வில் நேர்மறையான முடிவுகளை முன்னிலைக்கு கொண்டு வந்தது என்று அவர் கூறினார். சமீபத்திய ஆய்வின்படி, கடந்த 5 ஆண்டுகளில் 13 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்று பிரதமர் தெரிவித்தார். "அரசு திட்டங்கள் ஏழைகளை சென்றடைவதன் தாக்கம் இதற்கு ஒரு சான்று",  என்று அவர் மேலும் கூறினார். அரசு திட்டங்களை சாமானிய மக்களின் வீட்டு வாசலுக்கு கொண்டு செல்லும் வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை குறித்து பேசிய பிரதமர், நியமிக்கப்பட்டவர்கள் தங்கள் நேரத்தை மக்கள் சேவையில் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நவீன நெடுஞ்சாலைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் நீர்வழிகள் ஆகிய துறைகளில் இந்தியாவை மாற்றுவதில் ஒரு உள்கட்டமைப்பு புரட்சியைக் காண்கிறோம் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் பிரதமர் கூறினார். உள்கட்டமைப்பில் அதிக முதலீடு லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.

திட்டங்களை நிறைவேற்றுவதில் மிஷன் முறையின் வருகை குறித்து பேசிய பிரதமர், "முழுமையடையாத திட்டங்கள் நாட்டின் நேர்மையான வரி செலுத்துவோருக்கு பெரும் அநீதியாகும். சமீபத்திய ஆண்டுகளில், மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை மறுஆய்வு செய்து, அவற்றை விரைவாக முடித்துள்ளது, இது புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கிறது. 22-23 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளில் முடிக்கப்பட்ட பீதர் கல்புர்கி ரயில் பாதை போன்ற சமீபத்திய காலங்களில் வெளிச்சத்துக்கு வந்த தாமதமான திட்டங்களை அவர் எடுத்துக்காட்டினார்; சிக்கிமில் உள்ள பாக்யாங் விமான நிலையம் அமைப்பதற்கு 2008- ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டது. ஆனால் 2014 வரை காகிதத்தில் மட்டுமே இருந்தது, 2014-க்குப் பிறகு இந்த திட்டம் தொடங்கப்பட்டு 2018-ல் முடிக்கப்பட்டது. பாரதீப் சுத்திகரிப்பு நிலையம் 20-22 ஆண்டுகளாக எந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் இல்லாமல் விவாதத்தில் இருந்தது. சுத்திகரிப்பு நிலையம் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டது.

நாட்டின் ரியல் எஸ்டேட் துறை குறித்து பேசிய பிரதமர், இது கட்டுமான நிறுவனங்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வீழ்ச்சியை நோக்கி சென்றது. ஆனால் ரெரா சட்டம் தான்  இந்தத் துறையில் வெளிப்படைத்தன்மையை நிறுவியது. இந்தத்துறையில் முதலீட்டை அதிகரித்தது என்றும் சுட்டிக்காட்டினார். "இன்று, நாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் திட்டங்கள் ரெராவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்று திரு மோடி கூறினார். நாட்டின் வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் துறையில் இன்று ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகள் நாட்டின் பொருளாதாரத்தை இன்று புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்று பிரதமர் மோடி சுட்டிக் காட்டினார். உலகின் புகழ்பெற்ற நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறித்து மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறிய அவர், அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகள், உழைக்கும் வயதினரின் மக்கள்தொகை மற்றும் தொழிலாளர் உற்பத்தித்திறன் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக முதலீட்டு மதிப்பீட்டில், சமீபத்தில் இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்கு தனது ஒப்புதலை உலகளாவிய தலைவர் பதிவு செய்தார். இந்தியாவின் உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையின் வலிமை இதற்கு முக்கியக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். வரும் காலங்களில் இந்தியாவில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவுக்கான ஏராளமான சாத்தியக்கூறுகள் தொடர்ந்து எழும் என்பதற்கு இந்த உண்மைகள் சான்று என்று பிரதமர் கூறினார்.

இந்தியாவில் நடைபெறும் வளர்ச்சியின் பயன்கள் சமுதாயத்தின் கடைக்கோடி நபரை சென்றடைவதை உறுதி செய்வதில் அரசு ஊழியர்களாக நியமிக்கப்படுபவர்களின் பங்கை திரு. மோடி வலியுறுத்தினார். "ஒரு பகுதி எவ்வளவு தொலைவில் இருந்தாலும், அது உங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும். ஒரு நபர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், நீங்கள் அவரை அடைய வேண்டும்", என்று பிரதமர் கூறினார். மத்திய அரசின் ஊழியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் இந்த அணுகுமுறையுடன் முன்னேறினால் மட்டுமே வளர்ந்த இந்தியாவின் கனவு நனவாகும் என்று திரு. மோடி சுட்டிக் காட்டினார்.

அடுத்த 25 ஆண்டுகளின்  தேசத்துக்கான முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார். 'கர்மயோகி பதவி' என்ற புதிய கற்றல் பாடப்பிரிவில் ஈடுபடுமாறும், கற்றல் செயல்முறையைத் தொடருமாறும் அவர் கேட்டுக்கொண்டார். ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட 'கர்மயோகி பதவி' தொகுதி மூலம் லட்சக்கணக்கான புதிய அரசு ஊழியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். ஆன்லைன் பயிற்சி தளமான ஐகாட் கர்மயோகியில் 800-க்கும் மேற்பட்ட படிப்புகள்  உள்ளன என்று அவர் கூறினார். "உங்கள் திறமைகளை மேம்படுத்த இதைப் பயன்படுத்துங்கள்" என்று கூறிய பிரதமர், நியமனம் செய்யப்பட்டவர்களின் வெற்றிக்காக மீண்டும் ஒரு முறை வாழ்த்து தெரிவித்தார். "தேசத்தைக் கட்டியெழுப்பும் திசையில் உங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்கு வாழ்த்துகள்" என்று பிரதமர் மோடி தனது உரையை முடித்தார்.

பின்னணி

வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு படிதான் வேலைவாய்ப்பு விழா.  இது வேலைவாய்ப்பை உருவாக்குவதில் ஒரு ஊக்கியாக செயல்படும் என்றும், இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தேசிய வளர்ச்சியில் பங்கேற்பதற்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

***

ANU/AD/BS/AG/KPG



(Release ID: 1981289) Visitor Counter : 69