பிரதமர் அலுவலகம்

புதுதில்லியில் நடைபெற்ற 21-வது இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாடு 2023-ல் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 04 NOV 2023 10:58PM by PIB Chennai

ஷோபனா பார்தியா அவர்களே, ஹிந்துஸ்தான் டைம்ஸ் குழுமத்தின் அனைத்து உறுப்பினர்களே..  இங்கு கூடியிருக்கும் விருந்தினர்களே, பெண்களே, பெருமக்களே…

 

நான் ஒரு தேர்தல் கூட்டத்தில் இருந்ததால் இங்கு வர சிறிது தாமதம் ஆகிவிட்டது. அதற்காக முதலாவதாக, உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். நான் இங்கு வரவேண்டும் என்பதற்காக விமான நிலையத்திலிருந்து நேராக இங்கு வந்துள்ளேன்.

 

நண்பர்களே

இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு 2023க்கு என்னை அழைத்ததற்காக ஹெச்.டி குழுமத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த தலைமைத்துவ உச்சிமாநாட்டின் கருப்பொருள்களுடன் இந்தியா முன்னோக்கிச் செல்வதற்கான செய்தியை ஹெச்.டி குழுமம் எப்போதும் பரப்பி வருகிறது. 2014-ஆம் ஆண்டில் தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தபோது, ‘இந்தியாவை மறுவடிவமைத்தல்’ என்ற தலைப்பில் கருப்பொருள் இருந்தது.  மிகப்பெரிய மாற்றங்கள் வரவிருப்பதாகவும், இந்தியா மறுவடிவமைக்கப்படும் என்றும் குழு உணர்ந்திருந்தது. 2019-ஆம் ஆண்டில் தற்போதைய அரசு இன்னும் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் பதவியேற்றபோது ‘சிறந்த எதிர்காலத்திற்கான உரையாடல்கள்’ என்ற கருப்பொருள் வழங்கப்பட்டது.  2023-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநாட்டின் கருப்பொருளாக ‘தடைகளை உடைத்தல்’ என்பது உள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தற்போதைய அரசு அனைத்து சாதனைகளையும் முறியடித்து வெற்றி பெறும் என்ற அடிப்படை செய்தி இதுவாகும். 2024 பொதுத் தேர்தல் முடிவுகள் தடைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.

 

நண்பர்களே,

‘இந்தியாவை மறுவடிவமைப்பதில்’ இருந்து ‘தடைகளுக்கு அப்பால்’ முன்னேறும் இந்தியாவின் பயணம், நாட்டின் வரவிருக்கும் பிரகாசமான எதிர்காலத்திற்கு அடித்தளமிட்டுள்ளது. இந்த அடித்தளத்தின் அடிப்படையில் ஒரு வளர்ந்த, மகத்தான மற்றும் பணக்கார இந்தியா கட்டமைக்கப்படும். இந்திய சுதந்திர இயக்கத்தின்போது அந்த நேரத்தில் எழுந்த அலையும், மக்களிடையேயான ஒற்றுமை உணர்வும் பல தடைகளை உடைத்தது. சுதந்திரத்திற்குப் பிறகும் சில தடைகள் இருந்தன. 2014-க்குப் பிறகு, இந்தத் தடைகளை உடைக்க பாரதம் தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறது. நாம் பல தடைகளைக் கடந்துவிட்டோம். இப்போது தடைகளைத் தாண்டிச் செல்வது பற்றி பேசுகிறோம். இதுவரை யாரும் தரையிறங்காத நிலவின் அந்தப் பகுதியை இன்று இந்தியா அடைந்துள்ளது. அனைத்துத் தடைகளையும் தகர்த்து டிஜிட்டல் பரிவர்த்தனையில் இன்று இந்தியா முதலிடத்தில் உள்ளது. செல்பேசி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது, புத்தொழில் நிறுவனங்களின் சூழலியலில் உலகின் முதல் 3 நாடுகளில் வலுவாக நிற்பதுடன், திறமையான நபர்களின் தொகுப்பை உருவாக்குகிறது. இன்று, ஜி20 உச்சிமாநாடு போன்ற உலகளாவிய நிகழ்வுகளில் இந்தியா ஒவ்வொரு தடையையும் உடைத்து வருகிறது.

 

 

 

நண்பர்களே,

சில சம்பவங்கள் ஒட்டுமொத்த தேசத்தையும் ஊக்குவிக்கின்றன. சந்திரயான் 3-ன் வெற்றி, ஒவ்வொரு குடிமகனிடமும் பெருமிதத்தையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு துறையிலும் முன்னேற அவர்களை ஊக்குவிக்கிறது. இன்று, ஒவ்வொரு இந்தியரும் தன்னம்பிக்கையால் நிரம்பியுள்ளனர். தூய்மை என்பது இப்போது ஒரு பொது இயக்கமாக மாறிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் கதர் விற்பனை 3 மடங்கு அதிகரித்துள்ளது.

 

நண்பர்களே,

ஜன்தன் வங்கிக் கணக்குகள் ஏழைகளிடையே உள்ள மனத் தடைகளை உடைத்து அவர்களின் பெருமையையும், சுயமரியாதையையும் புதுப்பிக்கும் ஊடகமாக மாறியுள்ளன. ஏழைகளுக்கு அதிகாரமளிக்கும் ஆதாரமாக ரூபே அட்டைகளின் பரவலான பயன்பாடு உள்ளது. “ஏசி அறைகளில் அமர்ந்து, கோப்புகளைக் கொண்டு இயங்குபவர்களால் ஏழைகளின் உளவியல் அதிகாரத்தை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. பயங்கரவாத செயல்களின் போது தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கான இந்தியாவின் வளர்ந்து வரும் திறன், பருவநிலை நடவடிக்கை தீர்மானங்களை வழிநடத்துதல் மற்றும் காலக்கெடுவுக்கு முன்னர் விரும்பிய முடிவுகளை அடைவது போன்றவை இப்போது சாத்தியமாகியுள்ளன. விளையாட்டுத் துறையில் இந்தியாவின் செயல்திறன் சிறப்பாக உள்ளது.

 

நண்பர்களே,

இந்தியாவில் திறன்கள் மற்றும் வளங்களுக்கு பஞ்சமில்லை. வறுமையின் உண்மையான தடையை முழக்கங்களால் எதிர்த்துப் போராட முடியாது, தீர்வுகள், கொள்கைகள் மற்றும் நோக்கங்களுடன் போராட வேண்டும். ஏழைகளை சமூக ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ முன்னேற வைக்காத நிலையில் கடந்த அரசுகளின் சிந்தனைகள் இருந்தன. அடிப்படை வசதிகளின் உதவியுடன் ஏழைகள் வறுமையை வெல்லும் திறனைக் கொண்டவர்கள். ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பது, இப்போதைய மத்திய அரசின் மிகப்பெரிய முன்னுரிமை ஆகும். அரசு வாழ்க்கையை மாற்றியது மட்டுமல்லாமல், வறுமையை வெல்லவும் ஏழைகளுக்கு உதவியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 13 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். நாட்டில் 13 கோடி மக்கள் வெற்றிகரமாக வறுமையின் தடையை உடைத்து புதிய நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளனர்.

 

நண்பர்களே,

விளையாட்டு, அறிவியல், அரசியல் அல்லது பத்ம விருதுகள் எதுவாக இருந்தாலும் சாமானிய மக்களுக்கு முன்பு வாய்ப்புகள் இல்லை.  சாமானிய குடிமக்கள் இன்று அதிகாரம் பெற்றவர்களாகவும், ஊக்குவிக்கப்பட்டவர்களாகவும் உணர்கிறார்கள். அரசின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றமே இதற்குக் காரணம்.

 

நண்பர்களே,

நாட்டில் நவீன உள்கட்டமைப்பின் தடையை இந்தியா சமாளிக்கறது. உலகின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.  2013-14 ஆம் ஆண்டில் 12 கி.மீ ஆக இருந்த நெடுஞ்சாலை கட்டுமானம், 2022-23 ஆம் ஆண்டில் 30 கி.மீ ஆக உயர்ந்துள்ளது. , 2014-ஆம் ஆண்டில் 5 நகரங்களிலிருந்து 2023-ஆம் ஆண்டில் 20 நகரங்களுக்கு மெட்ரோ இணைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. , 2014-ஆம் ஆண்டில் 70 ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை இன்று கிட்டத்தட்ட 150 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுதான் இன்றைய இந்தியாவின் வளர்ச்சியின் வேகம் மற்றும் அளவு. இது இந்தியாவின் வெற்றியின் அடையாளம்.

 

நண்பர்களே,

இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைத் திறந்தன. வங்கி நெருக்கடி, ஜி.எஸ்.டி. அமலாக்கம், கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய காலங்களில், மக்களுக்கு நீண்ட கால பலன்களை அளிக்கும் கொள்கைகள் தேர்வு செய்யப்பட்டன.

 

நண்பர்களே,

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மற்றொரு எடுத்துக்காட்டு. பல தசாப்தங்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த மசோதா ஒருபோதும் நிறைவேற்றப்படாது என்று தோன்றியது, ஆனால் இப்போது அது நனவாகியுள்ளது.

 

நண்பர்களே,

அரசியல் லாபங்களுக்காக முந்தைய அரசுகளால் பல பிரச்சினைகள் மிகைப்படுத்தப்பட்டன. ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்ய முடியாது என்று அனைவரையும் நம்ப வைக்க ஒரு உளவியல் அழுத்தம் உருவாக்கப்பட்டது. அதன் ரத்து, இப்போது முன்னேற்றத்திற்கும், அமைதிக்கும் வழிவகுத்துள்ளது. “லால் சவுக்கின் படங்கள் ஜம்மு காஷ்மீர் எவ்வாறு மாறி வருகிறது என்பதைக் காட்டுகின்றன. இன்று, யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்து, சுற்றுலா தொடர்ந்து வளர்ந்து வருகிறது. ஜம்மு-காஷ்மீரை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

 

நண்பர்களே,

ஊடகத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இங்கு கலந்து கொண்டுள்ளீர்கள். 2013-ஆம் ஆண்டில் கடுமையான பொருளாதார நிலைமைகள் நடுத்தர வர்க்கத்தை பாதித்தது குறித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் எதிர்மறையான செய்திகள் வந்தன. ஆனால் இன்று, புத்தொழில், விளையாட்டு, விண்வெளி அல்லது தொழில்நுட்பம் என இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் நடுத்தர வர்க்கம் வேகமாக முன்னேறி வருகிறது. 2023- ஆம் ஆண்டில் 7.5 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இது 2013-14 ஆம் ஆண்டில் 4 கோடியாக இருந்தது.  2014- ஆம் ஆண்டில் ரூ .4.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்த சராசரி வருமானம் 2023-ஆம் ஆண்டில் ரூ .13 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, லட்சக்கணக்கான மக்கள் குறைந்த வருமான குழுக்களில் இருந்து உயர் வருவாய் பிரிவினருக்கு மாறி வருகின்றனர்,

 

நண்பர்களே,

வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் மற்றும் வறுமைக் குறைப்பு ஆகியவை இந்த மிகப்பெரிய பொருளாதார சுழற்சியின் இரண்டு முக்கிய காரணிகளாக உள்ளன. வறுமையில் இருந்து மீண்டு வருபவர்கள், புதிய நடுத்தர வர்க்கத்தினர், நாட்டின் நுகர்வு வளர்ச்சிக்கு வேகம் கொடுக்கின்றனர். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொறுப்பை ஏற்று நடுத்தர வர்க்கம் தனது வருமானத்தை அதிகரித்து வருகிறது, அதாவது குறைந்து வரும் வறுமை விகிதம் நடுத்தர வர்க்கத்திற்கும் பயனளிக்கிறது.

 

நண்பர்களே,

2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கை அமிர்த காலத்தில் நிறைவேற்ற இந்தியா செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு தடையையும் இந்தியா வெற்றிகரமாக கடக்கும். இன்று, மிகுந்த ஏழ்மையானவர்கள் முதல் உலகின் பணக்காரர்கள் வரை, இது இந்தியாவிற்கான தருணம் என்று நம்பத் தொடங்கியுள்ளனர். இது ஒவ்வொரு இந்தியரின் மிகப்பெரிய பலம், தன்னம்பிக்கை. வலிமையால், நாம் எந்தத் தடையையும் கடக்க முடியும். 2047-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு, “வளர்ந்த நாடு, அடுத்தது என்ன” என்ற கருப்பொருளைக் கொண்டிருக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

****

PKV/PLM/DL



(Release ID: 1974846) Visitor Counter : 86