பிரதமர் அலுவலகம்

இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு வழித்தடம் மற்றும் நமோ பாரத் ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 20 OCT 2023 4:35PM by PIB Chennai

பாரத் மாதா கி - ஜெய்!

உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, உத்தரப் பிரதேசத்தின் பிரபலமான மற்றும் துடிப்பான முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத்  அவர்களே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா  அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள், ஹர்தீப் சிங் பூரி, வி.கே.சிங், கௌஷல் கிஷோர்  அவர்களே மற்றும் இதர மதிப்பிற்குரிய பிரமுகர்களே,  எனது குடும்ப உறுப்பினர்களே!
இன்று ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு வரலாற்று தருணமாகும். இந்தியாவின் முதல் விரைவு ரயில் சேவையான நமோ பாரத் ரயில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, தில்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய வழித்தடத் திட்டத்திற்கு நான் அடிக்கல் நாட்டினேன். இன்று, நமோ பாரத் சேவை சாஹிபாபாத்தில் இருந்து துஹாய் டிப்போ வரை செயல்படுகிறது. 
இந்த அதிநவீன ரயிலின் பயணத்தை நானும் அனுபவித்திருக்கிறேன். இது ஒரு செழுமையான மற்றும் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. நவராத்திரியின் போது சுபகாரியங்களை செய்வது நம் வழக்கம். இன்று, நாட்டின் முதல் நமோ பாரத் ரயிலும் காத்யாயினி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளது. இந்தப் புதிய ரயிலில் ஓட்டுநர்கள் முதல் அனைத்து ஊழியர்களும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது பெண் சக்தியின்  வளர்ந்து வரும் வலிமையைக் குறிக்கிறது. நமோ பாரத் ரயில், நவீனம், வேகம் மற்றும் நம்பமுடியாத செயல்திறனை உள்ளடக்கியது. இந்த ரயில், புதிய பாரதத்தின் புதிய பயணங்களையும், தீர்மானங்களையும் வரையறுக்கிறது.
எனது  குடும்ப உறுப்பினர்களே,
இன்று, பெங்களூருவில் இரண்டு மெட்ரோ பாதைகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன, இது தகவல் தொழில்நுட்ப மையமான பெங்களூருவுடனான இணைப்பை மேம்படுத்துகிறது. பெங்களூருவில் சுமார் 800,000 பேர் இப்போது மெட்ரோ மூலம் தினமும் பயணிக்கின்றனர். இந்த புதிய மெட்ரோ வசதிக்காக பெங்களூரு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
21-ஆம் நூற்றாண்டில், ஒவ்வொரு துறையிலும் இந்தியா ஒரு புதிய முன்னேற்றக் கதையை எழுதுகிறது. சந்திரயானை நிலவில் தரையிறக்கியதன் மூலம் நமது பாரதம் உலகில் தனது முத்திரையை பதித்துள்ளது. பிரம்மாண்டமான ஜி20 உச்சிமாநாட்டை நடத்திய  பாரதம், உலகத்துடன் இணைவதற்கான புதிய வாய்ப்புகளை ஆவலுடன் ஏற்றுக்கொண்டு, உலகிற்கு ஒரு ஈர்ப்பாகவும் ஆர்வமாகவும் மாறியுள்ளது. இன்றைய பாரதம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பிரகாசிக்கிறது,  உத்தரப் பிரதேசத்தின் பங்களிப்புகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றது. இன்றைய பாரதம், 5ஜியை அறிமுகப்படுத்தி நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் கொண்டு செல்கிறது. இன்றைய பாரதம் உலகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் முன்னிலை வகிக்கிறது.
கொவிட் -19 நெருக்கடி தோன்றியபோது, இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்றின.  செல்பேசிகள்,  தொலைக்காட்சிகள்,  மடிக் கணினிகள் மற்றும் கணினிகளைத்  தயாரிக்க இப்போது பெரிய நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருகின்றன. இன்று பாரதம் போர் விமானங்களை உருவாக்கி, விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கி, கடலில் மூவர்ணக் கொடியை ஏற்றுகிறது. இன்று தொடங்கியுள்ள அதிவேக நமோ பாரத் ரயிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. 

நண்பர்களே, 
நமோ பாரத் என்பது பாரதத்தின் எதிர்காலத்தின் ஒரு பார்வை. நாட்டின் பொருளாதார பலம் அதிகரிக்கும்போது, நம் தேசத்தின் பிம்பம் மாறும் என்பதையும் நமோ பாரத் நிரூபிக்கிறது. முதல் கட்டமாக, தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தானின் பல பகுதிகள் நமோ பாரத் ரயில் மூலம் இணைக்கப்படும். வரும் காலங்களில், நாட்டின் பல பகுதிகளில், நமோ பாரத் போன்ற அமைப்பு இருக்கும். இது தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும், மேலும் நாட்டின் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
நண்பர்களே, 
இந்த நூற்றாண்டின் இந்த மூன்றாவது தசாப்தம் இந்திய ரயில்வேயின் மாற்றத்தின் தசாப்தமாகும். இந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்த ரயில்வே அமைப்பும் மாற்றப்படுவதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.  இன்றைய இளைஞர்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புவதாவது, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் இந்திய  ரயில்கள், உலகில் வேறு எதையும் விட பின்தங்கியிருப்பதை நீங்கள் காண மாட்டீர்கள் என்று நான் உத்தரவாதம் அளிக்க விரும்புகிறேன். பாதுகாப்பு, வசதி, தூய்மை, நல்லிணக்கம், பச்சாத்தாபம், வலிமை என இந்திய ரயில்வே உலகளவில் ஒரு புதிய மைல்கல்லை எட்டும். இந்திய ரயில்வே 100% மின்மயமாக்கல் என்ற இலக்கை அடைவதில் இருந்து வெகு தொலைவில் இல்லை. இன்று நமோ பாரத்  தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, நாடு வந்தே பாரத் வடிவத்தில் நவீன ரயில்களைப் பெற்றது.  அமிர்த பாரத  ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.  அமிர்த பாரத், வந்தே பாரத் மற்றும் நமோ பாரத் ஆகிய  மூன்றும் இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கலுக்கு  வித்திடும்.
இன்று, நாடு ஒரு பன்முக போக்குவரத்து அமைப்பில் விரைவாக செயல்பட்டு வருகிறது. நமோ பாரத் ரயிலில், பன்முக இணைப்புக்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது, தில்லியில் உள்ள சராய் காலே கான், ஆனந்த் விஹார், காசியாபாத் மற்றும் மீரட் போன்ற நிலையங்களை ரயில், மெட்ரோ மற்றும் பேருந்து முனையங்கள் வழியாக தடையின்றி இணைக்கிறது. ரயிலில் இருந்து இறங்கிய பிறகு வீடு அல்லது அலுவலகத்திற்குச் செல்ல வேறு போக்குவரத்து வழியைக் கண்டுபிடிப்பது குறித்து இப்போது மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
எனது  குடும்ப உறுப்பினர்களே,
இந்தியாவை மாற்றுவதில், அனைத்து குடிமக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டியது அவசியம். அனைவரும் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும், குப்பைகள் மறைய வேண்டும், நல்ல போக்குவரத்து வசதிகள், படிப்பதற்கு நல்ல கல்வி நிறுவனங்கள், சிறந்த சுகாதார அமைப்பு இருக்க வேண்டும். இந்த அம்சங்கள் அனைத்திற்கும் இந்திய அரசு இன்று முக்கியத்துவம் அளித்து வருகிறது. இன்று இந்தியாவில் பொதுப் போக்குவரத்திற்காக செலவிடப்படும் தொகை, நம் நாட்டில் இதற்கு முன்பு  இருந்ததை விட மிக அதிகம்.
நண்பர்களே, 
நீர், நிலம், காற்று மற்றும் விண்வெளி என அனைத்து திசைகளிலும் போக்குவரத்திற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். நீர் போக்குவரத்தைப் பார்க்கும்போது, இன்று நாட்டில் 100 க்கும் மேற்பட்ட நீர்வழிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கங்கை நதியில் மிகப்பெரிய நீர்வழிப் பாதை உருவாக்கப்பட்டு வருகிறது. பனாரஸிலிருந்து ஹால்டியா செல்லும் கப்பல்களுக்காக பல நீர்வழி முனையங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் பழங்கள், காய்கறிகள், தானியங்களை அனுப்பக்கூடிய விவசாயிகள் பயனடைகின்றனர். சமீபத்தில், உலகின் மிக நீளமான நதி கப்பல் பயணமான கங்கா விலாஸ், 3200 கி.மீ., தூரத்தை கடந்து சாதனை படைத்தது. கடலோரப் பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய துறைமுக உள்கட்டமைப்பு விரிவடைந்து நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. இது கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் பயனளிக்கிறது. நவீன அதிவேக நெடுஞ்சாலைகளின் வலையமைப்பிற்காக அரசு  4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடுகிறது. நமோ பாரத் போன்ற ரயில்களாக இருந்தாலும் சரி, மெட்ரோ ரயில்களாக இருந்தாலும் சரி, அவற்றில் ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படுகிறது.

கடந்த 9 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. நம் விமான நிறுவனங்கள், சமீப காலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய விமானங்களை ஆர்டர் செய்துள்ளன. அதேபோல், நமது விண்வெளி முயற்சிகளும் வேகமாக முன்னேறி வருகின்றன. நமது சந்திரயான், நிலவில் மூவர்ணக் கொடியை நட்டுள்ளது. விரைவில், இந்தியர்களை ஏற்றிக் கொண்டு நமது ககன்யான், விண்வெளிக்குச் செல்லும், நாம்  நமது விண்வெளி நிலையத்தை நிறுவுவோம். நிலவில் முதல் இந்தியரை தரையிறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. 

நண்பர்களே, 
நல்ல காற்றின் தரத்திற்கு நகரங்களில் மாசு குறைக்கப்பட வேண்டியது அவசியம். இதைக் கருத்தில் கொண்டு, நாட்டில் மின்சார பேருந்துகளின் கணிசமான வலையமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களுக்கு 10,000 மின்சாரப் பேருந்துகளை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்திய அரசு, தலைநகர் தில்லியில் 600 கோடி ரூபாய் செலவில், 1300 க்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. தில்லியில் ஏற்கனவே 850-க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன. இதேபோல், 1200-க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளை இயக்க பெங்களூருக்கு இந்திய அரசு ரூ.500 கோடி நிதியுதவி அளிக்கிறது. ஒவ்வொரு நகரத்திலும் நவீன மற்றும் பசுமையான பொது போக்குவரத்தை மேம்படுத்துவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

நண்பர்களே, 
இன்று, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அனைத்து உள்கட்டமைப்பு மேம்பாடுகளிலும் குடிமை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, சிகிச்சை பெறும் நோயாளிகளும், மருத்துவர் ஆக விரும்பும் இளைஞர்களும் பயனடைகின்றனர். டிஜிட்டல் உள்கட்டமைப்பு உருவாகும்போது, மிகவும் ஏழ்மையான நபர் கூட அவர்களின் உரிமைகளை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் பெறுகிறார். இந்தத் துறைகள் அனைத்தும் கடந்த தசாப்தத்தில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தைக் கண்டுள்ளன, இது மக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது மற்றும் பல சிரமங்களை நீக்குகிறது.

எனது  குடும்ப உறுப்பினர்களே,
இது பண்டிகைகளின் நேரம், மகிழ்ச்சியின் நேரம். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இந்த பண்டிகைகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் மத்திய அரசு பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இந்த முடிவுகள் விவசாயிகள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் நமது சகோதர சகோதரிகளுக்கு பயனளிக்கும். ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி) இந்திய அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது. மசூர் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 425 ரூபாயும், கடுகுக்கு 200 ரூபாயும், கோதுமைக்கு குவிண்டால் ஒன்றுக்கு 150 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். 2014-ஆம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு 1400 ரூபாயாக இருந்த கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை இப்போது 2000 ரூபாயைத் தாண்டியுள்ளது. மசூர் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கடந்த 9 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் கடுகுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு 2600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

நண்பர்களே, 
யூரியா உள்ளிட்ட அனைத்து உரங்களும் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது. உலகம் முழுவதும் பல நாடுகளில் சுமார் 3000 ரூபாய்க்கு விற்கப்படும் யூரியா மூட்டை, இந்தியாவில் 300 ரூபாய்க்கும் குறைவாக வழங்கப்படுகிறது. இதற்காக இந்திய அரசு ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்கிறது. விவசாயிகளுக்கு யூரியா விலை உயர்ந்து விடக்கூடாது என்பதற்காக அரசின் கருவூலத்தில் இருந்து இந்தப் பெரும் தொகை செலவிடப்படுகிறது.
நண்பர்களே, 
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது 10 மடங்கு அதிகமாக எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது. எத்தனால் உற்பத்தி நமது விவசாயிகளுக்கு கிட்டத்தட்ட 65,000 கோடி பங்களித்துள்ளது. கடந்த 10 மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடிக்கு மேல் பணம் வழங்கப்பட்டுள்ளது. மீரட்-காசியாபாத் பகுதியின் விவசாயிகள் இந்த ஆண்டு மட்டும் எத்தனாலுக்காக 300 கோடிக்கும் அதிகமான தொகையைப் பெற்றுள்ளனர். 

மீண்டும் ஒருமுறை, நமோ பாரத் ரயிலுக்காக உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். மிக்க நன்றி!

பாரத் மாதா கி - ஜெய்!
மிகவும் நன்றி. 
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர்  உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை  இந்தியில் வழங்கியிருந்தார்.



(Release ID: 1970691) Visitor Counter : 75