பிரதமர் அலுவலகம்
சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு அக்டோபர் 3-ம் தேதி பிரதமர் பயணம்
நாகர்நாரில் உள்ள என்.எம்.டி.சி ஸ்டீல் லிமிடெட்டின் எஃகு ஆலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்; சுமார் ரூ.23,800 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த அணை, பஸ்தாரை உலகின் எஃகு வரைபடத்தில் இடம்பெறச் செய்யும்.
ஜக்தல்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
சத்தீஸ்கரில் பல்வேறு ரயில் மற்றும் சாலைத் துறைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
தெலங்கானாவில் சுமார் ரூ.8000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
என்.டி.பி.சி.யின் தெலங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தின் 800 மெகாவாட் யூனிட்டை பிரதமர் அர்ப்பணிக்கிறார். பல்வேறு ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களையும் அர்ப்பணிக்க உள்ளார்
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் தெலங்கானா முழுவதும் கட்டப்படவுள்ள 20 தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்
Posted On:
02 OCT 2023 10:12AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2023, அக்டோபர் 3-ஆம் தேதி சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
காலை 11 மணியளவில், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரின் ஜக்தல்பூரில், நாகர்நாரில் உள்ள என்.எம்.டி.சி ஸ்டீல் லிமிடெட்டின் எஃகு ஆலை உட்பட ரூ. 26,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிப்பார். பிற்பகல் 3 மணியளவில், தெலங்கானாவின் நிஜாமாபாத் செல்லும் பிரதமர், அங்கு மின்சாரம், ரயில் மற்றும் சுகாதாரம் போன்ற முக்கியத் துறைகளில் சுமார் ரூ .8000 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவடைந்தவற்றை நாட்டிற்கு அர்ப்பணித்து வைப்பார்.
சத்தீஸ்கரில் பிரதமர்:
தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு முக்கிய உத்வேகத்தை அளிக்கும் ஒரு நடவடிக்கையாக, பஸ்தார் மாவட்டத்தில் உள்ள நாகர்நாரில் உள்ள என்.எம்.டி.சி ஸ்டீல் லிமிடெட்டின் எஃகு ஆலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். ஏறத்தாழ ரூ.23,800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த எஃகு ஆலை உயர்தர எஃகு உற்பத்தி செய்யும் கிரீன்ஃபீல்டு திட்டமாகும். நாகர்நாரில் உள்ள என்.எம்.டி.சி ஸ்டீல் லிமிடெட்டின் எஃகு ஆலை, ஆலையிலும், துணை மற்றும் கீழ்நிலை தொழில்களிலும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும். இது பஸ்தாரை உலகின் எஃகு வரைபடத்தில் இடம்பெறச் செய்வதோடு,பிராந்தியத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும்.
நாடு முழுவதும் ரயில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இந்த நிகழ்ச்சியின் போது ஏராளமான ரயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். அந்தகர் மற்றும் தரோகி இடையே புதிய ரயில் பாதை மற்றும் ஜக்தல்பூர் மற்றும் தண்டேவாரா இடையே ரயில் பாதை இரட்டிப்பாக்கும் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். போரிதந்த் – சூரஜ்பூர் ரயில் பாதை இரட்டிப்பு திட்டம் மற்றும் அமிர்த பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ஜக்தல்பூர் ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். தரோகி – ராய்ப்பூர் டெமு ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் திட்டங்கள், மாநிலத்தின் பழங்குடிப் பகுதிகளில் இணைப்பை மேம்படுத்தும். மேம்பட்ட ரயில் உள்கட்டமைப்பு மற்றும் புதிய ரயில் சேவை போன்றவை, உள்ளூர் மக்களுக்கு பயனளிப்பதுடன், பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.
தேசிய நெடுஞ்சாலை -43 இன் ‘குன்குரி முதல் சத்தீஸ்கர் – ஜார்க்கண்ட் எல்லை பிரிவு வரை’யிலான சாலை மேம்பாட்டுத் திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இந்த புதிய திட்டம், சாலை இணைப்பை மேம்படுத்தி, இப்பகுதி மக்களுக்கு பயனளிக்கும்.
தெலங்கானாவில் பிரதமர்:
நாட்டில் மேம்பட்ட எரிசக்தி செயல்திறனுடன் மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, என்.டி.பி.சியின் தெலங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 800 மெகாவாட் அலகு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். இது தெலங்கானாவுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவதோடு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும். இது, நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மிகவும் இணக்கமான மின் நிலையங்களில் ஒன்றாக இருக்கும்.
மனோகராபாத் மற்றும் சித்திபேட்டையை இணைக்கும் புதிய ரயில் பாதை, தர்மாபாத் – மனோகராபாத் மற்றும் மகபூப்நகர் – கர்னூல் இடையே மின்மயமாக்கல் திட்டம் உள்ளிட்ட ரயில் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க இருப்பது, தெலங்கானாவின் ரயில் உள்கட்டமைப்புக்கு ஊக்கம் அளிக்கும். 76 கி.மீ நீளமுள்ள மனோகராபாத்-சித்திபேட் ரயில் பாதை, பிராந்தியத்தில், குறிப்பாக மேடக் மற்றும் சித்திபேட் மாவட்டங்களில் சமூக-பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும். தர்மாபாத் – மனோகராபாத் மற்றும் மகபூப்நகர் – கர்னூல் இடையேயான மின்மயமாக்கல் திட்டம், ரயில்களின் சராசரி வேகத்தை மேம்படுத்த உதவும் மற்றும் இப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த ரயில் போக்குவரத்திற்கு வழிவகுக்கும். சித்திபேட் – செகந்திராபாத் – சித்திபேட் ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார், இது அந்தப் பகுதியில் உள்ள உள்ளூர் ரயில் பயணிகளுக்கு பயனளிக்கும்.
தெலங்கானாவில் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சியில், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 20 தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு (சி.சி.பி) பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ஆதிலாபாத், பத்ராத்ரி கொத்தகூடம், ஜெயசங்கர் பூபாலபள்ளி, ஜோகுலாம்பா கட்வால், ஐதராபாத், கம்மம், குமுராம் பீம் ஆசிபாபாத், மஞ்சேரியல், மகபூப்நகர் (படேபள்ளி), முலுகு, நாகர்கர்னூல், நல்கொண்டா, நாராயண்பேட்டை, நிர்மல், ராஜண்ணா சிர்சில்லா, ரங்காரெட்டி (மகேஸ்வரம்), சூர்யபேட், பெத்தபள்ளி, வாரங்கல் ஆகிய மாவட்டங்களில் இந்த சி.சி.பி.க்கள் கட்டப்படும். இந்த சி.சி.பி.க்கள் தெலங்கானா முழுவதும் மாவட்ட அளவிலான தீவிர சிகிச்சை உள்கட்டமைப்பை மேம்படுத்தி, மாநில மக்களுக்கு பயனளிக்கும்.
***
ANU/AP/RB/DL
(Release ID: 1963159)
Visitor Counter : 136
Read this release in:
Marathi
,
Odia
,
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam