பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜி 20 உச்சிமாநாட்டின் அமர்வு-2-ல் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம் 2

Posted On: 09 SEP 2023 8:38PM by PIB Chennai

 நமக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. நமது அணிகளின் கடின உழைப்பு மற்றும் உங்கள் அனைவரின் ஆதரவு காரணமாக, புது தில்லி ஜி 20 தலைவர்களின் உச்சிமாநாட்டின் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தலைவர்களின் பிரகடனத்தை நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன். இந்த பிரகடனத்தை ஏற்றுக் கொள்வதாக நான் அறிவிக்கிறேன்.

இந்த சந்தர்ப்பத்தில், இதனைப் பயனுள்ளதாக்கப் பெரும் முயற்சி செய்த நமது அமைச்சர், ஜி20 நிர்வாக தலைவர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நான் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன், எனவே, அவர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

மேதகு தலைவர்களே,

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட பண்டைய வேதங்களில், "நான் ஒருவன்; நான் பலராக இருக்க விரும்புகிறேன்." என்று சொல்லப்பட்டிருக்கிறது.

உற்பத்தி, புதிய கண்டுபிடிப்பு மற்றும் சாத்தியமான தீர்வுகளுக்கு  "நான்" என்பதில் இருந்து "நாங்கள்" என்பதற்கு நாம் மாற வேண்டும்.

"நான்" என்பதில் இருந்து "நாம்", என்பதன் பொருள், தனது என்பதிலிருந்து முழுமைக்கான சிந்தனையாகும். அதாவது வெறுமனே "எனக்கு" என்பதற்கு பதிலாக "நமக்கு" நல்வாழ்வு என்பதை நாம் வலியுறுத்த வேண்டும்.

உலகின் ஒவ்வொரு பிரிவையும், ஒவ்வொரு நாட்டையும், ஒவ்வொரு சமூகத்தையும், ஒவ்வொரு பிராந்தியத்தையும் நாம் இணைக்க வேண்டும்.

இதுதான் ஒரே குடும்பம் என்ற கருத்தாக்கத்தின் சாராம்சம் ஆகும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் உரிய சொந்த ஆதரவு அமைப்பு இருப்பதைப் போலவே, நாம் ஒன்றாக ஓர் உலகளாவிய ஆதரவு அமைப்பை உருவாக்க வேண்டும்.

மற்றவரின் மகிழ்ச்சி நம்மை மகிழ்ச்சியாக்க வேண்டும், இன்னொருவரின் துக்கம் நம்மை சோகத்தில் ஆழ்த்த வேண்டும் என்ற மனநிலையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த உணர்வில்தான் இந்தியா தனது ஒவ்வொரு அனுபவத்தையும் அதன் மிகப்பெரிய உலகளாவிய குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.

இந்தியாவில், வளர்ச்சியை உள்ளடக்கியதாகவும், நிலையானதாகவும் மாற்றுவதற்கான பாலமாக தொழில்நுட்பத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

வங்கிக் கணக்குகள், ஆதார் அடையாளம் மற்றும் செல்பேசி என்ற மூவகை நடைமுறையுடன் வெளிப்படைத்தன்மை மற்றும் இலக்கு தலையீடுகளின் புதிய மாதிரியை இந்தியா உருவாக்கியுள்ளது.

இந்த மாதிரியைப் பயன்படுத்தி, இந்தியா கடந்த பத்தாண்டில் 360 பில்லியன் டாலர்களை தேவைப்படுபவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றியுள்ளது.

நிச்சயமாக, இந்த மாதிரி, உலகளாவிய குடும்பத்திற்கு, குறிப்பாக உலகளாவிய வளரும் நாடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நண்பர்களே,

ஒரே குடும்பம் என்ற கருத்தாக்கத்தின் கீழ், இன்று நாம் நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் ஒரு உலகளாவிய விநியோகத் தொடரை உருவாக்க வேண்டும்.

இது நமது கூட்டுப் பொறுப்பு.

நாடுகளையும், மனித குலத்தையும் சந்தைகளாக மட்டுமே பார்க்க முடியாது.

நமக்கு உணர்திறன் மற்றும் நீண்டகால அணுகுமுறை தேவை.

வளரும் நாடுகளின் திறன் மேம்பாட்டில் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

நண்பர்களே,

ஒரே குடும்பம் என்ற தாரக மந்திரத்தைத் தொடர்ந்து, வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் கடன் நெருக்கடியையும் நாம் உணர்திறனுடன் அணுக வேண்டும்.

இந்த நோக்கத்திற்காக நிதியை அதிகரிக்க "நிலையான வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கான செயல் திட்டத்தின்" கீழ் ஒரு ஒப்பந்தம் இருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

"முழுமையான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு" அமைப்புக்கு ஒரு குடும்ப அணுகுமுறை அவசியம்.

உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையம் இந்தியாவில் நிறுவப்படுவது உலகளவில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை வலுப்படுத்தும்.

 

பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய களஞ்சியத்தை நிறுவுவதற்கான முயற்சிகளை நாம் விரைவில் மேற்கொள்வோம் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு சமூகத்திலும், தாய்மார்கள் குடும்பத்தின் உந்து சக்தியாக உள்ளனர்.

இன்று, இந்தியாவில், ஒவ்வொரு துறையிலும் பெண்களின் தலைமையைக் காண்கிறோம்.

இந்தியாவில் ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) பட்டதாரிகளில் சுமார் 45% பெண்கள்.

இன்று, இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் பல முக்கியமான பணிகள் நமது பெண் விஞ்ஞானிகளால் கையாளப்படுகின்றன.

இன்று, இந்திய கிராமங்களில் சுமார் 90 மில்லியன் பெண்கள் சுய உதவிக் குழுக்களின் பிரச்சாரத்தில் சேருவதன் மூலம் சிறு வணிகங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி 21 ஆம் நூற்றாண்டில் மாற்றத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க உந்துசக்தியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

இந்த ஒரு குடும்ப அமர்வில், நான் உங்களுக்கு மூன்று பரிந்துரைகளை முன்வைக்க விரும்புகிறேன்.

முதலாவதாக, உலகின் தலைசிறந்த விளையாட்டு அமைப்புகள் தங்கள் வருமானத்தில் 5% உலகளாவிய வளரும் நாடுகளின் பெண்களுக்கான விளையாட்டு உள்கட்டமைப்பில் முதலீடு செய்யுமாறு நாம் வலியுறுத்தலாம்.

இது உலக அளவில் பொது-தனியார் கூட்டாண்மையின் புதிய மாதிரியாக செயல்படக்கூடும்.

 

இரண்டாவதாக, அனைத்து நாடுகளும் வெவ்வேறு வகையான விசாக்களை வழங்குவதைப் போலவே, "ஜி 20 திறன் விசாவை" ஒரு சிறப்பு பிரிவாக நிறுவலாம்.

உலகளாவிய வாய்ப்புகளை ஆராய்வதற்கு இந்த வகை விசா நமது சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறமையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்களின் திறமையும் முயற்சியும் நமது பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பை  செய்யும்.

மூன்றாவதாக, உலக சுகாதார அமைப்பின் மேற்பார்வையின் கீழ் உலகளாவிய உயிரி வங்கிகளை நிறுவுவது குறித்து நாம் பரிசீலிக்கலாம்.

இந்த உயிரி வங்கிகள் குறிப்பாக இதய நோய், அரிவாள் செல் ரத்த சோகை, நாளமில்லா சுரப்பி கோளாறுகள், மார்பகப் புற்றுநோய் போன்றவற்றில் கவனம் செலுத்த முடியும்.

இதுபோன்ற உலகளாவிய உயிரி வங்கிகளை இந்தியாவில் அமைப்பது எங்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தரும்.

***

ANU/AP/SMB/AG


(Release ID: 1956290) Visitor Counter : 148