பிரதமர் அலுவலகம்
18-வது கிழக்காசிய உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
07 SEP 2023 1:28PM by PIB Chennai
மேதகு குடியரசுத் தலைவர் விடோடோ அவர்களே,
மேதகு தலைவர்களே,
வணக்கம்
"கிழக்காசிய உச்சிமாநாட்டில்" மீண்டும் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதிபர் திரு விடோடோவின் சிறப்பான தலைமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இக்கூட்டத்தில் பார்வையாளராக கிழக்கு தைமூர் பிரதமர் திரு சனானா குஸ்மாவோ அவர்களை நான் அன்புடன் வரவேற்கிறேன்.
கிழக்காசிய உச்சி மாநாடு மிக முக்கியமான தளமாகும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் திட்டமிடல் அம்சங்களில் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரே தலைவர்கள் தலைமையிலான அமைப்பு இதுவாகும். கூடுதலாக, இது ஆசியாவில் முதன்மையான நம்பிக்கையை உருவாக்கும் அமைப்பாக முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன் வெற்றிக்கான திறவுகோல் ஆசியான் மையப்படுத்தல் ஆகும்.
மாண்புமிகு தலைவர்களே,
"இந்தோ-பசிபிக் குறித்த ஆசியான் கண்ணோட்டத்தை" இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான இந்தியா மற்றும் ஆசியான் தொலைநோக்குப் பார்வையில் ஒற்றுமை உள்ளது. "இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியை" செயல்படுத்துவதற்கான ஒரு முக்கியமான தளமாக "கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டின்" முக்கியத்துவத்தை இது சுட்டிக்காட்டுகிறது. குவாட் என்ற தொலைநோக்குப் பார்வையில் ஆசியான் முக்கிய இடத்தை வகிக்கிறது. குவாட்டின் நேர்மறையான நிகழ்ச்சி நிரல் ஆசியான் அமைப்பின் பல்வேறு வழிமுறைகளுடன் ஒத்துப்போகிறது.
மாண்புமிகு தலைவர்களே,
தற்போதைய உலகளாவிய நிலப்பரப்பு சவாலான சூழ்நிலைகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளால் சூழப்பட்டுள்ளது. பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் புவிசார் அரசியல் மோதல்கள் நம் அனைவருக்கும் பெரிய சவால்கள். அவற்றை எதிர்கொள்வதில் பன்முகத்தன்மை மற்றும் விதிகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கு அவசியம்.
சர்வதேச சட்டங்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டியது அவசியம்; அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை வலுப்படுத்த ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும் கூட்டு முயற்சிகளும் அவசியம். நான் முன்பே கூறியது போல - இன்றைய சகாப்தம் போர்க்காலம் அல்ல. பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமும் மட்டுமே தீர்வுக்கான ஒரே வழி.
மாண்புமிகு தலைவர்களே,
மியான்மரில் இந்தியாவின் கொள்கை ஆசியான் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறது. அதே நேரத்தில், அண்டை நாடு என்ற முறையில், எல்லையில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; மேலும் இந்தியா-ஆசியான் இணைப்பை அதிகரிப்பதற்கு நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பு, நம் அனைவரின் நலனுக்கானது.
கடல் சட்டம் குறித்த ஐநாவின் ஒப்பந்தம் உள்ளிட்ட சர்வதேச சட்டம் அனைத்து நாடுகளுக்கும் சமமாகப் பொருந்தும் ஒரு இந்தோ-பசிபிக் காலத்தின் தேவை; அங்கு கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து சுதந்திரம் உள்ளது; அங்கு அனைவரின் நலனுக்காகவும் தடையற்ற சட்டப்பூர்வ வர்த்தகம் உள்ளது. தென் சீனக் கடலுக்கான நடத்தை விதிகள் பயனுள்ளதாகவும், கடல் சட்டம் குறித்த ஐநாவின் ஒப்பந்தப்படியும் இருக்க வேண்டும் என்று இந்தியா நம்புகிறது. மேலும், விவாதங்களில் நேரடியாக ஈடுபடாத நாடுகளின் நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
மாண்புமிகு தலைவர்களே,
பருவநிலை மாற்றம், இணையப் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் எரிசக்தித் தொடர்பான சவால்கள் குறிப்பாக உலகில் வளரும் நாடுகளை பாதிக்கின்றன. எங்களுடைய ஜி20 தலைமைத்துவத்தின் போது, உலகில் வளரும் நாடுகள் தொடர்பான இந்த முக்கியமான பிரச்சினைகளில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.
மாண்புமிகு அவர்களே,
கிழக்காசிய உச்சிமாநாடு செயல்முறையில் இந்தியாவின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன். லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் எதிர்வரும் தலைமைத்துவத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் தலைமைத்துவ பதவிக்கு இந்தியாவின் முழு ஆதரவையும் நான் உறுதியளிக்கிறேன்.
நன்றி.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
******
ANU/AD/IR/KV/KPG
(Release ID: 1955424)
Visitor Counter : 148
Read this release in:
Telugu
,
Hindi
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Odia
,
English
,
Urdu
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Malayalam