பிரதமர் அலுவலகம்
"பிரிக்ஸ்-ஆப்பிரிக்கா தொடர்பு மற்றும் பிரிக்ஸ் கூட்டணியில் புதிதாக இணையும் நாடுகளுடனான உரையாடலின் போது பிரதமர் தெரிவித்த கருத்துகள்"
Posted On:
24 AUG 2023 3:47PM by PIB Chennai
ஆப்பிரிக்க தேசத்தில் உள்ள என் நண்பர்கள் அனைவருடனும் இங்கு இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த அதிபர் ரமஃபோசாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த இரண்டு நாட்களில், பிரிக்ஸ் அமைப்பின் அனைத்து விவாதங்களிலும், உலகளாவிய தென்பகுதி நாடுகளின் முன்னுரிமைகள் மற்றும் கவலைகள் மீது நாம் கவனம் செலுத்தினோம்.
பிரிக்ஸ் இந்த பிரச்சனைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிப்பது தற்போதைய காலகட்டத்தில் முக்கியமானது என்று நாம் நம்புகிறோம்.
பிரிக்ஸ் அமைப்பை விரிவுபடுத்தவும் முடிவு செய்துள்ளோம். அனைத்து கூட்டு நாடுகளையும் நாம் வரவேற்கிறோம்.
உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் மன்றங்களை அனைவரையும் உள்ளடக்கியதாக மாற்றுவதற்கான நமது முயற்சிகளை நோக்கிய ஒரு முன்முயற்சி இது.
மேதகு தலைவர்களே,
உலகளாவிய தெற்கு என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது, அது ஒரு ராஜ்ஜிய உறவுக்கான சொல் மட்டுமல்ல.
நமது பகிரப்பட்ட வரலாற்றில், காலனித்துவத்தையும் நிறவெறியையும் நாம் ஒற்றுமையாக எதிர்த்துள்ளோம்.
மகாத்மா காந்தி அஹிம்சை, அமைதியான எதிர்ப்பு போன்ற சக்திவாய்ந்த கருத்துகளை உருவாக்கி, சோதித்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பயன்படுத்தினார்.
நெல்சன் மண்டேலா போன்ற மாபெரும் தலைவர்களுக்கும், அவரது சிந்தனைகளும், கொள்கைகளும் உத்வேகம் அளித்தன.
இந்த வலுவான வரலாற்று அடித்தளத்தின் அடிப்படையில், நமது நவீன உறவுகளுக்கு ஒரு புதிய வடிவம் கொடுக்கிறோம்.
மேதகு தலைவர்களே,
ஆப்பிரிக்காவுடனான உறவுகளுக்கு இந்தியா அதிக முன்னுரிமை அளித்து வருகிறது.
உயர்மட்டக் கூட்டங்களுடன், ஆப்பிரிக்காவில் 16 புதிய தூதரகங்களையும் திறந்துள்ளோம்.
தற்போது, இந்தியா ஆப்பிரிக்காவின் நான்காவது பெரிய வர்த்தக கூட்டாண்மை நாடாகவும் ஐந்தாவது பெரிய முதலீட்டாளராகவும் உள்ளது.
சூடான், புருண்டி மற்றும் ருவாண்டாவில் உள்ள மின் திட்டங்களாக இருந்தாலும் சரி, எத்தியோப்பியா மற்றும் மலாவியில் உள்ள சர்க்கரை ஆலைகளாக இருந்தாலும் சரி.
மொசாம்பிக், ஐவரி கோஸ்ட் மற்றும் எஸ்வதினியில் உள்ள தொழில்நுட்ப பூங்காக்களாக இருந்தாலும் சரி, அல்லது தான்சானியா மற்றும் உகாண்டாவில் இந்திய பல்கலைக் கழகங்களால் நிறுவப்பட்ட வளாகங்களாக இருந்தாலும் சரி.
ஆப்பிரிக்க நாடுகளில் திறன் மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு இந்தியா எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது.
நிகழ்ச்சி நிரல் 2063-ன் கீழ், எதிர்காலத்தின் உலகளாவிய அதிகார மையமாக மாறுவதற்கான ஆப்பிரிக்காவின் பயணத்தில் இந்தியா ஒரு நம்பகமான மற்றும் நெருங்கிய நட்பு நாடாகும்.
ஆப்பிரிக்காவில் உள்ள டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதற்காக, தொலைக்கல்வி மற்றும் தொலை மருத்துவத்தில் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட உதவித்தொகைகளை வழங்கியுள்ளோம்.
நைஜீரியா, எத்தியோப்பியா மற்றும் தான்சானியாவில் பாதுகாப்பு அகாடமிகள் மற்றும் கல்லூரிகளை நிறுவியுள்ளோம்.
போட்ஸ்வானா, நமீபியா, உகாண்டா, லெசோத்தோ, சாம்பியா, மொரீஷியஸ், சீஷெல்ஸ் மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் பயிற்சிக்காக குழுக்களை நியமித்துள்ளோம்.
ஆப்பிரிக்காவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பெண்கள் உட்பட சுமார் 4400 இந்திய அமைதிப்படையினர் பங்களித்து வருகின்றனர்.
பயங்கரவாதம் மற்றும் கடற்கொள்ளைக்கு எதிரானப் போராட்டத்தில் ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
கொரோனா பெருந்தொற்றின் சவாலான காலங்களில், பல நாடுகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம்.
இப்போது, ஆப்பிரிக்க நாடுகளுடன் கொவிட் மற்றும் பிற தடுப்பூசிகளின் கூட்டு உற்பத்தியில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
மொசாம்பிக் மற்றும் மலாவியில் சூறாவளியாக இருந்தாலும் சரி, மடகாஸ்கரில் ஏற்பட்ட வெள்ளமாக இருந்தாலும் சரி, இந்தியா எப்போதும் ஆப்பிரிக்காவுடன் தோளோடு தோள் நின்று முதலில் உதவும் நாடாக நிற்கிறது.
மேதகு தலைவர்களே,
லத்தீன் அமெரிக்கா முதல் மத்திய ஆசியா வரை;
மேற்கு ஆசியா முதல் தென்கிழக்கு ஆசியா வரை;
இந்தோ-பசிபிக் முதல் இந்தோ-அட்லாண்டிக் வரை;
இந்தியா அனைத்து நாடுகளையும் ஒரு உலகளாவிய குடும்பத்தின் ஒரு பகுதியாக பார்க்கிறது.
"வசுதைவ குடும்பகம்" (அதாவது உலகமே ஒரு குடும்பம்) என்ற கருத்தாக்கம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது வாழ்க்கை முறையின் அடித்தளமாக இருந்து வருகிறது.
நமது ஜி-20 மாநாட்டின் குறிக்கோளும் இதுதான்.
உலகளாவிய தெற்கின் கவலைகளை பிரதானப்படுத்த, மூன்று ஆப்பிரிக்க நாடுகளையும் பல வளரும் நாடுகளையும் விருந்தினர் நாடுகளாக அழைத்துள்ளோம்.
ஜி-20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியனுக்கு நிரந்தர உறுப்புரிமை வழங்கவும் இந்தியா முன்மொழிந்துள்ளது.
மேதகு தலைவர்களே,
பிரிக்ஸ் மற்றும் தற்போதைய நட்பு நாடுகள் அனைத்தும் ஒரு பன்முக உலகை வலுப்படுத்த ஒத்துழைக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
உலகளாவிய நிறுவனங்களை பிரதிநிதித்துவம் மற்றும் பொருத்தமானதாக மாற்றுவதில் நாம் முன்னேற்றம் அடைய முடியும்.
பயங்கரவாதத்தை எதிர்கொள்வது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை நடவடிக்கை, இணைய பாதுகாப்பு, உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் நெகிழ்வான விநியோக சங்கிலிகளை உருவாக்குதல் ஆகியவை நமது பொதுவான நலன்களாகும். ஒத்துழைப்பிற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி; ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்; பெரும் பூனை (சிங்கங்கள், புலிகள் போன்ற விலங்குகள்) கூட்டணி; மற்றும் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையம், சர்வதேச சூரியசக்தி கூட்டணி போன்ற நமது சர்வதேச முன்முயற்சிகளில் பங்கேற்க உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்; இதன் கருப்பொருள் ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே தொகுப்பு;
இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு அடுக்குடன் இணைக்கவும், அதை உங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்தவும் நான் உங்களை அழைக்கிறேன்.
எங்கள் அனுபவத்தையும், திறன்களையும் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
நமது கூட்டு முயற்சிகள் அனைத்து சவால்களையும் ஒன்றாக எதிர்கொள்வதற்கான ஒரு புதிய தன்னம்பிக்கையை வழங்கும் என்று நான் நம்புகிறேன்.
இந்த வாய்ப்பிற்காக உங்கள் அனைவருக்கும், குறிப்பாக அதிபர் ராமபோசாவுக்கு மீண்டும் ஒரு முறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
***
ANU/AP/PKV/AG/KPG
(Release ID: 1952129)
Visitor Counter : 112
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam