பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களின் சீரமைப்புப் பணிகளுக்கு ஆகஸ்ட் 6-ம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்


அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூ. 24,470 கோடி செலவில் இந்த ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன

நகரங்களின் இருபுறங்களும் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு ரயில் நிலையங்களுக்கு இணைப்பை ஏற்படுத்தி நகர மையங்களாக மேம்படுத்த பெருந்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன

ரயில் நிலையத்தை மையமாகக் கொண்ட நகர்ப்புற வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த அணுகுமுறை

உள்ளூர் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றின் அடிப்படையில் ரயில் நிலைய கட்டுமானங்கள் வடிவமைக்கப்படும்

Posted On: 04 AUG 2023 2:21PM by PIB Chennai

வரலாற்று சிறப்புமிக்க முயற்சியாக, நாடு முழுவதும் உள்ள 508 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பதற்கான பணிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 6 ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

அதிநவீன பொதுப் போக்குவரத்தை உருவாக்குவது குறித்து பிரதமர் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். நாடு முழுவதும் மக்களுக்கு விருப்பமான போக்குவரத்து முறையாக ரயில்வே உள்ளது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், ரயில் நிலையங்களில் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும்  வலியுறுத்தியுள்ளார். இந்த தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், நாடு முழுவதும் 1309 ரயில் நிலையங்களை மறுசீரமைக்க அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 508 ரயில் நிலையங்களை மறுசீரமைக்க, பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 6-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையங்கள் ரூ. 24,470 கோடி செலவில் சீரமைக்கப்படும். இந்த நிலையங்களை நகரின் இருபுறமும் முறையாக ஒருங்கிணைத்து, நகரின் முக்கிய மையப்பகுதியாக மேம்படுத்த பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை ரயில் நிலையத்தை மையமாகக் கொண்ட நகர்ப்புற வளர்ச்சியின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டதாகும்.

உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55 ரயில் நிலையங்கள், பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 37, மத்திய பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத் மற்றும் தெலுங்கானாவில் தலா 21, ஜார்கண்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18, ஹரியானாவில் 15, கர்நாடகாவில் 13 ரயில் நிலையங்கள் உட்பட 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த 508 நிலையங்கள் அமைந்துள்ளன.

மறுவடிவமைப்பு செயல்முறை பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்குவதோடு, நன்கு திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டு போக்குவரத்து நடைமுறையை உறுதி செய்யும். இந்த ரயில் நிலைய கட்டடங்களின் வடிவமைப்பு உள்ளூர் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கட்டடக்கலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைந்திருக்கும்.

***

SM/ANU/PLM/RS/KPG


(Release ID: 1945793) Visitor Counter : 296